09

09

யுரியூப்பர் கிருஷ்ணா வடக்கு கிழக்கின் பிரபல கேடி – கில்லாடி யானார் ! மனித உரிமை ஆணைக் குழுவும் அவரைத் தேடுகின்றது ! பா உ அர்ச்சுனாவின் முன்னாள் சட்டத்தரணியும் தேடுகின்றார் !

யுரியூப்பர் கிருஷ்ணா வடக்கு கிழக்கின் பிரபல கேடி – கில்லாடி யானார் ! மனித உரிமை ஆணைக் குழுவும் அவரைத் தேடுகின்றது ! பா உ அர்ச்சுனாவின் முன்னாள் சட்டத்தரணியும் தேடுகின்றார் !

யூரியூபில் உதவி செய்யும் காணொளிகளை பதிவேற்றும் “SK vlog“ என்ற யூரியூப் பக்கத்தின் உரிமையாளரான கிருஷ்ணா என்பவர் ஒரு வீட்டினுள் நுழைந்து உதவி செய்வதற்காக வந்துள்ளேன் என கூறி பாடசாலை சிறுமி ஒருவரை வற்புறுத்தி காணொளி எடுக்க முயலும் காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், நீங்கள் நடிக்க கூடாது; நீர் என்ன பெரிய நடிகையோ; அழுதா தானே நிறைய உதவிகள் வரும் போன்ற வார்த்தைகளையும் பேசுகிறார்.

யூரியூபர் S K கிருஷ்ணா வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களின் காணொளிகளை தனது யூரியூப் பக்கத்தில் பதிவேற்றி, புலம்பெயர் மக்களிடம் பணம் பெற்று அதன் மூலம் உதவி செய்வதாக காண்பித்து வருகின்றார். அவ்வாறு காணொளிகளை பதிவு செய்யும்போது உதவி பெறுபவர்களின் மனம் நோகும்படியாக பேசுவது, அவர்களை எள்ளி நகையாடுவது, இளம் பிள்ளைகளை வற்புறுத்தி காணொளிக்கு அழைப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இவ்விடயம் தொடர்பில் தேசம்நெற் சில தடவைகள் எச்சரித்து காணொலிகளையும் வெளியிட்டு வந்திருந்தது. அண்மையில் எஸ் கே கிருஷ்ணாவையும் அம்பலப்படுத்தி இருந்தோம். தற்போது இச்செய்தி தற்போது பாராளுமன்ற உறுப்பினார் அர்ச்சுனாவால் பாராளுமன்றத்திலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கு முன்னரே சமூக வலைத்தளங்களும் இப்பிரச்சினையை வேகமாகப் பரவி வருகின்றறது.

இதற்கிடையே மனித உரிமை ஆணைக்குழுவும் இவர் பற்றிய தகவலைக் கோரியுள்ளது. தற்போது இலங்கைத் தமிழரின் கேடி – கில்லாடியாகி விட்டார். எஸ் கே கிருஷ்ணாவின் செயற்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணி எஸ்.செலஸ்ரின் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் விபரங்களை திரட்டி அவர்களிடம் விசாரணைகளை நடாத்துவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகமும் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த யூடியூப்பரின் மோசடி மற்றும் முகஞ்சுழிக்க வைக்கும் செயற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்றையதினம் எம்.பி இராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டி பேசியதுடன் இவர்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள யோகு அருணகிரி, இவரைப் போன்ற கேடி – கில்லாடிகளை புலம்பெயர் தமிழர்களே உருவாக்குவதாகக்தன்னுடைய முகநூல் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்: “யுடீப்பர் என்னும் கழிசடைகள் உலகத்தை வளர்த்து விட்டது அதிகமாக புலம்பெயர் புடுங்கிகள் தான், தங்களின் வெட்டி பந்தாக்கும், பெயர், புகழுக்கும், நாலு பேருக்கு சோத்த போட்டுட்டு நாலாயிரம் பேர் லைக் பண்ணனும் என்ற தற்புகழ்ச்சி கோஷ்டிகளை முதலில் காயடிச்சு விடனும்….

