ரெலோ முக்கியஸ்தர் விந்தனின் புதிய அரசியல் அவதாரம் !
தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்னம் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். அவரும் அவரது மகனும் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் முன்னிலையில் மார்ச் 10 ஆம் திகதி தமிழரசுக் கட்சியில் இணைந்து உறுப்புரிமைகளையும் பெற்றுக் கெண்டுள்ளனர்.
ரெலோக்குள் நிலவிய உட்பூசல்கள் காரணமாகவே விந்தன் வெளியேறி தமிழரசுக் கட்சிக்குள் சரணடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
மார்ச் 23 இல் 2024 இல் வவனியாவில் நடந்த ரொலோவின் பொதுக்குழு கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் அக்கட்சியின் தலைவராகவும் விந்தன் நிர்வாகச் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். பின்னர் ஏற்பட்ட உட்கட்சி முறுகல்களை தொடர்ந்து விந்தன் கனகரட்ணம் பாராளுமன்றத் தேர்தலின் போது ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்தார். நிதிச் செயலாளர் சுரேன் குருசாமியையும் விமர்சித்து யாழ் ஊடக அமையத்தில் பேட்டியளித்திருந்தார். விந்தன் பாராளுமன்ற தேர்தலில் யாழ்மாவட்டத்தில் போட்டியிட தயாராக இருந்த போதும் அவருடைய பெயர் ரெலோவின் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
அதேநேரம் ரெலோ கட்சி விந்தன் கனகரட்ணம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியில் இருந்து விலக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.