தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு ஏன் மூன்று வேறுபட்ட தினங்களில் நினைவேந்தல் !
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு இவ்வாண்டு மே 17, 18, 19 என வெவ்வேறு தினங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது. 2009 மே 18இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மரணித்த செய்தியை 2009 மே 24 அன்று அதன் அன்றைய தலைவர் செல்வராஜா பத்மநாதன் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் அறிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞராக இருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார் அடேல் பாலசிங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இருந்தார். இச்செய்தியை அப்போதைய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகமான ரிரின் தொலைக்காட்சியும் ஒளிபரப்பி இருந்தது.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் 300 பில்லியன் டொலர் சொத்துக்களை வைத்திருந்தவர்கள் அதிலிருந்து ஆண்டுதோறும் 300 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிவந்தவர்கள் , தங்களிடம் உள்ள அசையும் அசையாத சொத்துக்கள் கேள்விக்கு உட்பட்டு விடும் என்பதால் வே பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கின்றார் என்ற மாய விம்பத்தைக் கட்டினார்கள். இன்று ஈழத்தமிழ் சமூகத்தில் இருக்கின்ற தொழில் அதிபர்கள் என்று அறியப்படுகின்ற பெரும்பாலானவர்கள் உலகம் முழக்க கோடீஸ்வரர்களானது விடுதலைப் புலிகளின் பணத்தில் தான். இன்றும் தலைவர் வந்து கேட்டால் நாங்கள் கணக்குக் காட்டுவோம் எனச் சிலர் ரீல் விடுகின்றனர். பெரும்பாலனவர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மறைவை அன்றே அறிவித்த போதும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து இன்று முப்பதிற்கும் மேற்பட்ட பிளவுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புகளுக்குள் ஏற்பட்டுள்ளது. இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நிகழ்ந்த மோசமான தவறாகவும் கருதப்படுகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த புலனாய்வுப் போராளி முல்லை மதி வருமாறு தெரிவிக்கின்றார்: “ப சிதம்பரத்தோடு கதைத்தபோது புலிகளையும் அதன் தலைமையையும் காப்பாற்றியிருக்க முடியும் அதற்கான அத்தனை வாய்ப்புக்களும் உள்ளதாகவே சிதம்பரம் சொன்னார். சிவசங்கர் மேனனும் அதையே தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
ஆனால் தமிழ்நாட்டில் இருந்த சிலரும் விடுதலைப்புலிகளை அழித்தே ஆகவேண்டும் என வெறிபிடித்த காங்கிரஸ் கட்சி கொள்கை வகுப்பாளர்கள் சிலரும் புலிகளை பரம விரோதிகளாக கருதிய இந்திய உளவுத்துறையின் ஒரு பகுதியினரும் விடுதலைப்புலிகளுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் உருத்திரகுமாரன் போன்றவர்களும் குழப்பியடித்தனர்.
ஒரு படி கீழிறங்கி இனத்தை காப்பாற்ற விடாத சுயகொளரவம் தன்மானம் இறுதியில் நான் நீ என்ற வறட்டு வாதமாகி அழிவில் முடிந்தது என்பதே உண்மை. சோனியாவின் பெயரை அநியாயமாக பயன்படுத்துகிறார்கள். கருணாநிதியை விட சம்மந்தன் என்ற கொடியனே தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாட்டை முடக்கி வைத்திருந்தார்” எனக் குற்றம்சாட்டுகின்றார் முல்லை மதி.