அப்பத்தா சொல்லும் வலக்கை கொடுத்தா இடக்கைக்கு தெரியக்கூடாது என அப்படித்தான் தானம், தர்மம், புண்ணியத்தில் சேரும், ஏழு தலைமுறை வாழும் என… நம்ம பெயரும் ரீவியில் வரணும் நாலு பேர் நம்மையும் மனிதாபிமான ஆள், ஊருக்கு உதவுற மனம் வள வளா குறுப் தான் இப்படியான குறை பீடிக்கும் இல்லாமல் திரிச்சதுகளை தேடி பிடிச்சு அதுகளுக்கு சில்லறையை சிதற விட்டு வளர்த்து விட்டுட்டு இப்ப கதறி என்ன பயன்….” என்கிறார் யோகு அருணகிரி.

கல்வி: நேரகாலம் தெரியாமல் வட்ஸ்அப்பில் வீட்டுவேலை வழங்குவதை நிறுத்துங்கள் !

கல்வி: நேரகாலம் தெரியாமல் வட்ஸ்அப்பில் வீட்டுவேலை வழங்குவதை நிறுத்துங்கள் !

சில ஆசிரியர்கள் நேரகாலம் தெரியாமல் வட்ஸ்அப்பில் மாணவர்களுக்கு வீட்டுவெலைகளை அனுப்பி பெற்றோரைத் தொந்தரவு செய்வதாக பரவலாக முறைப்பாடுகள் வந்தள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகின்றது. இவ்வாறு நேரகாலம் தெரியாமல் வட்ஸ்அப்பில் வீட்டுவெலைகளை அனுப்புவதை ஆசிரியர்கள் நிறுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் ஸ்ராலின் ஜோசப் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் பயிற்சிகள், விளக்கங்கள் மாணவர்களுக்கு நேரடியாக முகத்துக்கு முகம் பார்த்து வழங்கப்பட வேண்டும். இவ்வாறான காலநேரமற்ற வட்ஸ்அப்கள் அனுப்பப்பட்டால் அது பற்றிய முறைப்பாடுகளை பதிவுசெய்யுமாறு அவர் பெற்றோரைக் கேட்டுக்கொண்டுள்ளார். கல்வி அமைச்சு ஏற்கனவே நேரகாலம் பராது வட்ஸ்அப் மூலம் வீட்டுவெலைகள் அனுப்புவது தொடர்பில் ஆசிரியர்களுக்க அறிவுறுத்தல்களை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கிழக்கில் துறைமுக அதிகார சபையும் – வடக்கில் வன இலாகாவும் மக்களின் காணி அபகரிப்பில் !

கிழக்கில் துறைமுக அதிகார சபையும் – வடக்கில் வன இலாகாவும் மக்களின் காணி அபகரிப்பில் !

இலங்கைத் துறைமுக அதிகார சபையானது பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 11 கிராம சேவையாளர் பிரிவில் அடங்கும் 5226 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வைத்துள்ளது உள்ளது. இதில் 1882 ஏக்கரில் மக்கள் நீண்ட காலமாக வாழ்கின்றார்கள். துறைமுக அதிகார சபையிடம் இருந்து அதை விடுவிக்க வேண்டுமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். குகதாசன் நேற்று நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

