November

November

இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசக்கல்வி

இலங்கை அகதிகளின் பிள்ளைகள் குறிப்பாக தமிழ் நாட்டிலுள்ள அகதிகளின் பிள்ளைகள் பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்பை இலவசமாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் கற்பதற்கு அனுமதியளிப்பதென அப்பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.

அடுத்த கல்வியாண்டு தொடக்கம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகத்தில் இலவசக்கல்வி வழங்கப்படும்.விசேடமாக தொலைக்கல்வியூடாக கல்வியை முன்னெடுக்க விரும்புவோருக்கு இந்தவசதி மேற்கொள்ளப்படும்.அகதிகள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மட்டும் தீர்வாக அமையாது. இந்த மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மேம்படுத்த சரியான கருவி கல்வியேயாகும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.திருவாசகம் கூறியதாக “ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தீர்மானம் கடந்த வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டது.அத்துடன், பி.எச்.டி. நெறியை பல்கலைக்கழகங்கள் அல்லது இணைக்கப்பட்ட கல்லூரிகளில் முன்னெடுக்க விரும்புவோருக்கு இடஒதுக்கீட்டை மாநிலமட்டத்தில் ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2010 முதல் இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று பேராசிரியர் திருவாசகம் கூறியுள்ளார்.

மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை வழங்கி வானை கடத்திய மர்ம மனிதர் வானுடன் கைது

arest.jpgவானில் பயணம் செய்தோரை மயக்கி வேனை அபகரித்துச் சென்ற மர்ம மனிதரை பொலிஸார் வேனுடன் கையும் மெய்யுமாக கைது செய்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரத்ன தெரிவித்தார்.

இச்சம்பவம் கட்டுநாயக்க பகுதியில் வெள்ளி இடம்பெற்றுள்ளது. கிரிபத்கொடையில் வேனை வாடகைக்கு அமர்த்தி மூன்று நண்பர்கள் அதில் சுற்றுலா சென்றுள்ளனர். இதன்போது ஹோட்டல் ஒன்றில் வைத்து இடை நடுவே இந்நண்பர்களுடன் உறவை ஏற்படுத்திக்கொண்டு மர்ம மனிதர் நீர்க்கொழும்பு செல்வோமெனக் கூறி அதேவேனில் பயணித்துள்ளார்.

வெலிசர பகுதியில் வைத்து அனைவரும் இந்த மர்ம மனிதர் வாங்கிக்கொடுத்த குளிர்பானத்தை அருந்தியதையடுத்து மயக்கமுற்றுள்ளனர். இதனையடுத்து அம்மர்ம நபர் 16 இலட்சம் ரூபா பெறு மதியான வானை கடத்திச் சென்றுள்ளார். சனிக்கிழமை கட்டுநாயக்க எவரிவத்தை பகுதியில் வைத்து வேனை குறித்த மர்ம மனிதனுடன் கைது செய்துள்ளனர்.

சமையல் எரிவாயு விற்பனையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய அரசிடம் இருந்து ரூ.1.7 பில்லியன்; ல்காஸ் நிறுவனம் கோருகிறது

சமையல் எரிவாயுவை சூத்திரத்தின் பிரகாரம் விற்பனை செய்வதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய அரசாங்கம் 1.7 பில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் என்று ஷெல்காஸ் நிறுவனம் விலை மாற்ற சூத்திர உடன்படிக்கையின் கீழ் மத்தியஸ்த நியாய சபைக்கு முறைப்பாடு செய்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக சட்ட மா அதிபரை தொடர்பு கொண்டு தேவையான அறிவுறுத்தல்களை பெற்றுக் கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கூறப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு விலையை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும் என்று ஷெல் காஸ் நிறுவனம் கேட்கிறது. ஆனால் கணக்கிடுவதில் ஏற்படும் வித்தியாசங்கள் காரணமாக அவர்கள் கேட்கும் விலை ஒரு போதும் கிடைப்பதில்லை என்று வர்த்தக, சந்தைப்படுத்தல் அபிவிருத்தி, கூட்டுறவு மற்றும் பாவனையாளர் அலுவல்களு க்கான அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகிறார்.

சமையல் எரிவாயு விலை வருடத்துக்கு ஆறு முறை மாற்றத்துக்குள்ளாவதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் விலை நிர்ணய குழு, சமையல் எரிவாயு நிறுவனங்கள் வழங்கும் தகவல்களுக்கேற்ப எரிவாயு விலையை தீர்மானிப்பதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சமையல் எரிவாயு விலையை தீர்மானிக்கும் விடயத்தில் அரசாங்கம் தலையிடுவது தொடர்பாக கடந்த காலத்தில் சர்ச்சை நிலை ஏற்பட்டது. ஊடகமொன்று மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தவறான கருத்து காரணமாக அரசாங்கமே சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதாக மக்கள் நினைக்கின்றனர். சமையல் எரிவாயு விலையை கம்பனிகளின் தீர்மானத்துக்கு விடுவதற்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என்பதே அந்த ஊடகத்தின் நோக்கமாக இருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.

