02

02

உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றம் வரை சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் – நாடாளுமன்றத்தில் நீதியமைச்சர் !

உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றம் வரை சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் – நாடாளுமன்றத்தில் நீதியமைச்சர் !
 உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றம் வரை சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான வசதிகள் நீதிமன்றத்துக்கு வழங்கப்படுமென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார நேற்றையதினம் பாராளுமன்ற அமர்வின் போது தெரிவித்தார்.
அங்கு நீதியமைச்சர் ஹர்ஷண மேலும் உரையாற்றிய போது,
சட்டத்தின் ஆட்சிக்கு அமைய நாட்டை நிர்வகிப்பது எமது பிரதான இலக்காகும். சட்டத்தின் ஆட்சி மலினப்படுத்தப்படுகின்ற நிலையில் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. ஆகவே நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான கொள்கையாகும்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இடைநிறுத்தப்பட்ட நீதிமன்ற கட்டட அபிவிருத்திக்கு போதுமான நிதி ஒதுக்கப்படும். நீதிதுறை சுயாதீனமான முறையில் செயற்படும் என்பதற்கு உத்தரவாதம் வழங்க முடியும் என்றார்.

ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை மீட்டெடுத்தார் – முன்னாள் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன

ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை மீட்டெடுத்தார் – முன்னாள் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கம் கடுமையான சூழ்நிலையில் பல புதிய சட்டங்களை இயற்றியதால் தான் நாடு இன்று பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது என்று முன்னாள் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடுமையான சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவால் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டதால் தான் நாடு இன்று பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 90 சட்ட வரைபுகள் குறித்த குழுக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள. ஆகவே அவற்றை சட்டமாக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.
நீதிமன்ற கட்டமைப்பு முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பபட வேண்டும். இதற்கு குறைந்தது 3.2 பில்லியன் ரூபா செலவாகும் என்ற மதிப்பிடப்பட்டது. தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அது சாத்தியமற்றது என்பதை அறிவோம்.இருப்பினும் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்பாட்டை கட்டம் கட்டமாக முன்னெடுக்க வேண்டும். என தெரிவித்தார்.

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டோர் வட்டுவாகல் விகாரையில் கீழ் புதைக்கப்பட்டுள்ளனர் – நாடாளுமன்றத்தில் பா.உ ரவிகரன் !

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டோர் வட்டுவாகல் விகாரையில் கீழ் புதைக்கப்பட்டுள்ளனர் – நாடாளுமன்றத்தில் பா.உ ரவிகரன் !
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பலரும் தம்மிடம் முறையிட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நீதிமற்றும் தேசிய ஒற்றுமைப்பாடு அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தின் போது தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவித்த பா.உ ரவிகரன்,
மடியில் கனமில்லையெனில் விகாரையை அகற்றி அகழ்வினை மேற்கொண்டோ, நவீனமுறையில் ஸ்கேன் கருவிகள் மூலமோ ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய அரசாங்கம் முன்வரவேண்டுமென தெரிவித்துள்ளார்.

தணியாத அனுர அலை – அச்சத்தில் கொள்கை பேதமின்றி கூட்டணி அமைக்கின்றனர் வீணை – வீடு – சங்கு குழுவினர் !

தணியாத அனுர அலை – அச்சத்தில் கொள்கை பேதமின்றி கூட்டணி அமைக்கின்றனர் வீணை – வீடு – சங்கு குழுவினர் !
சங்கு சின்னத்தின் பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தொடக்கம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரை இந்தக் கூட்டணியில் இணைய முடியும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார். அது போல தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானமும் ஈ.பி.டி.யுடன் இணைந்து செயலாற்ற அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இதற்கு சாதகமான ஓர் பதிலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் பேசுவதற்கு உத்தியோகபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, மக்கள் நலனுக்காக ஒன்றிணைய அழைப்பு விடுத்தால் எனது பங்களிப்பு நிச்சயமாயிருக்கும் என தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதும் தமிழர் அரசியல் தரப்பில் பேசுபொருளாக மாறியுள்ளது.
 இதேவேளை வடக்கு – கிழக்கில் இன்னமும் என்.பி.பி கட்சி மீதான மக்கள் அலை தணிந்தபாடில்லை என்கின்றனர் அரசியல் அவதானிகள். கடந்த காலங்களில் மத்தியில் ஆட்சி அமைத்த ரணில் மைத்திரி கூட்டணி, ராஜபக்ச தரப்பு ஆகியோருடன் கூட்டணி அமைத்தும் தமிழ்தேசிய தரப்பினரும், ஈ.பி.டி.பியினரும் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள் தொடங்கி, அபிவிருத்தி திட்டங்கள் என எந்த ஆக்கப்பூர்வமான விடயங்களையும் மேற்கொண்டிருக்கவில்லை. ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சுமத்தும் அரசியலையே முன்னெடுத்திருந்தனர். இவ்வாறான நிலையிலேயே கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் முழுமையான ஆதரவும் தேசிய மக்கள் சக்தி மீது திரும்பியிருந்தது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான என்.பி.பிக்கு தமிழ் மக்களின் ஆதரவு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் என்.பி.பி அலையை சமாளிக்க கொள்கை பேதமில்லாமல் வடக்கின் அரசியல் கட்சிகள் செயற்படுவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

போராலும்; தோட்டக்கம்பனிகளாலும் பாதிக்கப்பட்ட தமிழ் பட்டதாரிகளிடமிருந்து மனச்சாட்சி இல்லாமல் கொள்ளையடிக்கும் யாழ்.பல்கலை துணைவேந்தரும் விரிவுரையாளர்களும் !

போராலும்; தோட்டக்கம்பனிகளாலும் பாதிக்கப்பட்ட தமிழ் பட்டதாரிகளிடமிருந்து மனச்சாட்சி இல்லாமல் கொள்ளையடிக்கும் யாழ்.பல்கலை துணைவேந்தரும் விரிவுரையாளர்களும் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 19.03.2025 முதல் 22.03.2025 வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் பட்டமளிப்பு விழா தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் பெருமளவான நிதியை மாணவர்களிடமிருந்து சேகரிப்பதாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடர்பில் இளங்கலை மாணவர்களிடம் இருந்து ஒன்பதாயிரம் ரூபாவும், முதுகலை மாணவர்களிடமிருந்து 10000 ரூபாவும் அறவிடப்படுவதாக பட்டம்பெறவுள்ள மாணவர்கள் தரப்பிலிருந்து குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த அடிப்படையில் பட்டம்பெறவுள்ள பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து சுமார் 33.9 மில்லியன் ரூபாய்கள் சேர்க்கப்படுவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியாகியுள்ள சமூக வலைத்தள பதிவு ஒன்றில்,

நான்கு நாட்களும் 850 பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட நாளொன்றுக்கு 1900 பேருக்கான மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படுகின்றன, நான்கு நாட்களில் உணவுக்காக மட்டுமே 64 லட்சம் செலவழிக்கப்படுகிறது. ஆனால் 100 ஊழியர்கள் மட்டுமே பட்டமளிப்பு கடமையில் பணியாற்றுவார்கள். புத்திசாலித்தனமாக மேடை அலங்காரத்திற்கு பூக்களை வாங்குவதற்கு 6லட்சம் செலவிட திட்டமிட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்களே நீங்களும் இதற்கு உடந்தையா? இது எவ்வளவு பெரிய மோசடி வேலை?

ஏழை மாணவர்களின் பணத்தை நான்கு நாட்களில் வீணாக நாசமாக்குவதா?

யாழ் பல்கலைக்கழகம் பொன்விழா கொண்டாடவுள்ள தருணத்தில் இந்த மோசடி ஏற்கக் கூடியதா?

எமது தாத்தனார் நீதிமான் பேராசிரியர் க.கைலாசபதி வழிநடாத்திய பல்கலைக்கழகத்தில் நிதிமோசடியா? எனவும் குறித்த சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் சிலரால் பாலியல் லஞ்சம் கோரப்படுதல் தொடர்பிலும் பாலியல் குற்றவாளிகள் பேராசிரியர், பீடாதிபதி என பல பதவிகளில் காணப்படுவது தொடர்பிலும் தேசம் நெட் பகிரங்கப்படுத்தியிருந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நிதி மோசடியும் பொதுவெளியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பல பீடங்களிலும் கற்கும் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மாணவர்கள் போரால் பாதிக்கப்பட்ட சூழலில் இருந்தும் – மலையகத்திலிருந்துமே வருகின்றனர். இவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகளாகவும் உள்ளனர். இந்த நிலையில் எரிகிற வீட்டில் புடுங்கியது லாபம் என்ற வகையில் அந்த மாணவர்களை மேலும் சுமைக்குள்ளாக்கும் வகையில், பட்டமளிப்பு விழாவில் 10000 ஆயிரம் வரையில் மனச்சாட்சி இல்லாமல் சுருட்டி கொள்ளையடிக்கிறது என்கிறார் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவர்.

பொதுவெளியில் விபூதியும் – சிவ சிவ என்ற உச்சரிப்புமாக தோற்றமளிக்கும் துணைவேந்தர் சிறீசற்குணராஜா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நிதிமோசடி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிப்பாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.