22

22

“ஐ.நாவில் ஜனாதிபதி கூறிய விடயங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது.” – நாடாளுமன்றில் எம்.ஏ.சுமந்திரன் !

“வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில் அதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுவதே தற்போதிருக்கும் பிரச்சினை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றில் முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர் ,

ஐக்கிய நாடுகளின் பொது செயலாளரை சந்தித்த ஜனாதிபதி நாட்டின் பொறுப்புக்கூறல் தொடர்பாக வினைத்திறனாக செயற்பட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனை உடனடியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றது.

ஆனால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அந்த கூற்றுக்கு முற்றிலும் மாறுபட்டவகையில், எந்தவிதமான வெளிவாரி பொறிமுறைகளையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது. அதேபோன்றுதான் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில் அதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

ஆனால் ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கடந்த யூலை மாதம் நடத்தவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதுடன், பின்னர் அந்த சந்திப்பை நடத்த திகதி ஒதுக்குவதாக கூறி 2 மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் அதற்கான திகதி ஒதுக்கப்படவில்லை.

அரசாங்கம் புலம்பெயர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக, தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று எம்.ஏ.சுமந்திரன் கோரினார்.

தலிபான்களால் இடைநிறுத்தப்பட்ட சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் !

சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

2020 ஆண்டுக்கான சார்க்  நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கமைய, ள சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி நாடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், குறித்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தி தலிபான்கள் கலந்துகொள்ள வேண்டுமென பாகிஸ்தான் கோரிக்கை விடுத்திருந்தது.

குறித்த கோரிக்கையினை பெரும்பாலான உறுப்பு நாடுகள் ஏற்று கொள்ள மறுத்தமை காரணமாக சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

தலிபான்கள் பங்கேற்பதற்கு உறுப்பு நாடுகளின் அனுமதி இல்லாமை காரணமாக கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நேபாள வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேபாள வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“காணாமலாக்கப்பட்டவர்களுடைய பெற்றோரின் கண்ணீரை தினமும் பார்க்கிறோம். ஆனால் எங்களிடம் பதில் இல்லை.” – அரசாங்கம் அறிவிப்பு !

“தமது பிள்ளைகள் காணமற்போயிருப்பதாக பெற்றோர் கண்ணீர் விடும் காட்சியை ஒவ்வொரு வருடமும் நாம் காண்கின்றோம். ஆனால் எங்களிடம் எந்த பதிலும் இல்லை.” என அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது ஒரு ஊடகவியலாளர் “மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமற்போனவர்களுக்கு விரைவாக மரணச்சான்றிதல் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் காணாமல் போனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், காணாமற்போனவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்கின்றனர். உண்மையிலேயே இவர்களுக்கு என்ன நடந்தது என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்?

இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

“காணாமற் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை என்னால் திட்டவட்டமாக கூறமுடியாது.  இதனைக் கண்டறிவதற்காக இலங்கையில் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் டயஸ்போராக்களுக்கு – நாட்டை நேசிப்பவர்களுக்கு பகீரங்க அழைப்பொன்றை விடுத்தார். அதாவது நாம் ஒன்றிணைந்து இதுகுறித்து பேச்சுவாரத்தை நடத்துவோம். தீர்மானங்களை மேற்கொள்வோம் இவர்கள் எமது நாட்டு பிரஜைகள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொலை நோக்குடனான சாதகமான நிலைப்பாடாகும். நேற்றும் பாராளுமன்றத்தில் இது குறித்து பேசப்பட்டது. வடக்கை பிரதிநிதித்துவம் செய்யும் எமது சகோதர உறுப்பினர்கள் இதுகுறித்து சாதகமாக கருத்து தெரிவித்தனர். திட்டவட்டமாக உதாரணத்திற்கு X என்ற நபர் காணாமற்போனார் என்று வைத்துக்கொள்வோம். இவருக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு பதிலளிக்கக்கூடிய அளவுக்கு எமக்கு தெளிவில்லை.

இதனை எந்தவகையிலும் மறைக்கக்கூடிய விடயமல்ல.எந்த சந்தர்ப்பத்திலாவது சரியான தகவல் வெளிப்படலாம். நாம் அதனை அறிந்துகொள்ள முடியும். சில சந்தர்ப்பத்தில் காணாமற்போனவர்கள் சிலர் வெளிநாடுகளில் அரசியல் புகழிடம்பெற்று வாழ்கின்றனர். இது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்ல.

தமது பிள்ளைகள் காணமற்போயிருப்பதாக பெற்றோர் கண்ணீர் விடும் காட்சியை ஒவ்வொரு வருடமும் நாம் காண்கின்றோம். இவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள். அதனால், நாம் இதுதொடர்பில் பொறுப்புடன் செயற்படவேண்டியுள்ளது. அதனால் அதில் எதனையும் மறைப்பதற்கில்லை. இதுதொடர்பில் ஒன்றிணைந்த செயற்பாடுகளே அவசியம். இலங்கையர் என்ற ரீதியில் இவ்வாறான துர்பாக்கிய சம்பவம் மீண்டும் ஏற்படாத வகையில் செயற்படுவதே இறுதியான பதிலாகும்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

“ரிசாட், அஷாத் சாலி பேசினால் இனவாதம், ஆனால் ஞானசாரர் பேசினால் அது இனவாதம் இல்லையா?” – சாணக்கியன் கேள்வி !

“நாடாளுமன்றத்தில் முக்கிய சட்ட மூலங்களையும், திருத்தங்களையும் செய்வதற்கு முஸ்லிம் உறுப்பினர்கள் உதவி தேவை. ஏனைய நேரங்களில் அவர்கள் அனைவரும் கெட்டவர்களா?”  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியு்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு முக்கி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாங்கள் பார்த்தோம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த போது, மக்கள் அவருக்கு எதிர்ப்பினை தெரிவித்து கோசங்களை எழுப்பியிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்ப மக்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக நாங்கள் அறிகின்றோம்.

கடந்த காலங்களில் இவ்வாறு கோஷங்களை எழுப்பியவர்கள் புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களாகவே காணப்பட்டனர். இன்று நாங்கள் பார்த்தால் நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களே இவ்வாறு கோஷங்களை எழுப்புகின்றனர்.

இவ்வாறு கோஷங்களை எழுப்புவதற்கான பிரதான காரணங்களாக நாட்டில் பால்மாவிற்கு தட்டுப்பாடு, நாட்டில் எரிவாயு இல்லை. அதேபோன்று நாட்டில் உரம் இல்லை. சீனி கொள்வனவில் மோசடி, பி.சி.ஆர் செய்வதில் மோசடி. இவற்றிற்கு எல்லாம் ஜனாதிபதி, பிரதமர் மாத்திரம் காரணம் இல்லை. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுமே காரணம்.

நாங்கள் இன்று வனஜீவராசிகள் அமைச்சு குறித்து பேசிக்கொண்டிருக்கின்றோம். வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர்தான் காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனால் அவர் அம்பாறையில் காடுகளை அழித்து மரமுந்திரிகை செய்கின்றார். தகுதி இல்லாதவர்களுக்கு ஆசனங்களை வழங்கி அவர்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்கினால் இந்த நிலைதான் ஏற்படும்.

