
தமிழரசுக் கட்சியிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி தொட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அதன் இராணுவப் பிரிவான விடுதலைப் புலிகள் வரை அத்தனையும் யாழ் இனவாதச் சிந்தனையின் பிரதிபலிப்பாகவே இருந்திருக்கிறது. கடந்த 60 ஆண்டுகாலம் சிங்கள இனவாத அரசில் சிக்குண்டு தமிழ்பேசும் மக்கள் என்ன என்ன கொடுமைகளை அனுபவித்தார்களோ அதேயளவு கொடுமைகளையும் வெட்டியோட்டங்களையும் யாழ் இனவாதச் சிந்தனையில் சிக்குண்ட மற்றைய மாவட்டத்து மக்களும் அனுபவித்தார்கள் என்பதை நாம் மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு அண்மைக் காலமாக நடந்து வருகின்ற சம்பவங்கள் எம்மை தள்ளியிருக்கின்றன.
வீரகேசரி, டான் ரிவி என்று யாழ் இனவாதச் சிந்தனைக்கு வக்காலத்து வாங்கும் ஊடகங்கள் குடாநாட்டுச் செய்திகள் யாழ் செய்திகள் என்று special attention கொடுத்து மற்றைய மாவட்ட மக்களை குறிப்பாக கிழக்கு மாகாண மக்களை கடுப்பேத்தும் வேலையைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.
டான் ரிவி வக்காலத்து வாங்குவதென்றால் வாங்கட்டும் அதன்பின் பார்வைகள் போர்வைகள் நேர்காணல் ஓற்றுமை சமத்துவம் என்று தமிழ் பேசும் மக்களுக்கு காதில பூவைக்கிற வேலையை விட்டிருஙகோ. இது 21ம் நூற்றாண்டு குடாநாட்டிலிருந்து வந்து மற்ற மாவட்டங்களின் மீது சவாரி விடுகின்ற நோக்கம் இருந்தால் ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்து விட்டு வாருங்கள்.
கைகழுவிய தண்ணீரை புகையிலையில் தெளித்து சிங்கள மக்களுக்கு புகையிலை வியாபாரம் செய்த காலம் இல்லை இது. சிங்கள மக்களுக்குச் செய்த புகையிலை வியாபாரம் கடைசியில புதுமாத்தளனில கொண்டுவந்து விட்டுது. திரும்பவும் டான் ரிவி வீரகேசரி போன்ற வடிகட்டிய யாழ்ப்பாணத்து இனவாதச் சிந்தனையின் பிரதிநிதிகள் வெளிக்கிட்டிற்றினம் புகையில வியாபாரத்துக்கு.
மற்றைய மாவட்ட மக்களையும் அவர்களின் தனித்துவங்களையும் தெரிந்து கொள்வதற்கு உங்களுக்கு வாய்ப்பில்லைத்தானே. நீங்கள் கிணற்றுத் தவளைகள்போல் நான்கு வேலிகளையும் கிடுகுகளால் அடைத்து நடுவிலே ஒரு சிறிய ஓட்டையைப் போட்டு அதனூடாக பக்கத்து வீட்டையும் உலகையும் பார்ப்பவர்கள் உங்களுக்கு எங்கே உண்மையான உலகம் தெரியப் போகிறது?
முஸ்லீம் மக்களுடன் வியாபாரத்தில் ஈடுகொடுக்க முடியாத யாழ் சமூகம் ஆயுதப் பலத்தோடு இருந்த புலிகளைப் பயன்படுத்தி அவர்களை அந்தப் பிரதேசத்திலிருந்து விரட்டியடித்து அத்தனை வியாபார ஸ்தாபனங்களையும் தமதாக்கிக் கொண்டதைப் பார்த்தோம் தானே. அதற்கு கொடுக்கப்பட்ட விளக்கம் காட்டிக்கொடுப்பு என்றது. காட்டிக்கொடுப்புதான் அவர்களின் வெளியேற்றத்துக்கு காரணம் என்றால் யாழ்ப்பாணத் தமிழரின் முதல் துரோகி யாழ்ப்பாணத் தமிழன் துரையப்பாதானே (இதை நான் சொல்லவில்லை சொல்லியவர்கள் யார் என்பது கொன்றவர்கள் யார் என்பதும் யாவரும் அறிந்ததே.)
யாழ்ப்பாணத்திலிலுந்து வந்து வன்னியில் பாராளுமன்ற உறுப்பினரான சுந்தரலிங்கத்தை வன்னி மக்கள் பாடசாலை கட்டித்தரும்படி கேட்க நீங்கள் படித்தால் யாழ்ப்பாண மக்கள் என்ன மாடா மேய்ப்பது என்று வன்னி மக்களைக் கேட்டதும், இராசதுரையை ஓரம்கட்டி அமிர்தலிங்கத்தை தலைவனாக்கியதும், காசிஆனந்தனை ஒதுக்கி புதுவை ரத்தினதுரையை ஆஸ்தான கவிஞன் ஆக்கியதும் பாலசிங்கத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை கலாச்சார நகரமாக்க முயன்றதும் புலிகள் யாழ் முரியை அறிமுகம் செய்ததும் அதன்பின் வந்த அத்தனை புலிகளின் அடையாளச் சின்னங்களிலும் யாழ் கருவியையும் பனை மரத்தையும் இழுத்து வந்து இருத்தியதும் யாழ்ப்பாண இனவாத சிந்தனையின் வெளிப்பாடே. இது இலங்கை அரசின் திட்டமிட்ட பௌத்த சிங்கள மயமாக்கும் செயல்பாட்டிற்கு ஒப்பானது.
கடந்த 60 ஆண்டு காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்ட கசப்பான அனுபவங்களை தமிழ்பேசும் மக்களின் மனங்களிலிருந்து நிரந்தரமாக நீக்கிவிட முடியாத நிலை இருக்கின்றதோ அதே நிலைதான் யாழ் இனவாத சிந்தனையில் சிக்கித்தவித்த மற்றைய மாவட்டத்து மக்களின் மனங்களிலும் நினைவுகள் நிரந்தரமாக இடம் பிடித்துக் கொண்டன.
கொழும்பு ஆட்சியாளர் தமது இனவாத அரசியலை மாற்றாதவரை தமிழ்பேசும் மக்களின் மனங்களை வெல்லமுடியாது என்ற யதார்த்த நிலையை நம்புகின்ற அதே மனங்கள் யாழ் சிந்தனை என்ற யாழ் இனவாத சிந்தனையை கைவிடாதவரை மற்றைய மாவட்ட மக்களின் மனங்களை வெல்வது என்பது முடியாத காரியம் என்பதையும் நம்ப வேண்டும்.
அதுவரை தமிழ் பேசும் மக்களின் பிரதேசம் என்பது மூன்று ஆட்சி அதிகார அலகுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். கிழக்கு மாகாண அதிகார அலகு யாழ்ப்பாண அதிகார அலகு (ஆனையிறவுக்கப்பால்) வடமாகாண அதிகார அலகு மட்டுமே யாழ்ப்பாண இனவாதச் சிந்தனையிலிருந்து மற்றைய மாவட்டத்து மக்களைக் காப்பாற்றும் சிறந்த அரசியல் பொறிமுறையாக இருக்கும். அதுவே மற்றைய மாவட்ட மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகும்.
யாழ்ப்பாணத்து தனித்துவம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் அதை அவர்கள் அந்த மண்ணிலிருந்து கொண்டு செய்யட்டும். யாழ்ப்பாண இனவாதச் சிந்தனையின் பாதுகாப்பு அரணாக மற்றய மாவட்டங்களையும் மக்களையும் பயன்படுத்தி பலிக்கடா ஆக்கப்படுவதை இனி ஒருபோதும் அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. (குறிப்பாக வன்னி மக்கள்) வைப்போம் இந்த சிந்தனைக்கு முற்றுப்புள்ளி.