பட்டலந்த விசாரணை அறிக்கை ஒருவாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் !
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்குபற்றிய அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஔிபரப்பான Head to Head நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துகள் பெரும் சலசலப்பை இலங்கை அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து 88 தொடக்கம் 90 காலப்பகுதியில் இடம்பெற்ற பட்டலந்த படுகொலைகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை பற்றிய தகவல்கள் மீள சமூக வலைத்தளங்களில் தூசுதட்டப்பட்டு வருகிறது.
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை இந்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பட்டலந்த வதை முகாமுடன் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போன்றோர் மனித உரிமைகளை பாரதூரமான முறையில் மீறியுள்ளதால் அவர்களது பிரஜாவுரிமையை பறிப்பதற்கு தேவையான மேலதிக அதிகாரத்தை உயர் நீதிமன்றத்திற்கு வழங்குமாறு இது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு முக்கிய பரிந்துரையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரஜாவுரிமை பறிக்கப்படலாம் என தகவல்கள் பரப்பப்படுகின்றன.