எம்.பி குகதாசன் மேலும் உரையாற்றிய போது திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் மாகாண மற்றும் உள்ளூராட்சி திணைக்களத்தின் கீழ் வரும் முதன்மையான வீதிகள் உள்ளக வீதிகள் மிகவும் மோசமான நிலையில் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. எனவே இதனை மறுசீரமைக்க வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் பாலங்களும் பழுதடைந்துள்ளன. இவை நீண்ட காலத்துக்கு முன்னர் கட்டப்பட்டவையாகும்.இவற்றைப் புதிதாக அமைக்க வேண்டும். எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவில் வன இலாகாவின் காணி அபகரிப்பு பற்றி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். இது தொடர்பில் குறிப்பிட்டுள்ள எம்.பி ரவிகரன்இ முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 74.24 வீதமான நிரப்பரப்பு வன இலாகாகாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் காணிகளில் ஒரு துண்டு காணியேனும் விடுவிக்கப்படவில்லை. இந்த காணிகள் யாவும் தமிழ் மக்களுடைய விவசாய நிலங்களாகும்.

இது ஒரு புறமிருக்க வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் நீர்நிலைகளும் அதுசார்ந்த இடங்களுமாக 61 ஆயிரத்து 401 ஏக்கர் நிலம் உள்ளது எனக் கூறினார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 4 லட்சத்து 82 ஆயிரத்து 321 ஏக்கர் வன இலாகா மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுபோக படையினர் தொல்லியல் திணைக்களம் மகாவலி அதிகாரசபை உள்ளிட்டவையும் காணிகளை கையகப்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ளார்.

எமது அரசியல்வாதிகள், கல்வி அதிகாரிகள் வடக்கு – கிழக்கு மாணவர்களுக்கான பேருந்துக்களை பெற்றுக் கொடுப்பார்களா ?

எமது அரசியல்வாதிகள், கல்வி அதிகாரிகள் வடக்கு – கிழக்கு மாணவர்களுக்கான பேருந்துக்களை பெற்றுக் கொடுப்பார்களா ?

பாடசாலை மாணவர்களின் பொது போக்குவரத்து வசதிகளை கருத்திற்கொண்டு ‘சிசுசரிய’ திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 2000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும். பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் தொடர்பான விபரங்களை கல்வி அமைச்சர் சமர்ப்பிக்க வேண்டுமென சபை முதல்வரும் போக்குவரத்து அமைச்சருமான பிமல் ரத்நாயக்க நாடாளுமன்ற நேற்றைய அமர்வில் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு கல்வி அதிகாரிகள் தங்கள் பிரதேசங்களுக்கான தேவையை முன்வைத்தள்ளார்களா ? இது வரை எந்தவொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு கிழக்கின் பின் தங்கிய பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதிகள் பற்றி அதிகம் பேசியதில்லை. குறிப்பாக பரந்து விரிந்த வன்னி நிலப்பரப்பில் பாடசாலை மாணவர்கள் பள்ளிக்குச் செல்வது என்பதே பெரும் போராட்டமாக உள்ளது. விக்கினேஸ்வரன் தலைமையிலான வட மாகாண சபையின் பதவிக்காலத்திலும் முதலமைச்சரும் அமைச்சர்களும் ஊழல்மோசடி செய்து தங்களை வளர்த்துக்கொண்டனர். மாணவர்கள் பற்றி அவர்கள் கிஞ்சித்தும் கவனம் செலுத்தவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்: சர்வதேசமே பதில் சொல்லு ! செவிட்டு காதுகளில் ஊதும் சங்காகியது !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்: சர்வதேசமே பதில் சொல்லு ! செவிட்டு காதுகளில் ஊதும் சங்காகியது !

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 8ம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்றுவரை தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தநிலையில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்தனர்.

இதன் போது சர்வதேசமே பதில் சொல் சர்வதேசமே எமக்கான தீர்வு என்ன! பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே நீதியின்றி இறந்து கொண்டிருக்கின்றோம் கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம்! எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும் தமிழரை கடத்தாதே! இனவழிப்பு செய்யாதே! உங்கள் சிறைக்கூடம் எங்கள் பிள்ளைகளுக்கு என்ன கல்விக்கூடமா? எமது நாட்டில் நாம்வாழ உரிமையில்லையா? உலகமெல்லாம் பெண்கள் உரிமை பேசும் இந்நாளிலும் தெருவில் கிடந்து அழவைத்திருக்கிறது அரசு போன்ற பல்வேறு கோசங்களையும் எழுப்பி பதாதைகளை தாங்கியிருந்தனர்.

ஆசிய வலய நாடுகளில் இலங்கைப் பெண்கள் கல்வியில் முன்நிலையில் – நாடாளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி !

ஆசிய வலய நாடுகளில் இலங்கைப் பெண்கள் கல்வியில் முன்நிலையில் – நாடாளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி !

மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நடைமுறைக்கு சாத்தியமான சட்டங்கள் இயற்றப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அவர் ஆசிய வலய நாடுகளில் இலங்கை கல்வியில் முன்நிலை வகிப்பதையும் அப்போது சுட்டிக்காட்டினார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு பிரதமர் மேலும் உரையாற்றிய போது சுதந்திரத்துக்கு பின்னராக 75 வருட காலத்தையும் நாங்கள் விமர்சிக்கவில்லை. அரசியல் கட்டமைப்பையே சாபம் என்கிறோம். இலவச கல்வி மற்றும் இலவச சுகாதாரம் ஆகியவற்றால் பெண்கள் முன்னேற்றமடைந்துள்ளார்கள். ஆசிய வலய நாடுகளில் இலங்கையின் பெண்களின் கல்வி தரம் முன்னிலையில் உள்ளது. கல்வித்துறையின் ஊடாகவே ஆண் – பெண் சமத்துவத்தை உறுதிப்படுத்த முடியும். ஆகவே ஆண்களின் கல்வி நிலை குறித்து விசேட கவனம் செலுத்தப்படும்.

சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழு வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும். அரசியலமைப்பு பேரவைக்கு இந்த ஆணைக்குழுவுக்கான நியமனங்கள் தொடர்பான பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ஐஸ்கரீம் விற்பது போல் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனை யாழ் இளைஞன் கைது !

ஐஸ்கரீம் விற்பது போல் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனை யாழ் இளைஞன் கைது !

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா கலந்த மாவா ஒருவகையான பாக்கு தயாரிக்கும் இடமொன்றில் பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மார்ச் 7இல் கைது செய்யப்பட்டுள்ளார்.

வண்ணார் பண்ணை சிவன் கோயிலுக்கு பின் மானிப்பாய் வீதியை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கஞ்சா கலந்த மாவா பாக்கு தயாரித்து கொண்டிருந்த போதே சந்தேக நபரான 24 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கஞ்சா கலந்த மாவா 4 கிலோ 250 கிராம் 12 கிலோ 500 கிராம் எடையுடைய பீடித்தூள் மற்றும் வாசனைத் திரவியம் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்புரிமையை கௌசல்யாவுக்கு விட்டுக்கொடுக்கவில்லை ! சட்டப்படி பறித்து புளொட் சித்தார்த்தனுக்கு நீதிமன்றம் வழங்க உள்ளது ?

அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்புரிமையை கௌசல்யாவுக்கு விட்டுக்கொடுக்கவில்லை ! சட்டப்படி பறித்து புளொட் சித்தார்த்தனுக்கு நீதிமன்றம் வழங்க உள்ளது ?