தற்போது ஞானசார தேரர் கடும் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றார். அவரது கருத்துக்களும் அவ்வாறே உள்ளது. நாங்கள் இனவாதமாக செயற்படும் மத தலைவர்களுக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிடுகின்றோம். இந்த நாட்டில் 500 அடிப்படைவாத கிறிஸ்தவ தேவாலயங்கள் இருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு இஸ்லாமிய தலைவர்களை கைது செய்யுமாறும், ஜனாதிபதியை பதவிக்கு கொண்டுவருவதற்காக சுமார் 800 முறை மத வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படைவாத தாக்குதல்தாரிகளுக்கு சூத்திரதாரி அல்லாஹ்தானென ஞானசார தேரர் சொல்கிறார். அவரின் கருத்தை கண்டிக்கிறேன். இந்த கருத்து தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள் மௌனம் காப்பதேன்? எந்த நேரத்திலும் இலங்கையில் தாக்குதல் நடக்கலாமென ஞானசார தேரர் கூறுகிறார். அப்படியானால் முதலீட்டாளர்கள் எப்படி நாட்டுக்கு வருவார்கள்?

நாடாளுமன்றத்தில் முக்கிய சட்ட மூலங்களையும், திருத்தங்களையும் செய்வதற்கு முஸ்லிம் உறுப்பினர்கள் உதவி தேவை. ஏனைய நேரங்களில் அவர்கள் அனைவரும் கெட்டவர்களா? என கேள்வி எழுப்ப விரும்புகின்றேன். ஜனாதிபதி வெளிநாட்டிற்கு சென்று முஸ்லிம் முதலீட்டார்களுக்கு அழைப்பு விடுகின்றார். ஆனால் நாட்டில் நடப்பதே வேறு விதமாக காணப்படுகின்றது.

ரிசாட், அஷாத் சாலி பேசினால் இனவாதம், ஆனால் ஞானசாரர் பேசினால் அது இனவாதம் இல்லையா? நான் இங்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இங்கு கூச்சலிடும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் தனது தொகுதிக்கு வந்தால், அவரை போன்றவர்களை மக்கள் அடித்து விரட்ட வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதி ஐ.நாவிலிருந்து வந்து சிறைக்கைதிகளை விடுதலை செய்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.” – ஐக்கிய மக்கள் சக்தி

“ஜனாதிபதி ஐ.நாவிலிருந்து வந்து சிறைக்கைதிகளை விடுதலை செய்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

2020ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வெளிநாட்டிலிருந்து வந்த வைரஸால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ராஜபக்ச உறவினர்களால் வந்த வைரஸால் மக்கள் இரண்டாவது முறையாகப் பாதிக்கப்பட வேண்டி இருக்கின்றது.

ராஜபக்ச அரச தரப்பினர் நாட்டின் பெரும் பகுதியைச் சீனாவுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளனர். சங்ரிலா ஹோட்டல் பகுதி, துறைமுக நகர பெரும் பகுதி ஆகியவற்றை சீனாவுக்கு வழங்கியுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோர் அமெரிக்க பிரஜாவுரிமை கொண்டவர்கள். நாட்டின் சொத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்கின்றனர்.

இதன் உச்சமாக கடந்த வாரத்தில் இந்த நாட்டின் மொத்த மின் உற்பத்தி நிலையங்களினதும் உரிமத்தை வெளிநாட்டவர்களுக்கு ஒப்படைத்துவிட்டனர். கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகள் திறைசேரிக்குச் சொந்தமானவை. 23.9 சதவீத பங்குகள் ஊழியர் சேமநல நிதியத்துக்குச் சொந்தமானவை.

இந்த நாட்களில் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வுகள் இடம்பெறுகின்றன.

இந்த அரசு சங்கைக்குரிய தேரர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. இந்த அரசைப் போன்று பொய் கூறும் ஓர் அரசைப் பார்த்ததில்லை என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறுகின்றார். ஜனாதிபதி ஐ.நாவிலிருந்து வந்து சிறைக்கைதிகளை விடுதலை செய்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை .” என்றார்.

