16

16

யூரீயூப்பர் கிருஷ்ணாவிற்கு மீண்டும் பிணை மறுப்பு !

யூரீயூப்பர் கிருஷ்ணாவிற்கு மீண்டும் பிணை மறுப்பு !

புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் இருந்து அதிகப்படியான நிதியை பெற்று வடக்கில் உள்ள யூடியுப்பர்கள் உதவி செய்கிறோம் என்ற பெயரில் செய்துவரும் அட்டகாசங்கள் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. யூடியுப்பர் எஸ்.கே கிருஸ்ணா பண்டத்தரிப்பில் உதவி கோரிய கணவனை இழந்த பெண்ணின் வீட்டில் இரவு நேரத்தில் சென்று அடாவடியில் ஈடுபட்ட காணொலி வைரலாகி இருந்தது. இதன் பின்னணியில் எழுந்த விமர்சனங்களால் கிருஷ்ணா அப்பகுதி மக்களால் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார். நீதிமன்றத்தில் கிருஷ்ணாவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டு 14 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் உள்ள யூடியூப்பர் கிருஷ்ணாவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை நகர்த்தல் பத்திரம் மூலம் மீண்டும் பிணை கோரப்பட்டது. நீதிமன்றம் வழக்கு எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதேவேளை புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் இருந்து அதிகப்படியான நிதியை பெற்று வடக்கில் உதவி செய்கின்றோம் என நிதிமோசடியில் ஈடுபடுகிறார் என்ற குற்றச்சாட்டப்பட்டு வந்த கிளிநொச்சி தர்மபுரத்தைச் சேர்ந்த யூரியூப்பர் டி.கே. கார்த்திக் என்பவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட டி. கே. கார்த்திக்கு சமீபத்தில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் தொடர்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

கைதிற்கான காரணம் தொடர்பில் உத்தியோக பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. யூரியூப்பர் கார்த்திக் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்த நபருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்திய காரணத்தால் இந்த கைது இடம்பெற்றுள்ளாதாக பேசப்படுகிறது.

படலந்த வதை முகாம் எதிரொலி – ஜே.வி.பி.யினரிடமும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் பா.உ மனோ !

படலந்த வதை முகாம் எதிரொலி – ஜே.வி.பி.யினரிடமும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் பா.உ மனோ !

அரசாங்கத்துக்கு அரசியல் இலாபம் கிடைக்கக் கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பவங்கள் பற்றி மாத்திரமின்றி அனைத்து மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுவான ஆணைக்குழுவொன்றை நியமித்து ரணில் விக்கிரமசிங்கவிடமும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் மாத்திரமின்றி ஜே.வி.பி.யினரிடமும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பில் வழக்கு தொடரப்பட வேண்டும். அங்கு இடம்பெற்ற கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஆராய வேண்டும். எனினும் பட்டலந்த வதை முகாம் பற்றி மாத்திரம் ஏன் விசாரிக்க வேண்டும் என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

1948ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழர்களுக்கெதிரான குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன. அதன் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை, இறுதி யுத்தத்தின் போது தமிழர்கள் கொல்லப்பட்டமை, குடும்பத்தோடு சென்று இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் காணாமல் போயுள்ளனர், கொழும்பில் இடம்பெற்ற கொலைகள், கடத்தல், காணாமல் ஆக்கப்படுதல் என்பன தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவை மாத்திரமின்றி சர்வதேச அளவில் பேசப்படுகின்ற இனப்படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார் மனோ கணேஷன்.

மூதூர், கொழும்பு இரட்டைப்படுகொலை – கொலைக்கலாச்சாரம் !

மூதூர், கொழும்பு இரட்டைப்படுகொலை – கொலைக்கலாச்சாரம் !

கொழும்பு – கிராண்ட்பாஸின் வெஹெரகொடெல்ல பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கூர்மையான ஆயுதத் தாக்குதல்களில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்கள் என்று கூறப்படுகிறது.

இதற்கு முந்தைய தினம் திருகோணமலை மூதூரில் 15 வயது தமிழ்ச் சிறுமி தன்னுடைய இரு பெரியம்மாக்களை குத்திக் கொலை செய்தது தெரிந்ததே.

இந்துசமுத்திரத்தை பாலைவனமாக்கும் தமிழக மீனவர்கள் – கச்சதீவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

இந்துசமுத்திரத்தை பாலைவனமாக்கும் தமிழக மீனவர்கள் – கச்சதீவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களினதும் தமிழக மீனவர்களினதும் பொருளாதாரத்தை தமிழக மீனவர்கள் அழிக்கிறார்கள் என்கிறார், கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர். இலங்கை – இந்திய மீனவ பிரச்சினை தொடர்பாக கச்சத்தீவில் தமிழக மீனவர்களை சந்தித்து கலந்துரையாடிய போது அமைச்சர் சந்திரசேகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த முறை கச்சத்தீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் பங்கேற்கவில்லை. இம்முறை பங்கேற்றிருந்தனர். கச்சத்தீவு திருவிழாவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இராமேஸ்வரத்தின் அனைத்து மீனவ கூட்டமைப்பின் தலைவர் ஜேசுராஜ் மற்றும் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டேன். இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையென்பது நீண்டகாலமாக நிலவும் பிரச்சினை. இதற்கான தீர்வு தொடர்பில் நீண்டகாலமாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டும், சிறையில் அடைக்க வேண்டும் என நாம் நினைக்கவில்லை. அதற்கான தேவைப்பாடும் எமக்கு கிடையாது.

எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாலும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமையை கடைபிடிப்பதாலுமே கைது செய்யப்படுகின்றனர். இந்திய மீனவர்கள் இழுவை படகை பயன்படுத்தி அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல்வளத்தை அழித்தால் இந்து சமுத்திரமே பாலைவனம் ஆகக்கூடும். போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்கள் இன்னும் மீண்டெழவில்லை. இந்நிலையில் தமிழக மீனவர்கள் அவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல என்றார் அமைச்சர் இராமலிங்கம்.

ஈழத்தமிழர் வரலாற்றில் கனடாவின் நீதியமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி !

ஈழத்தமிழர் வரலாற்றில் கனடாவின் நீதியமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி !

கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஹரி ஆனந்தசங்கரி நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரியின் இரண்டாவது மனைவியான யோகம் அவர்களின் இளைய புதல்வர் ஹரி ஆனந்தசங்கரி ஆவர்.

1980 களில் ஹரியின் பெற்றோருக்கு மணமுறிவு ஏற்பட்டமையை தொடர்ந்து ஹரி தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்தார். 1980 ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டு வரை அயர்லாந்தில் தாயாருடன் வாழ்ந்த ஹரி, பின்னர் கனடாவிற்கு புலம்பெயர்ந்திருந்தார். அரசியல் விஞ்ஞான பட்டதாரியும் சட்டமாணியுமான ஹரி 2023 இல் முடிக்குரிய சுதேசிகள் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

கனடாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக ஹரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தலைவர்கள் பெண்களுக்கு விபச்சாரி பட்டம் கொடுக்க, சிங்கள தலைவர்கள் பெண்களை வர்த்தகத் தலைவிகளாக்குகின்றனர் !

தமிழ்த் தலைவர்கள் பெண்களுக்கு விபச்சாரி பட்டம் கொடுக்க, சிங்கள தலைவர்கள் பெண்களை வர்த்தகத் தலைவிகளாக்குகின்றனர் !

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பெறுமதியான பங்களிப்பு இருந்தபோதிலும், கட்டமைப்பு ரீதியான தடைகள் பொருளாதாரத்தில், அவர்களின் முழுமையான பங்களிப்பை மட்டுப்படுத்தியுள்ளன என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வர்த்தகத் தலைவர்களாகவும், தொழில்முயற்சியாளர்களாகவும், ஏற்றுமதியாளர்களாகவும் பெண்கள் முன்னேறக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் இந்தத் தடைகளை அகற்ற எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஆனால் இதற்கு மாறாக தமிழ் தலைவர்கள் பா உ அர்ச்சுனா மற்றும் பா உ சிறிதரன் போன்றவர்கள் பெண்களை விபச்சாரிகளாகவும் போகப் பொருளாகவும் கருதுகின்றனர். பா உ அர்ச்சுனா சாதாரண பெண்களை பாராளுமன்றத்தில் விபச்சாரி என்று தூற்றுகின்றார். பா உ சிறிதரனின் அலுவலகத்தில் பெண்கள் பாலியல் லஞ்சம் கோரப்படுகின்றனர். அவ்வாறானவர்களை தொடர்ந்தும் தன் அரசியல் தேவைக்காகப் பயன்படுத்தி வருகின்றார்.

எந்தவொரு தமிழ் கட்சியும் பாராளுமன்றத்துக்கு பெண்களை அனுப்பவில்லை. அவ்வாறு சமூகத்தில் முன்னுக்கு வரும் பெண்களை இழுத்துவிழ்த்துவதில் தமிழ் தலிபான்கள் முன்நிற்கின்றனர். பா உ அர்ச்சுனா அவருடைய அடிப்பொடியான லண்டன் தமிழ் அடியான் இவர்களுடைய ஊதுகுழல் ஊழல் ஒழிப்பு அணி வன்னி என்று ஒரு சமூகவிரோதக் கும்பல் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் வக்கிர புத்தியோடு செயற்படுகின்றனர். இவர்கள் வீட்டுப் பெண்கள் இந்த வக்கிரபுத்தி கொண்டவர்களை எவ்வாறு தாங்கிக் கொள்கின்றனர் எனத் தெரியவில்லை எனப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

இசைப்பிரியாவிற்காக சாணக்கியன் நியாயம் கேட்க வளர்த்த காடா மார்பில் பாயுது என்று திடுக்கிட்ட நாமல் !

இசைப்பிரியாவிற்காக சாணக்கியன் நியாயம் கேட்க வளர்த்த காடா மார்பில் பாயுது என்று திடுக்கிட்ட நாமல் !

இசைப்பிரியா ஒரு பெண் இல்லையா..? பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட இசைப்பிரியாவிற்கு இந்த நாட்டில் நீதி தேவையில்லையா? என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

அனுராதபுரத்திலே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் ஏன் இந்த அரசாங்கமும் சரி, நாட்டு மக்களும் சரி எத்தனையோ தமிழ் பெண்கள் பாதுகாப்பு படையினரால் பாலியல் வன்னொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு எதிராக ஏன் இந்த அரசாங்கம் கொந்தளிக்கவில்லை என பாராளுமன்றத்தில் கொந்தளித்த சாணக்கியன் இசைப்பிரியாவின் படுகொலைக்கும் நீதி கேட்டார்.

பட்டலந்த அறிக்கையை உணர்வுபூர்வமாக பார்க்கும் தற்போதைய அரசாங்கம், இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்கள் தொடர்பான அறிக்கையை ஏன் உணர்வுபூர்வமாக பார்க்கவில்லை எனக் கேள்விப் எழுப்பினார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான வெளிவிகார அமைச்சரின் உள்ளக பொறிமுறை விசாரணையை வெட்கக் கேடானது எனவும் சாணக்கியன் குறிப்பிட்டார். என்பிபி அரசாங்கத்தை எதிர்க்கட்சியாக இருந்து கேள்வி கேட்கும் இரா. சாணக்கியன் நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்த போது ஏன் இதே கேள்விகளை கேட்கவில்லை என சாணக்கியனின் அரசியல் எதிரிகள் கேட்கின்றனர். மேலும் சாணக்கியனின் ஆசானான சுமந்திரன் போர்க் குற்றத்தை உள்ளகப் பொறிமுறையூடாக விசாரிக்க பச்சைக் கொடி காட்டியதாலே தான் அவர் தமிழ்மக்களின் வெறுப்புக்குமுள்ளானார்.

எல்லாவற்றுக்கும் மேலாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளராக இருந்த சாணக்கியன், இராஜபக்சவின் முகவரியிலேயே அரசியலுக்கு வந்தவர். இசைப்பிரியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது இராஜபக்ச ஆட்சியிலேயே நடந்தது. அப்போதெல்லாம் வாயைப் பொத்திக்கொண்டு இருந்த சாணக்கியனின் இசைப்பிரியா மீதான திடீர் பாசம் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக்கட்சியின் வாக்கு வங்கியைக் காப்பாற்றவேயாகும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

என்னடா வளர்த்த கடா மார்பில் பாயுது என திடுக்கிட்ட நாமல் ராஜபக்ச பாராளுமன்றத்தில் சாணக்கியனை செல்லமாக கண்டித்தார். யுத்தம் முடிந்து நீண்டகாலம் ஆகிவிட்டது. ஆறின புண்ணை பூதக் கண்ணாடி வைத்து பார்க்கக் கூடாது. இப்படியே போனால் இனக்குரோதம் வளரும். ஒரு அரசாக நாங்கள் எல்லாம் ஒன்றாக நிற்போம். மறப்போம் மன்னிப்போம் என்றார் நாமல் ராஜபக்ச.

 

மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் செய்யும் அர்ச்சுனா, ஸ்சுஸ்திகாவிற்கு கொலைமிரட்டல் !

மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் செய்யும் அர்ச்சுனா, ஸ்சுஸ்திகாவிற்கு கொலைமிரட்டல் – ஸ்வஸ்திகாவை “அரசியல் விபச்சாரி“ எனக் குறிப்பிடும் வைத்தியர் !

பாராளுமன்றத்தில் பெண் ஒருவரை விபச்சாரி என விளித்த இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்த்து கேட்காமல் வேடிக்கை பார்த்த எம்பிக்கள் தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினரும், மனித உரிமை சமூகச் செயற்பாட்டாளருமான சட்டத்தரணியுமான ஸ்சுவஸ்திகா அருளிங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

ஸ்சுவஸ்திகா இது தொடர்பில் தனது பேஸ்புக் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: பாராளுமன்ற விவாதத்தில் எம்.பி அர்ச்சுனா ஒரு பெண்ணின் பெயரை குறிப்பிட்டு விபச்சாரி என அடையாளப்படுத்தினார். இதனை அங்கு யாருமே எதிர்த்து கேட்கவில்லை. அந்த பெண்ணின் பெயரை ஹன்சன்ட்டில் இருந்து நீக்க வேண்டும் என்று கூட யாருமே கேட்கவில்லை. ஆனால் ஒரு பெண்ணின் பெயர் தவறாக உச்சரிக்கப்படும் போது அது உடனடியாகவே ஹன்சார்ட்டிலிருந்து நீக்கப்படும் காலத்தில் இருக்கிறோம் என்று நினைத்தேன், ஆனால் இந்தச் சிறப்புரிமை பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களுக்கு மட்டுமா? அப்படியானால் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இல்லையா? என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

சட்டத்தரணி சுவஸ்திகா அருளலிங்கத்தின் பதிவுக்கு பா.உ இராமநாதன் அர்ச்சுனா தனது பாணியில் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் தனது சமூக வலைத்தள கணக்கின் மூலம் பதிலளித்துள்ளதார்.

இதற்கு எதிர்வினையாற்றிய பா உ அர்ச்சுனா தனது கீழ்த்தரமான மற்றவர்களை கீழ்நிலைப்படுத்தும் விதத்தில் பதிலளித்தார். “எலக்சன் வரும்போது ஸ்வஸ்திகா போன்றவர்கள் என்னைப் பற்றி நான்கு வசனம் கூவினால் தான் மக்கள் திரும்பிப் பார்ப்பார்கள் என்பதற்காக முகப்புத்தகத்தில் கூவிக் கொண்டிருப்பதை பார்த்தேன். இன்று நேற்று அல்ல அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காக காலம் காலமாக பாதைகளில் நின்று கூவுவதை நான் வைத்தியசாலை செல்லும்போது பார்த்திருக்கிறேன். இந்த பிழைப்புக்கு பிச்சை எடுக்கலாம். சில வேளைகளில் இவ்வாறான ஜென்மங்களை யாரோ ஒருவர் பெற்று விட்டு பாதைகளில் விடுகிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் கவலையாக இருப்பதுண்டு. ஆனால் பண்ணுகிற காமெடிகளை பார்க்கும்போது மனம் விட்டு மனதுக்குள் சிரிப்பதுண்டு. இப்போதும் சிரித்தவாறே கடந்து செல்கிறேன். “பெட்ட நாய்கள் ஊளை இடுவதால் சோலோ லோபோ – நரிநாய் அசரப்போவதில்லை.” வேறு ஒரு நல்ல விடயத்தை எடுத்து கூவும் மாறும்; அவ்வாறு கூவினால் இந்தத் தடவை மாநகர சபையிலோ அல்லது உள்ளூர் ஆட்சி சபையிலோ ஒரு கதிரை கிடைக்கலாம் என்ற மன ஆதங்கத்தில் பதிவிடுகிறேன். சும்மா இருக்கும் அர்ஜுனாவை சீண்டி பார்ப்பதில் இந்த நாலு கால்களுக்கு ஏதோ சந்தோசம் தான்” என குறிப்பிடப்பட்டுள்ளார்.

எம்பி அர்ச்சுனா தனது முகநூலில் ஸ்வஸ்திகாவை “அரசியல் விபச்சாரி“ எனக் குறிப்பிட்டு புலிகளின் பெயரலால் கொலை மிரட்டல் விடுகிறார். ஸ்சுவஸ்திகா புலிகளை பாஸிஸ்ட்கள் என்று விமர்ச்சித்ததை நினைவுபடுத்திக் கொண்டு “ காலம் இப்போது வரை சுவஸ்திகாவை உயிரோடு வைத்திருக்கிறது .,,.., உனக்கு கவலை இல்லையா தம்பி” என்று மாவீரர்கள் கல்லறைகளில் இருந்து தன்னைக் கேட்பதாக எம்பி அர்ச்சுனா தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

ஸ்சுவஸ்திகாவை பொறுத்தவரை “அரகலய “ போராட்டம் தொடக்கம் எல்லாவிதமான ஒடுக்குமுறைகளிற்கு எதிரான போராட்டங்களிலும் பங்கெடுப்பவர். இடதுசாரி அரசியல் பேசுபவர். துணிச்சலான பெண்மணி. கௌசல்யா போன்றல்லாமல் சுயமாக சிந்தித்து செயல்படும் சுதந்திரமான தனித்துவமான சட்டத்தரணி.

ஸ்சுவஸ்திகாவின் புலிகளைப் பற்றிய விமர்சனம் அவருடைய அரசியல் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடு என அன்றே தேசம்நெற் சுட்டிக்காட்டியிருந்தது. ‘பாஸிஸம் ‘ என்பதன் அகண்ட பொருள் அதன் கூறுகள் என்னவென்பதை புலிகளை விமர்சிக்கும் சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருளலிங்கம் மட்டும் அல்ல புலிகளை ஆதரிக்கும் சட்டத்தரணி வைக்ஷணவி சண்முகநாதனுக்கும் கூட தெளிவாக புரியவில்லை. அந்த அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பாஸிஸ அமைப்பு இல்லை என்பது நிறுவப்பட்ட உண்மை.

ஒருவேளை ஸ்சுவஸ்திகா தன்னுடைய தவறான விமர்சனத்தை தற்சமயம் வாபஸ் பெற்றிருக்கலாம். இல்லை ஸ்சுவஸ்திகா அதே நிலைப்பாட்டில் இருந்தால் கூட யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

வைக்ஷ்ணவி சண்முகநாதனைப் பொறுத்தவரை உலகத்திற்கே கொடூர பாஸிஸ ஆட்சியை நடத்திக் காட்டிய கிட்லருடன் விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை உவமித்தவர். வைக்ஷ்ணவி குறுந் தமிழ்த் தேசியம் பேசுவதால் எம்பி அர்ச்சுனாவுக்கு அவர் கண்ணில்படவில்லைப் போலும். அதைவிட மெத்தப்படித்த அர்ச்சுனாவுக்கும் கூட பாஸிஸம் என்றால் என்னவென்றே தெரிந்திருக்க நியாமில்லை.

சுயாதீனமாக சிந்தித்து செயற்பட முடியாது எம்பி அர்ச்சுனாவின் கைப்பொம்மையாக இருக்கும் சட்டத்தரணி கௌசல்யா போன்று சட்டத்தரணி, ஸ்சுவஸ்திகாவையும் எம்பி அர்ச்சுனா நடத்த முற்படுவது வெட்கக்கேடானது. இவ்வாறு பெண் வெறுப்பரசியலை எம்பி அர்ச்சுனா புலிகளின் பெயரால் முன்னெடுப்பது புலிகள் அமைப்பிற்கும் இழுக்கு.

பெண்கள் பொதுவெளியில் வந்தால் அவர்களின் நடத்தை மீது சேறுவாரிப் பூசும் பிற்போக்குவாதி எம்பி அர்ச்சுனா என்பது நிரூபணமாகிவிட்டது. முற்போக்கான ஈழத் தமிழர்களின் அரசியலில் அர்ச்சுனா போன்ற கடும்வலதுசாரிகள் வளருவது ஆபத்தானது. அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். அதற்காக நாய் என விமர்சிப்பதன் மூலம் அர்ச்சுனா தன்னுடைய அரசியல் வறுமையை வெளிப்படுத்தி நிற்கின்றார்.

பல்கலைக்கழகத்தில் ரெக்ஸ்ற்புக் படித்து கார்மக்கானிக்காகவும் டொக்டராக – பொடி மக்கானிக்காகவும் வருபவர்கள் தான் படித்தவர்கள் என்று நம்புபவர்தான் பா உ அர்ச்சுனா. அவருக்கும் அறிவுக்கும் வெகுதூரம். இந்த யாழ்ப்பாணச் சிந்தனைமுறையில் ஊறிய மட்டை அர்ச்சுனா. எட்டாம் தரத்தோடு விடுதலைப் போராட்டத்துக்கு போனவர்களை வே பிரபாகரன் உட்பட, சாதாரணர்களை தன்னுடைய பட்டத்தைக் காட்டி மிரட்டி வருகின்றார். புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட தனக்கு ஆலோசகராக படித்த பாலசிங்கத்தை மதியுரைஞராக வைத்திருந்தார் என்று விளக்கம் வேறு அளித்து வருகின்ற குறைபுத்திக்காரர் தான் பா உ அர்ச்சுனா.

பட்டலந்த ரணிலுக்கு முற்றுப்புள்ளியாக அமையுமா ?

பட்டலந்த ரணிலுக்கு முற்றுப்புள்ளியாக அமையுமா ?

மார்ச் 14 பட்டலந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட வேளை சபாநாயகர் அதன் கொடூரத்தை நினைத்து கண் கலங்கியிருந்தார். ரணில் விக்கிரமசிங்கவின் அல்ஜசீரா நேர்காணலைத் தொடர்ந்து பட்டலந்த அறிக்கை தற்போது பாராளுமன்றத்துக்கு வந்துள்ளது.

மார்ச் 14இல் இவ்வறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வழங்குவதாக பீமல் ரத்நாயக்கா பாராளுமன்றில் தெரிவித்து இருந்தார். மேலும் ஜனாதிபதியின் விசேட குழுவொன்று பட்டலந்த அறிக்கையை ஆராய நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு இவ்வறிக்கையை வைத்து நடவடிக்கைகள் எடுப்பது என்ற கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பட்டலந்தை அறிக்கை சட்டமா அதிபரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் இந்த அறிக்கையை ஆய்வு செய்து அதில் யாருக்கு எதிராகவும் வழக்குத் தொடர முடியுமா என்பதை ஆராய்ந்து முடிவுக்கு வரும். பட்டலந்த அறிக்கையில் யாராவது குற்றம் சாட்டப்பட்டு இருந்தால் குற்றப்பதிவைச் செய்ய முடிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்படும்.

பட்டலந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் முன்னணி சோசலிசக் கட்சியும் அழுத்தங்களை வழங்கியிருந்தது. இந்த அறிக்கை முன்னாள் ஜனாதபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசில் வாழ்வுக்கு முடிவு கட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்குலகம் ரணிலை வைத்துக்கொண்டே ஜேவிபிக்கு ஆப்பு வைக்கும் என்ற எண்ணம் அரசியல் விமர்சகர்களிடம் உள்ளது. அந்த வைகயில் ரணில் பதிவி விலகிய பின்னரும் தீவிரமான அரசியலில் சர்வதேச அரங்கில் ஈடுபட்டு வந்திரக்கின்றார். இந்தப் பட்டலந்த விவகாரம் ரணிலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விவகாரமாக அமைய வாய்ப்புள்ளது.

தமிழ் கட்சிகள் எப்படிக் கூட்டுச் சேர்ந்தாலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது !

தமிழ் கட்சிகள் எப்படிக் கூட்டுச் சேர்ந்தாலும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது !

 

நாடு அனுராவோடு கிராமங்கள் எங்களோடு என்ற கோஷத்தோடு தமிழரசுக் கட்சி களமிறங்கியுள்ளது. ஏனைய தமிழ் கட்சிகளும் தாங்களும் உள்ளுராட்சி சபையை வென்றுவிடலாம் என்ற பகல் கனவில் பல்வேறு வழிகளிலும் காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர். ஆனால் வடக்கு கிழக்கில் அனுர அலை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அனுர அலைக்கு மேலாக தமிழ் கட்சிகளின் தொடர்ச்சியான ஏமாற்று அரசியல் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை மிகவும் எரிச்சலூட்டியுள்ளது. அதனால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கட்சிகளில் இருந்து ஒதுங்கியே நிற்கின்றனர்.

தங்களுடைய பாராளுமன்ற கதிரைகளை வெல்வதற்காக பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், இராசமாணிக்கம் சாணக்கியன், மற்றும் தமிழ் பா உ க்களுடன் தற்போது புதிதாக சுயேட்சைக் குழுவிலிருந்து களமிறங்கி இருக்கும் இராமநாதன் அர்ச்சுனாவும் மக்களை ஏமாற்றும் அரசியலையே செய்துவருகின்றார்.

அர்ச்சுனா இன்னுமொருபடி கீழே சென்று தன்னுடைய கழிசறைத் தனங்களுக்கெல்லாம் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் துணைக்கழைத்து மிகக் கேவலமான அரசியலை மேற்கொள்கின்றார். ஒரு மாற்றத்திற்காக அரச்சுனாவுக்கு வாக்களித்த மக்களைப் பெண்களை அதற்காக வெட்கப்படும் அளவுக்கு அர்ச்சுனாவின் நடத்தையும் பேச்சுக்களும் அமைந்துள்ளது.

வடக்கு கிழக்கின் ஒரே பிரதான தமிழ் தேசியக் கட்சியான கட்தமிழரசுக் கட்சி யாருடனும் கூட்டுச்சேர மறுத்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு உள்ளுராட்சி சபையில் அதிகாரத்தை நிறுவ யாரோடு ஆட்சி அமைப்பது என்பதை தாங்கள் முடிவு செய்வோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் ஆயதப் போராட்ட அமைப்புகளின் கூட்டமைப்பாக உருவாகியுள்ளது. ஆயதப் போராட்டத்தை முன்னெடுத்த ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றோடு மற்றுமொரு முன்னாள் போராளி அமைப்பான முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சியும் இணைந்துள்ளது. தமிழரசுக் கட்சிக்கு அடுத்ததாக வடக்கு கிழக்கு எங்கும் அரசியல் கட்டமைப்பையுடைய கட்சியாக ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளது.

கனடாவில் வாழும் முன்னாள் விடுதலைப் புலிகளின் வேர்கள் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வுப் பகுப்பாளர் முல்லைமதி தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயதம் ஏந்திப் போராடிய முன்னாள் போராளிகள் அமைப்புகளுக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அமைப்புகள் தவறுகள் இழைத்திருந்தாலும் தங்களுடைய பிள்ளைகள் விட்ட தவறை மறந்து, அவர்களுக்கெ வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக் கட்சியிலிருந்து பிரிந்த பலருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளது. கே ரி தவராஜா, எம் கே சிவாஜிலிங்கம், அருந்தவபாலன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களோடு தன்னுடைய வீட்டில் வேலைக்கு அமர்ந்த முத்தையா யோகேஸ்வரி என்ற மலையகச் சிறுமியை பாலியல் வன்புணர்ந்தவர் என்று குற்றம்சாட்டப்பட்ட கெ ரி கணேசலிங்கத்துக்காக வாதாடிய சட்டத்தரணி சிறிகாந்தாவும் கூட்டுச் சேர்க்கப்பட்டுள்ளார். அத்தோடு வட மாகாண சபையின் மிகப் பெரும் ஊழல் மோசடியாளரான பொன் ஐங்கரநேசனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்துள்ளார்.

வடக்கில் கூட்டு இப்படியிருக்க கிழக்கிலும் ஒரு கூட்டு உருவாகியுள்ளது. முன்னாள் கிழக்கு முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் முன்னாள் மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் கூட்டுச் சேர்ந்துள்ளனர்.

தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய அனைத்துக் கட்சிகளும் பெரும்பாலும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தங்களது வாக்கு வங்கியை இழந்தவர்களே. இந்தக் கூட்டுக்களில் உள்ளவர்களில் இணைந்துள்ளவர்களுக்கு வாக்கு வங்கியே இல்லை. இந்தக் கட்சிகள் பலவும் மக்களிடமிருந்து அந்நியப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.

மேலும் இந்தக் கட்சிகள் எதுவும் பா உ அர்ச்சுனாவை உள்வாங்க முயற்சிக்கவில்லை. இது தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பிக்க முன்னரேயே பா உ அர்ச்சுனாவும் மணிவண்ணனும் தெறித்துக் கொண்டனர். பிரேமானந்தாவை கும்பிடும் விக்கினேஸ்வரனின் கட்சி வல்வட்டித்துறையில் சுயேட்சைக் குழுவுடன் இணைந்து போட்டியிடுகின்றது. அதாவது வல்வட்டித்துறை நகராட்சியில் சுயேட்சைக் குழவொன்றை ஆதரிக்கின்றது. ஏனைய 16 உள்ளுராட்சி சபைகளிலும் போட்டியிடுகின்றது.

பா உ அர்ச்சுனாவுக்கு யாழில் உள்ள உள்ளுராட்சி சபையில் போட்டியிடுவதற்கே உறுப்பினர்கள் போதுமானதாக இருப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அர்ச்சுனா இன்னுமொருவருடன் இணைந்து பணியாற்ற முடியாதவர் என்பதை கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தெரியப்படுத்தி இருந்தார். இவருடைய சுயேட்சைக்குழவில் மிஞ்சியிருப்பது கௌசல்யா நரேன் மட்டுமே. அதனால் அர்ச்சுனாவின் அரசியல் எதிர்காலம் விரைவில் அஸ்தமனத்துக்குச் செல்ல உள்ளது.

ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளினதும் நிலை இதுவே. தமிழரசுக் கட்சி மட்டுமே வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியின் எதிர்க்கட்சியாகச் செயற்பட வாய்ப்புள்ளது. நாடு மட்டுமல்ல வடக்கு கிழக்கு தமிழ் கிராமங்களும் அனுராவோடே பயணிக்க முடிவு செய்திருப்பதாகவே தெரிகின்றது.