பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத இலங்கைக்கு பயங்கரவாத தடைச்சட்டம் தேவையில்லை !

பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத இலங்கைக்கு பயங்கரவாத தடைச்சட்டம் தேவையில்லை !
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டின் அடிப்படையில் உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
பொருளாதார விஞ்ஞானம் மற்றும் சமாதானத்திற்கான சர்வதேச நிறுவனத்தால் பயங்கரவாத தாக்கத்தின் அடிப்படையில் நாடுகளின் தரவரிசையின்படி உலகளாவிய பயங்கரவாத குறியீடு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த குறியீட்டில் பரிசீலிக்கப்பட்ட 163 நாடுகளில் இலங்கை 100 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக 12வது வருடாந்த பயங்கரவாத குறியீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி முதல் மூன்று இடங்களில் புர்கினா ஃபாஸோ (Burkina Faso – West African country), பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகள் காணப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டில் இந்தக் குறியீட்டில் 36வது இடத்திலிருந்த இலங்கை இந்த வருடம் 100 இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
64 இடங்கள் பின்தங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தவொரு தீவிரவாதச் சம்பவங்களும் பதிவாகாத நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பின்னர் இதுவரை பாரிய பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லை. அந்த வகையில் இலங்கை பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் குறைப்பதில் தெற்காசிய வலயத்தில் மிகவும் முன்னேறிய நாடாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் தொடர்ச்சியாக நாட்டிலிருந்து புலம்பெயரும் தமிழர்களின் அகதி விண்ணப்ப கோரிக்கைகளில் இந்த விடயம் கணிசமானளவு தாக்கம் செலுத்தலாம். தமிழர்களைப் பொறுத்தவரை யுத்தத்தின் பின்னர் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளாலேயே அவர்கள் புலம்பெயர்ந்து வருவதாக தமது அகதி விண்ணப்பக் கோரிக்கைகளில் குறிப்பிடுகின்றனர்.
அரச துணை இராணுவப் படைகளின் அட்டகாசங்கள், அரச புலனாய்வுத்துறையினரின் அதாவது பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் கைதுகள், சித்திரவதைகள் மற்றும் விசாரணைகள், தீர்க்கப்படாத காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, விடுவிக்கப்படாத காணிகள், வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் மற்றும் சட்டவிரோத விகாரைகள் போன்ற இன்ன பல காரணங்களே அகதித் தஞ்ச கோரிக்கைகளுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகின்றது. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை மழை பொய்ந்து முடிந்தும் தூறல் விடவில்லை என்ற நிலை தான் உள்ளது.
இதேவேளை உள்நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கூறி தமிழர் பகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கம் குறித்து ஆக்கப்பூர்வமான அறிவிப்புக்களை வெளியிடாத சூழல் நீடிப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்ககோரியும் அத்தியாவசிய பொருட்கள் மீதான வற் வரியை நீக்க கோரியும் யாழில் கையெழுத்து போராட்டம் ஒன்று நேற்றையதினம், மக்கள் பேரவை இயக்கத்தின் எற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது. இந்த கையெழுத்து போராட்டத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
புதிய என்பிபி அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தீர்வை முன்வைக்கும் போது தான் இலங்கையில் நீடித்த சமாதானத்தை காண முடியும்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *