அத்தியாவசிய பொருட்களை விடுத்து சிகரெட்டுக்கான வரியை அதிகரிப்பு செய்யுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பாக இன்று(செவ்வாய்க்கிழமை) அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துளார்.
குறித்த கடிதத்தில் மேலும் ,
“அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை அரசாங்கம் அதிகரிக்கும் போது, சிகரெட்டின் மீதான வரியை அதிகரிக்க ஏன் பின்வாங்குகின்றது. இவ்வாறான சூழலில் தான் அரசாங்கம் ஏழைமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரியை அதிகரித்து வருகின்றது. ஒரு சிகரெட்டின் விலையினை ரூபாய் 20.00 தினால் உயர்த்தியிருந்தால் சுமார் 100 பில்லியன் ரூபாயினை இழக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
இன்று பெருமபாலான சிறுவர்கள் முதல் பெரியோர் வரை இதனை பயன்படுத்துவதும் இதற்கு அடிமையாகி காணப்படுவதினாலும் இது ஓர் பாரிய சமூக சீர்குலைவிற்கு வழிவகுத்துக்கொண்டிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே இதனை தடுக்க வேண்டுமென்றால் அரசாங்கம் சிகிரெட் மீதான முறையான வரி முறைமையை கடைப்பிடிக்க வேண்டும்.
அவ்வாறான வரி முறைமையினால் அரசாங்கம் தனது வருமானத்தை அதிகரிக்கச்செய்வதோடு பாவனையிலும் சடுதியான வீழ்ச்சியினை ஏற்படுத்த முடியும். இன்றைய காலப்பகுதியில் சிகரெட் பாவனையை குறைப்பதானது கொவிட் -19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பாரிய உதவியாக அமையும் என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் பிரதிநிதி என்ற வகையில், எதிர்வரும் 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள 2022ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் சிகரெட் மீது முறையாக வரி அறவிடப்படும் கொள்ளையொன்றினை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என தீர்க்கமாக நான் நம்புகின்றேன்” என தெரிவித்துள்ளார்.