யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடிப் புத்தியை காட்டும் எம்பி அர்ச்சுனாவின் நாத்தடிப்பு !
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை கைநாட்டு; எழுத வாசிக்க தெரியாதவர் என எம்.பி இராமநாதன் அர்ச்சுனா அவமாரியாதையாக நேற்றைய நாடாளுமன்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றியிருந்தார்.
சமீபத்தில் அமைச்சர் கப்பலில் தோட்டத் தொழிலாளராக வந்த வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் நாங்கள் அதாவது அர்ச்சுனாவின் யாழ்ப்பாண வம்சாவளியினர் கப்பல் கட்டி விட்ட மேட்டுக்குடியினர் என மட்டம் தட்டி வலைத்தளத்தில் பேசி இருந்தார். அர்ச்சுனா கடற்தொழில் அமைச்சர் மீது காட்டும் வன்மம் தான் வெள்ளாள யாழ்ப்பாண மேட்டுக்குடியைச் சேர்ந்தவன் என்ற மேலாதிக்க மனோபாவத்தின் காழ்ப்புணர்வின் வெளிப்பாடு எனவே கருதப்படுகிறது. இராமலிங்கம் சந்திரசேகர் கடற்தொழில் அமைச்சாராக வந்ததை அர்ச்சுனாவைப் போன்று குறுந் தமிழ்த்தேசிய வெள்ளாள மேட்டுக்குடியினரும் விரும்பவில்லை. ஒரு மலையகத் தமிழன் அதுவும் ஒரு தோட்டத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் யாழ்ப்பாணத்தானை ஆளவா? என்ற காழ்ப்புணர்வை பலர் மனதில் வைத்துள்ளார்கள். எம்பி அர்ச்சுனா சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் காட்டுகிறார்.
கடந்த புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் பா உ ரஜீவனின் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் பிரேரணை விவாதத்தில்; “சில நாய்கள் வாந்தி எடுத்துவிட்டு அதனையே திருப்பி உண்ணும். இவ்வாறான நாய்களுக்கு இதுவொரு வருத்தம்” என்று பா உ அர்ச்சுனா மீதான தனது அதிருப்தியை அமைச்சர் சந்திரசேகர் வெளிப்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் தனது பங்கிற்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை நாய் என குறிப்பிட்டுள்ளார் எம்.பி. இராமநாதன் அர்ச்சுனா.
மேலும் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் வடக்கின் சுகாதார நிலை தொடர்பில் பேசிய எம்.பி இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாணத்தின் மொத்த சுகாதார அமைச்சின் செலவுக்கு 0.019 வீதம் பிச்சை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அத்தோடு, முதுகெலும்பு இருந்தால் நான் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என சுகாதார அமைச்சருக்கு சவால் விடுத்துள்ள எம்.பி இராமநாதன் அர்ச்சுனா, யாழ்ப்பாணத்திலும், வடக்கு, கிழக்கிலும் சுகாதாரத்துறை ஒழுங்கற்று காணப்படுகின்றது எனவும் கூறியுள்ளார்.