07
07
தமிழ்கட்சிகளுடன் ஒரு தோணியில் பயணிக்க ஈபிடிபியும் பச்சைக்கொடி !
தமிழ் அரசியல் தரப்புக்களுக்கு இடையிலான மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகளில் இணைந்து செயற்படுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தயாராக உள்ளதாக அதன் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலும் அறிவிக்கப்பட்டிருக்கின்ற இவ்வேளையில் பல்வேறு தரப்புக்களும் உத்தியோகப்பற்றற்ற முறையில் எம்மை தொடர்பு கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக கட்சி மட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது என்று கூறிய பன்னீர்செல்வம். கடந்த காலங்களைப்போன்று தனித்துவமான முறையில் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளில் இருந்தும் தமது கட்சி பின்வாங்க வில்லை என்ற கருத்துப்பட தெரிவித்தார்.
வாள்வெட்டுக்குழுக்கள் வடக்கு கிழக்கின் அடையாளமாகி வருகிறது !
மட்டக்களப்பில் திட்டமிட்ட வகையில் வாள்வெட்டு குழு உருவாக்கப்படுவதாகவும் இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், சமீபத்தில்
மட்டக்களப்பில் வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார். ஆரையம்பதியிலும் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சமூகத்தை குழப்பும் விதத்தில் பல்வேறு செயற்பாடுகள் நடக்கின்றன. ஆவா குழுவென்று ஒரு குழுவை யாழ்ப்பாணத்தில் உருவாக்கியிருந்தனர். கிரீஸ் மனிதர்களையும் உருவாக்கியிருந்தனர். இதனை உருவாக்கியவர்கள் யாரென மக்களுக்கு தெரியும். இப்போது மட்டக்களப்பிலும் வாள்வெட்டு கலாசாரத்தை உருவாக்குகின்றனர். ஜனாதிபதியும் இது தொடர்பில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என வலியுறுத்தினார். மறைமுகமாக இவ்வாறான குழுக்களை இராணுவத்தினரே உருவாக்குவதாக குற்றம் சாட்டினார்.
இந்த விடயத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் நேரடியாகவே இராணுவத்தை குற்றம் சாட்டினார். போதைப்பொருள் வியாபாரம் , வாள்வெட்டு என சமூக சீரழிவுகளில் ஈடுபடுபவர்கள் இராணுவ முகாம்களிலேயே தஞ்சம் அடைகின்றனர் என்று சாடினார்.
யாழ்.பல்கலைகழகத்தின் வெளிவாரி பேரவை 16 புதிய உறுப்பினர்கள் நியமனம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் வெளிவாரி பேரவைக்கு உறுப்பினர்களாக இருந்த தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் மற்றும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் உட்பட அனைவரும் நீக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 05ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்றாண்டுகளுக்குச் செயற்படும் வகையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய ஒவ்வொரு பல்கலைக்கழகத்தினதும் உள்வாரிப் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட ஒரு உறுப்பினர் அதிகமாக எண்ணி வெளிவாரி பேரவைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவது வழமையாகும். ஒருவாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளிவாரிப் பேரவை கிளீன் செய்யப்பட்டுவிட்டது. அதேமாதிரி யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்வாரியாக குறிப்பாக கலைப்பீடமும் விரைவில் கிளீன் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியமனம் வழங்கப்பட்டுள்ளவர்களின் விவரம் வருமாறு:
பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ் (ஓய்வு பெற்ற சமூகவியல் பேராசிரியர்),
இ.பத்மநாதன் (முன்னாள் பிரதம செயலாளர் – நிதி),
எஸ்.வினோதினி (பிரதம பொறியியலாளர், கட்டடங்கள் திணைக்களம்),
ஏ.சுபாகரன் (திட்டப்பணிப்பாளர், ஏசியா பவுண்டேசன்),
வைத்திய நிபுணர் என். சரவணபவ மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் நிபுணர்),
ஷெரீன் அபதுல் சரூர் ( எழுத்தாளரும், பெண் உரிமைச் செயற்பாட்டாளர்),
கலாநிதி எம். அல்பிரட் (முன்னாள் பீடாதிபதி, பேராதனைப் பல்கலைக்கழகம்),
அ. குணாளதாஸ் (பட்டயப் பொறியியலாளர்),
என். செல்வகுமாரன் (முன்னாள் பீடாதிபதி, சட்டபீடம், கொழும்பு),
வனஜா செல்வரட்ணம் (பணிப்பாளர், வட மாகாண தொழிற்றுறை திணைக்களம்),
டி. கே.பி.யூ. குணதிலக (முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர், இலங்கை மின்சார சபை),
எம். ஜே. ஆர். புவிராஜ் ( முன்னாள் பணிப்பாளர், திறைசேரி),
பேராசிரியர் சி.சிவயோகநாதன் ( வாழ்நாள் பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம்),
பி. ஏ. சரத்சந்திர ( முன்னாள் அரச அதிபர், வவுனியா), க.பிரபாகரன் (சட்டத்தரணி),
ஏ.எம்.பி.என். அபேசிங்க (மாகாணப் பணிப்பாளர், விவசாயத் திணைக்களம், வடமத்திய மாகாணம்.)
அல்ஜசீராவின் நேர்காணலில் மகிந்த ராஜபக்சவை போட்டுக்கொடுத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
இறுதிப்போரில் அகப்பட்டிருந்த தமிழ்மக்களுக்கு சர்வதேசத்தின் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தடுத்ததாக சர்வதேச ஊடகமான அல்ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். மேலும் யுத்தத்தில் மருத்துவமனைகள் மீது விமானக்குண்டு வீச்சு இடம்பெற்றது என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க என அல்ஜசீராவிற்கான பேட்டியில் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டில் முடிவிற்கு வந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கப்பட்டுவிட்டதா ?என அல்ஜசீரா பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள ரணில்விக்கிரமசிங்க,
எந்த சமூகத்திற்கும் இதுவரை நீதிவழங்கப்படவில்லை என கூறியுள்ளார். அதேசமயம் யுத்தத்தின் இறுதி நேரத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் எவையும் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படவில்லை என வாக்காலத்து வாங்கினார். விமானப்படை விமானங்கள் மருத்துவமனைகள் மீது குண்டுவீசிய தருணங்கள் உள்ளன. அப்போதெல்லாம் இந்த தவறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இது பெருமளவில் இடம்பெற்றதா? என்றால் நான் அப்படி சொல்ல மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது மேலும் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் மெஹ்டி ஹசன், ஐக்கியநாடுகளின் குழு, இலங்கை படையினர் யுத்தத்தில் சிக்குண்டவர்களிற்கான மனிதாபிமான உதவிகளை தடுத்தனர் என குறிப்பிட்டுள்ளனரே என கேள்வி எழுப்பியிருந்தார்.
நான் அது இடம்பெற்றது என நினைக்கின்றேன் என ரணில் விக்கிரமசிங்க பதிலளித்திருந்தார். மேலும் பந்தலந்த வதை முகாம் குறித்து தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கேள்விகள் அனைத்தையும் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க குறித்த பேட்டியில் நிராகரித்துள்ளார்.
1980களின் பிற்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பந்தலந்தவில் சட்டவிரோதமாக தடுத்துவைத்தல், சித்திரவதைகள் மற்றும் கொலைகள் இடம்பெற்றன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையே அவர் நிராகரித்துள்ளார்.
இதேவேளை இறுதி யுத்தத்தின் போது ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அல்ஜசீரா நேர்காணல் நேற்று ஒளிபரப்பப்பட்ட சிறிது நேரத்திலேயே ஊடகங்களிடம் பேசிய ரணில், தொகுப்பாளர் மெஹ்தி ஹசனுடன் இணைந்த மூன்று குழு உறுப்பினர்களில் இருவர் புலிகளுக்கு ஆதரவான தொடர்புகளைக் கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டினார்.
மேலும் அல்ஜசீரா என்னை இரண்டு மணி நேரம் பேட்டி எடுத்திருந்தது. ஆனால் ஒரு மணி நேர பகுதியை மட்டுமே வெளியிட்டது. அதில் பெரும்பாலானவற்றை எடிட் செய்துள்ளதும் என்று ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீராவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடிக்கினார்.
வடக்கில் போதைப்பொருளை முடிவுக் கொண்டு வர என்பிபி திடசங்கற்பம் !
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான விசேட மத்திய நிலையமொன்றை வடக்கில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இவ் விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த சுனில்,
போதைப்பொருள் ஒழிப்புக்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டது. வரலாற்றில் முதல்தடவையாக போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் போதைப்பொருள் தொடர்பில் தமிழ் மொழியில் விழிப்புணர்வுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும் போது, இந்த ஆண்டில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 104 கிராம் ஐஸ்ப் போதைப்பொருள், 650 கிராம் கேரள கஞ்சா, 26,915 போதைப்பொருள் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வடக்கில் ஹெரோயின் போதைப்பொருள் பாவனை குறைவான போக்கில் இருப்பதை காண முடிகிறது என்றார். இருப்பினும் ஏனைய போதைப்பொருள் பாவனை உயர்வடைந்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் ஆணைக்கு அமைவாக போதைப்பொருள் பாவனையை முழுமையாக இல்லாதொழிப்போம் என சுனில் வட்டகல சூளுரைத்தார்.
புலம்பெயர்நாடுகளில் வீதி விபத்துக்களில் தொடரும் தமிழர்கள் மரணங்கள்
பிரித்தானியாவில் சறே ( Surrey) சட்டனில் மார்ச் 3ம் திகதி நடந்த விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதசாரிகள் கடவையினூடாக வீதியை கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்த விபத்தானது றோஸ்கில் பகுதியில் கிரீன் வீதி சட்டனில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் இறந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த சின்னதம்பி கருணாகரன் என்ற 49 வயது குடும்பஸ்தர் எனத் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை மெட்ரோ பொலிரன் ( Metropolitan )பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நானும் உள்ளேன் ஐயா முன்னாள் எம்பி எம். ஏ. சுமந்திரன் !
இலங்கையில் நடைபெற்ற கடந்த கால மனித உரிமை மீறல்களை கண்டுங்காணாதது போல் கடந்து செல்கிறது என்.பி.பி அரசாங்கம். சுமந்திரன் குற்றச்சாட்டு. ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை நிராகரிப்பதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இந்நிலையில் கடந்தகால மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மைகளை அறியவேண்டிய அவசியம் தமக்கு இல்லை அல்லது அவை மூடிமறைக்கப்படவேண்டும் என்ற தோரணையில் என்பிபி செயற்படுவதையே காண்பிப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.
இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய மூன்று கட்டமைப்புக்களையும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதன் ஊடாக நாட்டில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அவை இலங்கையில் மனித உரிமைககள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குத் தடையேற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன என்றும் எம். ஏ. சுமந்திரன் குற்றம் சாட்டினார்.
இந்த செயற்பாடுகளுக்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் அவர்கள் கூறுவதை உண்மையிலேயே நடைமுறைப்படுத்தப்போகிறார்களா என்பது தெரியவரும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமக்கு ஆணை அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் தற்போதைய அரசாங்கம் அம்மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கையை இவ்வாறு நிராகரிப்பது ஏற்புடையதன்று என்றார். மைத்திரியின் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்த தமிழரசுக் கட்சியில் அங்கம் வகித்த சுமந்திரன் அப்போது இவ்விடையம் குறித்து காத்திரமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என விமர்சனத்திற்குள்ளாகிறார்.
யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடிப் புத்தியை காட்டும் எம்பி அர்ச்சுனாவின் நாத்தடிப்பு !
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை கைநாட்டு; எழுத வாசிக்க தெரியாதவர் என எம்.பி இராமநாதன் அர்ச்சுனா அவமாரியாதையாக நேற்றைய நாடாளுமன்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றியிருந்தார்.
சமீபத்தில் அமைச்சர் கப்பலில் தோட்டத் தொழிலாளராக வந்த வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் நாங்கள் அதாவது அர்ச்சுனாவின் யாழ்ப்பாண வம்சாவளியினர் கப்பல் கட்டி விட்ட மேட்டுக்குடியினர் என மட்டம் தட்டி வலைத்தளத்தில் பேசி இருந்தார். அர்ச்சுனா கடற்தொழில் அமைச்சர் மீது காட்டும் வன்மம் தான் வெள்ளாள யாழ்ப்பாண மேட்டுக்குடியைச் சேர்ந்தவன் என்ற மேலாதிக்க மனோபாவத்தின் காழ்ப்புணர்வின் வெளிப்பாடு எனவே கருதப்படுகிறது. இராமலிங்கம் சந்திரசேகர் கடற்தொழில் அமைச்சாராக வந்ததை அர்ச்சுனாவைப் போன்று குறுந் தமிழ்த்தேசிய வெள்ளாள மேட்டுக்குடியினரும் விரும்பவில்லை. ஒரு மலையகத் தமிழன் அதுவும் ஒரு தோட்டத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் யாழ்ப்பாணத்தானை ஆளவா? என்ற காழ்ப்புணர்வை பலர் மனதில் வைத்துள்ளார்கள். எம்பி அர்ச்சுனா சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் காட்டுகிறார்.
கடந்த புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் பா உ ரஜீவனின் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் பிரேரணை விவாதத்தில்; “சில நாய்கள் வாந்தி எடுத்துவிட்டு அதனையே திருப்பி உண்ணும். இவ்வாறான நாய்களுக்கு இதுவொரு வருத்தம்” என்று பா உ அர்ச்சுனா மீதான தனது அதிருப்தியை அமைச்சர் சந்திரசேகர் வெளிப்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் தனது பங்கிற்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை நாய் என குறிப்பிட்டுள்ளார் எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா.
மேலும் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் வடக்கின் சுகாதார நிலை தொடர்பில் பேசிய எம்.பி இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாணத்தின் மொத்த சுகாதார அமைச்சின் செலவுக்கு 0.019 வீதம் பிச்சை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அத்தோடு, முதுகெலும்பு இருந்தால் நான் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என சுகாதார அமைச்சருக்கு சவால் விடுத்துள்ள எம்.பி இராமநாதன் அர்ச்சுனா, யாழ்ப்பாணத்திலும், வடக்கு, கிழக்கிலும் சுகாதாரத்துறை ஒழுங்கற்று காணப்படுகின்றது எனவும் கூறியுள்ளார்.








