17

17

உள்ளக பொறிமுறை தீர்வாக அமையாது ! – யாழ் பா உ கஜேந்திரகுமார்

உள்ளக பொறிமுறை தீர்வாக அமையாது ! – யாழ் பா உ கஜேந்திரகுமார்

தமிழர்களுடைய பிரச்சினைக்கு உள்ளக பொறிமுறை தீர்வாக அமையாது என யாழ் மாவட்ட பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். கடந்த காலங்களில் இனவாத அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தன. தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. உண்மையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால் கடந்த 77 வருடங்களாக அரசாங்கங்கள் முன்னெடுத்துச் சென்றவற்றை கைவிட வேண்டும். நீங்கள் ஏன் வெளிநாட்டு பொறிமுறைக்கு பயப்பட வேண்டும். முதலில் உண்மையை கண்டறிய வேண்டும். நல்லிணக்கத்தை கொண்டுவர நாங்கள் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆகவே கடந்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த போக்கினை தற்போதைய அரசாங்கம் தொடரக் கூடாது என்றார்.

அச்சமூட்டும் டிரம்பின் வரிக்கொள்கை – அமெரிக்கா பயணமாகிறார் அமைச்சர் விஜித ஹேரத் !

அச்சமூட்டும் டிரம்பின் வரிக்கொள்கை – அமெரிக்கா பயணமாகிறார் அமைச்சர் விஜித ஹேரத் !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் உரையில், காங்கிரஸின் இணைக் கூட்டத்தில் தனது கடுமையான வரிக் கொள்கைகளை வெளியிட்டிருந்ததுடன் , அமெரிக்கா நீண்ட காலமாக பல நாடுகளிடமிருந்து அதிக வரிகளை எதிர்கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டினார். ஏப்ரல் 2 முதல் கனடா, மெக்ஸிகோ, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீது தனது நிர்வாகம் வரிகளை விதிக்கும் என்று அவர் அறிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு, அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்தது, ஆடைத் துறையின் 70% க்கும் அதிகமான பொருட்கள் அமெரிக்காவிற்குச் சென்றன, இதனால் அந்த நாடு இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக மாறியிருந்த நிலையில் ட்ரம்பின் அறிவிப்பு இலங்கை பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகின்றது. இலங்கை அமெரிக்காவிலிருந்து 330 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்கின்றது.

அமெரிக்கா இலங்கைக்கான நேரடியான வரிக்கொள்கையை அறிவிக்காவிட்டாலும் ஏனைய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி அதிகரிப்பு இலங்கையிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், 2025 ஏப்ரல் 02 முதல் நடைமுறைக்கு வரும் வரிகள் குறித்து அமெரிக்க வர்த்தக அலுவலகத்துடன் கலந்துரையாடுவதற்காக இலங்கை தூதுக்குழு அடுத்த மாதம் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமை ஸ்திரமின்றி இருப்பதால், ஏற்றுமதிகள் மீதான இத்தகைய வரிகளை இலங்கையால் தாங்க முடியாது என்று அமைச்சர் ஹேரத் சுட்டிக்காட்டியதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திற்குள் செயல்படும் இலங்கைக்கு, அதிகரித்த கட்டணங்களைத் தாங்க முடியாததால், வரிச் சலுகை கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பட்டலந்த அறிக்கை ஜே.வி.பி தான் குற்றவாளி என்று – எஸ்கேப் ஆக முயற்சிக்கிறார் ரணில் !

பட்டலந்த அறிக்கை ஜே.வி.பி தான் குற்றவாளி என்று – எஸ்கேப் ஆக முயற்சிக்கிறார் ரணில் !

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகவும், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் என் மீது முழுமையான அரசியல் அவதூறு பிரச்சாரத்தை நோக்கமாகக் கொண்டு பட்டலந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது எனவும் அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் தன்னை ஒரு சாட்சியாளராகவே அழைத்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ரணில் ஆற்றிய விசேட உரையில், 1988-90 காலகட்டத்தில் ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாத செயல்கள் குறித்து ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இந்திய – இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, ஜே.வி.பி நாடு முழுவதும் பயங்கரவாதத்தை விதைக்க நடவடிக்கை எடுத்தது. அந்த நேரத்தில், ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனே நாட்டின் முக்கியமான இடங்களைப் பாதுகாக்கும் அதிகாரத்தை அமைச்சரவை அமைச்சர்களிடம் ஒப்படைத்தார்.

இந்த பயங்கரவாத காலகட்டத்தில், சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கொல்லப்பட்டார். அந்த நேரத்தில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன என்னை அழைத்து, இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக வீட்டு திட்டத்தில் உள்ள வெற்றிடமான வீடுகளை அவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி, அப்போதைய கலைப்பாளர், சம்பந்தப்பட்ட வீடுகளை களனி பொலிஸ் கண்காணிப்பாளர் நலின் தெல்கொடவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார்.

1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பட்டலந்த பகுதியில் சித்திரவதைக் கூடம் இருந்ததா? என்பதை விசாரிக்க சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு ஆணைக்கழுவை அமைத்தார். அதற்குப் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். நான் அங்கு சாட்சியாக மட்டுமே அழைக்கப்பட்டேன். அந்த நேரத்தில், நான் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. ஒரு அமைச்சராக, பொலிஸ் கண்காணிப்பாளர், பொலிஸ் அதிகாரிகளுக்கு வீட்டுவசதி வழங்குவது சரி என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய அனைத்து விடயங்களும் எனக்குப் பொருந்தாது.

1988-90 காலப்பகுதியில் ஜேவிபி செய்த ஏராளமான பயங்கரவாதச் செயல்கள் தொடர்பான ஆணைக்குழு அறிக்கையின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தலைவரின் அவதானிப்புகள் அமைந்துள்ளன. பின்னணியையும் சொல்கிறது. ஆணைக்குழுவின் அறிக்கையின் 3 ஆம் அத்தியாயம், ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாதச் செயல்களை விரிவாக விவரிக்கிறது. முழு வரலாறும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றைத் தவிர, வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் நான் பொறுப்பாக மாட்டேன். அந்த அறிக்கையை நான் முழுமையாக நிராகரிக்கிறேன்” என்றார்.

இதேவேளை மக்கள் விடுதலை முன்னணி 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. சுமார் 25 ஆண்டுகளாக இருளில் இருந்த பட்டலந்த அறிக்கையை அப்போது காணவில்லையா, என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் நேற்று முன்தினம் கேள்வி எழுப்பியிருந்தததும் கவனிக்கத்தக்கது.

எவ்வாறான போதும், பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அடிப்படையில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் படலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து ரணில் விக்ரமசிங்க பேசுவதற்கு தற்போது மிகவும் தாமதமாகிவிட்டதாகவும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு காலக்கெடு – கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு காலக்கெடு – கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

“லசந்த விக்ரமதுங்க கொலை, பிரதீப் எக்னெலியகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீய்த் நொயர் தாக்கப்பட்டமை உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும், உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு தற்போது ஆட்சிபீடம் ஏறியுள்ள அரசாங்கம் இனியும் காலம் தாழ்த்தக்கூடாது” என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

“இந்த விடயங்கள் தொடர்பான எந்தவொரு விடயத்தையும் இரகசியமாக வைத்துக்கொள்ளாமல், எவருடனும் ‘டீல்’ போடாமல் உண்மையை வெளியே கொண்டு வருவதற்கு விரைந்து செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ள அவர், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியன்றுடன் 6 ஆவது ஆண்டு நிறைவு தினத்துக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை பெற்று பெற்றுக்கொடுப்பதாக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் நாம் வீதியில் இறங்குவதற்கு பின்னிற்க மாட்டோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு உதவி செய்யும் பொலிஸார் – ஆளுநர் நா.வேதநாயகன் அதிருப்தி !

வடக்கில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு உதவி செய்யும் பொலிஸார் – ஆளுநர் நா.வேதநாயகன் அதிருப்தி !

சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் பொலிஸாருடன் நட்பாக இருப்பதால் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். அத்துடன், இது ஆபத்தான நிலைமையை உருவாக்கியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “ 2003ஆம் ஆண்டிலிருந்து இறுதிப்போர் வரையில் இந்த மாவட்டத்தில் மேலதிக மாவட்டச் செயலராகவும், மாவட்டச் செயலராகவும் பணியாற்றியிருக்கின்றேன். கடந்த போர்ச் சூழலிலும் கல்விக்கான வசதிகள் உள்ளிட்ட சகல சேவைகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன. வளங்கள் குறைவாக இருந்தாலும் மக்களின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்தோம். இன்று வளங்களும், தொடர்பாடலும் பெருகிவிட்டாலும் மக்களுக்கான சேவைகள் என்பது அருகிவிட்டது. அன்றைய எமது சேவைகளுக்கும் இன்றைய காலத்துச் சேவைகளுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது” எனத் தெரிவித்தார்.

ஆளுநர் வேதநாயகன் மேலும் கூறுகையில், “கடந்த காலங்களில் அரசியலுக்காக ஒரு சில அரசாங்கத் தொழில்கள் உருவாக்கப்பட்டன. தொழிலுக்காக சம்பளம் வழங்கவில்லை. சம்பளம் வழங்கவேண்டும் என்பதற்காக அரசாங்கத் தொழில்கள் உருவாக்கப்பட்டன. இதனால் உருவாகிய அரசாங்க அதிகாரிகள் பலர் தங்கள் சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கின்றார்கள் இல்லை. ஏழையைக் கண்டால் உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் இயல்பாக மனதில் எழவேண்டும். அப்படிச் சிந்திப்பவர்கள் இன்று குறைவு. ஏழைக்குச் செய்யும் சேவையும், பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யும் சேவையும்தான் மிகப்பெரிய சேவை” என அவர் தெரிவித்துள்ளார்.

யூ-ரியூப்பில் டொலர் உழைக்க பாராளுமன்றம் வருகிறார் அர்ச்சுனா – பேச விடாதீர்கள் ! எம்.பி மரிக்கார் கோரிக்கை

யூ-ரியூப்பில் டொலர் உழைக்க பாராளுமன்றம் வருகிறார் அர்ச்சுனா – பேச விடாதீர்கள் ! எம்.பி மரிக்கார் கோரிக்கை

“ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை சிறந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளார்கள். இன்றும் இருக்கிறார்கள். எவரும் தமது பிரபல்யத்துக்காக பிற மதங்களை விமர்சிக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா யூ-டியூப் ஊடாக டொலர் உழைப்பதற்காக சுடச்சுட காணொளிகளை பதிவிடுவதற்கு பிற மதங்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு பாராளுமன்றத்தை பயன்படுத்துகிறார். இவ்வாறானவர்களுக்கு உரையாற்ற இடமளிக்காதீர்கள்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கடந்த சனிக்கிழமை சபையில் வலியுறுத்தினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, “பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா யூ-டியூப் ஊடாக டொலர் உழைப்பதற்காக சுடச்சுட காணொளிகளை பதிவிடுவதற்கு பிற மதங்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். 12 வயதுடைய முஸ்லிம் சிறுமிகள் எங்கு திருமணம் செய்துக் கொடுத்துள்ளார்கள் என்பதை அவரால் நிரூபிக்க முடியுமா, தேசவழமை சட்டம் தொடர்பில் நாங்கள் பேசுவதில்லை. ஆகவே மதங்கள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கும் போது அதனை சாட்சிகள் ஊடாக அவர் நிரூபிக்க வேண்டும். பாராளுமன்ற அர்ச்சுனாவுக்கு டிக்டொக், யூ-டியூப் ஊடாக டொலர் உழைக்க வேண்டுமாயின் அதற்கு பல வழிகள் உண்டு. சுற்றுலாத்துறை அமைச்சில் ஏதேனும் வாய்ப்பை பெற்றுக்கொண்டு யூ-டியூப் காணொளிகளை பதிவிடலாம். அவருக்கு அனுமதி வழங்குமாறும் அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

சைபர் பொறுக்கிகள்: எம்பி அர்ச்சுனா, ஊழல் ஒழிப்பு அணி வன்னி, அர்ச்சுனா அடியான் , Ana Than ( அனா தன்)

தமிழ் சமூகத்தில் பொதுவெளியில் முன்னேறி வரும் பெண்களை சாதாரணர்களையும் கூட இலகுவாக வீழுத்துவதற்கு ஆணகள் கையில் எடுக்கும் பாரிய ஆயுதம் தான் நிர்வாணம் சார்ந்த வசையாடல்கள். இதனை பா உ அர்ச்சுனா போன்ற மருத்துவ கலாநிதிகளும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி, லண்டன் தமிழ் அடியான், பாதிக்கப்பட்ட ஆண்கள் கட்சி சுண்ணாகம் போன்ற கல்லாநிதிகளும் வேறுபாடின்றி செய்கின்றனர். அதனைச் செய்ய முடியாதவர்கள் இவ்வாறு செய்பவர்களுக்கு லைக் போட்டு சிற்றின்பம் காண்கின்றனர்.

ர – தேசம்

பா உ அர்ச்சுனாவுக்காகக் களமிறங்கியுள்ள களமிறக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு அணி வன்னி என்ற முகமூடி அணிந்த ஆண்ணாதிக்க கருத்தியல் கொண்ட மற்றுமொருவர் தான் ‘Ana Than’, என்ற முகம்மூடிய முகநூல் நபரால் உருவாக்கப்பட்ட “பாதிக்கப்பட்ட ஆண்கள் கட்சி – சுண்ணாகம்” என்ற முகநூல் பக்கம். இது கடந்த ஆண்டு 2024 லில் தேசம்நெற் பார்வைக்கு கொண்டுவரப்பட்டது.

சட்டத்தரணி சுவாஸ்திகா, ஊடகவியலாளர் சங்கவி, ரிக்ரொக் பெண் சாளினி ஆகியோருக்கு எதிராக அவர்கள் விபச்சாரிகள் என்ற வசையாடல் பரப்பப்பட்டது. பா உ அர்ச்சனா, கௌசல்யா நரேன், ஊழல் ஒழிப்பு அணி வன்னி, அர்ச்சுனா அடியான் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்தாக்குதலை மேற்கொண்டனர். இதே பாணியில் சாளினியின் நிர்வாணப்படங்கள் பரப்பப்பட்டது போல் அனா தன் என்ற முகமூடியோடு முகநூலில் உலாவரும் யோகா என்ற யாழ் சங்கானையைச் சேர்ந்தவரும் தனது காதலி அல்லது மனைவியின் அரை நிர்வாணப்படங்களை முகநூலில் வெளியிட்டு இருந்தார். குறித்த நபர் லண்டன் லூட்டனில் வாழ்பவர்.

Ana Than ஆல் 2024 ஏப்ரல் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த முகநூல் கணக்கில் திட்டமிட்ட வகையில் ஒரு பெண் மீதான தங்களுடைய வக்கிரத்தை கொட்டித் தீர்ப்பதற்காக அந்த கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதை தெளிவாக காண முடிகின்றது. நேரடியான கணக்கில் இருந்து பிரச்சினையை வெளிப்படுத்த தைரியம் இல்லாத இந்த ஆண்கள் குழு ஒன்று போலி கணக்கில் இருந்து பெண் ஒருவரின் நிர்வாணத்தை தாக்கி தங்களை வீரர்களாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதனையே ஊழல் ஒழிப்பு அணி வன்னியும் செய்கின்றது.

