23

23

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் – ரணில் விக்கிரமசிங்க !

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் – ரணில் விக்கிரமசிங்க !

 

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை எப்போதும் எதிர்த்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் இணைந்து செயற்படுவது சுலபமானதாக காணப்பட்டது. அவர் அனைத்தையும் புரிந்துகொண்டார் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள். மாகாண சபைகளிற்கு அதிகாரங்களை வழங்குங்கள். யார் குற்றவாளி என்றாலும் தண்டியுங்கள். தமிழர்களிற்கு நீதியை நிலைநாட்டுங்கள் – இதனை செய்யக்கூடாது. செய்யவேண்டாம் என நான் ஒருபோதும் தெரிவித்ததில்லை. இதன் காரணமாகவே நான் தேர்தல்களில் தோற்றேன். நான் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக குற்றம்சாட்டினார்கள். அது முடிவடைந்ததும் ராஜபக்சாக்களிற்கு ஆதரவளித்ததாக குற்றம்சாட்டினார்கள், என தெரிவித்துள்ளார்.

நீதவானாகிறார் மலையக தமிழ் பெண் ! 

நீதவானாகிறார் மலையக தமிழ் பெண் !

பண்டாரவளை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த பத்து வருடங்களாக சட்டத்தரணியாக சேவையாற்றிய சட்டத்தரணி ஆனந்தவதனி புஷ்பராஜ் 2024 ஆம் ஆண்டு இலங்கை நீதித்துறைக்கு நீதவனாக ஆட்சேர்க்கும் போட்டி பரீட்சையிலே சிறப்பு சித்தி பெற்றதன் அடிப்படையில், அண்மையில் இடம்பெற்ற நேர்முகத்தேர்விலும் தேர்ச்சிப்பெற்று நீதவனாக நியமனம் செய்யப்படவுள்ளார்.

இவர் பதுளை மாவட்டத்திலே மலையக தமிழ் மக்கள் சார்ந்து தெரிவு செய்யப்படும் நீதிபதியும், பெண் நீதிபதியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆய்வுகளை செய்யாமல் நிதியை ஒதுக்காதீர்கள் – எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 

ஆய்வுகளை செய்யாமல் நிதியை ஒதுக்காதீர்கள் – எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

 

வடக்கு மற்றும் கிழக்கில் ஆய்வுகளை செய்த பின்னரே அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றிய பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ். மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 500 மில்லியன் ரூபா விசேட நிதி ஒதுக்கீட்டை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்று கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரன் யோசனை கோரியிருந்தார். ஆனால் இதுவல்ல முறை, போரால் பாதிக்கப்பட்டு 35 வருடங்களுக்கு பின்னால் உள்ள பிரதேசத்தில், மக்களின் பொருளாதாரம் பலவீனமாக இருக்கும் இடத்தில் முழுமையான திட்டமிடல் ஒன்று இருக்க வேண்டியது அவசியமாகும்.

வடக்கு மற்றும் கிழக்கு போரால் பாதிக்கப்பட்ட பிரதேசம். அந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதென்றால் ஆகக் குறைந்தது முழுமையான தேவைகளை கண்டறியக்கூடிய முழுமையான ஆய்வுகளை செய்த பின்னரே நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும். அதனை செய்யாமல் நாங்கள் முடிவுகளை எடுத்தால் அந்த மக்களின் உண்மையான அபிவிருத்தியை அடைய முடியாது. என தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் 300 கிலோ கஞ்சா மீட்பு !

யாழ்ப்பாணத்தில் 300 கிலோ கஞ்சா மீட்பு !

 

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 154 பொதிகளில் அடங்கிய 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவம் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கான உயர் வழிமுறைகளை கையாள வேண்டும் – ஜெனிவாவில் அனந்தி சசிதரன் !

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கான உயர் வழிமுறைகளை கையாள வேண்டும் – ஜெனிவாவில் அனந்தி சசிதரன் !

