துப்பாக்கி முனையில் கட்டிய தமிழ்தேசியம் ஈடாடுகிறது. ததேகூ உள்ளுராட்சி உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் இணைவு. : த ஜெயபாலன்

Trincomalee_Mapதமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றத் தலைவரான ஆர் சம்பந்தனின் மாவட்டமான திருகோணமலை மாவட்டத்தின் நகரசபை பிரதேச சபைத் தலைவர்களும் உறுப்பினர்களும் இவ்வாறு ஆளும் சுதந்திரக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்த போதிலும் ஆர் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் மற்றவர்களுடன் கலந்தாலோசியாமலேயே முடிவுகளை மேற்கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் சிவாஜிலிங்கம் இலங்கை செல்வதற்கு சில தினங்களுக்கு முன் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார். அவர்கள் தம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவதைத் தவிர்த்து இருந்ததாகவும் எம் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

மிகுந்த அரசியல் அனுபவம் மிக்கவராகக் கருதப்படும் ஆர் சம்பந்தன் தன்னுடைய மாவட்டத்தின் நகரத்தின் நகர சபை பிரதேச சபை தலைவர்களையும் உறுப்பினர்களையும் வென்றெடுக்க முடியாதவராக இருந்துள்ளார். இதுவரை காலமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் துப்பாக்கி முனையில் பேணப்பட்டு வந்த தமிழ்த் தேசிய ஒருமைப்பாடு அவர்களுடைய துப்பாக்கிகள் பறிக்கப்பட்டதும் ஈடாடிப் போயுள்ளது. இப்பிளவு தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் மட்டுமல்ல வே பிரபாகரனை தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்ட அத்தனை புலித் தேசிய அமைப்புகளிலும் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் கட்சித் தாவல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும் புள்ளிகளின் கட்சித் தாவலுக்கு கட்டியம் கூறுவதாக அமைந்தள்ளது.

பாராளுமன்றத் தலைவர் ஆர் சம்பந்தன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாபெரும் மனித அவலம் இடம்பெறப் போவதை அறிந்திருந்த போதிலும் அவர்கள் அதனைத் தடுப்பதற்கு எவ்விதமான காத்திரமான முயற்சியும் எடுக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் முகவர்களாக இருந்து காலத்திற்குக் காலம் தங்கள் இருப்பைக் காட்டுவதற்கான அறிக்கைகளை விட்டதற்கு அப்பால் அவர்களுக்கு அரசியல் இருக்கவில்லை. தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற புலி சார்பு அமைப்புகள் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன. அதற்கான அழுத்தங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஆளும் சுதந்திர ஐக்கிய முன்னணி அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளும் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. உறுதியான தலைமையும் உறுதியான கொள்கையும் இன்றி தங்கள் பாராளுமன்ற ஆசனங்களைக் காப்பாற்றுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வே பிரபாகரனுக்குப் பதிலாக இன்னுமொரு எஜமானனுக்கு கீழ் அந்தப் பாராளுமன்ற ஆசனங்களைத் தக்க வைக்க முடியுமென்றால் அதனை நோக்கி நகரவே முயற்சிக்கும்.

நவம்பர் 09ல் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்மைப்பு, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ், மற்றும் ஐக்கிய தேசியக் உறுப்பினர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். மேலும் சிறிரெலோ உறுப்பினர்கள் பதினொருவரும் இவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். நாட்டினை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லும் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவதற்கே தாம் சுதந்திரக் கட்சியில் இணைந்ததாக சிறிரெலோவைச் சேர்ந்த சிவம் தேசம்நெற்றுக்கு தெரிவித்தார். இந்நிகழ்வில் மொத்தமாக 26 பேர் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். ஏற்கனவே மட்டு மாவட்ட மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட மட்டக்களப்பு நகரசபை பிரதேச சபை உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டமை தெரிந்ததே.

Trincomalee_Map2006ல் இடம்பெற்ற திருகோணமலை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசுக் கட்சி)ல் போட்டியிட்டு வெற்றி பெற்ற நகரசபை, பிரதேசசபை உறுப்பினர்களே தற்போது சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர். திருகோணமலை நகரசபைத் தலைவர் எஸ் கௌரிமுகுந்தன், உப்புவெளி பிரதேச சபைத் தலைவர் ரி காந்தரூபன், உபதலைவர் வி சுரேஸ்குமார், மற்றும் உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர்கள் ரி பாலசுப்பிரமணியம், கெ வைரவநாதன் மற்றும் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் யு ரவிக்குமார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்ட ரெலொ அமைப்பு தங்கள் அடிமட்ட உறுப்பினர்களைக் கைவிட்டுவிட்டதாகக் கூறி பாரிஸில் இருந்து சென்ற சயந்தன், உதயராஜா (உதயன்) ஆகியோர் சிறிரெலோவை உருவாக்கினர். லண்டனைச் சேர்ந்த முன்னாள் ரெலோ உறுப்பினர் மாணிக்கம் நகுலேந்திரன் (கீரன்) அண்மையில் இலங்கை சென்று சிறிரெலோவுடன் இணைந்து செயற்பட்டார். தற்போது சிறிரெலோவின் தலைமையும் தங்கள் அடிமட்ட உறுப்பினர்களை கைவிட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டி சிவம் தலைமையில் ஒரு பகுதியினர் சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர். இன்னும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அவ்வாறு இணைய உள்ளதாகவும் அவர்கள் தேசம்நெற்றுக்கு தெரிவித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 Comments