இதில் ஆகப்பெரிய கொடுமை என்னவென்றால் அந்த பெண்ணை நிர்வாணம் சார்ந்து கொச்சைப்படுத்தும் குறித்த பேஸ்புக் கணக்கில் சுமார் 4000 வரையானவர்கள் நட்பு பட்டியலில் உள்ளனர். Ana Than என்ற முகநூல் கணக்கிலுள்ளவர் குறித்த பெண் தொடர்பான நிர்வாண படங்களை அதிகம் பதிவேற்றி பகிர்ந்துள்ளார். இதே நேரம் தேசம் ஜெயபாலன் குறித்த முகநூல் பக்கத்தில் அதிகமான பதிவுகளை இட்ட குறித்த கணக்கில் பின்தொடர்பவர்களாக உள்ள Ana Than மற்றும் Thabesan Krishna ஆகியோருடன் தொடர்பு கொள்ள முற்பட்டும் பதில் ஏதும் கிடைக்கவில்லை.

Ana Than என்ற பெயரில் முகநூலைக் கொண்டுள்ள நபரே குறித்த பெண் பற்றிய மோசமான பதிவுகளை வெளியிட்டுள்ளார். இவர் தான் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றுவதாகக் கூறி இட்ட பதிவுக்கு 93 பேர் லைக் இட்டுள்ளனர். குறித்த நபர் தான் சுண்ணாகத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இத்தகவல்கள் உண்மையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் அனா தன் என்ற இந்நபர் குறித்த பெண்ணை நன்கு அறிந்தவராக உள்ளார். அப்பெண் மீது காதல் கொண்டது போல் வசனங்கள் பாடல்கள் என்பவற்றை பெப்ரவரி மார்ச் மாதத்தில் வெளியிட்டு பதிவிட்டுள்ளார். அதன் பின் 2024 ஏப்ரல் மாதம் முதல் அப்பெண் பற்றி தாறுமாறான பதிவுகளை வெளியிட்டு வருகின்றார். பாதிக்கப்பட்ட ஆண்கள் கட்சி சுண்ணாகம் என்ற முகநூல் பற்றிய விபரம் அந்நூல் திறக்கப்பட்டதும் இவருடைய முகநூல் தளத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணி சுவஸ்திகா மீது அர்சுனா மோசமான விமர்சனம் - Jaffna Muslim

இதுவே சட்டத்தரணி சுவாஸ்திகா, ஊடகவியலாளர் சங்கவி, சாளினி விடயத்திலும் நடந்துள்ளது. இவர்களுடைய முன்னாள் காதலர்கள், இவர்களை ஒரு தலையாகக் காதலித்தவர்கள் தங்களுடைய உறவு முறிந்ததும் அல்லது தங்களுடைய நோக்கங்களுக்கு அப்பெண்கள் உடன்படவில்லையென்றதும் முகமூடி முகநூல் கணக்கை ஆரம்பித்து அப்பெண்களின் அந்தரங்க விடயங்களைப் பதிவிடுவதும் அல்லது அவ்வாறு செய்யப் போவதாக மிரட்டி தங்கள் நோக்கங்களுக்குப் பணிய வைப்பது. இதனையே பா உ அர்ச்சனா, கௌசல்யா நரேன், ஊழல் ஒழிப்பு அணி வன்னி, அர்ச்சுனா அடியான் ஆகியோர் தொடர்ந்தும் செய்து வருகின்றனர். இவ்வாறாக நூற்றுக்கணக்கான பெண்கள் இந்த ஆணாதிக்க வெறியர்களால் உளவியல் ரீதியில் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.

இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் பாதிக்கப்பட்டவராகவும் ஒரு சட்டத்தரணியாகவும் பெண்ணாகவும் இருக்கும் கௌசல்யா நரேன்இ தமிழ் தலிபான்களாகச் செயற்படும் பா உ அர்ச்சுனா, ஊழல் ஒழிப்பு அணி வன்னி, அர்ச்சுனா அடியான் மற்றும் Ana Than போன்றவர்களோடு இணைந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விபச்சாரப்பட்டம் வழங்குகின்றார்.

Ana Than முகநூல் தளத்தில் 3200 பேர் நட்பாக உள்ளனர். இவர்களில் பலரும் இவருடைய முகநூலைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பலநூறு பேர் மோசமான பதிவுகளைப் பார்த்துவிட்டு, அப்பெண்ணை அரை நிர்வாணக்கோலத்தில் அனா தன் எடிட் செய்த படங்களை போட அதற்கும் லைக் கொடுத்துள்ளனர். ராம் சன்ட் என்பவர் மட்டும் கண்டித்து ஒரு பதிவை இட்டதைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. இந்த நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் ஆண்களின் ஈனத்தனமும் பாலியல் வக்கிரமும் ஆண்களுக்கே அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இவர்களுக்கு தாய், சகோதரிகள், பெண் பிள்ளைகள் உறவு எதுவும் இல்லாமல் இவர்கள் வானத்தில் இருந்தா குதித்தார்கள் என்று கேள்வியை எழுப்புகின்றது. இந்த மனநோயாளிகளை யாரோ ஒரு அப்பாவிப் பெண் மணம் முடித்து தன் வாழ்க்கை அழிக்கப் போகின்றாளே என்ற அச்சம் என் போன்ற சகோதரர்களுக்கும் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கும் ஏற்படுகின்றது என்கிறார் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரன்.

என்னுடைய பெயரை நான் சொல்லிவிடுவேன் ஆனால் அடுத்தநாள் என் தங்கையை விபச்சாரி என்று பாராளுமன்றத்தில் எமது பா உ அறிவித்துவிடுவார். ஊழல் ஒழிப்பு அணி ஒரு பேகடகான நிர்வாண உடலை வெளியிடும். தமிழ் அடியான் உங்கள் தங்கையின் கணவரை வரவழைத்து உங்கள் தங்கை நல்லவள் வல்லவள் என்று சொல்லச் சொல்லுங்கள் என்று பதிவிடுவார் என்றார். சட்டத்தரணியும் மனிதஉரிமை வாதியுமான சுவாஸ்திகாவையே விபச்சாரி பல ஆண்களோடு திரிகிறார், அவரை உயிரோடு விட்டதே தவறு என்று சொல்லும் பா உ அர்ச்சுனாவும் அவருக்கு பொழிப்புரை வழங்குகிறார் சட்டத்தரணி தங்கா கௌசல்யா நரேன். நிலைமை இப்படி இருக்கையில் சாதாரணர்கள் எம்மாத்திரம்.

பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகம் உள்ள தாயகத்தில் ஈழத்துப் பெண்களின் நிலைமை இதுவென்றால். புலம்பெயர்ந்த ஈழத்து ஆண்கள் சிலர் ஈழத்தில் வாழும் சில ஆண்களிலும் பார்க்க மோசமான காட்டுமிராண்டிகளாக உள்ளதை நாங்கள் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

சுஜிகூல் விடுதலைப் புலிகளின் தலைவரை மதித்தே அவருடைய படத்தை தன்னுடைய அறையில் மாட்டியிருந்தார். ஆனால் சுஜிகூலைத் தாக்கிய அக்கா கடை உரிமையாளர் முரளி மற்றும் பதினைந்துவரையான ஈழத்து ஆண்கள் உட்பட முப்பதினாயிரம் வரையானோர் ரிக்ரொக்கில் அப்பெண்ணின் மாலை மயக்கத்தில் இருந்துள்ளனர். இந்த ஈழத்து ஆண்கள் சுஜிகூலை கொழும்பாள், வடக்கத்தையாள் என்றெல்லாம் பிரதேசவாதத்தை இழுத்து அவருடைய பெண்ணுடல் சார்ந்த வசையாடல்களைப் பொழிய சுஜிகூல் அவர்களுடைய வசையாடல் மொழியிலேயே பதிலடி கொடுத்தார். அந்த உரையாடல்களில் பாலியல் வக்கிரத்துடன் தாங்கள் பேசியவற்றை நீக்கிவிட்டு சுஜிகூலின் வசையாடலை மட்டும் பதிவிட்டு தங்களை ஆனையிறவுத் தாக்குதலில் இருந்து திரும்பிய மாவீரர்களாக படம் காட்டினர் லாச்சப்பல் அக்கா கடைச் சருகு புலிக் கும்பல்.

சில மாதங்களுக்கு முன் யாழில் ஒரு ரவுடிக்கும்பல் ஒரு இளம் பெண் இன்னுமொருவரை காதலிக்கின்றார் என்று தெரிந்தும் அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது தெரிந்தும் அவரைப் பலாத்காரப்படுத்தி காதலிக்க வைக்க முயன்றுள்ளனர். இறுதியில் அக்கும்பல் வன்முறையில் இறங்கி பொலிஸ் அழுத்தங்களை ஏற்படுத்தி அக்காதல் தம்பதியின் திருமணத்தை குழப்புவதற்கு முழு முயற்சியும் எடுத்தனர். இறுதியில் அப்பெண் பற்றி முகநூலில் வசையும் பாடினர். இத்தனைக்கும் அப்பெண்ணின் தந்தை ஒரு நீதிபதி, முற்போக்குத் தளத்தில் நன்கு அறியப்பட்ட சமூக செயற்பாட்டாளர். ஒரு ஆண் நினைத்தால் குறிப்பாக ஈழத்து ஆண், எதனையும் செய்யலாம் என்ற நிலையில் தான் ஈழத்துப் பெண்கள் தாயகத்திலும் புலத்திலும் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையுள்ளது.

மேலும் ஆண்கள் தங்களுக்குள் பிரச்சினைகள் வருகின்ற போது அவர்கள் மோதிக்கொள்வதை விடுத்து மறு தரப்பினரின் குடும்பப் பெண்களின் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பாலியல் வக்கிரத்துடன் எழுதுவதை தினம் தினம் காண்கின்றோம்.

குறித்த பெண்கள் சரியானவரோ? பிழையானவரோ? என்பது தேவையற்ற விவாதம். இங்கு தேவையான கேள்வி: இவர்கள் யார்..? யாரோ ஒரு பெண்ணை பொதுவெளியில் வைத்து நிர்வாணப்படுத்தவும் – அந்த பெண்ணுடைய தொலைபேசி இலக்கத்தை பகிரவும் – வீட்டு விலாசத்தை பகிரவும் – குடும்பத்தை பற்றி பொதுவெளியில் பேசவும் யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது. ஆண் என்பதைத்தவிர எவ்வித மனிதத்துவ விழுமியங்களுமற்ற இவர்கள் ஈழத்தமிழ் சமூகத்தின் தீவிரமாகப் பரவிவரும் ஒரு புற்றுநோய். ஈழத் தமிழ் பெண்க்ளை அவர்கள் தாயகத்தில் வாழ்ந்தாலென்ன புலத்தில் வாழ்ந்தாலென்ன இவ்வாறான ஈழத்து பாலியல் வக்கிரம் கொண்ட சில ஆயிரம் ஆண்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது.

யாரோ ஒரு பெண் தானே என் கடந்து விட முடியாது. ஏனெனில் இது தான் நாளை நமது வீட்டு பெண்களுக்கும் நடக்கும். யாரோ ஒரு ஆண் நினைத்தால் ஒரு பெண்ணை பொதுவெளியில் எத்தனை தரக்குறைவாகவும் பேசி விடலாம் என்ற தைரியத்தை குறித்த பதிவுக்கு லைக் போட்ட 400 வரையான முதெகெழும்பு அற்ற ஆண்களும் வழங்குகிறார்கள். இங்கு பெண் யார் என்பது பற்றிய விபரங்கள் தேவையற்றது. ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒருவரை சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக நிர்வாணம் சார்ந்த வசையாடல்களால் விவரிப்பது என்பது உங்களுடைய பக்குவப்படாத மனநிலையை அது காட்டுவதுடன் யார் யாருக்கு எதிராக அதை செய்தாலும் தவறு தான்.

அண்மைய காலங்களில் இலங்கையில் மேற்குறித்த பெண்ணுக்கு நடந்தது போன்றுதான சமூக வலைத்தளங்களில் நடக்கும் துஷ்பிரயோகங்கள் இலங்கையில் சடுதியாக அதிகரித்து வருவதையும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரையான முறைப்பாடுகள் கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான இணைய சமூக வலைத்தள துஷ்பிரயோகம் தொடர்பில் பதிவாகியுள்ளதாக அறிய முடிகிறது.