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கான உயர் வழிமுறைகளை கையாள வேண்டும் என்று வடமாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச்செயலாளருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் இடம்பெற்ற பிரிவு நான்கு நிகழ்ச்சி நிரலான ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைகள் சூழ்நிலைகள்’ என்ற தலைப்பின் கீழ் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைகள் சூழ்நிலைகள்’ 2009ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக்கூறப்படவில்லை. பொறுப்புக்கூறலுக்கு இலங்கை அரசாங்கத்துக்கு நேரமும், காலமும் வழங்கப்படுகின்றது. இலங்கை குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியவர்கள் தங்கள் புவிசார் அரசியலுக்கு ஏற்றவாறு தீவில் ஆட்சி மாற்றங்களைச் செய்வதற்கே அதனைப் பயன்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், தற்போது வரையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் ஆதாரங்களைச் சேகரிப்பதற்கானதொரு அதிகாரப்பூர்வமான கட்டமைப்பை அங்கு நிறுவுவதற்கு முடியவில்லை. இதுவொரு மிகப்பெரிய குறைபாடாகும், ஏனெனில் மின்னஞ்சல் மற்றும் பிரதிநிதிகளினால் செய்யப்பட்ட ஏற்பாடுகள் மூலம் மட்டுமே ஆதாரங்களை சேகரிக்க முடியுமான நிலைமையே தற்போது உள்ளது.

இலங்கை அரசாங்கமானது ஐ.நா.வின் தீர்மானங்களுடன் ஒத்துழைக்கத் தவறியிருப்பதோடு, அதன் உறுதிமொழிகளில் இருந்து பின்வாங்கியும் உள்ளது என்றார்.

நாங்கள் ஏன் ஆயுதம் ஏந்தினோம் ..? டில்வின் சில்வா விளக்கம் ! 

நாங்கள் ஏன் ஆயுதம் ஏந்தினோம் ..? டில்வின் சில்வா விளக்கம் !

ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் படுகொலையைச் செய்துள்ளது என கூறுகிறார்கள். அறுபதாயிரம் பேரைக் கொன்று, எங்கள் கட்சியைத் தடை செய்தவர்களுக்கு எதிராகவே நாங்கள் போராடினோம் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள டில்வின் சில்வா, ஆயுதங்களை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது நாங்கள் ஆயுதங்களை எடுத்தோம். ஜனநாயக அரசியலை மேற்கொண்ட எங்கள் கட்சி, 1983 கருப்பு ஜூலை மற்றும் ஐ.தே.க. தொடங்கிய கருப்பு ஜூலையை அடிப்படையாகக் கொண்டு, அநீதியான மற்றும் சட்டவிரோத தடையை அடிப்படையாகக் கொண்டு கட்சியைத் தடை செய்தது. மேலும் எங்களை அடக்கத் தொடங்கினார்கள். மறுபுறம், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, நாங்கள் அதற்கு எதிராக ஆயுதம் ஏந்தினோம். நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம். அன்று நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி தேசம்நெற் க்குத் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஈபிஆர்எல்எப் போராளியும் அரசியல் சமூக செயற்பாட்டாளருமான பாரிஸில் வாழும் சோலையூரான்இ சமூக விடுதலைப் போராட்டங்களில் அப்போராட்ட அமைப்புகள் மேற்கொண்ட படுகொலைகளையும் அரசாங்கத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகாரத்தை தக்க வைக்க மேற்கொள்ளும் படுகொலைகளையும் ஒரே தளத்தில் பார்க்க முடியாது எனத் தெரிவித்தார். ரில்வின் சில்வாவின் கருத்தை அவர் பிரதிபலித்திருந்தார்.

தமிழ் ஆயுத அமைப்புகள் மத்தியிலும் இவ்விதமான படுகொலைகள் நிகழ்ந்ததைச் சுட்டிக்காட்டிய சோலையூரான் தமிழ் அமைப்புகள் மத்தியிலிருந்த கொலைக் கலாச்சாரத்தை கடுமையாகச் சாடினார்.

படலந்த வதைமுகாம் போல யாழ் நூலக எரிப்பு தொடர்பிலும் விசாரணை வேண்டும் – ஆளுங்கட்சி எம்.பி இளங்குமரன் !

படலந்த வதைமுகாம் போல யாழ் நூலக எரிப்பு தொடர்பிலும் விசாரணை வேண்டும் – ஆளுங்கட்சி எம்.பி இளங்குமரன் !

 

பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விசாரணை நடத்துவதை போன்று யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலும் குழுவை அமைத்து விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்.பி.பி யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மிக நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தமிழ் தேசியக் கட்சிகளின் எம்பிக்கள் இவ்விடயத்தில் எதுவும் தெரியாதவர்கள் கேளாதவர்கள் போன்றே இருந்து வந்தனர். மேலும் என்பிபி யை வீழ்த்த சஜித், ரணில் ஆகியோருடன் இணைவதற்கு நேரம் பார்த்து காத்திருக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றிய அவர், மழைக்காலத்தில் கத்தித் தானாகவே இறக்கும் தவளை போல வேட்புமனுவை சரியாக நிரப்பத் தெரியாமல் விலக்கப்பட்ட அர்ச்சுனா அணியினர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் இது தொடர்பில் தெளிவான அறிவுறுத்தல்களை பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்

குப்பைத் தொட்டிகளில் கிடக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் !

குப்பைத் தொட்டிகளில் கிடக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் !

கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு அரசாங்கங்களால் நியமிக்கப்பட்ட சுமார் இருபது ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் இன்னும் செயல்படுத்தப்படாமல் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாக பேராசிரியர் மற்றும் வழக்கறிஞர் பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மஹாநாம ஹேவா மேலும் கருத்து தெரிவிக்கையில், உதுலகம ஆணைக்குழு அறிக்கை, மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு அறிக்கை, லலித் அதுலத்முதலி கொலை ஆணைக்குழு அறிக்கை, விஜய குமாரதுங்க கொலை ஆணைக்குழு அறிக்கை, மற்றும் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ கொலை ஆணைக்குழு அறிக்கை ஆகியவை செயல்படுத்தப்படாத சில அறிக்கைகள் ஆகும். போதுமான ஆதாரங்கள் இருந்தால், இந்தக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த முடியும் என்றும் கூறினார்.

 

பிள்ளையான் குழுவை சேர்ந்த நால்வருக்கு மரணதண்டனை !

பிள்ளையான் குழுவை சேர்ந்த நால்வருக்கு மரணதண்டனை !

மட்டக்களப்பு சந்திவெளியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றத்துக்காக முன்னாள் அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவை சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மட்டக்களப்பு – சந்திவெளியில் கடந்த 2007 மார்ச் 18ஆம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அந்தப் பகுதியில் இயங்கிய பிள்ளையான் தலைமையிலான ஆயுதக் குழு அவரை ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் முடிவில் பிள்ளையான் குழுவை சேர்ந்த நால்வர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர். இதையடுத்து நால்வருக்கும் மரண தண்டனை வழங்கி மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி. ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார்.

 

கௌசல்யாவின் அரசியல் நீக்கம் ! அர்ச்சுனாவின் பிரத்தியேக சட்டத்தரணியாக மாறியது தான் கௌசல்யாவின் வீழ்ச்சியின் ஆரம்பம் !