மைதான வாடகை ரூ. 50 லட்சம்

greenpark.jpgஇந்தியா, இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்கும் மைதானத்துக்கு வாடகையாக 50 லட்ச ரூபாய் கொடுக்கப்பட உள்ளது.

உத்திரபிரதேச (உ.பி.,) கிரிக்கெட் சங்கத்துக்கு என சொந்தமாக கிரிக்கெட் மைதானம் இல்லை. இந்நிலையில் இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர், கிரீன் பார்க் மைதானத்தில் வரும் நவ., 24 முதல் 28 வரை நடக்க உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த ஆண்டு இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய ஒருநாள் போட்டிக்கு வாடகையாக ஒரு கோடி ரூபாய், உ.பி., கிரிக்கெட் சங்கம் மாநில அரசுக்கு கொடுத்து இருந்தது.

இந்நிலையில் தற்போது நடக்கவுள்ள டெஸ்ட் போட்டிக்கு கொடுக்கப்பட உள்ள வாடகை குறித்து உ.பி., கிரிக்கெட் சங்கத்தின் இயக்குனர் ஜோதி பாஜ்பாய் கூறுகையில்,” கடந்த ஆண்டு இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிக்கு 13 லட்ச ரூபாய் தான் வாடகை கொடுத்து இருந்தோம். ஆனால் இம்முறை 50 லட்ச ரூபாய் வாடகை தரும் படி மாநில அரசு, எங்களை கேட்டுக்கொண்டுள்ளது. போட்டியை சிறப்பாக நடத்த, வேறு வழியின்றி அதை நாங்கள் கொடுக்க முடிவு செய்துள்ளோம்,” என்றார்.

இலங்கையில் இரகசிய தீவாக இந்தியத் தூதரகம்

வெளிநாட்டுக்கு நாம் செல்லும்போது, அந்த நாட்டில் நமக்கு வழிகாட்டியாகவும் ஆதரவாகவும் இருக்கக் கூடியது நமது தூதரகம்தான். ஆனால், கொழும்பில் செயல்படும் இந்தியத் தூதரகம் பத்திரிகையாளர்கள் உட்பட இந்தியர்கள் யாரும் நெருங்க முடியாத தீவாக உள்ளது.

இந்தியத் தூதராக கோபால் காந்தி பொறுப்பேற்கும் வரை அதன் செயல்பாடுகள் இந்தியப் பத்திரிகையாளர்களைப் பொறுத்தவரை ஓரளவு வெளிப்படையாகத் தான் இருந்து வந்தது. சிவ்சங்கர் மேனன் தூதராக இருந்தபோது, பத்திரிகையாளர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. செய்திகளை அளிக்கும் போது பெயர் வெளியிட வேண்டாம் என்று மட்டும் கேட்டுக்கொள்வார்.

கோபால் காந்தி சிறப்பாக உபசரித்தாலும் தகவல்களை ஓரளவுதான் கூறுவார். ஆனால், டில்லியில் இருந்து அமைச்சர்களோ, அதிகாரிகளோ வந்தால் தகவல் நிச்சயமாகத் தெரிவிக்கப்படும். நிருபமா ராவ் தூதரான பின்தான் நிலைமை மோசமடையத் தொடங்கியது. பாராட்டி செய்திகளை வெளியிட்டால் அவர் விரும்புவார்.

எந்த அளவுக்கு உண்மையாக இருந்தாலும் தூதரகத்தின் செயல்பாடுகளை விமர்சித்து எழுதினால் அதை விரும்பமாட்டார். இதன் காரணமாக இந்திய மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர்களுடனான அவரது உறவு வெகுவாக பாதிக்கப்பட்டது. தூதரகத்தின் ஊதுகுழலாகவே இந்திய பத்திரிகையாளர்கள் செயல்பட வேண்டும் என அவர் எதிர்பார்த்தார். அலோக் பிரசாத் தூதராகப் பொறுப்பேற்ற பின்னர் நிலைமை தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு மாறிவிட்டது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதோ அல்லது கலந்துரையாடுவதோ இல்லை. மாறாக,வெளிப்படையாகவே அவர் பத்திரிகையாளர்களிடம் வெறுப்பை உமிழ்ந்தார்.

இலங்கையில் சீனா செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்து இந்திய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள வந்த செய்திகளை தூதரகம் முழுமையாக மறைத்துவிட்டது. வடக்குப் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இரண்டு இந்தியக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், காரணம் ஏதும் இல்லாமல் அவை மூடி மறைக்கப்பட்டு விட்டன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இந்தியா கட்டிய 2 மருத்துவமனைகளில் இந்திய டாக்டர்கள் பலரும் பாராட்டும் வகையில் அற்புதமாகப் பணிபுரிந்தனர். ஆனால், எந்த ஓர் இந்தியப் பத்திரிகையாளரும் அந்தப் பகுதிக்குச் செல்லவோ, அவர்களைச் சந்திக்கவோ அனுமதிக்கப்படவில்லை.