“தேர்தல் முறைமையை மாற்றி நாட்டை சர்வதிகார படுகுழியில் தள்ள வேண்டாம்.” – மனோ கணேசன்

“ஒரு சிலரின் தேவைகளுக்காக, விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றி நாட்டை சர்வதிகார படுகுழியில் தள்ள வேண்டாம்.” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தேர்தல் முறைமை சீர்திருத்த தெரிவுக்குழு நாடாளுமன்ற வளாகத்தில் தவிசாளர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூடியபோது, த.மு.கூ. தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் வி. இராதாகிருஷ்ணன்,  நாடாளுமன்ற .உறுப்பினர்களான வேலு குமார், உதயகுமார் ஆகியோர் அடங்கிய கூட்டணி தூதுக்குழுவினர் சமூகமளித்தனர்.

அதன்போது கூட்டணியின் நிலைப்பாடுகளை எடுத்துக்கூறிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது:-

நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த தேர்தல் முறை மாற்றம் எமது ஆட்சிகாலத்தில் கலப்பு முறைக்கு பரீட்சார்த்தமாக மாற்றப்பட்டது. ஆனால், அந்த மாற்றம் உள்ளூராட்சி மன்றங்களில் நிலையான ஆட்சிக்கு வழி காட்டவில்லை. அத்துடன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடெங்கும் ஏறக்குறைய அறுபது முதல் எழுபது விகிதம் அதிகரித்தது. ஆனாலும், குழப்ப நிலைமையே ஏற்பட்டது.

இந்நிலையில், இதே விதமான குழப்ப நிலைமையை  மாகாண சபை, நாடாளுமன்றங்களிலும் ஏற்படுத்தி இந்நாட்டின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்க வேண்டாம். எமக்கு முன் சாட்சியம் அளித்த ஒரு இன்னொரு கட்சியின் பிரதிநிதி, சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களை வெட்டி குறைத்தால், அவர்கள் கடந்த காலங்களை போல் வேறு வழி இல்லாமல், ஆயுதம் தூக்கும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள் .

அது உண்மை. ஆனால், அந்த நிலைமை வடக்கில் மட்டுமல்ல. தெற்கிலும் ஏற்பட்டது என்பதை நான் இந்த குழுவுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் நியாயமான பிரதிநிதித்துவங்களை பெற முடியாத நிலையில், தென்னிலங்கையிலும் சிங்கள இளையோர் இப்படி ஆயுதம் தூக்கினார்கள். இன்று விகிதாசார முறையின் கீழ்தான் இந்நிலைமை மாறியது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அறிமுகம் செய்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனதான், உள்ளூராட்சி, மாகாணசபை, நாடாளுமன்றங்களுக்கு விகிதாசார தேர்தல் முறைமையையும் கொண்டு வந்து அறிமுகம் செய்தார்.   ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் சில பிழையான செய்கைகளுக்கு மத்தியில் அவரது தீர்க்கதரிசனமிக்க சரியான செய்கை இதுவாகும்.

இன்று நீங்கள் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இன்னமும் பலமிக்கதாக 20ம் திருத்தத்தின் மூலம் மாற்றியுள்ளீர்கள். இது உண்மை. எனவே ஒரு சிலரின் தேவைகளுக்காக, விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றி நாட்டை சர்வதிகார படுகுழியில் தள்ள வேண்டாம்.

இலங்கையின் அனைத்து இன மற்றும் சமூக குழுவினர்களும் பிரதிநிதித்துவம் செய்ய இடந்தரும் வண்ணமும், பெரிய, சிறிய கட்சிகள் தாம் பெறுகின்ற வாக்கு தொகைகளுக்கு ஏற்ப பிரதிநிதித்துவங்கள் பெரும் வண்ணமும், உள்ளூராட்சி, மாகாணசபை, நாடாளுமன்ற தேர்தல்கள் முழுமையான விகிதாசார முறைமையின்படியே நடத்தப்பட வேண்டும். இதன்மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கண்காணித்து சமநிலைப்படுத்தும் நிறுவனங்களாக ஜனநாயகத்தின் பேரில் நாடாளுமன்றமும், மாகாண சபைகளும் செயற்பட முடியும். இதுவே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு என்றார்.