கௌசல்யாவின் அரசியல் நீக்கம் ! அர்ச்சுனாவின் பிரத்தியேக சட்டத்தரணியாக மாறியது தான் கௌசல்யாவின் வீழ்ச்சியின் ஆரம்பம் !
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை சந்திக்கும் வரை ஆளுமையோடு இயங்கிய கௌசல்யா நரேந்திரன் தனித்தன்மையை இழந்து பொது வாழ்க்கையிலிருந்து ஓரங்கட்டப்பட்டப்பட்டுள்ளார். பெண்கள் அரசியலில் ஈடுபடுவதிலுள்ள சவால்களை இது காட்டுகின்றது. கௌசல்யா ஏன் தொடர்ந்து அரசியலில் எம்பி அர்ச்சனாவுடன் பயணிக்க மாட்டார் என்பதற்கு அவர் கொடுக்கும் விளக்கம் நகைப்பிற்கிடமாகவுள்ளது. எம்பி அர்ச்சுனாவின் வழக்கிற்கு உதவி சட்டத்தரணியாக வந்த கௌசல்யா நரேந்திரன் எம்பியின் பிரத்தியேக சட்டத்தரணியாக மாறியது தான் கௌசல்யாவின் வீழ்ச்சியின் ஆரம்பம். இந்த இடத்தில் கௌசல்யா மீது பரிதாபமே தோன்றுகின்றது.
சிறு வயதில் தந்தையை பிரிந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த கௌசல்யா தன்னுடைய கல்வியில் சிறந்து விளங்கியிருக்கின்றார். படித்து முடித்து ஒரு வளர்ந்து வரும் சட்டத்தரணியாகவும் திறமையுடன் தொழில் செய்திருக்கின்றார். அப்படியிருக்க இன்னொருவர் அதாவது அர்ச்சுனா இராமநாதன் தனக்காக முடிவுகள் எடுக்க அனுமதியளிக்கும் வகையில் கௌசல்யா தனது தனித்துவத்தை இழந்து போனது எப்படி?
அதுதான் யாழ்ப்பாணத்து வெள்ளாளிய ஆண் மைய தமிழ்ச் சமுதாயம் கட்டியெழுப்பியுள்ள சமூகவாழ்க்கை. அந்த வாழ்க்கையில் ஒரு தமிழ்ப்பெண் எப்போதும் ஏதோவொரு ஆணின் நிழலில் தான் தன்னுடைய அடையாளத்தை கட்டியமைக்க வேண்டியுள்ளது. அந்த ஆண் தந்தையாகவோ, தனயனாகவோ, கணவனாகவோ அல்லது மகனாகவோ தான் இருக்க முடியும். அப்போது தான் பெண் பாதுகாப்பாக கௌரவமாக வாழமுடியும் என தமிழ்ப் பெண்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனப்பாங்கின் வெளிப்பாடே ”முள் மேல் சேலை விழுந்தாலும், சேலை மேல் முள் விழுந்தாலும், சேலை தான் கிழியும்“ என்ற பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் கருத்தியல், பழமொழியாக கடத்தப்படுகிறது.
இந்த விடயத்தில் கௌசல்யாவை எடுத்துக் கொண்டால், கௌசல்யா அரசியலுக்கு வருவதையும் அரசியலை விட்டு விலகுவதையும் எம்பியும் வைத்தியருமான அர்ச்சனா இராமநாதன் முடிவு எடுத்துள்ளார். அதனை எம்பி இராமநாதனே தனது வாயால் ஒத்துக்கொள்கிறார். கௌசல்யா அரசியிலிருந்து விலகும் முடிவை தானே எடுத்துள்ளதாக கூறும் அவர் சட்டத்தரணி கௌசல்யா முகநூல் கூட அவரால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதைவிட பெரிய வேடிக்கை கௌசல்யாவிற்கு ஏதும் தகவல் சொல்வதாக இருந்தால் தன்னிடம் அறிவிக்கும்படி கூறுகிறார்.
கௌசல்யாவின் காதலில் குறுக்கிட்டு குழப்பிய போதும் சரி, கௌசல்யாவை தானே திருமணம் செய்வேன் என முழங்கிய போதும் சரி, கௌசல்யாவின் சலத்தை கம்பவாரதி ஜெயராஜ்க்கு பூசக் கொடுப்பேன் என்று கூறும் போதும்சரி, பொது இடத்தில் ஒரு சட்டத்தரணியை ‘தங்கம்‘, ‘ தங்கம்’ என அழைத்து தரம்தாழ்த்திய போது வராத அக்கறை, கௌசல்யா மீது இப்போது ஏன் எம்பி அர்ச்சனாவுக்கு வந்துள்ளது. எல்லை மீறி விட்டது. கௌசல்யாவின் எதிர்காலமும், கௌசல்யாவினது குடும்ப மரியாதையும் இப்போது ஏன் கண்ணுக்கு தெரிகிறது. தனித்துவமாக தன்னுடைய அடையாளத்தோடு வாழ வேண்டிய ஒரு பெண் சட்டத்தரணியின் எதிர்காலத்தை இருட்டாக்கியது எம்பி அர்ச்சுனா இராமநாதன் ஆகும்.
கௌசல்யா செய்ததும் தவறு. தொழில்முறை ரீதியான வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுடைய தொடர்பை அதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு கொண்டு போனது கௌசல்யா கற்றுக் கொண்ட “சட்டத்தரணி தொழில் நெறிமுறைகளுக்கு“ முரணானது. இந்த விடயம் தனிப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் கௌசல்யா நரேந்திரன் என்ற இரு தனிநபர்கள் சம்பந்தப்பட்ட விடயமாக கடந்து செல்ல முடியாது. மக்களுக்கு சேவை என பொது வெளியில் வந்த இரு நபர்கள் சிறந்த முன்மாதிரிகளாக இருக்க வேண்டும்.
சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் தன்னுடைய தொழிலிலும் முறையான நெறிமுறைகளை பின்பற்றவில்லை. அரசியலிலும் அதையே தான் செய்திருக்கிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவரை நம்பி மக்கள் வாக்களித்துள்ளார்கள். மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய இடத்தில் அவர் உள்ளார். கௌசல்யா தானாக முன்வந்து அரசியலை விட்டு விலகினாலும் சரி விலத்தப்பட்டாலும் சரி வாக்குப் போட்ட மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.
கௌசல்யா மாதிரியான பெண்களை ஈழத்தமிழ்ப் பெண்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆண் மைய, பால்நிலைச் சமத்துவமற்ற மற்றும் வன்முறைகள் நிறைந்த சமூகத்தில்  பெண்கள் அரசியலில் தனித்துவத்தோடு செயற்படுவது மிகச் சிரமம். ஆனால் கௌசல்யா நரேந்திரன், உமாசந்திரப் பிரகாஷ் , சுரேகா பரமநாதன் போன்ற பெண்கள், ஆண்மைய அரசியலின் பிரதிநிதிகளாக இருப்பதும் பெண் உரிமைகளுக்கு மிக ஆபத்தானது.
கௌசல்யா தனக்காகவும் குரல் கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும் குரல் கொடுக்கவில்லை. ஊழல் ஒழிப்பு அணி வன்னி என்ற போலி அடையாளத்துடன் இயங்கும் முகநூலில் பெண்களின் நிர்வாணப்படங்கள் மற்றும் அவதூறுகள் வலம் வந்த போதும் கௌசல்யா அந்த இழி செயலை செய்பவர்களுக்கு வாக்காளத்து வாங்கினார். இன்று திடீரென பொதுவெளியிலிருந்து ஓடி ஒளித்து விட்டார். இப்படியானவர்களிடம் அதிகாரம் போனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைந்த தமிழ்ச் சமூகத்தில் இது பெரிய பின்னடைவாக இருக்கும்.
உமாசந்திரப் பிரகாஷ் போன்ற பெண்கள் பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஆண்களுக்கு அரசியலில் முகவரியை உருவாக்கிக்கி கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்ல காலம்காலமாக பேரினவாத அரசியலைச் செய்து, தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொலை செய்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மகிந்த ராஜபக்சவின் கட்சி எனத் தேசியக் கட்சிகளுக்கு  வாக்கு சேகரித்து கொடுக்கும் இவர்களையும் தமிழ்ப் பெண்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். போரில் வன்முறைக்குள்ளான பெண்கள் மீது இவர்களுக்கு எந்த அக்கறையும் இருக்கப் போவதில்லை. மேட்டுக்குடிப் பெண்களான இவர்களுக்கு அரசியல் அதிகாரம் ஒரு சமூக அந்தஸ்து மட்டுமேயாகும்.