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் எட்டாம் அல்லது ஒன்பதாவது மாதம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இவ்வாறான அறிவித்தல்களை இவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படதுமுதல் இருந்தே தெரிவித்து வருகின்றார். இரு வாரங்களுக்கு முன்னரும் தான் பதவிவிலகி கௌசல்யா நரேன்ற்கு இடமளிக்கப்போவதாகத் தெரிவித்து இருந்தார்.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக போடப்பட்டுள்ள பொதுநல வழக்கு அவருக்கு எதிராகவே திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இராமநாதன் அர்ச்சுனா சுயேட்சைக் குழவின் தலைவராகவும் இருப்பதால் முறைதவறி தேர்தலில் போட்டிட்டிருந்தால் முறைதவறி நடந்த ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கட்சியே முறைதவறியதாகக் கணிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதனால் அக்கட்சியிலிருந்து ஒருவர் அதாவது அடுத்த நிலையில் உள்ள கௌசல்யா நரேன் அந்த இடத்தை நிரப்ப முடியாத நிலை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் அதற்கு அடுத்தபடியாக கூடுதல் வாக்குகளைப் பெற்ற ஜனநாயகத் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு அப்பாராளுமன்ற உறுப்புரிமை செல்லும் என்கிறார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரித்தானிய பிரதிநிதி சாம் சம்பந்தன். இதனை நீதிமன்றமே உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த சாம் சம்பந்தன் நீதிமன்றம் தங்களுக்கு சாதகமாக முடிவெடுக்கும் பட்சத்தில் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பாராளுமன்ற உறுப்பினராவார் என்பதை தேசம்நெற்றுக்கு வழங்கிய நேர்காணலில் சுட்டிக்காட்டியிருந்தார்.

மார்ச் 7 பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பா உ அர்ச்சுனா தான் பதவியை கௌசல்யா நரேன் இடம் ஒப்படைக்க இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டில் 52 வீதம் பெண்கள் இருந்தாலும் பிரதமரின் கூற்று படி நாடாளுமன்றில் வெறும் 9.8 வீதமான பெண்களே இருப்பதாகவும் இதன்படி நாடாளுமன்றில் பெண்களின் எண்ணிக்கையை 10 வீதமாக மாற்றுவதாக கூறிய அவர் தான் பதவி விலகி அந்த பதவியை பெண்ணொருவருக்கு வழங்கப் போவதாக குறிப்பிட்டார்.

ஆனால் மற்றைய ஆண் பாராளுமன்ற உறுப்பினர்கள் போலவே தன்னுடைய பதவி நிச்சயம் பறிக்கப்படும் என்ற நிலையிலேயே அதனை தான் கௌசல்யா நரேனிற்கு வழங்குவதாக அர்ச்சுனா அறிவிக்கின்றார். பா உ அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு நீதி மன்றில் முடிவெடுக்கப்படும் காலத்திலேயே தன்னுடைய பதவியை அவர் விட்டுக்கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளமை கவனிக்கத்தக்கது.

மண் விடுதலைக்குப் பின் பெண் விடுதலை என்றோம் ஆனால் மண்ணும் விடுதலை பெறவில்லை பெண்ணும் விடுதலை பெறவில்லை ! : மகளீர் தின உரையாடல்

மண் விடுதலைக்குப் பின் பெண் விடுதலை என்றோம் ஆனால் மண்ணும் விடுதலை பெறவில்லை பெண்ணும் விடுதலை பெறவில்லை ! : மகளீர் தின உரையாடல்

போராளியும் பெண் ஆளுமையுமான தமிழ் கவியுடன் தேசம்நெற் கங்கா ஜெயபாலன் கலந்துரையாடுகின்றார்

 

தமிழ் தேசியக் கட்சிகளின் இருத்தலுக்கான அச்சுறுத்தலாக மாறியுள்ள உள்ளுராட்சி தேர்தல் !

தமிழ் தேசியக் கட்சிகளின் இருத்தலுக்கான அச்சுறுத்தலாக மாறியுள்ள உள்ளுராட்சி தேர்தல் !

வரும் உள்ளுராட்சித் தேர்தல் தமிழ் தேசியக் கட்சிகளின் வேர்களையே பிடுங்கிவிடுமா ? என்ற அச்சத்தில் தமிழ் தேசியம் தனது இருத்தலுக்கான அச்சுறுத்தலை உணர ஆரம்பித்துள்ளது. மக்களோடு அந்நியப்பட்டுள்ள தமிழ் தேசியக் கட்சிகளுக்கு தாங்கள் மக்கள் மத்தியிலிருந்து எவ்வளவு தூரம் அந்நியப்பட்டுள்ளனர் என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியவில்லை.

தங்களுடைய பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துகொள்ளாத தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் ஆட்சிமாற்றம் நிகழும் தங்களுக்கொரு எதிர்காலம் அமையும் என்று முட்டாள்தனமாக நம்பி மிக மோசமான முடிவைச் சந்தித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியலில் இருந்து எதனையும் கற்றுக்கொள்ளாத தமிழ் தேசியம் அவர்களின் பிணங்களில் ஒட்டுண்ணிகளாக வளர்ந்தது. கடந்த 15 வருடங்களாக புலித்தோலைப் போர்த்துக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு முந்திய மிதவாதத் தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் எவ்வாறு குறும்தமிழ் தேசியவாத அரசியல் பேசினார்களோ அதேபோல் இன்றைய அரசியல் தலைவர்களும் அதனையே பேசினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் அன்றைக்கு எதற்காக அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களைச் சுட்டுக்கொன்றார்களோ அதனையே தான் அல்லது அதற்கும் மேல் மோசமான அரசியலையே தமிழீழ விடுதலைப் புலிகளினதும் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் பெயரிலும் இன்றைய தமிழ் தேசிய அரசியல்வாதிகள் செய்கின்றனர். இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் அன்றைய சிந்தனையோடு இருந்திருந்தால் பா உறுப்பினர்கள் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும்.

தமிழ் மக்களை வாயால் வடைசுட்டு தொடர்ந்தும் ஏமாற்றலாம் என்ற கருதும் வலதுசாரி குறும் தமிழ் தேசியவாதம் கடந்த காலத்திலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு தமிழ் மக்களின் அபிலாசைகள் என்ன என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ் மக்கள் கிளிநொச்சியில் விவசாய இரசாயணங்கள் கலந்த தண்ணீரை குடிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் மலசலம் கலந்த கிணற்றுத் தண்ணீரைக் குடிக்கின்றனர். அவர்களுக்கு குழாய்நீர் வழங்க நிதி; ஒதுக்கப்பட்டது. பா உ சிறிதரனுக்கு வாக்களித்தவர்களுக்கு சுத்தமான குடிநீர் கூட இல்லை. ஆனால் பா உ சிறிதரனுக்கு யாழ் நகரில் ஒரு வீடு கொழும்பில் ஒரு வீடு வாங்கியுள்ளார். தமிழ் மக்கள் வலதுசாரி குறும் தமிழ் தேசியவாதிகளின் ஏமாற்று வித்தைகளை நன்கு படித்துவிட்டார்கள்.

2024 ஜனாதிபதித் தேர்தலின் போது தாங்கள் கைகாட்டுபவர்களுக்கு மக்கள் வாக்களிப்பர் என்று கனவு கண்டனர். அதற்குப் பின் நடந்த பொதுத் தேர்தலின் போது கூட தாங்கள் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதைக் கூட அவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. 10 ஆசனங்கள் தருவார்கள் தாங்கள் தான் தமிழ் பெரும் தேசியக் கட்சி என்று கற்பனைக் கோட்டையில் மிதந்தனர்.

இவர்கள் மீதான நம்பிக்கையீனம் தேசிய மக்கள் சக்தியின் பெரும் முதலீடானது. தேர்தலுக்கு முன்பிருந்தே தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தியது. தமிழ் தேசியம் அவழ்த்துவிட்ட வலதுவாரி குறும் தேசியவாத கருத்துகளுக்கு மக்கள் செவிசாயக்கவில்லை. அவர்களின் பாரம்பரிய ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் தமிழ் மக்கள் நிராகரித்தனர். தேசம்நெற் எதிர்வு கூறியது போல் தேசிய மக்கள் சக்தி இறுதிப் பெரும்பான்மையைப் பெற்றதுடன் வடக்கு கிழக்கில் ஏழுஆசனங்களைப் பெற்றது. தற்போது தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கின் பட்டி தொட்டி எங்கும் தன்னுடைய கிளைகளைப் பரப்பியுள்ளது.