“தமிழ் அரசியல்கைதி இளைஞர்களின் ஆண்குறி மற்றும் மலவாசல் என்பன மிகவும் கேவலமான முறையில் சோதிக்கப்பட்டு பாலியல்சித்திரவதை.” – கஜேந்திரன்

“ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய போது, அவருடைய இராணுவத்தில் சரணடைந்த பல்லாயிரக்கணக்காணவர்களுக்கு என்ன நடந்தது என்று உறவினர்கள் தேடிக் கொண்டிருக்கும் போது ஜனாதிபதி இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் சபையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல், துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 05 கட்டளைகள், விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான 06 கட்டளைகள், வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான 03 ஒழுங்குவிதிகள், வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்கிவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளை ஓரிடத்திற்கு வருமாறு அழைத்து, அவருக்கு முன்பாக  முழந்தாளில் இருக்குமாறு கட்டளையிட்டு, அச்சுறுத்தி அவர்களின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியுள்ளார். அதன்போது அவர், ஜனாதிபதி எனக்கொரு அதிகாரத்தை வழங்கியுள்ளார். அதன்படி விரும்பினால் உங்களை விடுதலை செய்யலாம். அல்லது சுட்டுக்கொல்லலாம் என்று கூறியுள்ளார். அவ்வாறு   துப்பாக்கி வைத்து வெறியாட்டத்தை அவர் நடத்தியுள்ளார்.

அந்தக் கைதிகள் சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களே ஆகும். 2009 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ள அவர்கள் எவ்வித குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட வில்லை.அவர்களுக்குரிய வழக்குகளும் முறையாக நடத்தப்படுவதில்லை. சட்டமா அதிபர் திணைக்களத்தினர் முறையாக ஆஜராகியிருந்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பர்.

வேண்டுமென்றே இவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று இவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அரசாங்கமும், சட்டமா அதிபர் திணைக்களமும் பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழர் என்பதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட நடவடிக்கையாகும்.

லொஹான் ரத்வத்தவின் தவறுக்கு அவரின் மற்றைய இராஜாங்க அமைச்சு  நீக்கப்படவில்லை. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அவரின் அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்பட்டு, அவரின் எம்.பி பதவியும் நீக்கப்பட வேண்டும். அத்துடன் அவரை கைது செய்து சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம். 12 ஆம் திகதி சம்பவம் நடைபெற்ற நிலையில் 18 ஆம் திகதியே சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன். அந்த 6 நாட்களும் விசாரணைகளை தடுத்தவர்கள் யார் என்ற கேள்விகள் எழுகின்றன .

இதேவேளை கடந்த 26 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 12 தமிழ் இளைஞர்கள் கொழும்பு மறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் 29 ஆம் திகதி இவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 541 நாட்கள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் விசாரணையின் கீழ் மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களிடம் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் ஊடாக வாக்குமூலம் பெற வேண்டும் என்ற போதும் அவ்வாறு இன்றியே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அவ்வாறு இருந்து 540 நாட்களின் பின்னர் மறியல் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டவர்கள் மூன்று நாட்களின் பின்னர் மகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்படும் போது நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் ஆண்குறி மற்றும் மலவாசல் என்பன மிகவும் கேவலமான முறையில் சோதிக்கப்பட்டுள்ளன. இதுவொரு பாலியல் சித்திரவதையே.

பயங்கரவாத தடுப்புப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள், மறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்படும் போது போதைப் பொருள் இருக்கின்றது என்று சோதனை நடத்தப்படுகின்றது என்றால் எப்படி அவர்களால் அதனை கொண்டு சென்றிருக்க முடியும். அப்படியென்றால் அதிகாரிகள்தான் அதனை கொடுத்திருக்க வேண்டும்.

அதன்படி தினமும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களை வீதியில் வைத்து நிர்வாணமாக்கி சோதனையிட வேண்டும். அவ்வாறு செய்யாது கைதிகளை இப்படி நடத்துவது இது பாலியல் சித்திரவதை நடவடிக்கை என்று கூறுவதுடன், இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்கின்றோம்.