சுரேக்கா பரமநாதன் போன்ற பெண்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து மேல் நிலைக்கு வரும்போது அவர்கள் தம்மையும் மேட்டுக்குடியாக பாவனை செய்ய தொடங்கிவிடுகிறார்கள். தமிழரசுக் கட்சி முன்னாள் தவிசாளர் வீட்டில் தீக்குளித்து இறந்த விஜிதாவுக்கு குரல் கொடுத்த சுரேகா, எப்படி பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். எம். ஏ. சுமந்திரன் தமிழரசுக் கட்சியில் நீண்டகாலமாக செயல்பட்ட பெண்களுக்காக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்கவில்லை. அதேநேரம் சுரேகாவை எம். ஏ . சுமந்திரன் பின்கதவால் தமிழரசுக் கட்சிக்குள் கொண்டு வந்து, சுரேகாவின் வாய்க்கு பூட்டுப் போட்டார். விஜிதாவின் மரணத்திற்கு காரணமானவர் என்று சுரேகாவால் குற்றம்சாட்டப்பட்ட சுகிர்தனோடே இணக்கமாக ஒரே கட்சியில் அரசியலில் பயணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். தாம் கொண்ட கொள்கையில் நிலையில்லாத பெண்களால் சமூகத்தில் இருக்கின்ற ஏனைய பெண்களின் உரிமைகளுக்காக போராட முடியாது.
பெண்கள் எத்தனை துறைகளில் சரி சமமாக ஆண்களுக்கு நிகராக முன்னேறினாலும், அரசியலில் மட்டும் அவர்களால் தனித்துவமாக செயற்பட முடியவில்லை. அதற்கு பிரதான காரணம் அதிகார அரசியலில் பெண்கள் இடத்தைப் பிடித்தால் பெண்களுக்கெதிரான சட்டங்கள் தொடக்கம் சமூக கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டு விடும் என்ற அச்சமாகும்.
ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகள் அனைத்துமே ஆண்களின் தலைமைத்துவதிலேயே செயற்படுகின்றன. அக்கட்சிகளில் பெண்கள் ஆண்களுக்கு விருப்பு வாக்குகளைச் சேர்த்துக் கொடுக்கும் கருவிகளே. பெண்களால் தலைமைதாங்கி நடத்தக் கூடிய அரசியல் கட்சிகள் தோன்றினால் அல்லது பெண்களே தமக்கான கட்சிகளை உருவாக்கிக் கொள்ளும் போது ஒருவேளை பெண்களை அரசியலில் கருவேப்பிலையாக பயன்படுத்தும் நிலைமை மாறலாம்.
அதற்கு அரசியலுக்கு வரும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கருத்தியல் ரீதியான வன்முறைகளை எதிர்த்து நிற்க கூடிய திராணி பெண்களுக்கு உருவாக வேண்டும். விளிம்பு நிலையில் உள்ள பெண்களும், ஒடுக்கப்படுகிற பெண்களும் மற்றும் வன்முறைகளிலிருந்து உடைத்துக் கொண்டு வருகிற பெண்களும் அரசியலுக்கு வரும் போது மேட்டுக்குடி அலங்கார பொம்மைகளாக இருந்து கொண்டு போலிப் பெண்ணியம் பேசும் பெண்களை அரசியலில் இருந்து நீக்கலாம். வலிகளைச் சுமப்பவர்களே அந்த வலிகளுக்கு தீர்வை காண முடியும். அந்தவகையில் கௌசல்யா நரேந்திரனின் அரசியல் நீக்கம் தமிழ்ப் பெண்களின் போலி அரசியல்ப் பிரவேசத்தைப் பற்றிய மறுபரிசீலனையை வேண்டி நிற்கின்றது.