தமிழகத்தைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் கொண்ட குழு அண்மையில் இலங்கை முகாம்களைப் பார்வையிட வந்தது. ஆனால், அவர்களது பயணம் குறித்து எந்தவொரு தகவலும் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களுடன் எந்த விதத்திலும் தொடர்புகொள்ளக்கூடாது என இந்திய ஆட்சசியாளர்கள் ஏற்கனவே கூறி அனுப்பியுள்ளனர் என்பது எம்.பி.க்களது செயல்பாடுகளில் இருந்து தெரியவந்தது.

(தங்களுக்குப் பழக்கமில்லாத கொழும்பைச் சேர்ந்த தொலைபேசி எண்ணாக இருந்தால் பேசுவதைத் தவிர்ப்பதற்காக இணைப்பைத் துண்டித்தனர்.) இந்திய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பயணம் கூட இலங்கைக்கான புதிய இந்தியத் தூதர் அசோக் காந்தை சந்திக்காமல் இருந்திருந்தால் பத்திரிகையாளர்களுக்கு ஆச்சரியமான விடயமாக இருந்திருக்கும்.

மற்ற நாடுகளின் அமைச்சர்ளோ, உயர் அதிகாரிகளோ கொழும்பு வந்தால், அந்த நாட்டு தூதரகங்கள் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கின்றன. ஆனால், அதற்கு நேர்மாறாக இந்தியத் தூதராகம் இதுவரை அப்படி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதில்லை.

இந்தியாவின் “பெரிய அண்ணன மனப்பான்மை அல்லது இரகசியத் திட்டம் காரணமாகவே இந்தியத் தூதரகம் இப்படி செயல்படுகிறது என இலங்கை பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர்.

தினமணி

மாவீர்கள் என்றால் யார்? வணங்கப்பட வேண்டியவர்கள் யார்? – கார்த்திகை 27 ஒரு சுயவிமர்சனம் (2) : வாசு (முன்னாள் போராளி)

Pirabakaran_Mahathayaபுலிகளால் படுமோசமாக சித்திரவதைக்கு உட்பட்டு பின்னர் கொல்லப்பட்ட புலிகள் அமைப்பின் முன்னாள் உப தலைவர் மாத்தையா உட்பட 700 போராளிகளை எல்லோருக்கும் ஞாபகமிருக்கும். புலிகளால் துரோகி முத்திரை குத்தப்பட்ட இவர்கள் தமிழ் மக்களின் நலனுக்காக தானே இயக்கத்தில் இணைந்தவர்கள்? பிரபாகரனின் முட்டாள்தானமான முடிவுகள் தமிழ் பேசும் மக்களிற்கு ஒரு விதமான விடிவையும் ஏற்படுத்தாது என்பதை உணர்ந்து தானே அவர்கள் புலிகளின் தலைமையை மாற்ற அன்று முனைந்தார்கள். இந்தியாவுடன் இணைந்து அவர்கள் செயற்பட முனைந்தது அன்று ஒரு முட்டாளை தலைமைப் பதவியில் இருந்து தூக்கவே என்பதை இன்று நாம் நன்கே உணர முடிகிறது. தமது பாதுகாப்புக்காக மக்களை ஆயிரக்கணக்கில் இன்று பலி கொடுத்த பிரபாகரனின் தலைமையுடன் ஒப்பிடுகையில் அன்று மாத்தையா வென்றிருந்தால் இந்த அவலங்கள் தடுக்கப்பட்டிருக்குமல்லாவா? புலிகளின் இன்றைய அழிவு தமிழ் மக்களின் நீதியான போராட்டத்தையும் அல்லவா அழித்து விட்டு சென்றுள்ளது.  ஆனால் இந்த அழிவை தடுத்து நிறுத்த முனைந்த மாத்தையா மற்றும் அவருடன் கொல்லப்பட்டவர்கள் இன்னமும் துரோகிகள். அவர்களை கொன்றவர்கள் மாவீரர்கள்.

நான் ஒரு வாதத்திற்காக மேற்சொன்ன விடயத்தை எடுத்தாலும் 1986 ரெலோ மீதான தாக்குதலுடனேயே புலிகளின் அனைத்து தலைவர்களும் தமிழ் மக்களின் விரோதிகளாக மாறி விட்டார்கள்.  அன்று ரெலோ மீதான தாக்குதல் நடாத்துகையில் யாழ் மக்கள் கொக்கோகொலா கொடுத்ததை நேரில் கண்டவன்! ரெலோ மீதான தாக்குதல் நடாத்துகையில் யாரும் கேள்வி கேட்கவில்லை. மாறாக உற்சாகப்படுத்தினார்கள். ரெலோவின் தாக்குதலை நியாயப்படுத்த நாமே (புலிகள்) கொள்ளையடித்த வாகனங்களை வரிசையில் நிற்பாட்டி விழா நடாத்துகையில் மக்கள் கைகொட்டி ஆரவாரம் செய்தார்கள். புலிகள் தொடர்ந்தும் மிகமோசமாக மாற்று இயக்கங்களை வேட்டையாடினார்கள். அதையும் மக்கள் பார்த்து மௌனித்து இருந்தார்கள். புலிகளின் கையில் இருந்த துப்பாக்கி அவர்களை மௌனிக்க வைத்தது. புலிகளால் கொல்லப்பட்ட அனைவரும் தமிழ் மக்களின் விடுதலையை உண்மையில் நேசித்தவர்கள். அரசியல் சித்தாந்த சிந்னையற்று  புலிகள் அமைப்பால் வளர்க்கப்பட்ட பலர் புலிகளின் பாசிச குணத்தை புரிந்து கொள்ளாது மேலும் மேலும் சகோதர படுகொலைகளை புரிந்து வந்தார்கள். இந்த கொலைகளை செய்தவர்கள் பிரபாகரனினால் புலிகளின் முக்கிய தளபதிகள் ஆக்கப்பட்டார்கள்.

கந்தன் கருணை படுகொலை! மக்களின் விடுதலையை நேசித்தவர்கள், நிராயுதபாணியாக தடுத்து வைக்கப்பட்டவர்கள்! அருணா என்ற புலிகளின் மூத்த தளபதியால் படுகோரமாக கொல்லப்பட்டவர்கள்! மக்கள் விடுதலையை நேசித்து இயக்கங்களுக்கு சென்றவர்கள் துரோகிகள். ஆனால் நிராயுதபாணிகளான அந்த போராளிகளை கொன்ற அருணா ஒரு மாவீரனாக கார்திகை 27இல் தரிசிக்கப்படுவான்.

Kittu_Colநினைக்கவே மனம் கொந்தளிக்கிறது! புலிகளின் முக்கிய தளபதி கிட்டு! ஆயிரக்கணக்கான ரெலோ, புளட், மற்றும் பல இயக்கங்களின் போராளிகளை கொன்று குவித்த ஒரு போர்க் குற்றவாளி! இவரினது படங்கள் கார்த்திகை 27இல் பாரிய மண்டபத்தை அலங்கரித்து நிற்கும். மக்கள் அதற்கு பூ போட்டு வணங்குவார்கள்! ஆனால் இவரால் கொல்லப்பட்ட அத்தனை மனிதங்களும் துரோகிகள்! ரெலோ சிறீ சபாரட்னம், புளட் சின்ன மென்டிஸ் உட்பட பல நூற்றுக் கணக்கான மாற்று இயக்கப் போராளிகளை தனது சொந்த கைகளால் நிராயுதபாணிகளாக வைத்து கொலை செய்த கிட்டு ஒரு மாவீரன். விடுதலையை நேசித்து சென்ற மாற்று இயக்கத்தினர் துரோகிகள்!

புலிகளின் கிழக்கு மாகாண தளபதிகள் புலேந்திரன், குமரப்பாவின் மரணத்தை அண்மையில் ஐரோப்பா எங்கும் சிறப்பாக கொண்டாடினார்கள். இவர்களும் இந்த முறை மாவீரர் தின மண்டபங்களில் புலம்பெயர் தமிழ் மக்களின் சிர வணக்கத்திற்குள்ளாகும் முக்கிய தளபதிகள். ஆனால் இந்த இருவரது தலைமையிலும் கொல்லப்பட்ட எல்லைக் கிராம அப்பாவி சிங்கள மக்கள் மற்றும் சிறு குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? இவர்களின் கொலை வெறிக்கு நூற்றுக்கணக்கான அப்பாவி சிங்கள மக்கள் மட்டும் கொல்லப்படவில்லை. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பல போராளிகளும் இவர்கள் இருவரினதும் கட்டளையால் கொல்லப்பட்டனர்.

மன்னார் தளபதி விக்டர். இவரின் படமும் மாவீரர் மண்டபங்களை அலங்கரிக்கும் ஒரு படம். ஆனால் அனுராதபுரம் தாக்குதலை தலைமை வகித்து சென்று  அப்பாவி நிராயுதபாணி சிங்கள மக்கள் வெட்டியும் சுட்டும் கொலை செய்த இந்த மனிதன் ஒரு மாவீரன்? தமிழ் சமூகமே வெட்கி தலைகுனிய வேண்டிய கொலைகளை மிக சர்வசாதாரணமாக செய்த இந்த புலித் தலைமைகள் மாவீரர்கள்? மக்களை நேசித்து மக்களிற்காக இவர்களால் கொல்லப்பட்டு இறந்தவர்கள் துரோகிகள்?

இதற்கெல்லாம் சிகரம் வைத்தால் போல் புலித் தலைமை செய்த இனச்சுத்திகரிப்பு! தமிழ் பேசும் முஸ்லீம் மக்களை யாழ் குடாவில் இருந்து சில மணித்துளிகளுக்குள் வெளியேற சொன்ன புலிகளின் தலைவருக்கும் நாசிகளுக்கும் ஒரு கொஞ்ச வித்தியாசமே. நாசிகள் யூதர்களை கொன்று குவித்தார்கள், புலிகள் முஸ்லீம் மக்களை உயிருடன் நடை பிணமாக யாழ் குடாவை விட்டு வெளியேற்றினார்கள். இந்த நிகழ்வுக்கு காரணமான பல தளபதிகள் இன்று மாவீரர் பட்டியலில் விளக்கேற்றி கௌரவிக்கப்படுவார்கள். ஆனால் இவர்களால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம் சகோதரர்கள் இன்னமும் புத்தளத்தில் அகதிகளாக வாழ்கிறார்கள்.

கார்த்திகை 27இல் நீங்கள் இறந்த போராளிகளை வணங்குவதில் தவறில்லை. ஆனால் வணங்கப்படுபவர்கள் தவறானவர்கள். இவ்வளவு காலமும் புலிகளிடம் ஆயுதம் இருந்தது கேட்க பயந்தோம். இனியும் இதை கேட்காது போனால் நாம் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் மட்டுமல்ல மானிட குலத்திற்கே துரோகம் செய்தவர்கள் ஆகி விடுவோம். ஹிட்லரும் ஜேர்மனி என்ற தேசத்தை நேசித்தவன் தான். ஆனால் அவன் மனித நேயத்தை முழுவதுமாக மறந்த மனிதன். நாம் மாவிரர் தினம் கொண்டாடுவது கிட்டத்தட்ட நாசிகளின் மரணத்தை கொண்டாடுவதற்கு ஒப்பானது. புலிகளில் இருந்து கரும்புலிகளாகி பிரபாகரனை நம்பி மோசம் போனவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள்! புலிகள் இயக்கத்தில் மக்களின் விடுதலையை நேசித்து சென்ற இறந்தவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் மட்டுமல்ல மக்களை நேசித்து மக்களிற்காக போராடி இறந்த அனைத்து இயக்கப் போராளிகளும் வணங்கப்பட வேண்டியவர்கள். இந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களும் வணங்கப்பட வேண்டியவர்கள்.

ஆனால் மக்களை ஏமாற்றி இந்த போராளிகளை மற்றும் தமிழ் சமூகத்தையே ஏமாற்றிய புலித் தலைமைகள் காலத்தால் மறக்கப்பட வேண்டியவர்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் வாழ்வை துறந்தவர்களை வஞ்சித்த புலி, புளொட், மற்றும் ரெலோ அமைப்புகளின் தலைமையை வணங்குவது மனித குலத்திற்கு அவமானம் தேடித்தரும் ஒரு செயல்! மக்கள் இதை மறந்தால் தமிழ் சமூகமே மனித குலத்திற்கு அவலத்தை தந்த ஒரு இனமாகவே மற்றவர்களால் பார்க்கப்படும்!

மாவீரர்களை நினைவுகூருவோம்!!!
அவர்களைக் கொச்சைப்படுத்தாமல்!

மெளலவி ஆசிரியர் நியமன போட்டி பரீட்சை அடுத்த வாரம்

மெளலவி ஆசிரியர் நியமனத்துக்கான நேர்முகப் பரீட்சை, அடுத்தவாரம் கொழும் பில் நடைபெறவுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் கே. முகம்மட் தம்பி கூறினார்.  போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்தவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

கார்த்திகை 27 ஒரு சுயவிமர்சனம் (1) : வாசு (முன்னாள் போராளி)

