November

November

இன்று ஈஸ்ட்ஹாமில் ஈழத்து நூல்களின் கண்காட்சி

காற்றுவெளி சஞ்சிகை ஆதரவில் நூல் அறிமுகமும் ஈழத்து தமிழ் நூல்களின் கண்காட்சி இன்று சனிக்கிழமை 7ம் திகதி பிற்பகல் 3 மணிக்கு றினிட்டி சென்ரரில் நடைபெறவுள்ளது.

Trinity Centre
East Avenue
Eastham
London
E12 6SG
(Eastham Tube Stationற்கு அருகாமையில்)

தொடர்புகட்கு: கவிஞர் முல்லை அமுதன்
0208 586 7783

மீள்குடியேற்ற பகுதிகளுக்கு தபால் சேவை விஸ்தரிப்பு

141009post-box.jpgவன்னிப் பிரதேசத்தில் யோகபுரம், துணுக்காய் ஆகிய இடங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தபால் அலுவலகம் செயல்பட தொடங்கும் என வடபிராந்திய பிரதி அஞ்சல் மா அதிபதி வீ. குமரகுருபரன் தெரிவித்தார்.

மீள்குடியேறிய மக்களுக்கு சேவைகள் வழங்கும் நோக்குடன் தபால் சேவைகள் விஸ்தரிக்கப்படுகின்றது. அடுத்த கட்டமாக மாங்குளம், கிளிநொச்சி பிரதேசங்களிலும் தபால் சேவைகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் நான்கு தபால் அலுவலகங்கள் நவீன முறையில் புதிதாக நிர்மாணிக்கப் படவுள்ளன. இதற்கு 160 மில்லியன் ரூபா தேவைப்படுமென மதிப்பிடப் பட்டுள்ளது.

அவசரகால சட்டம் 78 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

parliament.jpgஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் 78 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 95 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் கிடைத்தன.

பிதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப் பித்துப் பேசினார். தேசிய கூட்டமைப்பு,  மு.கா. எம்.பிக்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

ஐ.தே.க., ஜே.வி.பியினர் சபையில் இருக்கவில்லை. பாராளுமன்றம் இம் மாதம் 17 இல் மீண்டும் கூடும்.

தெ.மா.சபை உறுப்பினர் நிசாந்த கைது

220909southern_province.jpgதென் மாகாண சபை உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

காலி மஜிஸ்திரேட் நேற்று பிறப்பித்த பிடிவிறாந்து உத்தரவுக்கமைய இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலின் போது அதிகாரிகளுடன் முறைகேடாக நடந்தாரென்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இலங்கைக்கு கண்ணிவெடி அகற்றும் இயந்திரங்களை வழங்கியுள்ளது ஐ.நா.அகதிகள் நிறுவனம்

0000deminingmachine.jpgஇலங் கையின் வடக்கே முன்னாள் யுத்தப் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் பயன்படுத்துவதற்காக 5 புதிய இயந்திரங்களை ஐ.நா. அகதிகள் நிறுவனம் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது.

ஐ.நா. மன்ற நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வெளியூர் தன்னார்வ நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கம் கண்ணி வெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டுவருகிறது.

ஐ.நா. அகதிகள் நிறுவனம் வழங்கும் புதிய இயந்திரங்கள் இலங்கை அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் என லண்டனிலுள்ள ஐ.நா. அகதிகள் நிறுவனத்தின் அயல் விவகார மூத்த அதிகாரி பீட்டர் க்ரெஸ்லர் தெரிவித்துள்ளார்.

காஸா போர்க்குற்ற விசாரணை அறிக்கை: 114 நாடுகள் ஆதரவு: 18 நாடுகள் எதிர்ப்பு

ஐ.நா.வால் வெளியிடப்பட்ட காஸா போர்க்குற்ற விசாரணை அறிக்கை கடந்த வியாழக்கிழமை வாக்களிப்புக்கு விடப்பட்டது. 114 நாடுகள் ஆதரவாகவும் 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 44 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தன. ஐ.நா. பொதுச் சபையில் 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இஸ்ரேல், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட 18 நாடுகள் போர்க்குற்ற விசாரணை அறிக்கைக்கு எதிராக வாக்களித்தன. ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலானவை இஸ்ரேலுடன் இணைந்து விசாரணைக்கெதிராக வாக்களித்தன. பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் நடுநிலைமை வகித்தன. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் முஸ்லிம் நாடுகளும் விசாரணை அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. காஸாவில் 22 நாட்கள் நடந்த யுத்தத்தில் இஸ்ரேல், ஹமாஸ் இராணுவங்கள் நடந்து கொண்ட விதங்கள் பற்றி அந்நாடுகளை விசாரணை செய்ய வேண்டுமென ஐ.நா. வால் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகின்றது. இரண்டு தரப்பும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறும் இந்த அறிக்கை 575 பக்கங்களைக் கொண்டதாகும்.

விசாரணைகள் மூன்று மாதங்கள் இடம்பெறவுள்ளதால் இஸ்ரேல், பலஸ்தீன் தரப்புக்கள் இதற்குப் பூரணமாக ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் பேரழிவு ஆயுதங்களைப் பாவித்தமை, மக்களை யுத்தக் கேடயமாக பாவித்தமை போன்ற குற்றங்களுக்காக இவ்விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன. இஸ்ரேலின் தாக்குதலில் 1300 பலஸ்தீனர்களும் ஹமாஸின் தாக்குதலில் 12 இஸ்ரேலியப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். மஸ்ஜித்களின் மீதும் அகதிகள் தஞ்சமடைந்த முகாம்கள் மீதும் வான்தாக்குதல் நடத்தப்பட்டதாலே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக ஐ.நா.வின் அறிக்கை கூறுகின்றது.