இதேவேளை ஜனாதிபதி ஐ.நா.பொதுச் செயலாளரை சந்தித்தபோது, காணாமல்போனோருக்கு மரணச் சான்றிதழை வழங்குவதாக கூறியுள்ளார். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய போது, அவருடைய இராணுவத்தில் சரணடைந்த பல்லாயிரக் கணக்காணவர்களுக்கு என்ன நடந்தது என்று உறவினர்கள் தேடிக் கொண்டிருக்கும் போது ஜனாதிபதி இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேபோன்று இந்த அரசாங்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் பயங்கரவாத சட்டத்தை நீக்குவோம் என்று ஜெனிவாவில்   வாக்குறுதியளித்திருந்தது. ஆனால் அந்தப் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கபப்படவில்லை. அதனை நீக்க வேண்டும் என்று ஐ.நா. கூறியுள்ளது. இன்னும் அந்த சட்டத்தில் தடுத்து வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றார்.

“சரணடைய முற்பட்டவர்களை சுட்டுக்கொன்று புலிகளே மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர்.” – எஸ்.பி. திஸாநாயக்க

வன்னியில் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளே பொறுப்புக்கூற வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் பாரிய வீழ்ச்சியை சந்தித்தது. 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிவடைந்தது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சர்வதேசத்திலுள்ள விடுதலைப்புலிகளின் அமைப்புகளுக்கும் இங்கு ஏதாவது ஒரு விடயத்தை விற்பனை செய்யாவிட்டால் அவர்களால் தொடர்ந்தும் இயங்கமுடியாது. கூட்டமைப்பினரின்  பலரது பிள்ளைகள் இன்று மேற்குலக நாடுகளில் உள்ளனர்.

அவர்களை அங்கு கவனிக்க வேண்டுமென்றால் இங்கு இதுபோன்ற பிரச்சினைகளை விற்பனை செய்ய வேண்டும். அதேபோல் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோரிச் சென்றுள்ளவர்கள் இங்கு பிரச்சினை இல்லை என்றால் திருப்பியனுப்பப்படுவார்கள்.

ஆனாலும் அங்கு அவர்களின் பிள்ளைகள் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் கற்றுவருவதால் மீள நாட்டுக்கு செல்வதை விரும்பமாட்டார்கள். போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முயற்சித்தவர்களை விடுதலைப் புலிகளே சுட்டுக்கொன்றார்கள். கிராமங்களுக்குச் சென்று மக்களை பணயக் கைதிகளாக்கினர். அவ்வாறு பணயக் கைதிகளாக வைக்கப்பட்டவர்களே இறுதியில் இயக்கத்தால் கொலை செய்யப்பட்டார்கள். அதற்கான முழுப்பொறுப்பையும் அவர்களே ஏற்கவேண்டும்.

வடக்கிலுள்ள மக்கள், காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை அறிவார்கள். போர்க்குற்றம் என்ன என்பதையும் அறிவார்கள். எனினும், அந்த மக்களைப் பட்டியல்படுத்தி வந்து போராட்டம் செய்யும்படியும், நட்டஈட்டை வழங்கித் தருவதாகவும் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான் அவர்களைப் போராட்டத்தில் அமர்த்தியுள்ளனர்.

இந்தப் போராட்டம் நிதியுடன் தொடர்புடையதாக உள்ளது. தொடர்ந்தும் அதனை அவர்கள் செய்வார்கள். எனவேதான் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளரால் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் எமது நாடு நிராகரித்தது. மிச்செல் பச்லெட் அம்மையார் அமெரிக்காவின் கைப்பாவை.

அமெரிக்க உதவியுடன்தான் அவர் அந்த அரியாசனத்தில் இருக்கின்றார். சிலி நாட்டின் அதிகாரத்தை அமெரிக்காவின் உதவியைப் பெற்று எப்படி வீழ்த்தி ஆட்சிக்கு வந்தாரோ அதே தோரணையில் இன்று எமது நாட்டின் மீதும் பல அழுத்தங்களை அவர் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளார் – என்றார்.

