தமிழரசுக் கட்சியில் பா உ சிறிதரன் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் – ஆய்வாளர்கள் கணிப்பு !
தமிழரசுக் கட்சிக்குள் பா உ சிறிதரனும் எம் ஏ சுமந்திரனும் இருக்கும்வரை கட்சி வளர்ச்சியடையாது என தமிழ் தேசியத்தின் ஆய்வாளர்கள் என தங்களை முன்நிறுத்தும் ஊடகவியலாளர் நிலாந்தன் மற்றும் பொங்கு தமிழ் கணேசலிங்கம் ஆகியோர் டான் தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஆய்வாளர் வி சிவலிங்கம் பா உ எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்பட முடியாவிட்டால் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் அல்லது தானாக கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் எனத் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியிலிருந்து இவ்விருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவது தவிர்க்க முடியாதது. கட்சி தற்போது எம் ஏ சுமந்திரனின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாலும் மத்திய குழுவில் சுமந்திரனுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாலும் பா உ சிறிதரன் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு அல்லது வெளியேற்றப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பா உ சிறிதரன் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாராளுமன்றத்தில் அவர் ஆசனத்தை வென்று எம் ஏ சுமந்திரன் ஆசனத்தை இழந்தார்.
இருந்த போது பா உ சிறிதரனால் கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தற்போது உள்ளுராட்சி மாகாணசபைத் தேர்தலில் வேட்ப்புமனு தாக்கல் செய்வதில் இன்னுமொரு நெருக்கடிநிலை உருவாகும்.
ஆனால் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். பா.உ சிறிதரன் இது தொடர்பில் மேலும் தெரிவித்த போது, மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதாக இருந்தால், முதலில் பாராளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால் 50 சதவீத தொகுதி மற்றும் விகிதாசார தேர்தல் முறைமைக்கு தென்னிலங்கையிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. நாமும் அதனை எதிர்க்கிறோம். மாகாணசபைத் தேர்தல் இவ்வாறானதொரு இழுபறி நிலையில் தான் இருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு நான் தயாரில்லை. அதேபோன்று எமது கட்சி வழக்கு நிலுவையில் இருக்கிறது. கட்சி உறுப்பினர்களே வழக்கினைத் தாக்கல் செய்திருக்கின்றனர். இது தாயை நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டு, தாயிடம் உணவு கேட்பதுபோல் உள்ளது. நாங்கள் செய்வது பதவிகளுக்கான அரசியல் அல்ல. மாறாக இனவிடுதலையை இலக்காகக்கொண்ட அரசியலாகும். பதவிகளுக்காக அரசியல் செய்வது தவிர்க்கப்படவேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
தங்களை தமிழ் தேசியத்தின் ஆய்வாளர்களாக முன்நிறுத்தும் நிலாந்தனும் பொங்குதமிழ் கணேசலிங்கமும் தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளுக்கிடையே உள்ள தனிப்பட்ட முரண்பாடுகளே தமிழ் தேசியம் பலவீனப்படுவதற்கு முக்கிய காரணம் எனத் தெரிவிக்கின்றனர். அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தன்னை வளர்த்துக்கொள்ளத் தவறிவிட்டது எனச் சுட்டிக்காட்டினர்.
தேசிய மக்கள் சக்திக்கும் பா உ அர்ச்சுனாவுக்கும் அச்சமடைந்து தான் தமிழ் தேசியக் கட்சிகள் புதிய கூட்டணிகளை உருவாக்குவதாக நிலாந்தனும் கணேசலிங்கமும் தெரிவிக்கின்றனர்.