  • குகபிரசாதம்
    குகபிரசாதம்

    இன்று கட்சி தாவிய தமிழ் கூத்தமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக செயல்பட்டவர்கள். தமது அரசியல் வாழ்வை தொடர ராஜபக்சேயுடன் இப்போ சேர்ந்திருக்கிறார்கள். பிழைக்கத்தெரிந்த தமிழர் மத்தியில் அரசியல் பிழைப்பு நடத்த தெரிந்த மனிதர்கள்.
    அத்துடன் படைகளிடம் இருந்து தப்பிய ராம் மின்னேரியா அருகே மீண்டும் பிடிபட்டது புலிகளின் இராணுவ நடவடிக்கைகளும் இனிமேல் கிழக்கில் தொடருமா என்பதை கேள்வி குறியாக்கியுள்ளது

    Reply
  • மாயா
    மாயா

    அதிபர் தேர்தலுக்கு சரத் பொண்சேகா வருவதாக இருந்தால் அவருக்கு உதவ வேண்டும் என யாழ் ஊடகவியாளர்களில் குழுவினர் விரும்பும் செய்தியொன்று கசிந்துள்ளது.

    அதற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளவை:
    (1) 14 வருடங்கள் இராணுவ பிடியில் வாழும் மக்களின் பிரச்சனைகளை தெற்கு சிங்களவர்களும் உணர இது வழி வகுக்கும்.
    (2) வடக்கில் இருக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் பண முதலைகளே தவிர மக்களுக்கு சேவை செய்யும் நோக்குடையவர்கள் அல்ல. இராணுவம் அப்படி நடந்து கொள்வில்லை.
    (3) சரத், அதிபர் முறையை இல்லாதொழிக்க வேண்டும் எனும் கருத்து கொண்டவராக இருக்கிறார்.
    (4) சரத் பொண்சோ, தமிழ் சிங்கள பேதமற்று , அனைவருக்கும் நாட்டின் சட்டம் பொதுவானதாக இருக்க வேண்டும் எனக் கருதுபவராக இருக்கிறார்.
    (5) இன்றைய ஆட்சியாளர்கள் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள். ஆனால், சரத் பொண்சேகாவுக்கு , அப்படியான எந்த புகாரும் இல்லை.
    (6) யுத்தத்துக்கான அனைத்து பொறுப்பையும் அதிபர் ராஜபக்ஸவே ஏற்றுக் கொண்டுள்ளதால், சரத் பொண்சேகா யுத்த காலத்து குற்றச் செயல்களுக்கு உடந்தையற்றவராக ஆகியுள்ளார்.

    இப்படியாக ஒரு குழு தமது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளது.

    மற்றொரு குழுவோ எவர் ஆட்சிக்கு வந்தாலும் தமக்கு விமோசனம் கிடைக்கப் போவதில்லை. எனவே இன்னொரு முறை ஏமாற்றப்படுவதை தவிர்க்க மெளனமாக இருப்பது சிறந்தது என கருத்து தெரிவித்துள்ளது.

    Reply
  • kamal
    kamal

    துப்பாக்கி முனையில் கட்டப்பட்டதால்தான் தேசியம் ஈடாடியது. இனி தேர்தலுக்கமுன் மிச்ச தமிழ்க்கட்சிகளையும் உடைச்சு மகிந்தா கட்சிக்க அரைவாசிதாவ மிச்சம் இருப்பவை உழைப்பைப் பார்த்துக்கொண்டு போயிடுவாங்கள்

    Reply
  • மாயா
    மாயா

    // துப்பாக்கி முனையில் கட்டப்பட்டதால்தான் தேசியம் ஈடாடியது.//

    துப்பாக்கிகளுக்கு பயந்து ஊமையான துர்ப்பாக்கியசாலிகள் தமிழர்கள். புலிகளுக்கு தலையாட்டி வாழ்ந்தார்கள். இனி இராணுவத்துக்கு தலையாட்டி வாழப் போகிறார்கள். இதில் புதிதாக ஒன்றுமில்லை. தலையாட்டி பழக்கப்பட்டதுதானே? தேசியம் அழிந்து தேசம் விடுதலையாகியுள்ளது. அந்த மக்களுக்கு சுமுக வாழ்வு உருவானால் புலத்து புலிகள் இனி நகத்தைத்தான் கடிக்க வேண்டும். அங்கு போனால் குரல் வளையை கடித்து தின்று விடுவார்கள்.

