02

02

உலகம் முழுதும் சீனாவின் வீடியோ கேம்ஸ் – ஆனால் சீனாவில் கேம்ஸ் விளையாட புதிய தடை !

உலகம் முழுவதும் பல சீன வீடியோ கேம்கள் மக்களை ஆக்கிரமித்துள்ளது. எல்லா ஆன்ரோய்ட் போன்களிலும் சீனாவின் செயலிகளும் – வீடியோ கேம்ஸ்களுமே ஆக்கிரமித்துள்ளன.

சீனாவில் குழந்தைகளின் எதிர்காலதத்தைக் கருத்தில் கொண்டு, இனி வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட முடியும் என்ற புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் வீடியோ கேம் விளையாட புதிய விதிமுறைகள் இன்றுமுதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்நாட்டின் வீடியோ கேம் ஒழுங்குமுறை ஆணையமான, நேஷனல் பிரஸ் அண்ட் பப்ளிகேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, சீனக் குழந்தைகள் இனி வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட முடியும்.

18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும். 18 வயதுக்குக் கீழ் உள்ளோர் தங்களின் உண்மையான பெயர், விவரங்களை அளித்தால் மட்டுமே வீடியோ கேம் விளையாட பதிவு செய்துகொள்ள முடியும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 8 மணி முதல் 9 மணி வரை மட்டுமே 18 வயதுக்குக் குறைவானோர் வீடியோ கேம் விளையாட முடியும். தேசிய விடுமுறை நாட்களிலும் இதே நேரத்தில் விளையாடலாம்.

சீன அரசின் இந்த முடிவு, டென்சென்ட் (TENCENT), நெட்ஈஸ் (NetEase) போன்ற புகழ்பெற்ற ஆன்லைன் வீடியோ கேம்ஸ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக ஆன்லைன் கேம்ஸ் சார்ந்து விதிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கட்டுப்பாடுகள் சீனாவின் தொழில்நுட்பம் சார்ந்த பங்கு வர்த்தகத்தின் தலையெழுத்தையே புரட்டிப் போட்டுவிடக்கூடும் என்றும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் தலிபான்கள் அணி வகுப்பு – பரிதாப நிலையில் ஆப்கான் என ஐ.நா கவலை !

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ளன. அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக வெளியேறிய நிலையில், எப்போது வேண்டுமென்றாலும் அதிபர், மந்திரி சபைகளை அமைக்க தலிபான்கள் தயாராகி வருகின்றன.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய மகிழ்ச்சியில் தலிபான் வீரர்கள், கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் வலம் வரும் நிலையில், பெரும்பாலான நாடுகள் தங்களது உதவிகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு சேவைகள் முடங்கப்படும், ஊழியர்கள் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்படும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.
மனிதாபிமான கண்டோட்டத்தில் ஆப்கானிஸ்தான் சூழ்நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது என ஆப்கானிஸ்தானின் ஐ.நா.வுக்கான மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் ரமீஸ் அலாக்பரோவ் கவலை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கடந்த சில நாட்களாக உணவு விலை 50 சதவீதம் அளவிற்கும், பெட்ரோல் விலை 75 சதவீதம் அளவிற்கும் அதிகரித்துள்ளது.
பெரும்பாலான சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்ட நிலையில், அரசு சேவைகள் செயல்பட முடியாது. அரசு ஊழியர்கள் சம்பளம் பெற முடியாது. இப்படியே சென்றால் இன்னும் ஒரு மாதத்திற்குள் உணவு பற்றாக்குறை ஏற்படும். மூன்றில் ஒருவர் பசியால் வாடும் நிலை ஏற்படும் என ரமீஸ் அலாக்பரோவ் தெரிவித்துள்ளார்.
நேற்று, காந்தகார் பகுதியில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் தலிபான்கள் அணி வகுப்பு நடத்தியுள்ளனர். விமானங்களை இயக்க அனுபவம் வாய்ந்த விமானிகள் இல்லாத நிலையில், கத்தார் ஏர்வைஸ் விமானம், தங்களுடைய விமானிகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

கொரோனாதடுப்பூசியில் கருப்பு துகள்கள் – அமெரிக்க தடுப்பூசி போடுவதை நிறுத்திய ஜப்பான் !

கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளைபோல ஜப்பானிலும் அதிகமாக உள்ளது. சமீபத்தில் ஒலிம்பிக் போட்டி நடத்திய பிறகு அங்கு பாதிப்பு மேலும் அதிகரித்து வருகிறது.

ஜப்பான் இதுவரை கொரோனாதடுப்பூசி மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை. தடுப்பூசி போடுவதையும் ஊக்கப்படுத்தாமல் இருந்தது. பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து வெளிநாட்டு தடுப்பூசி மருந்துகளை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறது.

அந்த வகையில் அமெரிக்காவின் பைசர், இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனெகா ஆகிய மருந்துகளை பயன்படுத்த ஏற்கனவே அனுமதி அளித்து இருந்தன. அமெரிக்காவின் மற்றொரு தயாரிப்பான மடோர்னாகொரோனாதடுப்பூசிக்கு கடந்த மே மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.

இவற்றை பொதுமக்களுக்கு போடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. அதில் ஒரு மருந்து பாட்டிலுக்குள் கருப்பு துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 லட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசி மருந்தை நிறுத்தி வைத்து உள்ளது. ஏற்கனவே இந்த மருந்தில் கலப்படம் இருப்பதாக புகார்கள் வந்தன. அதுபற்றி ஆய்வு நடத்தப்படுகிறது.

ஆனால் மாடர்னா தடுப்பூசி போட்ட யாருக்கும் இதுவரை எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. இந்த கருப்பு துகள்கள் எப்படி வந்தன? என்பது தெரியவில்லை. அமெரிக்கா இந்த மருந்தை உற்பத்தி செய்தாலும் ஸ்பெயினில் உள்ள ஒரு நிறுவனம்தான் மருந்தை பாட்டிலில் அடைத்து சப்ளை செய்யும் பணியை செய்கிறது.

ஒருவேளை அங்கு நடந்த தவறால் மருந்தில் கருப்பு துகள்கள் கலந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. அதுபற்றி சோதனை நடந்து வருகிறது.