கூட்டமைப்பினரிடையே வலுக்கும் பிரிவினைகள் – என்னை மன்னிக்க சுமந்திரன் யார் என சித்தார்த்தன் காட்டம் !
தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடங்கிய போது சுமந்திரன் இருக்கவில்லை. ஆகவே அவர் மன்னிக்க வேண்டிய தேவையொன்று கிடையாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் அண்மைக்காலமாக வெளியிட்டு வந்த கருத்துக்கள் தொடர்பாக கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் தரப்புக்கள் 3 கடிதங்கள் அனுப்பியுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியவற்றின் 5 கட்சிகள் கையெழுத்திட்டு ஒரு கடிதம் அனுப்பினோம். இரா.சம்பந்தன் ஒரு கடிதம் அனுப்பினார். இன்னொரு கடிதமும் அனுப்பப்பட்டது. நாம் அனுப்பிய கடிதத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமைக்குமிடையில் சம்பந்தமில்லை. இரா.சம்பந்தன் அதை கூறியுள்ளார். மற்றைய கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதனும், நானும் அதையே கூறியிருந்தோம். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஆவேசத்திற்குத் தான் என்ன காரணமென்பது தெரியவில்லை. அவர் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி ஆவேசமாக பேசியிருந்தார். இரா.சம்பந்தன் கடிதம் எழுதுவதை தெரிந்து கொண்டு, அதை மீறி நாம் கையெழுத்திட்டதாகவும் கூறியிருந்தார்.
ஆனால், உண்மையில் அப்படி நடக்கவில்லை. நாங்கள் கையெழுத்திட வேண்டிய ஒரு கடிதமெனில், அதை எழுத தொடங்கும் போதே இரா.சம்பந்தன் எமக்கு தகவல் தந்து விடுவார். ஆனால் இந்த கடித விவகாரத்தில் கடைசிவரை எனக்கு ஒரு தகவலும் தரப்படவில்லை.
எம்மை துரோகிகள், காட்டிக் கொடுத்தவர்கள் என்றும் சுமந்திரன் கூறியிருந்தார். தமிழ் அரசு கட்சியினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் தேர்தல் காலத்தில் மேடை போட்டு இவற்றைத்தான் கதைத்துக் கொண்டிருப்பார்கள். எனக்கு மக்கள் மத்தியிலிருந்த மதிப்பையும், செல்வாக்கையும் குழப்ப அதை செய்தார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். அது பலனளிக்காது என்பதை தெரிந்ததால் நான் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேன். ஆனால் இப்பொழுதும் சுமந்திரனும், கஜேந்திரகுமாரும் மீண்டும் புலிகளின் போர்க்குற்றம் பற்றியும், புளொட் அமைப்பும் விசாரிக்கப்பட வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்கள்.
சுமந்திரன் தயாரித்த கடிதத்தில், தருஸ்மன் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட பகுதி இணைக்கப்பட்டுள்ளது. அது அவர்களின் நிலைப்பாடு. அது வேறு விடயம். ஆனால் நாங்கள் தமிழ் தரப்பாக இருந்து கொண்டு, நாங்களே எங்களை விசாரிக்க கோருவது எவ்வளவு புத்திசாலித்தனம் என எனக்கு தெரியவில்லை.
அடுத்தது, நாங்களே விசாரிக்க கோருவது, நாங்கள் ஏதோ பெரிய குற்றம் செய்து விட்டோம் என நாங்களே ஒத்துக் கொள்வதை போல அமையும்.
எல்லா இயக்கங்களிற்கிடையிலும் ஒருவருக்கொருவர் பல பிரச்சனைகள் இருந்தன. மோதல்களும் நடந்தன. அது உண்மை. அதற்காக எந்த சந்தர்ப்பத்திலும், புலிகளை விசாரியுங்கள் என நான் கூற தயாராக இல்லை. எங்களை விசாரிப்பதென ஒரு நிலை வந்தால், அதற்கு நாம் தயாராக இருக்கிறோம். ஒரு சர்வதேச விசாரணை நடத்த நாம் தயாராக இருக்கிறோம். அப்படியொன்று நடந்தால்தான், நாம் எந்தவித குற்றங்களும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க முடியும். நாம் சர்வதேச விசாரணையை கோர மாட்டோம் என சுமந்திரன் கூறியிருந்தார். அவருக்கு தெரியாது, நாம் ஏற்கனவே பலமுறை அதை கோரி விட்டோம்.
1994களின் போது நாடாளுமன்றில் பேசும்போது, விடுதலைப்புலிகளுடன் எமக்கு பிரச்சனைகள் இருந்தாலும், பேச்சுவார்த்தையென வந்தால், அரசாங்கம், விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த வேண்டுமென பலமுறை கூறியிருக்கிறேன். ஏனெனில், அவர்கள் இல்லாத தீர்வு முழுமையடையாது. எங்களுடன் பேசாவிட்டாலும், புலிகளுடன் பேசி ஒரு தீர்வை நடைமுறைப்படுத்தினால் எமக்கும் அதில் பிரச்சனை வராது என கூறியிருந்தேன். ஏனெனில், புலிகள் மிகப்பெரியளவிலான அதிகார பரவலாக்கத்தையே கோருவார்கள்.
சுமந்திரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கூறியிருக்கிறார்கள், கே.பி, கருணா, பிள்ளையான் போல புளொட்டையும் விசாரிக்க வேண்டுமென. கே.பி, கருணா, பிள்ளையான் ஆகியோர் விடுதலைப் புலிகளை விட்டு வெளியேறிய பின்னர் நடந்தவற்றிற்கு இவர்கள் விசாரணை கோரவில்லை. அவர்கள் புலிகள் அமைப்பில் இருந்த போது செயற்பட்டமைக்கே இப்பொழுது இருவரும் விசாரணை கோருகிறார்கள்.
கே.பி யுத்தம் முடிந்த பின்னர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர். அவர் அதன் பின்னர் இலங்கையில் கிட்டத்தட்ட வீட்டுக்காவலில் இருக்கிறார். அவருக்கு பாதுகாப்பாக 10-15 இராணுவச் சிப்பாய்கள் உள்ளனர். அவரை விசாரிப்பதெனில் முழுக்க முழுக்க அவர் விடுதலைப் புலிகள் காலத்தில் செயற்பட்டமைக்காகவே விசாரிக்க வேண்டும்.
இதில் இன்னொரு விடயமுள்ளது. அவரை விசாரிப்பதெனில், அவருடன் செயற்பட்ட ஏராளம் புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர். இந்த விசாரணை வலைப்பின்னல் பெரிதாகிக் கொண்டே போகும். இது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல். அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஒத்ததாகவே இவர்களின் கோரிக்கை உள்ளது. சுமந்திரனும், கஜேந்திரகுமாரும் கூறியதற்கு பின்னர், இப்பொழுது வாசுதேவ நாணயக்காரவும், புலிகள் மீது விசாரணை நடத்த வேண்டுமென கூறியுள்ளார்.
என்னை விசாரிக்க வேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதில் ஒரு நியாயம் உள்ளது. அவரிடம் எங்களைப்பற்றிய ஒரு ஆதாரமுள்ளது. அவரது தந்தையார் குமார் பொன்னம்பலம் எம்மை தொடர்பு கொண்டு, எந்த தரப்பாலோ தமக்கு உயிராபத்து உள்ளது, அதனால் எமது தோழர்கள் சிலரை அனுப்பி தமது வீட்டுக்கு பாதுகாப்பு தரும்படி கேட்டிருந்தார். எங்கள் தோழர்கள் அவர்களது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள். அப்பொழுது சிறுவனாக அதையெல்லாம் பார்த்து வளர்ந்தவர் கஜேந்திரகுமார். தனது தந்தையுடன் சேர்ந்து இவர்கள் சட்டவிரோதமாக ஏதோ செய்கிறார்கள் என அப்போது அவருக்கு விளங்கியிருக்கவில்லை, இப்பொழுது விளங்கி, விசாரணை கோருகிறார் என நினக்கிறேன்.