ஒன்பது கட்சிக் கூட்டணி ஆரம்பத்திலேயே சில்லு சகதிக்குள் சிக்குண்ட நிலையில் நின்ற இடத்திலேயே சில்லுச் சுற்றுகின்றது. அதனைத் தூக்கிவிடக் கூடியவர்கள் யாரும் இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட, தோற்கடிக்கப்பட்ட, முகவரியற்ற ஆய்வாளர் வி சிவலிங்கத்தின் மொழியில் சொன்னால் உதிரிகள் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த ஒன்பது கட்சிக் கூட்டமைப்பில் தனித்துவமும் வாங்கு வங்கியும் உள்ள ஒரே கட்சி சமத்துவக் கட்சி. ஒற்றுமைக்காக அழைக்கும் போது தனித்து நிற்கமுடியாததால் வேறு வழியில்லாமல் இணைந்துள்ளனர். ஏனைய எட்டுக் கட்சிகளின் பாவ மூட்டைகள் கடந்த அரசியல் காலத்தில் செய்த ஊழல் மோசடிகளால் நிறைந்துள்ளது. இதனைத் தனித் தனியாக எழுதினால் அதற்கு தனிக்கட்டுரை எழுத வேண்டும். அதனால் ஏற்கனவே சங்கு களவாடப்பட்டு விட்டது, லைக்கா சுபாஸ்கரன் சங்கூதுகின்றார் என்றெல்லாம் பல விமர்சனங்கள் உண்டு. இந்த நிலையில் கொள்கையற்ற உதிரிகள் தேர்தல் வெற்றிக்காக மட்டும் உள்ளுராட்சித் தேர்தலில் ஊதுகின்ற சங்கிங்கு மக்கள் காதுகொடுப்பார்களா?

போகின்ற போக்கி உள்ளுராட்சித் தேர்தல் வலதுசாரி குறும்தேசியவாதிகளாகிப் போன தமிழ் தேசியவாதிகளுக்கு ஊதப்படும் கடைச்சிச் சங்காக அமையப் போகின்றது. தேசிய மக்கள் சக்தி தென்பகுதியில் உள்ளுராட்சி சபைகளை வென்றெடுப்பதைக் காட்டிலும் வடக்கில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மக்கள் மத்தியில் அதிக பிரசன்னத்தைக் கொண்டிராத தமிழ் தேசியவாதம் ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் அதீத பிரசன்னத்தை கொண்டிருக்கின்றது. அதனால் ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி தமிழ் ஊடகப் பரப்பிலும் சமூக வலைத்தளத்திலும் குறிப்பிடத்தக்க பிரசன்னத்தை கொண்டிருக்கவில்லை.தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களிலும் சமூகவலைத் தளங்களிலும் இருந்து தூரமாகவே உள்ளனர். அவர்ளை மக்கள் அணுகக் கூடிய அளவுக்கு ஊடகங்களால் அணுக முடியாத நிலையொன்றுள்ளது. துரதிஸ்டவசமாக தற்போது பாரம்பரிய ஊடகங்களும் சமூகவலைத் தளங்களும் சொல்லிக் கேட்கும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை. அதனால் உள்ளுராட்சி சபையில் தேசிய மக்கள் சக்தி அலை வாக்குகளை அள்ளிச் செல்லவே வாய்ப்புள்ளது.

ஆனால் அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். நீண்டகாலத்தில் தேசிய மக்கள் சக்தி மக்கள் மட்டுமல்ல ஊடகங்களும் அணுகவும் கேள்வி கேட்கவும் வழிகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பிராந்திய ஊடகங்களும் அணுகும் வழிகளைக் கொண்டிருக்க வேண்டும்.