A9 பொதுமக்கள் யாழ் சென்றுவர பாதுகாப்பு அனுமதி தேவையில்லை – அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி லைசன்ஸ் இருந்தால் போதும்

road-a9.jpgஏ-9 வீதியூடாக யாழ். நகர் சென்று வருவதற்கு பயணிகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இலங்கைப் பிரஜையாகவுள்ள அனைவரும் ஏ-9 வீதியூடாக சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ள இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டிகள், மற்றும் விசேட பஸ் வண்டிகளூடாக சென்று வரலாம். பயணிகள் அனைவரும், தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப் பத்திரம் ஆகியவற்றில் ஒன்றை காண்பித்து செல்லமுடியும்.

பயணிகள் அனைவரும் வவுனியா சோதனைச் சாவடியில் சாதாரண சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய ஏ-9 வீதி மக்களின் போக்குவரத்துக்காக 13 ஆம் திகதி திறக்கப்பட்டது. முதற் தடவையாக நேற்று 10 பஸ் வண்டிகளில் பயணிகள் யாழ். நோக்கி வவுனியா ஊடாக சென்றனர். வவுனியா இரட்டைப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் வழமையான பாதுகாப்பு சோதனைகளின் பின்னர் பயணிகள் பஸ் வண்டி புறப்பட்டன.

பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி ஏ-9 வீதியை திறப்பது தொடர்பாகவும் பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது பாதுகாப்பு செயலாளர் வீதியை திறப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தார். யாழ். குடாநாட்டிலிருந்து பொருட்களை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லவும், வெளிமாவட்டங்களிலிருந்து குடாநாட்டுக்குள் கொண்டு செல்லவும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென பயன்படுத்தப்படும் லொறிகள், பார ஊர்திகள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரிடம் பதிவு செய்யப்படல் வேண்டும். எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இந்தப் பதிவுகளை செய்துகொள்ள முடியும்.

ஏ-9 வீதியூடாக வவுனியா வரை வரும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி நடவடிக்கை எடுத்திருந்தார். கடந்த ஜுலை மாதம் 27ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே ஆளுநர் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *