12

12

மீனவர்களுக்கான உதவித்திட்டம் தொடர்பாக ஜநா அதிகாரியும் கடற்றொழில் அமைச்சரும் கலந்துரையாடல்! 

மீனவர்களுக்கான உதவித்திட்டம் தொடர்பாக ஐ.நா அதிகாரியும் கடற்றொழில் அமைச்சரும் கலந்துரையாடல்!

ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட சேவைகள் பிரிவின் தெற்காசியாவுக்கான பணிப்பாளர் சார்லஸ் கெலனன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருடன் நேற்றையதினம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

அப்போது இலங்கையில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு பொறிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும் கடற்றொழிலாளர்களுக்குரிய திட்டங்கள் மற்றும் அதற்கான ஐநாவின் பங்களிப்பு உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் இதன்போது ஆராயப்பட்டது

பார்த்துப் பார்த்து செலவு செய்கிறோம் ஜனாதிபதி அநுர உருக்கம் ! 

பார்த்துப் பார்த்து செலவு செய்கிறோம் ஜனாதிபதி அநுர உருக்கம் !

 

இலங்கை தொழில்முனைவோர் உலக சந்தையில் தங்கள் பங்கைக் கைப்பற்றுவதற்குத் தேவையான ஆதரவை அரசாங்கம் வழங்கும். சர்வதேச தூதுவர்களை ஒருங்கிணைக்கும் செயல்முறையின் மூலம் உலக சந்தையில் தொழில் முயற்சியாளர்கள் பிரவேசிப்பதற்கான வலுவான திட்டத்தையும் அரசாங்கம் கொண்டுள்ளது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஷங்கரி-லா ஹோட்டலில் நடைபெற்ற இளம் இலங்கை தொழில்முனைவோர் மன்றத்தின் 26வது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு கணிசமான அளவு பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. முதலீட்டாளர்கள் எந்தவிதமான தரகுப்பணமும் செலுத்தாமல் முதலீடு செய்யக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் மக்களின் ஒவ்வொரு ரூபாயையும் பயன்படுத்தும் போது கடவுளின் பணியாகக் கருதி பயன்படுத்தப்படுவதை தனது அரசாங்கம் உறுதி செய்வதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஊழல் மோசடிக் குடும்பத்திலிருந்து வந்த ஜனாதிபதி : போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்திய முன்னாள் ஜனாதிபதியை கைது செய்கின்றார் !

ஊழல் மோசடிக் குடும்பத்திலிருந்து வந்த ஜனாதிபதி : போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்திய முன்னாள் ஜனாதிபதியை கைது செய்கின்றார் !

 

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டெர்டே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது உத்தரவைத் தொடர்ந்து மணிலா விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஹொங்கொங்கிலிருந்து திரும்பியவுடன் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்தது.

“மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார், 2016-2022 ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய “போதைப்பொருளுக்கு எதிரான போர்” தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார். டுட்டெர்டேவின் இந்த போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தில், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி 6,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனால், மனித உரிமை அமைப்புகள் இந்த எண்ணிக்கை 30,000 வரை இருக்கலாம் என கூறுகின்றன, இதில் பலர் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஊழல் மோசடியாளர்களான பேர்டினன்ட் மார்க்கோஸ் – இமெல்டா மார்க்க்கோஸ் தம்பதிகள் 1980க்களில் பிலிப்பைன்ஸ் அரசியலில் இருந்து மக்களால் துரத்தியடிக்கப்பட்டனர். அமெரிக்க மற்றும் மேற்குலக ஆதரவு பெற்ற இத்தம்பதியினரின் புதல்வர் தற்போது புதிய ஜனாதிபதி ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி சேவைச் சந்தை கடைகள் தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் – புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் வெளியாருக்கு அல்ல ! கிளியில் மக்கள் போராட்டம்

கிளிநொச்சி சேவைச் சந்தை கடைகள் தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் – புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் வெளியாருக்கு அல்ல ! கிளியில் மக்கள் போராட்டம்

 

நேற்றைய தினம் கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர்கள் தமது கடைகளை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில் பிரதேச சபையின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக குற்றம் சாட்டியே வர்த்தகர்கள் கொட்டும் மழையிலும் போராடினர்.

போராட்டத்திற்கு தலைமை தாங்கிய வர்த்தகர் பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் அவர் வர்த்தகர்கள் போராடும் இடத்திற்கு வரவில்லை. ஏற்கனவே பிரதேச சபையால் மூன்று கட்டங்கள் கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு கட்டி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது உலக வங்கி அனுசரனையில் நாலாவது கட்டடம் கட்டப்பட்டுள்ளது. எட்டு கடைத்தொகுதிகளை உள்ளடக்கிய நான்காவது கட்டடத்தை கேள்வி கூறல் அதாவது ரென்டர் மூலம் வழங்குவதற்கு பிரதேச சபை பத்திரிகை மூலம் விளம்பரப்படுத்தியுள்ளது. இந்த விடயத்தினால் கொதிப்படைந்த வர்த்தகர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதேமாதிரியானவொரு பிரச்சினையே சாவகச்சேரி சந்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடைகளை கேள்வி கோரல் மூலம் சாவகச்சேரி பிரதேச சபை நடவடிக்கைகளை எடுத்த போது எழுந்தது.

சாவகச்சேரி வர்த்தகர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு என்னவென்றால் கடைகளை கேள்விக் கோரலுக்கு விடும் போது வெளிமாவட்ட வர்த்தகர்களும் கடைகளை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. அதைத்தவிர வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழுபவர்கள் தமது உறவினர்கள் பெயரில் பெருந்தொகை பணத்தை கொடுத்து கடைகளை கேள்விக் கோரல் மூலம் எடுப்பதாகவும் கூறப்பட்டது. வெளிநாட்டு பணத்திற்கு ஈடுகொடுத்து உள்ளூர் வர்த்தகர்கள் கடைகளை கேள்விக் கோரல் மூலம் பெற முடியாத நிலை காணப்படுவதாகவும் கூறப்பட்டது.

கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர்களின் போராட்டம் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நேற்றைய பாராளுமன்ற அமர்பில் குறிப்பிட்டிருந்தார்.

பட்டலந்த விசாரணை அறிக்கை ஒருவாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் !

பட்டலந்த விசாரணை அறிக்கை ஒருவாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்குபற்றிய அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஔிபரப்பான Head to Head நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துகள் பெரும் சலசலப்பை இலங்கை அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து 88 தொடக்கம் 90 காலப்பகுதியில் இடம்பெற்ற பட்டலந்த படுகொலைகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய தகவல்கள் மீள சமூக வலைத்தளங்களில் தூசுதட்டப்பட்டு வருகிறது.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பட்டலந்த வதை முகாமுடன் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போன்றோர் மனித உரிமைகளை பாரதூரமான முறையில் மீறியுள்ளதால் அவர்களது பிரஜாவுரிமையை பறிப்பதற்கு தேவையான மேலதிக அதிகாரத்தை உயர் நீதிமன்றத்திற்கு வழங்குமாறு இது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு முக்கிய பரிந்துரையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரஜாவுரிமை பறிக்கப்படலாம் என தகவல்கள் பரப்பப்படுகின்றன.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக தமிழர் !

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக தமிழர் !

 

கண்டி மேல் நீதிபதி சுமுது பிரேமச்சந்திரா, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பிரியந்த பேர்னாண்டோ மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகிய மூவரும் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நீதிவான், மாவட்ட நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதியாக அன்னலிங்கம் பிரேமசங்கர் சுமார் 28 ஆண்டுகள் நீதிச் சேவையில் கடமையாற்றியுள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தையிட்டி விகாரை விடயத்தில் என்பிபி நியாயமாக நடக்கும் என வாக்குறுதி !

தையிட்டி விகாரை விடயத்தில் என்பிபி நியாயமாக நடக்கும் என வாக்குறுதி !

 

யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பில் நேரில் சென்று ஆராயவுள்ளதாகவும் இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என தான் நம்புவதாகவும் புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார் .

