அமெரிக்க ஓவல் ஓபிஸ் நாடகம்: செலன்ஸ்கி – ட்ரம் – மோடி – பிரபாகரன்: காலங்கள் வேறு காட்சிகள் ஒன்று!
நேற்று வெள்ளிக் கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்மின் ஓவல் ஓபிஸ், நான்கு சுவர்களினுள் நடக்கும் ராஜதந்திரப் பிணக்கை, ஊடகங்களை வரவழைத்து நிகழ்நேரலையில் பொதுவெளியில் அரங்கேற்றியது. இதுவரை மர்மமாக இருந்த இந்த ராஜதந்நிர குத்துப்பாடுகள் எவ்வாறு நடைபெறும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இது பற்றி கருத்து வெளியிட்ட முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயரின் ஆலோசகரான அலிஸ்ரர் கம்பல், டொனால் ட்ரம்பையும் அவரது துணை ஜனாதிபதி ஜே டி வான்ஸையும் காடையர்கள் என வர்ணித்துள்ளார்.
பண முதலைகளும், பலம் கொண்ட காடையர்களும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை ஓவல் ஓபிஸில் நடந்தது சுட்டிக்காட்டுகின்றது. அமெரிக்க ஊடகவியலாளர்கள் சிலரும் ஏன் கோட்சூட் போடவில்லை என்று தங்கள் திமிர்க் கேள்விகளை எழுப்பினர். டொனால் ட்ரமும் ஜே டி வான்சும் உக்ரைன் தலைவரை, பாடசாலைச் சண்டியர்கள் போல் வம்புக்கு இழுத்து கேவலமாக நடந்து கொண்டனர்.
உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி அமெரிக்கா எதிர்பார்த்த 350 பில்லியன் பெறுமதியான அரிய தாதுப்பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததை அடுத்து கடுப்பாகியதையடுத்தே இந்தக் குத்துப்பாடு இடம்பெற்றது.
உக்ரைன் தன்னுடைய உயிர்வாழ்வுக்கு அமெரிக்காவில் தங்கியிருந்த போதும் இந்த இடத்தில் மிகத் தைரியமாக நடந்துகொண்டு, இந்தச் சண்டியர்களுக்கு விட்டுக்கொடுக்காமல் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடாமல் ஓவல் ஓபிஸை விட்டுச் சென்றார்.
ஆனால் உலகின் மிகப்பெரிய சனத்தொகையையும் அணுகுண்டுகளையும் கொண்ட பிராந்திய வல்லரசின் பிரதமரான மோடி, டொனால் ட்ரமால் நையப்புடைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு அனுப்பப்பட்டார். அப்படிப் பார்க்கின்ற போது மோடியோடு ஒப்பிடுகின்ற போது உக்ரைன் தலைவர் செலன்ஸ்கியின் ஆளுமை பாராட்டப்பட வேண்டியதே.
1987 இலங்கை – இந்திய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் செலன்ஸ்கியுடைய நிலையிலேயே அன்றிருந்தார். பிரபாகரன் கைது செய்யப்பட்டு உடன்படிக்கைக்கு உடன்பட நிர்ப்பந்திக்கப்பட்டார். வே பிரபாகரன் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட போது நிர்வாணமாக்கப்பட்டு அல்லது அரை நிர்வாணமாக்கப்பட்டு சோதணையிடப்பட்டதாகவும், அப்போது தான் ராஜீவ் காந்திக்கு பாடம் புகட்டுவேன் என சங்கற்பம் பூண்டதாகவும் ஒரு துணைக் கதையுண்டு.
இதேநிலை ஜேஆர் ஜெயவர்த்தனவுக்கும் வந்தது. அன்றைய இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஜே என் டிக்ஸிற் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட அன்றைய இலங்கை ஜனாதிபதியை வற்புறுத்தினார். அப்போது ஜே என் டிக்ஸிற் தான் ஒரு தூதுவர் என்பதற்கு அப்பால் சென்று ஜே ஆர் ஜெயவர்த்தனாவை மிரட்டியும் உள்ளார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த ஜே அர் ஜெயவர்த்தனா, “நான் எங்கு கையெழுத்துப் போட வேண்டும்” என்று சத்தமிட்டுள்ளார். இவ்வாறு பல்வேறு வற்புறுத்தல்கள், மிரட்டல்களுக்கு மத்தியிலேயே இலங்கை – இந்திய ஒப்பந்தம் இந்தியாவின் நலன்பேண உருவாக்கப்பட்டது.
அமெரிக்கர்களையும் ஐரோப்பியர்களையும் நம்பி, புருசனைக் கைவிட்ட நிலையில் செலன்ஸ்கி உள்ளார். டொனால் ட்ரம் சொல்கின்ற ஒரு விடயம் உண்மையானது. செலன்ஸ்கி ஒரு மூன்றாம் உலகமகா யுத்தத்தை பணயம் வைத்து அரசியலை நகரத்துகின்றார். ஆனால் செலன்ஸ்கி அமெரிக்கர்களையும் ஐரோப்பியர்களையும் இந்த சாட்சிக் காரர்களை நம்பாமல் சண்டைக்காரணான ரஷ்யாவோடு சமாதானமாகப் போவதே தற்போதுள்ள ஒரே மாற்றுவழி. தற்போது உக்ரைன் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்துள்ளது.
காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை கூட்டாக இனப்படுகொலை செய்த அமெரிக்க, ஐரோப்பிய தலைமைகள் தற்போது உக்ரைனின் வளங்களை கொள்ளையடிப்பதில் பங்குப் பிரச்சினையில் சிக்கியுள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய தலைமைகளின் நலன்களுக்காக வசதியற்ற, பலமற்ற நாடுகள் அந்நாட்டு மக்கள் பலியாகின்றனர். காலனித்துவம் நவீன வடிவத்தில் தொடர்கின்றது.