சுதந்திர கட்சியின் வருடாந்த மாநாடு நாளை

041109ma.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு நாளை கட்சியின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இம்மாநாடு நாளை பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டையொட்டி சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் கெத்தாராம விளையாட்டரங்கு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்தது.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சுதந்திரமான நாட்டில் நடத்தப்படவுள்ள இம்மாநாடு பிரமாண்டமான ஏற்பாட்டுடன் நடைபெறுவதுடன் இம்மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கையுடன் நெருங்கிய உறவினைக் கொண்டுள்ள 35 நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

தேசிய சர்வதேச ரீதியில் இயங்கும் சுதந்திர கட்சி கிளைகளின் அமைப்பாளர் மற்றும் முக்கியஸ்தர்களுடன் ஒரு இலட்சம் பேர் இம்மாநாட்டில் கலந்து கொள்வரென மாநாட்டின் சார்பில் சர்வதேச தொடர்புகளுக்குப் பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். சர்வதேச பிரதிநிதிகள் நேற்று முதலே வருகை தர ஆரம்பித்துள்ளனர். அத்துடன் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வடக்கு கிழக்கிலிருந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளை அமைப்பாளர்கள் உப தலைவர்கள் பேராளர்கள் பலரும் வருகை தரவுள்ளனர்.

மாநாட்டையொட்டிய பிரமாண்டமான முன்னேற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. வெளிநாட்டுப் பிரதிநிதிகள், தேசிய சர்வதேச கட்சி அமைப்பாளர்கள் ஆகியோருக்கு விசேட ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாடெங்கிலுமிருந்து இம்மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தருபவர்களுக்கென விசேட போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மாநாடு இடம்பெறும் பகுதியை ஊடறுக்கும் போக்குவரத்துப் பாதைக்குப் பதிலாக மாற்றுப் பாதைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டையொட்டியதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நான்காவது பதவிப் பிரமாண நிறைவும் (19ம் திகதி நிறைவு கூரப்படுவதால் இம்மாநாடு விசேடம் பெறுகிறது.

நாடு தேர்தல்களிரண்டை எதிர்கொள்ளவுள்ள இன்றைய கால கட்டத்தில் இம்மாநாட்டில் வெளியிடப்படவுள்ள தீர்மானங்கள் சகல தரப்பினரதும் ஆர்வங்களைத் தூண்டியுள்ளன. அத்துடன் அடுத்து வருவது ஜனாதிபதி தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா என்பதை வெளிப்படுத்துவதாகவும் இம்மாநாடு அமைகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது 58 வருட அரசியல் வரலாற்றைக் கொண்டது. நான்கு முக்கிய தலைவர்கள் இதற்கான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளதுடன் பல்வேறு சவால்கள், தடைகளுக்குள்ளும் முன்னேறும் கட்சியாக அது திகழ்கிறது. குறிப்பாக கடந்த 30 வருட காலமாக நாட்டை ஸ்தம்பிதமடையச் செய்த பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நாட்டில் அமைதிச் சூழல் நிலவும் தருணமொன்றில் அதற்குக் காரணமானவராகத் திகழும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறும் இம்மாநாடு சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *