யூ-ரியூப்பில் டொலர் உழைக்க பாராளுமன்றம் வருகிறார் அர்ச்சுனா – பேச விடாதீர்கள் ! எம்.பி மரிக்கார் கோரிக்கை
“ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை சிறந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளார்கள். இன்றும் இருக்கிறார்கள். எவரும் தமது பிரபல்யத்துக்காக பிற மதங்களை விமர்சிக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா யூ-டியூப் ஊடாக டொலர் உழைப்பதற்காக சுடச்சுட காணொளிகளை பதிவிடுவதற்கு பிற மதங்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு பாராளுமன்றத்தை பயன்படுத்துகிறார். இவ்வாறானவர்களுக்கு உரையாற்ற இடமளிக்காதீர்கள்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கடந்த சனிக்கிழமை சபையில் வலியுறுத்தினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, “பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா யூ-டியூப் ஊடாக டொலர் உழைப்பதற்காக சுடச்சுட காணொளிகளை பதிவிடுவதற்கு பிற மதங்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். 12 வயதுடைய முஸ்லிம் சிறுமிகள் எங்கு திருமணம் செய்துக் கொடுத்துள்ளார்கள் என்பதை அவரால் நிரூபிக்க முடியுமா, தேசவழமை சட்டம் தொடர்பில் நாங்கள் பேசுவதில்லை. ஆகவே மதங்கள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கும் போது அதனை சாட்சிகள் ஊடாக அவர் நிரூபிக்க வேண்டும். பாராளுமன்ற அர்ச்சுனாவுக்கு டிக்டொக், யூ-டியூப் ஊடாக டொலர் உழைக்க வேண்டுமாயின் அதற்கு பல வழிகள் உண்டு. சுற்றுலாத்துறை அமைச்சில் ஏதேனும் வாய்ப்பை பெற்றுக்கொண்டு யூ-டியூப் காணொளிகளை பதிவிடலாம். அவருக்கு அனுமதி வழங்குமாறும் அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.