யாழ் – மட்டு வாள் வெட்டுச் சம்பவங்கள் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது !
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞனொருவர் கைவிரல் துண்டாடப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொக்குவில் பகுதியிலுள்ள கடை ஒன்றின் களஞ்சியசாலையில், களஞ்சியசாலை பொறுப்பாளராக குறித்த இளைஞன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த இருவர், களஞ்சியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். வாள்வெட்டில் இளைஞனின் கை விரல் துண்டாடப்பட்டுள்ள நிலையில், இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை நேற்றைய நாடாளுமன்ற அமர்விலும் வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள வாள்வெட்ட பிரச்சினைகள் பாரிய பேசுபொருளாக மாறியிருந்ததது. மட்டக்களப்பில் இடம்பெறும் வாள்வெட்டு குறித்து சபையில் கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை சபாநாயகர் இடைநிறுத்தி, இது ஒரு ஒழுங்கு பிரச்சினை அல்ல ஆகையால் இது தொடர்பில் சபை ஒத்திவைப்பு மீதான பிரேரணையாக கொண்டு வந்து பேசலாம் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, சாணக்கியனுக்கு இது தொடர்பில் உரையாடுவதற்கு சபாநாயகரால் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தநிலையைில், குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் “நாடாளுமன்ற உறுப்பினருக்கு முக்கியமான கேள்விகளை கேட்பதற்கு இடமுண்டு, அதேபோன்று நான் கட்சி தலைவராகவும் இருக்கின்றேன். ஆகவே, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க உங்களுக்கு பொறுப்பு இருக்கின்றது, நீங்கள் காது கொடுத்து கேட்க வேண்டும். அங்கு துண்டு துண்டாக மக்கள் வெட்டப்படுகின்றார்கள். அதை இங்கு கூறாமல் எங்கு சென்று கூற முடியும்?
ஆகவே கிழக்கு மாகாணத்தை முன்னிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வழங்குங்கள்” என அவர் தெரிவித்தார்.
இந்த வாக்குவாதத்தில் பாராளுமன்ற உரைகள் சிறிது நேரம் தடைப்பட்டது. அப்போது மற்றுமொரு பா உ எழுந்து, முன்னர் ஒருவர் தான் கத்திக்கொண்டிருப்பார், இப்போது இருவராகி விட்டனர் என்ற தொனியில்
சிங்களத்தில் பா உ அர்ச்சுனாவையும் சாணக்கியனையும் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக வட்டுக்கோட்டையில் சிலர் சாதிய வெறியர்களாக காடைத்தனங்களிலும் ஈடுபட்டு வருவது பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு உள்ளது. சாதிய வெறியாட்டங்கள், கொலை போன்ற செயற்பாடுகளிலும் குருவி என்கின்ற சாதியக் குழு ஈடுபட்டுள்ளமை பரவலாக அறியப்பட்டுள்ளது. குற்றவாளிகள் சுதந்திரமாக திரிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வட்டுக்கோட்டைப் பொலிஸார் இவர்கள் தொடர்பில் நடவடிக்கை எழுக்கவில்லை என்றும் பா உ க்களிடம் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.