இவர்கள் இருவரும் இப்பொழுது ஏன் இவற்றை கதைக்கிறார்கள் என தெரியவில்லை.அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது- “இராணுவத்தின் இறுதி யுத்த வெற்றியில் பங்கு கொண்டாடியவர் சித்தார்த்தன்” என. இதை எழுதியவருக்கோ, சுமந்திரனுக்கோ தெரிந்திருக்குமோ இல்லையோ, யுத்தம் முடிந்த பின்னர் இரா.சம்பந்தன்,மஹிந்த ராஜபக்சவை நாடாளுமன்றத்தில் வைத்து பாராட்டினார். பயங்கரவாதத்தை நீங்கள் கட்டுப்படுத்தி மக்களை விடுவித்திருக்கிறீர்களென. அப்போது சிங்கள எம்.பிக்கள் மேசையில் தட்டி வாழ்த்து தெரிவித்தனர். இதை சம்பந்தன் மேல் குற்றம் சொல்வதற்காக சொல்லவில்லை. இவையெல்லாம் 2010 இற்கு முன்னர் நடந்த விடயங்கள். சுமந்திரன் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் நடந்தவை. அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
அவர் 2010 இற்கு முன்னர் நடந்தவற்றை பேசுவது பிரச்சனையில்லை. அவற்றை படித்து, அறிந்து விட்டு பேசுவதே நல்லது. எம்மை தூண்டி விடுவதற்கே இந்த குற்றச்சாட்டுக்களை இவர்கள் தெரிவிக்கிறார்கள். நாம் இதற்கு சரியாக பதில் சொல்ல முயன்றால், அந்த பதில்கள் எமக்கு எதிராக மட்டுமல்ல, புலிகளிற்கு எதிராகவும் அவை பயன்படுத்தப்படும். ஆகவேதான் எங்களை தூண்டிவிட இருவரும் முயற்சிக்கிறார்களோ என்ற சந்தேகமும் எனக்குண்டு.
எங்களை மன்னித்துத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைத்ததாக சுமந்திரன் கூறியிருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடங்கிய போது சுமந்திரன் இருக்கவில்லை. ஆகவே அவர் மன்னிக்க வேண்டிய தேவையொன்று கிடையாது.
ஆனால், இரா.சம்பந்தன் சொல்லியிருக்கிறார்- தான் விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் இருந்ததாக.கொலைப்பட்டியலில் இருப்பவர்கள், தண்டிக்கப்பட்டவர்கள் தான் மன்னிக்கப்படுவார்கள். ஆயுத இயக்கங்களை பொறுத்தவரை நாம் மோதலில் ஈடுபட்டோம். பின்னர் சமாதானமாகினோம். அங்கு ஒருவரையொருவர் மன்னிப்பதல்ல. இதுதான் நடந்த விடயம். இவையெல்லாம் சுமந்திரனிற்கு தெரியாமலிருக்கலாம். உண்மையில் தமிழ் அரசு கட்சிதான் மன்னிக்கப்பட்டது.
இதேவேளை, சுமந்திரன் இன்றுவரை மன்னிக்கப்படவில்லை. சுமந்திரனிற்கு தாக்குதல் நடத்த முயன்றதாக கூறி, சுமந்திரனின் பெயராலேயே இளைஞர்கள் இன்றும் சிறைகளில் உள்ளனர். சுமந்திரனின் பாசையில் சொல்வதென்றால், சுமந்திரன் காட்டிக் கொடுத்து இன்றும் இளைஞர்கள் சிறைகளில் உள்ளனர். இதுதான் உண்மை.
அந்த நேரத்தில் விடயம் அறிந்தவர்களிற்கு தெரியும் “எமக்கும், புலிகளிற்கும், ஆயுத இயக்கங்களிற்கிடையில் மோதலில் என்ன நடந்ததென்பது”. இது தெரியாமல் மக்களில்லை. இவர்கள் எத்தனை தரம் திரும்பத்திரும்ப சொன்னாலும், ஆயுத இயக்கங்களை குறைகூறுவதில் பயனில்லையென்பது நன்றாக தெரியும்.
இங்கு மாத்திரமல்ல, சர்வதேச ரீதியாகவும் இதுதான் நடந்தது. ஆயுத இயக்கங்களிற்கிடையில் மோதல் வரும். பின்னர் இணக்கத்திற்கு வருவார்கள். பலஸ்தீனத்தில் இதை பலமுறை நேரிலேயே பார்த்திருக்கிறேன்.
இதைவிட, நாங்களும் குற்றம் செய்தோம் என சொன்னால்தான், சர்வதேச சமூகம் எம்மை நடுநிலையானவர்கள் என நினைக்குமென்ற விடயம் எனக்கு விளங்கவில்லை. உலகத்தில் போராடிய எந்த இனமும் அப்படி சொன்னதில்லை. நான் குற்றம் செய்து விட்டேன், அவையும் செய்தவை, ஒரு மாதிரி பார்த்து இரண்டு பேரையும் விசாரியுங்கள் என சொல்லும் ஒரு விடயம் நடந்ததாக நான் இன்று வரை கேள்விப்படவில்லை.
ஆனால், இங்கு சுமந்திரன் கூறுகிறார். அவர் எங்களை விசாரியுங்கள் என தன்னை விசாரிக்கக் கோரவில்லை. புலிகளை விசாரிக்கவே கோருகிறார் என்றார்.