    Reply
  • sumithra
    sumithra

    நரம்பில்லா நாக்கு, ஈரமில்லா இதயம், உண்டு உப்பிய உடம்பு, அநியாயமாய் சேர்த்து அந்நிய நாடுகளில் அடக்கம், வாக்குபோட்ட மக்(கு)களுக்கு வாலைக்காட்டிவிட்டு தமது வாழ்க்கை வசதிகளை வழப்படுத்த நினைக்கும் இந்த வெட்கங்கெட்டவர்கள் எந்த பிசாசுடனும் கூட்டு சேருவார்கள்.
    “வீடு வரை வாக்கு- வீதிவரை சோக்கு
    காடு வரை காறு,- கடசியில கயிறுதான்” (கோவிந்தா கோவிந்தா)

    Reply
  • chandran.raja
    chandran.raja

    சில வருடங்களுக்கு முன்பு எக்ஸில் சஞ்சிகையில் ஒரு சிறுகதை வந்தது. ஒரு இயக்கம் போராட்டத்திற்காக கொள்ளையடிக்கப்பட்ட நகையை பணத்தை ஒருஇடத்தில் தாட்டுவைக்கிறார்கள். சிறுதுகாலத்திற்கு பிறகு புதைத்து வைக்கப்பட்ட பொருளை எடுக்க மண்ணை தோண்டுகிறார்கள். அது அந்த இடத்தில் இல்லை. அவர்களுக்குள் சந்தேகம் வாக்குவாதம் நடைபெறுகிறது. முடிவில் ஒருவருக்கு துரோகிப்பட்டம் கொடுத்து மரண தண்டனையும் நிறைவேறுகிறது அதே இடத்தில் இறந்தவரை புதைக்க வேண்டும் பக்கத்தில் கிடங்கு கிண்டுகிறார்கள். அவர்களுக்கு ஆச்சரிமாக இருக்கிறது. தாங்கள் புதைத்த நகையும் பணமும் அங்கே இருப்பதை காண்கிறார்கள். தமது தவறும் அவசரபுத்தியும் தெரிகிறது. முதல் தோண்டிய இடம் தவறுஎன்று. இதை ஏன் நான் சொல்லுகிறேன் என்றால் ….

    முதிராதஅறிவு வெஞ்சினம் சந்தேகம் ஈவுவிரக்கம் இன்மை பழிக்குபழி தீர்த்தல் கொலை செய்வதென்றால் அதற்கு இராணுவகட்டுப்பாடு நடவடிக்கையென்று பெயர்இடல் இதுஆயுதம் ஏந்தியஎல்லா இயக்கங்களுக்கும் காணப்படுகிறது. உங்களுக்குள் நீங்களே அடிபட்டுக் கொண்டு மடிந்துபோனால் பிரச்சனை இல்லை. அதற்கேன்? மக்களை இழுக்கிறீர்கள். அந்த பாமரமக்களை அவர்கள் பாட்டுக்கே விட்டுவிடுங்கள். நீங்கள் காணப்போகிற ஈழத்தில் களவு ஊழல் சித்திரவதை கொலைகள் மோசடி இருக்காதா? நான் உறுதியாகச் சொல்லுகிறேன். சிங்களஅரசை விட இருமடங்கு அதிகமாக இருக்கும் என்பேன். வாழத்தான் பிறந்தவன் மனிதனேயொழிய மரிப்பதற்காக அல்ல. இன்று மக்களை குற்றம் சாட்டுகிறீர்கள்.
    இறந்துபோன இருபத்திஐய்யாயிரம் இராணுவ வீரர்களைப் பாருங்கள். அநேகமாக எல்லோரும் ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்தவர்களே!அவர்களுக்கும் அக்கா தங்கச்சி வயோதிப தாய்தகப்பன் உண்டு. வயிற்றை கழுவதற்கு வந்தவர்களே அநேகர்.

    எந்தக் கட்சியிலும் ஒருவன் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளலாம். இது ஜனநாயகமரபு. உங்களுக்கு திறமையிருந்தால் வல்லமையிருந்தால் உங்கள் பிழைப்புவாதமில்லாத அரசியலால் வென்று கொள்ளுங்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    இன்றைய தேவை இதுவாகத்தான் இருக்கிறது. பிரிவினை பேசிக் கூட வாழ முடியாது இலங்கையில். வெளியில் மட்டும் விதி விலக்கு. அங்கு போனால் , நீங்களும் இப்படித்தான் மாறுவீர்கள். இதை மாற்ற இனி எந்தக் கொம்பனாலும் முடியாது.

    வெளிநாட்டில் இருந்து திரும்பியுள்ள அரசியல்வாதிகள் , புலத்து புலி பெரியவர்களது , விபரங்களை இலங்கை புலனாய்வுத் துறைக்கு விலா வாரியாக எழுதிக் கொடுக்கிறார்களாம். அவதானம்.

    Reply