04

04

வெற்றியை கொண்டாட தலிபான்கள் வானை நோக்கி சுட்டதால் 17 பேர் பலி !

ஆப்கானிஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள தலிபான்கள், இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் அமைந்துள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே தலைமையிலான தேசிய கிளர்ச்சி படைக்கும், தலிபான்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்நிலையில், பஞ்ச்ஷிர் மாகாணமும் தலிபான்கள் கட்டுக்குள் வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை அம்ருல்லா சாலே மறுத்துள்ளார். பின்னர் தலிபான் தலைவர்களும் இந்த தகவலை மறுத்தனர்.
ஆனால், பஞ்ச்ஷிர் மாகாணம் தலிபான் வசம் வந்துவிட்டதாக தகவல் பரவத் தொடங்கியதால், தலிபான் படையினர் உற்சாகத்தில் திளைத்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இவ்வாறு, காபூலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்ததாகவும், 41 பேர் காயமடைந்ததாகவும் செய்தி நிறுவனங்கள் கூறி உள்ளன.
இவ்வாறு துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் கண்டித்துள்ளார். வானத்தை நோக்கி சுடுவதை தவிர்த்து கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள் என்று அவர் டுவிட்டர் மூலம் செய்தி வெளியிட்டுள்ளார். தோட்டாக்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும், எனவே தேவையில்லாமல் சுடவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

அரசியல் அதிகாரம் கேட்டு போராடிய பெண்களை கடுமையாக தாக்கிய தலிபான்கள். !

ஆப்கானிஸ்தானில் அரசியலில் பெண்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டத்தில் தலிபான்கள் தாக்குதல் நடத்தியது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆப்கான் ஊடகங்கள் தரப்பில், “ தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கும் அரசியல் உரிமை வேண்டும் இளம் பெண்கள் காபூலில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட  பெண்களை அதிபர் மாளிகையை நோக்கி செல்லவிடாமல் தலிபான்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சமூக செயற்பாட்டாளரான நர்கிஸ் என்பரை தலிபான்கள் தாக்கியதில் அவருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. மேலும் பேரணியை கலைக்க வானை நோக்கி துப்பாக்கியால் தலிபான்கள் சுட்டனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் இத்தாக்குதலுக்கு ஆப்கானில் உள்ள பெண்கள் நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும், பஞ்ஷிர் மாகாணத்தைக் கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடியதில் பொதுமக்கள் 17 பேர் பலியாகினர்.