பத்தாவது பாராளுமன்றத்தின் புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சர் தலைமையில் கூடியது. அப்போது யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பில் குழுவில் வினவப்பட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார் .

இனங்களுக்கிடையில் சுமுகத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய தலையீட்டை மேற்கொள்ளும் . யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை அமைந்துள்ள இடத்திற்கு விஜயம் செய்து அதனைப் பார்வையிடவுள்ளேன் , இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என நம்புகின்றேன் என்றார்.

பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத இலங்கைக்கு பயங்கரவாத தடைச்சட்டம் தேவையில்லை !

பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத இலங்கைக்கு பயங்கரவாத தடைச்சட்டம் தேவையில்லை !
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டின் அடிப்படையில் உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
பொருளாதார விஞ்ஞானம் மற்றும் சமாதானத்திற்கான சர்வதேச நிறுவனத்தால் பயங்கரவாத தாக்கத்தின் அடிப்படையில் நாடுகளின் தரவரிசையின்படி உலகளாவிய பயங்கரவாத குறியீடு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த குறியீட்டில் பரிசீலிக்கப்பட்ட 163 நாடுகளில் இலங்கை 100 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக 12வது வருடாந்த பயங்கரவாத குறியீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி முதல் மூன்று இடங்களில் புர்கினா ஃபாஸோ (Burkina Faso – West African country), பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகள் காணப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டில் இந்தக் குறியீட்டில் 36வது இடத்திலிருந்த இலங்கை இந்த வருடம் 100 இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
64 இடங்கள் பின்தங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவொரு தீவிரவாதச் சம்பவங்களும் பதிவாகாத நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பின்னர் இதுவரை பாரிய பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை. அந்த வகையில் இலங்கை பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் குறைப்பதில் தெற்காசிய வலயத்தில் மிகவும் முன்னேறிய நாடாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் தொடர்ச்சியாக நாட்டிலிருந்து புலம்பெயரும் தமிழர்களின் அகதி விண்ணப்ப கோரிக்கைகளில் இந்த விடயம் கணிசமானளவு தாக்கம் செலுத்தலாம். தமிழர்களைப் பொறுத்தவரை யுத்தத்தின் பின்னர் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளாலேயே அவர்கள் புலம்பெயர்ந்து வருவதாக தமது அகதி விண்ணப்பக் கோரிக்கைகளில் குறிப்பிடுகின்றனர்.
அரச துணை இராணுவப் படைகளின் அட்டகாசங்கள், அரச புலனாய்வுத்துறையினரின் அதாவது பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் கைதுகள், சித்திரவதைகள் மற்றும் விசாரணைகள், தீர்க்கப்படாத காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, விடுவிக்கப்படாத காணிகள், வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் மற்றும் சட்டவிரோத விகாரைகள் போன்ற இன்ன பல காரணங்களே அகதித் தஞ்ச கோரிக்கைகளுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகின்றது. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை மழை பொய்ந்து முடிந்தும் தூறல் விடவில்லை என்ற நிலை தான் உள்ளது.
இதேவேளை உள்நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கூறி தமிழர் பகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கம் குறித்து ஆக்கப்பூர்வமான அறிவிப்புக்களை வெளியிடாத சூழல் நீடிப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்ககோரியும் அத்தியாவசிய பொருட்கள் மீதான வற் வரியை நீக்க கோரியும் யாழில் கையெழுத்து போராட்டம் ஒன்று நேற்றையதினம், மக்கள் பேரவை இயக்கத்தின் எற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது. இந்த கையெழுத்து போராட்டத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
புதிய என்பிபி அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தீர்வை முன்வைக்கும் போது தான் இலங்கையில் நீடித்த சமாதானத்தை காண முடியும்.

பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் ! சஜித் பிரேமதாஸா கண்டனம் – அவரின் யாழ் அமைப்பாளர் பாலியல் சுரண்டல் செய்கின்றார் !

பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் ! சஜித் பிரேமதாஸா கண்டனம் – அவரின் யாழ் அமைப்பாளர் பாலியல் சுரண்டல் செய்கின்றார் !
அநுராதபுரம் வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் மருத்துவர் கடமை முடிந்து மார்ச் 10 ஆம் திகதி மாலை 6:30 மணியளவில் தனது விடுதிக்கு திரும்பியிருந்தார். அப்பொழுது இனந்தெரியாத ஆண் ஒருவர் விடுதிக்குள் நுழைந்துள்ளார். அந்த நபர் மருத்துவரை கத்தியை காட்டி பயமுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட 32 வயதான பெண் மருத்துவர் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும் சந்தேக நபரை உடனடியாக கைது செய்யக் கோரி அநுராதபுர வைத்தியசாலை மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயத்தில் மருத்துவமனை நிர்வாகமும் அசிரந்தையாக இருந்துள்ளது. மருத்துவர்கள் தங்கும் விடுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமை மருத்துவமனை நிர்வாகத்தின் தவறாகும்.
கொல்கத்தாவில் 31 வயதான பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது இந்தியாவையே உலுக்கியுள்ளது.
இந்த பாலியல் வன்கொடுமையை புரிந்த நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடிய சிப்பாய் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதேமாதிரி கடந்த வருடம் இந்தியாவில் கல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் தேவை என நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் வலியுறுத்தப்பட்டிருந்தது. சஜித் பிரேமதாசாவின் யாழ் மாவட்ட பிரதம அமைப்பாளரே ஒரு பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான நபர். பாலியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் வெற்றிவேலு ஜெயேந்திரனுடன் தைப்பொங்கல் விழா கொண்டாடும் சஜித் பிரதேமதாசவின் இரட்டை வேடம் நகைப்பிற்கிடமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரதான சந்தேக நபரான முன்னாள் இராணுவச் சிப்பாயை கைது செய்வதற்காக 5 பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளது என வலயத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹெவா புத்திரன தெரிவித்தார்.
இலங்கையில் அண்மை காலங்களில் அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூட்டுக் கலாச்சாரம் மற்றும் சட்டவிரோத சாராய உற்பத்தி , பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பாதாள உலக குழுக்களின் தாக்குதல்கள் என பல சமூக விரோத செயற்பாடுகளில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய இராணுவ வீரர்கள் தொடர்புபட்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய வீரர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை எழுநூறுக்கும் அதிகமான இராணுவ வீரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கது.

ரெலோ முக்கியஸ்தர் விந்தனின் புதிய அரசியல் அவதாரம் !

ரெலோ முக்கியஸ்தர் விந்தனின் புதிய அரசியல் அவதாரம் !

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்னம் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். அவரும் அவரது மகனும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் முன்னிலையில் மார்ச் 10 ஆம் திகதி தமிழரசுக் கட்சியில் இணைந்து உறுப்புரிமைகளையும் பெற்றுக் கெண்டுள்ளனர்.

ரெலோக்குள் நிலவிய உட்பூசல்கள் காரணமாகவே விந்தன் வெளியேறி தமிழரசுக் கட்சிக்குள் சரணடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மார்ச் 23 இல் 2024 இல் வவனியாவில் நடந்த ரொலோவின் பொதுக்குழு கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் அக்கட்சியின் தலைவராகவும் விந்தன் நிர்வாகச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். பின்னர் ஏற்பட்ட உட்கட்சி முறுகல்களை தொடர்ந்து விந்தன் கனகரட்ணம் பாராளுமன்றத் தேர்தலின் போது ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தார். நிதிச் செயலாளர் சுரேன் குருசாமியையும் விமர்சித்து யாழ் ஊடக அமையத்தில் பேட்டியளித்திருந்தார். விந்தன் பாராளுமன்ற தேர்தலில் யாழ்மாவட்டத்தில் போட்டியிட தயாராக இருந்த போதும் அவருடைய பெயர் ரெலோவின் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

அதேநேரம் ரெலோ கட்சி விந்தன் கனகரட்ணம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியில் இருந்து விலக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.