மனநோயாளியான இளைஞனை எவ்வித விசாரணைகளும் இன்றி அடித்துக் கொலை செய்த மோசமான வன்முறைச் சம்பவம் இலங்கையர் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மேற்படி சம்பவம் காட்சிப் படிமங்களாகவும் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. தாக்கியவர் இலங்கைப் பொலிசார் என்பதாலும் கொல்லப்பட்டவர் தமிழர் என்பதாலும் இது ஒரு இனவாத செயலாகவே தமிழர்களால் நோக்கப்படுகிறது. இலங்கையின் அரச இயந்திரங்களின் தொடரும் இனவாதப் போக்கு அவ்வாறான முடிவுக்கு தமிழ் மக்களைத் தள்ளியது தவிர்க்க முடியாதது. மேற்படி சம்பவம் தமிழன் என்பதற்காக நடத்தப்பட்டதோ இல்லையோ இவ்வாறான சம்பவங்களின் போது தமிழர்கள் பாதிக்கப்படும் இடத்து அவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. இதுவே இலங்கை அரசு மீது நம்பிக்கை கொள்வதற்கு காலம் காலமாக தடையாக இருந்து வந்துள்ளது.
இலங்கை அரச இயந்திரங்களின் இனவாதப் போக்கு காரணமாகவே தமிழர் இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டதும் அதன் விளைவாகவே உள்நாட்டுப்போரும் உக்கிரமடைந்திருந்தது. இந்த உள்நாட்டுப்போரில் வெற்றியடைந்த அரசும் அதன் அரச இயந்திரங்களும் இனவாத தன்மையிலிருந்து தாம் விடுபட்டுள்ளதாகவும் தாம் இனவாத அரசு அல்ல என்ற கருத்துக்களை உலகெங்கும் பரப்பியும் உள்ளது. ஆனால் பம்பலப்பிட்டி கடற்பகுதியில் இடம்பெற்ற சம்பவம் அரசு சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று என்ற நிலையையே காட்டுகின்றது.
தற்போதைய அரசும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘ஆட்சிக்கு வந்ததும் தமிழர்க்கு அரசியல்த் தீர்வு’ என்றனர். பின்னர் ‘புலிகளை அழிக்கும் போதே அரசியல்த் தீர்வு’ என்றனர். ‘புலிகளை அழித்த பின்பு அரசியல்த் தீர்வு’ என்றனர். இன்று ‘ஜனாதிபதி தேர்தலின் பின்னரே அரசியல்த் தீர்வு’ என்று அறிக்கைகளை வெளியிடுகின்றனர். ஆக மொத்தத்தில் ஒரேவிதமாகவே தமிழர்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
‘தமிழ் மொழி, தமிழ் மக்கள் இவர்களது பிரச்சினைகளை தாம் அரசியல் ரீதியாக தீர்த்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. பொலீஸ் இராணுவ நிர்வாகத்தில் தமிழ் அமுலாக்கல்’ என்றெல்லாம் சொல்கின்ற போதிலும் ஒக்ரோபர் 29ல் சிவகுமார் என்ற மலையகத்தைச் சேர்ந்த மனநோயாளியான இளைஞனுக்கு நிகழ்ந்த கொடுமை மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்டது. நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் எவ்வாறான நடைமுறையைக் கடைப்பிடிக்கின்றனர் என்பதை இச்சம்பவம் அம்பலப்படுத்தி உள்ளது. இது இலங்கைப் பொலீசாரில் எவ்வித மாற்றங்களும் அண்மைக் காலத்தில் ஏற்பட்டிருக்கவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
இன்பம், செல்வம் கொலை, தமிழர் விடுதலைக் கூட்டணி காரியாலய காவலாளி கொலையிலிருந்து கதிர்காம யாத்திரிகர்கள் மாணிக்க கங்கையில் தீர்த்தமாடும் போது நடைபெற்ற தாக்குதல்கள், தற்போது பட்டப்பகலில் பலர் முன்னிலையில் நிகழ்ந்த ஒரு மனநோயாளியான இளைஞனின் கொலை என்பவற்றிற்கு இலங்கை அரசும் அதன் பொலீஸ்படையுமே காரணமாகும். இந்தப் பொலீஸ்படை இன்று வரையில் தமது நடவடிக்கையில் மாற்றம் கொள்ளாதது மிக முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டியள்ளது.
நாட்டில் பொலீசார் தவறு செய்பவர்களையும் குற்றவாளிகளையும் அவர்கள்மீதுள்ள குற்றங்களை பதிவு செய்து தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றில் நிறுத்தப்பட்டே தண்டனை அளிக்கபடல் வேண்டும். இதற்காகவும் இதன் காரணமாகவும் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேணவுமே பொலீசார் இயங்குகின்றனர். ஆனால் இலங்கைப் பொலிசார் தங்களுக்குள்ள அதிகாரங்களைத் துஸ்பிரயோகம் செய்கின்ற போக்கும் இனவாதத் தன்மையும் பொலிஸ்படையில் ஸ்தாபனமயப்பட்டு உள்ளது. அதன் ஒரு சிறிய வெளிப்பாடே பம்பலப்பிட்டிச் சம்பவம்.
கதிர்காமத் தீர்த்தத்தின் போதும் இது போன்றே பொலிசார் தமது இடுப்புப் பட்டியாலும் பொல்லுகளாலும் ‘பறத்தெமிழு’ என்று சொல்லியே ஆற்றில் குளித்தவர்களுக்கு அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பொலிஸ் படையில் தமிழ் மக்கள் மட்டுமல் சிங்கள மக்களுமே நம்பிக்கை கொள்ள முடியாது. தென்பகுதிகளில் கூட பொலிசாரின் அத்துமீறிய நடவடிக்கைகள் பற்றி சர்வதேச உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றனர். பொலீஸ் உத்தியோகத்தர்கள் நாளை தண்டனையாக வன்னிக்கு இடமாற்றம் பெற்றால் என்னவெல்லாம் செய்வார்கள். இதுபோன்ற செயல்களை வெளிக்கொணர எந்த ஊடகமும் இல்லாத நிலையை எப்படிப் பயன்படுத்துவர் என்பதையும் அவதானிக்க வேண்டும்.
‘ரோகண விஜயவீர கைது செய்யப்பட்ட போது அவரது மனைவி சித்திராங்கனியையும் பிள்ளைகளையும் வாழ அனுமதித்த இலங்கை அரச படைகள் சரணடைந்த பிரபாகரனையும் போராளிகளையும் கொன்றதை ஒருபுறம் தள்ளினாலும் பிரபாகரனின் மனைவி மதிவதனியையும் சிறுவன் பாலகிருஸ்ணனையும் கொலை செய்தது இவர்கள் தமிழர்கள் என்பதாலேயே!!’ என்று அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடம் ஒக்ரோபர் 17ல் ராவய பத்திரிகையாளர் கூறியது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதம் எந்த வழியில் வந்தாலும் தோற்கடிக்கப்பட வேண்டும். அது அரச பயங்கரவாதமாக இருந்தாலும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
._._._._._.
இளைஞன் கடலில் கொல்லப்பட்டதற்கு கண்டனம்: குடும்பத்திற்கு சட்ட உதவி வழங்க பிரதியமைச்சர் சிகாமணி முடிவு
கொஸ்லாந்தையைச் சேர்ந்த இளைஞர் பம்பலப்பிட்டி கடற் பகுதியில் தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவத்தை நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திர சிகாமணி வன்மையாகக் கண்டித்துள்ளதோடு உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தவர்களுக்கு சட்ட உதவி வழங்கவும் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.
அதேநேரம், இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமல் மெதிவகவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வும் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி கூறினார். கொஸ்லாந்தையைப் பிறப்பிடமாகவும் இரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவகுமார் என்ற 26 வயது நிரம்பிய இளைஞர் கடந்த 29ஆம் திகதி பம்பலப்பிட்டி கடற்பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகி கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
இவர், ஓடிக்கொண்டிருந்த வாகனங்களுக்கும், ரயிலுக்கும் கல் எறிந்தார் என்ற குற்றத்துக்காக அவரைப் பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த இருவர் மடக்கிப் பிடிக்க எத்தனித்துள்ளனர். அப்போது குறித்த இளைஞர் கடல் பகுதிக்கு ஓடிச்சென்றதுடன் மணலை அள்ளி அவர்கள் மீது எறிந்துள்ளார்.
அதன்போது அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் சிலர் கடற்கரையில் கிடந்த இரண்டு தடிகளை எடுத்து பாதுகாப்புத் தரப்பினர் பக்கமாக வீசித் தாக்குமாறு கூறியுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்தத் தடிகளைப் பற்றிய பாதுகாப்புத் தரப்பினர் அந்த இளைஞனைத் துரத்தித் துரத்தித் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவித்தன.
தாக்க வேண்டாமென அந்த இளைஞன் கும்பிட்டு மன்றாடியும் அவனைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அந்த இளைஞன் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார். இவரது சடலம் கொள்ளுப்பிட்டி பகுதியில் மீட்கப்பட் டுள்ளது.
இந்தச் சம்பவமும் மஸ்கெலியா முள்ளுகாமம் தோட்ட யுவதிகள் இருவரின் மர்ம மரணமும் மனிதாபிமானமற்ற படுகொலையாகத் தொடர்வதாகப் பிரதியமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மலையகத்திலிருந்து கொழும்புக்கு அல்லது பிற மாவட்டங்களுக்கு தொழிலுக்காக அல்லது வேறு காரணங்களுக்காக குடியேறுபவர்களின் பாதுகாப்பு அச்சமாகவே உள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் கைகட்டி வேடிக்கை பார்ப்பதோ அல்லது இச் சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதோ இன்றி, வெறும் பேச்சில் மட்டும் தம் செயலை காட்டாது மலையக தலைமைகள் சமூக சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.
இதுபோன்ற வேதனைதரும் சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் இருப்பதற்கு அனைத்து மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் எனப் பிரதியமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதற்கான சட்ட நடவடிக்கைகளை தாம் எடுத்துள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் உயர் அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக தாம் பேசவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.