மெனிஹே மஹே ஹிதே பாடகி யொஹானிக்கு அடித்த அதிஷ்டம் – இந்தியா வழங்கியுள்ள கௌரவம் !

மெனிஹே மஹே ஹிதே எனும் பாடல் மூலம் உலக அளவில் பிரபலமாகியுள்ளார் இலங்கை பாடகி ஜொஹானி டி சில்வா. இவருடைய இந்த பாடல் மிக வைரலாகி யூடியூப் பக்கத்தில் சுமார் 100மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இலங்கையின் எந்த பாடலும் படைக்காத – நெருங்காத சாதனையை இப்பாடல் படைத்தது. இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் யொஹானியை தேட ஆரம்பித்திருந்தன.

இந்நிலையில் , இலங்கையின் பிரபல பாடகி ஜொஹானி டி சில்வாவை, இந்திய – இலங்கை புதிய கலாசாரத் தூதுவராக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் பெயரிட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்ட டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக, இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இறுதி ஓவரில் மாயாஜாலம் செய்த கார்த்திக் தியாகி – த்ரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் !

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம் துபாயில்  நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணயச்சுழற்சியில்  வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி தலைவர் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 185 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணிசார்பில் லீவிஸ் 36 ஓட்டங்களையும் , ஜெய்ஸ்வால் 49 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ராஜஸ்தான் சார்பில் மஹிபால் லோம்ரோர் அதிரடியாக ஆடி 17 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 43 ஓட்டங்கள் விளாசினார்.
பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் பொறுப்புடன் ஆடினர். அகர்வால் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.  பஞ்சாப் அணியின் எண்ணிக்கை 120 ஆக இருந்தபோது கே.எல்.ராகுல் 49 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்தில் மயங்க் அகர்வால் 67 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
சிறப்பான தொடக்கம் கொடுத்த ராகுல்-அகர்வால் ஜோடிஅடுத்து இறங்கிய மார்கிராம், நிகோலஸ் பூரன் இணைந்து பொறுப்புடன் ஆடினர்.

ஒரு கட்டத்தில் 15 பந்துகளுக்கு 10 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலை பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது, அதுவும் இறுதி இரண்டு ஓவர்களில் அவர்களுடைய வெற்றிக்கு 8 ஓட்டங்கள் மட்டுமே தேவைபட்டது.

19-வது ஓவரை வீசிய முஸ்தாபிஜூர் ரஹ்மான் சிக்கனமாக 4 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார், இறுதி ஓவரில் 4 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலை இருந்த போதுதான் போட்டியில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது.

20 வயதான கார்த்திக் தியாகியின் இறுதி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் பந்து டாட் ஆனது. 2வது பந்தில் மர்க்ராம் ஒரு ஓட்டம் அடித்தார். 3வது பந்தில் சிறப்பாக விளையாடி வந்த நிக்கோலஸ் பூரான் விக்கெட்டை பறித்தார்.

 

இதனால் கடைசி 3 பந்துகளில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதன் பின்னர் 4 வது பந்தும் டாட் ஆனது. 5வது பந்தில் தீபக் ஹூடா டக் அவுட்டாகி வெளியேறினார். கடைசி பந்தில் 3 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது  பாவியன் அலனுக்கு எதிராக அதுவும் டாட் ஆனது. இதனால் ராஜஸ்தான் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் ஒரே ஒரு ஓட்டத்தை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார் கார்த்திக் தியாகி.

இறுதியில், பஞ்சாப் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து இரண்டு ஓட்டங்களால் தோற்றது.

இதன்மூலம் கடைசி ஓவரில் இரண்டு ஓட்டங்களால் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் திரில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது கார்த்திக் தியாகிக்கு அளிக்கப்பட்டது.