Maaveerar_Illamகாரத்திகை 27 மாவீரர் நாள்! புலிகள் அமைப்பில் இருந்து தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த புலி வீரர்களை மட்டும் நினைவு கூரும் நாள்! தம் சுயநலம் பாராது பொது நலனுக்காக தமது உயிர்களை அர்ப்பணித்த இந்த மனிதங்களை நினைவு கூர வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமை. இயக்க வேறுபாடுகளை மறந்து இன்னுயிர்களை தியாகம் செய்த இந்த மறவர்கள் காலா காலத்திற்கு வணங்கப்பட வேண்டியவர்கள். மறுக்கப்பட முடியாத உண்மை.
ஆனால் கடந்த மே மாத நிகழ்வுகள் அதன் பின்னான அரசியல் மாற்றங்கள், அதற்கு முன்னான விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் செயற்பாடுகள் அனைத்தும் இந்த மாவீரர்களின் வீர மரண நியாயத்தை ஒரு அநியாயமான மரணமாக மாற்றி விட்டது என்பது சகிக்க முடியாத உண்மை. இன்று இலங்கையில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்களின் வெறுப்பை விடுதலைப் புலிகள் சம்பாதித்துள்ளனர். வெளி நாடுகளில் வாழும் தமிழர்களும் மெல்ல மெல்ல புலிகளின் பாசிச போக்கை உணர ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் புலிகள் இயக்கத்தில் இணைந்த 99 வீதமான போராளிகள் தேச விடுதலை என்ற ஒரு நோக்கோடுதான் அந்த அமைப்பில் இணைந்தார்கள். பலர் பலவந்தமாக இணைக்கப்பட்டார்கள். ஆயிரக்கணக்கில் தம் இன்னுயிர்களை தியாகம் செய்த இந்த போராளிகள் அனைவரும் புலிகள் அமைப்பின் இருப்பை காக்கவே பலி கொடுக்கப்பட்டார்கள் என்ற உண்மையை இன்று நாம் வெளிப்படையாக காண முடிகிறது. முள்ளிவாய்கால் முற்றுகைக்கு முன் புலிகளின் பாரிய தாக்குதலை புதுக்குடியிருப்பில் இராணுவம் முறியடித்தததை நாம் அறிவோம். அந்த தாக்குதலில் புலிகளின் அதி சிறந்த பல தளபதிகள் கொல்லப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான போராளிகள் அவர்களுடன் கொல்லப்பட்டார்கள். இவர்களை அனைவரும் கொல்லப்பட்டது தனி ஒரு மனிதனை காப்பாற்றவே! பிரபாகரன் என்ற ஒரு மனிதனை காக்க புலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட 500 போராளிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பின்னர் பிரபாகரனிடம் சென்ற பொட்டு ‘நாங்கள் இங்கையிருந்தால் எல்லாரும் கொல்லப்படுவோம், உடைத்துக்கொண்டு வெளியேறுவோம்’ என்று கூற இந்த சமயத்திலும் பிரபாகரன் ‘இஞ்சை பாராடா பொட்டுவுக்கு மரண பயம் வந்திட்டது’ என்று அங்கு கூடியிருந்த சகபோராளிகளிடம் நக்கலடித்தார். இறந்த தளபதிகளின் பெயர்களை வெளியிட மறுத்ததுடன் ஏனைய போராளிகளை காப்பாற்றும் எந்த நடவடிக்கையையும் எடுக்க அவர் முனையவில்லை. மாறாக மேலும் பல போராளிகளை பலி கொடுக்கவும் மக்களை ஆயிரக்கணக்கில் பலிக்கடாக்கள் ஆக்கி வெளிநாடுகளில் இருந்து ஒரு அனுதாப அலையை பெறவே முழுமையாக முயற்சித்தார். இதன் விளைவு மக்கள் கூடியிருந்த இடங்களில் இருந்து வலிந்து தாக்கி அந்த இடங்களை இராணுவத்தின் குறிகள் ஆக்குவது.

மக்களும் போராளிகளும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போதும் சரணடையவோ அல்லது தப்பி செல்லவோ பிரபாகரன் முயற்சிக்கவில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் முற்றுகையில் தனது புத்திர செல்வம் காயமுற்றதும் பதைபதைத்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடேசன் மூலம் இராணுவத்திடம் உடனடியாக சரணடைய உத்தரவிட்டார். பிரபாகரனை ஒரு மிகமோசமான சுயநலவாதி  என்பதை அன்றுதான் பல புலிப் போராளிகள் உணர்ந்தார்கள். ஏற்கனவே தலைமையை காப்பாற்ற இவ்வளவு அழிவு வேண்டுமா என பல போராளிகள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தார்கள். இதன் உச்சக்கட்டம் பானுவை போட்டுத்தள்ள தலைவர் பிறப்பித்த உத்தரவு பல அதிர்வலைகளை புலிகள் மத்தியில் உருவாக்கியது.

இறுதிக் காலத்திலும் தனது பாசிச குணத்தை பிரபாகரன் விடவில்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகியது. ஆரம்ப காலங்களில் மைக்கல் என்ற விடுதலை புலி உறுப்பினரை தனது சொந்த நலனுக்காக பாயில் வைத்து சுட்டுக்கொன்ற பிரபாகரன் இறுதியில் அதேவிதமாக தன் மரணத்தை தழுவினார். பிரபாகரன் மரணம் பற்றி பல விதமான கதைகள் வந்தாலும் நான் நம்பகரமாக கேள்வியுற்றது இவரின் மெய்பாதுகாலரே இவரை போட்டுத் தள்ளியதாக! இரவு நந்தி கடலை கடக்க முயற்சிசெய்து அது முடியாது போக சற்று ஓய்வெடுத்த பிரபாகரனை அவரின் மெய்பாதுகாவலர்கள் திட்டமிட்டு நெற்றிப்பொட்டில் சுட்டுவிட்டு நந்திக் கடலில் தூக்கி போட்ட பின் அந்த பாதுகாவலர்கள் பின்னர் இறந்தவர்கள் போல் பாசாங்கு செய்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த தகவல்களை வன்னியில் இருந்து தப்பி சென்ற புலிகளின் முக்கியமான ஒரு தளபதியின் துணைவியார் உறுதிப்படுத்தினார். 

தனது சொந்த நலனுக்காக தனது போராளிகளை மாவீரர்கள் ஆக்கிய பின்னர் அவர்களை  வணங்கும் பிரபாகரன் தனது இயக்கத்தின் முதலாவது போராளி இறந்த தினத்தை மாவீரர் தினமாக பிரகடனம் செய்தார். இந்த மாவீரர் தினம் பின்னர் மாவீரர் வாரமாக ஒரு வாரம் அனுட்டிக்கப்பட்டு கார்திகை 27இல் உலகெங்கும் மாவீரர் தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. தாயகத்தில் இந்த நாட்கள் உணர்ச்சிகரமாக கொண்டாடப்பட்டு வந்தாலும் புலம்பெயர் நாடுகளில் இது பணம் கறக்கும் சடங்காகவே மாற்றப்பட்டது. 2002 இற்கு பின்னர் புலிகளின் தொழில் நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கையில் பிரபாகரனின் கொள்கை விளக்க உரையை நேரடியாக ஒலிபரப்பும் ஒரு விழாவாக இது மாற்றப்பட்டது.

லண்டனில் நடைபெறும் மாவீரர் நிகழ்வில் வாசலில் ஒரு கார்திகை பூ ஐந்து பவுண்களுக்கு விற்பார்கள். பிறகு உள்ளே வரிசையாக கோயில் திருவிழா வியாபாரிகள் போல் உதவியாளர்கள் பலர் புலி விளம்பர பொருட்களை விற்பார்கள். இதில் புலி சின்ன கோப்பையிலிருந்து புலிச்சின்ன துவாய், புலிச்சின்ன குடை, போன்ற பொருட்களை மக்களிடம் திணிப்பதுடன் மறுபுறத்தில் கொத்துறொட்டி முதல் கொக்கோகோலாவை 3 மடங்கு விலையில் மக்களிடம் விற்பார்கள். ஆக இறந்த மறவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளையும் புலிகளின் தலைமை தனது இயக்கத்தை சந்தைப்படுத்தும் நாளாக மாற்றியது.

இன்று புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டு ஐந்து மாதமாகிறது. புலிகளின் தலைவர் இருக்கிறார் இல்லை என்று முட்டாள் தனமான ஒரு விவாதத்துடன் இருக்கும் புலம்பெயர் புலி உறுப்பினர்கள் மீண்டும் கார்த்திகை 27ஐ விமர்சையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். பாரிய செலவில் லண்டனில் ஒரு பெரிய மண்டபம் இந்த முறையும் இதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிதி திரட்டலுக்கு மாவீரர் தின ரிக்கற்றுகள் புலிகளின் லண்டன் உறுப்பினர்களால் தற்போது விற்கப்பட்டு வருகிறது. ரிக்கற் அனுமதி பத்திரமா அல்லது செலவிற்கான நன்கொடையா என்று தெரியவில்லை.

வன்னியில் தம் வாழ்விடங்களில் இருந்து மந்தைகள் போல் மிரட்டி தமது பாதுகாப்பிற்காக பிரபாகரானல் கடத்திச் செல்லப்பட்ட மக்கள் கூட்டம் இன்று அரச தடுப்பு முகாம்களில் அவல வாழ்வை எதிர் கொள்ளும் இந்த நேரத்திலும் இந்த புலிகள் மாவீரர் தினத்தை விமர்சையாக கொண்டாட மக்களிடம் ரிக்கற்றுகளை விற்பது மிகவும் கேவலமானது! இந்த புலம்பெயர் புலிகள் வன்னி இறுதி யுத்தத்திற்காக எனக்கு தெரிந்த பல நண்பர்களிடம் கெஞ்சி கூத்தாடி பின்னர் மிரட்டி  கடந்த மே மாதம் கூட ஆயிரக்கணக்கான பவுன்ஸை புடுங்கினார்கள். இந்த காசு அங்கு போய் சேர முன்பே தலைவர் போய்ச் சேர்ந்து விட்டார். காசை கமுக்காமாக அடித்த புலிப் பிரதிநிதிகள் இப்ப தலைமறைவு! ஆனால் இப்ப புதிதாக சில முகங்கள்  மாவீரர் தின நிதிப்புடுங்கலுக்காக புலம்பெயர் புலித் தலைமையினால் வீடுகள்தோறும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் தமிழ் மக்கள் மௌனமாக பார்த்துக்கொண்டு பணத்தை மீண்டும் இந்த பினாமிகளிடம் கையளிப்பது வன்னியில் தடுப்பு முகாம்களில் இருக்கும் அனைத்து மக்களிற்கும் செய்யும் மிக மோசமான துரோகம்! இதை விட மிக மேசமான துரோகம் காரத்திகை 27ஐ மாவீரர் தினத்தை விமர்சையாக கொண்டாடுவது!

மாவீர்கள் என்றால் யார்? வணங்கப்பட வேண்டியவர்கள் யார்? – கார்த்திகை 27 ஒரு சுயவிமர்சனம் (2) : வாசு

நாடு மீண்டும் பிளவுபட இடமளிக்க முடியாது – ஜனாதிபதி

041109ma.jpgமீண்டும் இந்த நாடு பிளவுபட இடமளிக்க முடியாது. மக்கள் பலம் மிகவும் சக்திவாய்ந்தது. நாட்டை பலப்படுத்த சிந்திப்பவர்களே எப்போதும் வெற்றிபெறுவர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கடந்த காலங்களையும் இன்றைய நிலையையும் மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர். சுபீட்சமான நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்கும் எம்முடனே மக்கள் பலமும் உள்ளது. அதனை எவரும் அசைக்க முடியாது எனவும் ஜனாதிபதி உறுதிபடத் தெரிவித்தார்.

நாம் யுத்தம், இன்னோரன்ன சவால்களுக்கு மத்தியிலும் கிராமிய அபிவிருத்திக்காக 38 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளோம். இலங்கையின் அபிவிருத்தி வரலாற்றில் இது ஒரு சாதனை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புத்தளம் நகரில் திறந்த பல்கலைக்கழகத்தின் கிளையொன்றை நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

புத்தளம் மாவட்டத்திற்கு புதிய யுகம் பிறந்துள்ளது. இம் மாவட்டத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெறுவதுடன் இன்று உயர்கல்வி சம்பந்தமான மூன்று முக்கிய நிறுவனங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இப்பகுதியைப் பற்றி எவரும் சிந்திக்கவில்லை. நாம் பதவியேற்ற பின் நாட்டின் சகல பகுதிகளையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தோம்.

அந்த வகையில் புத்தளம் பகுதி அபிவிருத்தி பற்றியும் சிந்தித்தோம். இப்போது பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் பல திட்டங்கள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும். 30 வருட பயங்கரவாதத்தின் பின் தற்போது அபிவிருத்தி யுகம் பிறந்துள்ளது. பயங்கரவாதிகள் தமது ஈழ விவரணத்தில் சிலாபம் வரைக்குமான எல்லையைக் குறிப்பிட்டிருந்தனர். அப்படியானால் புத்தளம் உட்பட இப்பகுதிகளில் புலிகளின் வங்கி, புலிகளின் பொலிஸ், புலிகளின் பாடசாலையே இயங்கியிருக்கும். அந்நிலையை நாம் மாற்றினோம்.

இன, மத பேதமின்றி சகல மக்களும் சம உரிமை பெற்று வாழும் நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு எமக்கு உள்ளது. அதனை நாம் மறக்கவில்லை. இப்பகுதியில் பிரதியமைச்சர் பாயிஸ் சிறந்தபல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். நான் வடக்கிற்குப் போனேன். அங்குள்ள மக்கள் மத்தியில் சூழ்ந்திருந்த பயமும் அச்சமும் சந்தேகமும் தற்போது நீங்கியுள்ளன. கிளிநொச்சி மக்களும் இன்று நாட்டின் சகல பகுதிகளுக்கும் சென்று வரக்கூடிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் இந்நிலையை நன்குணர்ந்து தெளிவுடன் எதிர்காலத்தில் செயற்பட வேண்டும்.

இன்று வடக்கு, கிழக்கில் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்கச் செல்ல வழி பிறந்துள்ளது. நுரைச்சோலை மின் நிலையத்திட்டத்தை ஆரம்பிக்க நாம் வந்தபோது கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இன்று நீலக் கொடிகளால் தோரணமிட்டு எம்மை வரவேற்கின்றனர். தலைவர்களின் உத்தரவுகளை கட்சியிலுள்ளோர் நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான அர்த்தம் அது.

நாட்டு மக்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். கடந்த காலங்களில் அபிவிருத்தி பற்றி பேசினாலே அன்றைய தலைவர்கள் யுத்தம் நிறைவுபெறட்டும் பார்க்கலாம் என்றனர். நாம் அப்படியல்ல. யுத்தத்தையும் அபிவிருத்தியையும் ஒன்றாக முன்னெடுத்தோம். நாம் ஏற்றுள்ள பொறுப்புகளுக்கு இணங்கவே நாடு அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறும். இதில் அனைவரும் பங்காளிகளாகச் செயற்பட வேண்டும். இந்த அழகிய நாட்டை ஒரே சிங்கக் கொடியின் கீழ் கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைப்போம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

புத்தளம் நகரில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கிளை நிறுவனம், வட மேல் மாகாண பல்கலைக்கழக வெளியடைவு நிறுவனம், மும்மொழி விஞ்ஞான கல்லூரி ஆகியவற்றை நேற்று ஜனாதிபதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது

இந்து மாமன்றம் ஜனாதிபதிக்கு பாராட்டு

22mainpic.jpgநிவாரணக் கிராமங்களிலிருக்கும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதித்துள்ளதையும் தடைகள் நீக்கப்பட்டுள்ளதையும் அகில இலங்கை இந்து மாமன்றம் வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மக்களை மீள் குடியேற்றுவதில் அயராது உழைத்து வரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுக்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்களது வேண்டுகோளையேற்று இந்து மத குருமாரையும், முதியவர்களையும் விடுவித்தீர்கள், அதற்கும் எங்களது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேநேரம், ஜனாதிபதி அவர்களே, பொதுமக்கள் பாவனைக்காக ஏ-9 வீதியைத் திறப்பதற்கு நீங்கள் எடுத்த நடவடிக்கையை நாம் வர வேற்பதோடு நன்றிகளைத் தெரி வித்துக்கொள்கிறோம். அதேநேரம், நிவாரணக் கிராமங்களில் நிவாரணத் திட்டங்களுக்கு உதவிய முகவர் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக நீங்களும், உங்களது அரசாங்கமும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எங்களது ஒத்துழைப்பு தொடருமென்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.