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நீதியரசர் ஜுரிஸ்ட் ரிச்சார்ட் கோல்ஸ்டோன் தலைமையிலான குழு இந்த அறிக்கையை தயாரித்தது இஸ்ரேலையும், பலஸ்தீனையும் விசாரணை செய்தபின் பெறப்பட்ட அறிக்கைகள் மூன்று மாதத்தின்பின் ஐ. நா.வின் பாதுகாப்புச் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் மீண்டும் ஐ.நா. பொதுச் சபைக்கு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்காக அனுப்பி வைக்கப்படவேண்டும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விசாரணையை பகிஷ்கரிக்கப் போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ஐந்து நாடுகளுக்கு வீட்டோ அதிகாரமுள்ள போதும் ஐ.நா. பொதுச் சபையில் எந்த நாட்டுக்கும் வீட்டோ அதிகாரமில்லை.

சவுதி அரேபிய பெண்ணை கொன்ற இந்தியருக்கு மரண தண்டனை

சவூதி அரேபிய பெண்ணை கொலை செய்த ஒரு இந்தியர் உள்ளிட்ட மூன்று பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் கூறியதாவது: கேரளாவைச் சேர்ந்தவர் முகமது நவ்ஷாத் இலங்கையைச் சேர்ந்தவர்கள் பந்தர் மற்றும் ஹலிமா இவர்கள், சவூதியில் பணிபுரிந்து வந்தனர். 2005ல் இவர்கள், மேலும் சிலருடன் சேர்ந்து, சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கொலை செய்தனர்.

இதையடுத்து, இவர்கள் மூவருக்கும் சவுதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மற்றவர்களுக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும், கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், முகமது நவ்ஷாத்துடன், இலங்கையைச் சேர்ந்த இருவருக்கும் சேர்த்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மூவரும், தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

சவுதியில் இந்தியர்களுக்கு இது போன்ற மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைத் தடுக்க தூதரகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. மரண தண்டனையைக் குறைக்க வேண்டும் என, இவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

ரூபாவதி கேதீஸ்வரனுக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பதவி – திங்கட்கிழமை பதவியேற்பு

061109rupawathy.jpgமட்டக் களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி வரும் ரூபாவதி கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இந்த நியமனத்தை வழங்கியுள்ளது.

 ரூபாவதி கேதீஸ்வரன் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணை யாளராகவும் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபராகவும் சுனாமி வேலைத்திட்டத்திற்கான மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியதுடன் தற்போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றுகின்றார்.
 
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இவர் எதிர்வரும் திங்கட்கிழமை அதற்கான கடமையை பொறுப்பேற்கவுள்ளார்

“ஒபரேஷன் என்ரபே”யை விடவும் கே.பியை கொண்டுவந்தது சாதனை

இஸ்ரேலிய படையினரின் ‘ஒபரேஷன் என்ரபே’ நடவடிக்கையைவிட மிகத் திறமையாகச் செயற்பட்டு இலங்கைப் படையினர் கே.பியை (குமரன் பத்மநாதனை) கொழும்புக்கு கொண்டு வந்தார்களென்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

வெளிநாட்டில் இருந்த கே.பியைக் கொழும்புக்குக் கொண்டு வந்ததே பெருஞ்சாதனை. விசாரணையை ஆறுதலாகச் செய்துகொள்ளலாம். ஐ.தே.க.வினர் இப்போது முட்டாள்தனமாகக் கேள்வி கேட்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் “கே.பி மீதான விசாரணையை அரசு கைவிட்டுவிட்டதாக ஐ.தே.க. எம்.பி அகில விராஜ் காரியவசம் கூறுகிறாரே” என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் யாப்பா, “ஐ.தே.க. ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் காலத்தில் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியது தொடர்பாக அவரின் செயலாளராகவிருந்த கே. எச். ஜே. விஜேதாச தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்தச் சீரழிவு இன்னமும் தொடர்ந்தே வருகிறது”

“இஸ்ரேலிய படையினர் உகண்டாவிலிருந்து விமானத்தை மீட்டு வருவதற்காக ‘ஒபரேஷன் என்ரபே’ நடவடிக்கை மேற்கொண்டார்கள். அதன்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ஆனால், நமது இராணுவத்தினர் ‘என்ரபே’ நடவடிக்கையைவிடத் திறமாகச் செயற்பட்டு கே. பி. யைக் கொண்டுவந்தார்கள்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமெரிக்க ராணுவ முகாமில் வீரர் வெறியாட்டம்! – 12 வீரர்கள் பலி; 30 பேர் காயம்

0611us_soldies.jpgஅமெரிக்க ராணுவ முகாமில் வீரர் ஒருவர் வெறியாட்டத்துடன்  நடத்திய  துப்பாக்கிச் சுட்டில்; 12  வீரர்கள் பலியானதுடன் 30 பேர் காயமுற்றனர். இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்ட வீரர் ஈராக் பாதுகாப்பு பணிக்காக செல்ல தயாராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் மனநல மருத்துவரும் கூட. அமெரிக்காவில் டெக்சாசில் கில்லின் அருகே போர்ட்ஹ_ட் ராணுவ முகாமில் வீரர்கள் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில்; வந்த சக வீரர் ஒருவர் அங்கிருந்த வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் இறந்தனர். 30 பேர் காயமுற்றனர். ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய வீரர் மேஜர் நைடால் மாலிக் ஹசன் ( 39 )  இரண்டு துப்பாக்கிகளுடன் வந்து சுட்டதாகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சுடு சம்பவம் காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை என்றும் விசாரணைகள் தொடர்வதாகவும் லெப்டினன்ட் ஜெனரல் ரொபர்ட் பாப்கோன் தெரிவித்துள்ளார்.