போராலும்; தோட்டக்கம்பனிகளாலும் பாதிக்கப்பட்ட தமிழ் பட்டதாரிகளிடமிருந்து மனச்சாட்சி இல்லாமல் கொள்ளையடிக்கும் யாழ்.பல்கலை துணைவேந்தரும் விரிவுரையாளர்களும் !

போராலும்; தோட்டக்கம்பனிகளாலும் பாதிக்கப்பட்ட தமிழ் பட்டதாரிகளிடமிருந்து மனச்சாட்சி இல்லாமல் கொள்ளையடிக்கும் யாழ்.பல்கலை துணைவேந்தரும் விரிவுரையாளர்களும் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 19.03.2025 முதல் 22.03.2025 வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் பட்டமளிப்பு விழா தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் பெருமளவான நிதியை மாணவர்களிடமிருந்து சேகரிப்பதாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடர்பில் இளங்கலை மாணவர்களிடம் இருந்து ஒன்பதாயிரம் ரூபாவும், முதுகலை மாணவர்களிடமிருந்து 10000 ரூபாவும் அறவிடப்படுவதாக பட்டம்பெறவுள்ள மாணவர்கள் தரப்பிலிருந்து குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த அடிப்படையில் பட்டம்பெறவுள்ள பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து சுமார் 33.9 மில்லியன் ரூபாய்கள் சேர்க்கப்படுவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியாகியுள்ள சமூக வலைத்தள பதிவு ஒன்றில்,

நான்கு நாட்களும் 850 பல்கலைக்கழக ஊழியர்கள் உட்பட நாளொன்றுக்கு 1900 பேருக்கான மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படுகின்றன, நான்கு நாட்களில் உணவுக்காக மட்டுமே 64 லட்சம் செலவழிக்கப்படுகிறது. ஆனால் 100 ஊழியர்கள் மட்டுமே பட்டமளிப்பு கடமையில் பணியாற்றுவார்கள். புத்திசாலித்தனமாக மேடை அலங்காரத்திற்கு பூக்களை வாங்குவதற்கு 6லட்சம் செலவிட திட்டமிட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்களே நீங்களும் இதற்கு உடந்தையா? இது எவ்வளவு பெரிய மோசடி வேலை?

ஏழை மாணவர்களின் பணத்தை நான்கு நாட்களில் வீணாக நாசமாக்குவதா?

யாழ் பல்கலைக்கழகம் பொன்விழா கொண்டாடவுள்ள தருணத்தில் இந்த மோசடி ஏற்கக் கூடியதா?

எமது தாத்தனார் நீதிமான் பேராசிரியர் க.கைலாசபதி வழிநடாத்திய பல்கலைக்கழகத்தில் நிதிமோசடியா? எனவும் குறித்த சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் சிலரால் பாலியல் லஞ்சம் கோரப்படுதல் தொடர்பிலும் பாலியல் குற்றவாளிகள் பேராசிரியர், பீடாதிபதி என பல பதவிகளில் காணப்படுவது தொடர்பிலும் தேசம் நெட் பகிரங்கப்படுத்தியிருந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நிதி மோசடியும் பொதுவெளியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பல பீடங்களிலும் கற்கும் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மாணவர்கள் போரால் பாதிக்கப்பட்ட சூழலில் இருந்தும் – மலையகத்திலிருந்துமே வருகின்றனர். இவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகளாகவும் உள்ளனர். இந்த நிலையில் எரிகிற வீட்டில் புடுங்கியது லாபம் என்ற வகையில் அந்த மாணவர்களை மேலும் சுமைக்குள்ளாக்கும் வகையில், பட்டமளிப்பு விழாவில் 10000 ஆயிரம் வரையில் மனச்சாட்சி இல்லாமல் சுருட்டி கொள்ளையடிக்கிறது என்கிறார் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவர்.

பொதுவெளியில் விபூதியும் – சிவ சிவ என்ற உச்சரிப்புமாக தோற்றமளிக்கும் துணைவேந்தர் சிறீசற்குணராஜா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நிதிமோசடி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிப்பாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *