
யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். ஒக்ரோபர் 11 (நேற்று) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இமெல்டா சுகுமார் இதனைத் தெரிவித்துள்ளார். யாழ் குடாநாட்டில் குறிப்பாக பல்கலைக்கழகச் சூழலில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாகவே என்றுமில்லாதவாறு இத்தற்கொலை முயற்சிகள் அதிகரித்து இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நிகழ்ந்து ஒரு வாரத்திற்குள் இப்பாரிய குற்றச்சாட்டை அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் வெளியிட்டு உள்ளார்.யாழ் பல்கலைக்கழகம் தொடர்பான நீண்ட விவாதம் யூலை 01 2010 முதல் தேசம்நெற் இல் இடம்பெற்று வருகின்றது. இதில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பாலியல் துஸ்பிரயோகம் உட்பட பல்வேறு சீரழிவுகள் பற்றிய கட்டுரைகள் வெளியாகி உள்ளமை தெரிந்ததே. அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் குற்றச்சாட்டுகள் தேசம்நெற் இல் அம்பலப்படுத்தப்பட்ட யாழ் பல்கலைக்கழக நிர்வாகச் சீரழிவையும் கல்வித் தகமையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சியையும் மேலும் உறுதிப்படுத்தி உள்ளது.யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பாலியல் துஸ்பிரயோகம் உட்பட அங்குள்ள நிர்வாகச் சீர்கேடுகளுக்கு முடிவுகட்ட இவை தொடர்பான உடனடியான சுயாதீன விசாரணைக்கு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் உத்தரவிட வேண்டும். இவ்வாறான ஒரு விசாரணைக்கு யாழ் மாவட்டத்தின் நிர்வாகத்தில் அதிகாரத்தைக் கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முழுமையான ஆதரவளிக்க வேண்டும். இவற்றின் மூலமாக மட்டுமே யாழ் பல்கலைக்கழகத்தில் இவ்வாறான சீரழிவுக்கு முடிவு கட்டுவதுடன் யாழ் பல்கலைக்கழகத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல முடியும்.யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் விரிவுரையாளர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர் என சுவரொட்டிகளை ஒட்டியது தெரிந்ததே. இறுதி எச்சரிக்கை என்ற தலைப்பில் வெளியான சுவரொட்டி
”இறுதி எச்சரிக்கை
போரின் கோரப்பிடியில் சிக்கி தமது வாழ்வைத் தொலைத்த உறவுகள் மற்றும் சொத்துக்களை இழந்த வன்னி மக்கள் அலல்படும் வேளையில் தமது கலாச்சார விழுமியங்களை சீர்குலைக்கும் ஒரே நோக்கமாகவும் சமூக நிறுவனமான யாழ் பல்கலைக்கழகப் பெயரைக் குலைக்கும் நோக்கமாகவும் சில விரிவுரையாளர்களின் நடத்தை காணப்படுகிறது. குறிப்பாக மாணவிகளை வற்புறுத்தி தமது காம இச்சைகளை தீர்த்து வருகின்றனர். ஆலயம் போல் காணப்படும் இப்பல்கலைக்கழகத்தினதும் எமது சமூகத்தினதும் கலாச்சாரத்தினைச் சீரழிக்கும் இவ்வாறான செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே இவர்களது இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல் இன்னும் சில காலப்பகுதியினுள் உங்களுக்கான தண்டனைகள் நிறைவேற்றப்படும். இது உங்களுக்கு நாங்கள் விடுக்கும் இறுதி எச்சரிக்கை. இதனை நீங்கள் அலச்சியப்படுத்தினால் உங்கள் மனைவிகள் விதவையாவதை யாராலும் தடுக்க முடியாது.
எனவே கீழ் குறிப்பிடப்படும் விரிவுரையாளர்கள் உடனே இந்த நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.
இளங்குமரன்
விசாகரூபன்
நவரத்தினம்
அருந்தாகரன்
எச்சரிக்கைகளை அலச்சியப்படுத்தினால் தண்டனைகள் நிறைவேற்றப்படுவது தவிர்க்க முடியாதது.
மாணவர் சமூகம்
யாழ் பல்கலைக்கழகம்.”
இச்சுவரொட்டி ‘மனைவிகள் விதவையாக்கப்படுவார்கள்’ போன்ற கடுமையான தண்டனைகளைக் குறிப்பிட்டிருந்த போதும் இது மாணவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு இந்த எச்சரிக்கையை ஒருவழிமுறையாகவே பயன்படுத்தி உள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவிகளின் தற்கொலை முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் மௌனமாக தமக்குள் அழுகின்ற பல நூற்றுக் கணக்காண மாணவிகளின் வாழ்நிலையை எதிரொலித்து உள்ளார். முன்னர் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளின் பின்னணியில் இவ்வாறான பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளமை கண்டறியப்பட்டு இருப்பதையும் அரச அதிபர் உறுதிப்படுத்தி உள்ளார். பெயர் குறிப்பிடாத வைத்திய அதிகாரி ஒருவர் இதனைத் தனக்கு உறுதிப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஏற்கனவே இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் மற்றும் தற்போது இடம்பெறுகின்ற பாலியல் துன்புறுத்தல்களின் பின்னணியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களே உள்ளதாகவும் அரச அதிபர் குற்றம்சாட்டி உள்ளார்.
அண்மையில் யாழ் மாவட்ட சிறார்கள் மீதான துஸ்பிரயோகங்கள் தொடர்பாக இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போதே சுகாதார திணைக்களப் பெண் வைத்திய அதிகாரி இந்தத் தகவல்களை வெளியிட்டதாகவும் அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். அண்மைக் காலங்களில் மட்டும் 77க்கும் அதிகமான சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்று இருக்கின்றமை தொடர்பான பதிவுகள் வந்திருப்பதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்தும் அமைப்புக்கள் அண்மைக் காலங்களில் வேகமாக அதிகரித்து இருக்கின்றமை அதிர்ச்சியை தருவதாயும் அரச அதிபர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அரச அதிபருடைய இக்குற்றச்சாட்டு யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நியமனத்திற்கான காலகட்டத்தில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அரச அதிபர் குற்றம்சாட்டிய விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் போன்றோரே மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கின்ற உபவேந்தருக்கான பதவிகளிலும் போட்டியிடுகின்றனர். பாலியல் துஸ்பிரயோகம் அதிக அளவில் இடம்பெறுவதாகக் குற்றம்சாட்டப்படும் கலைப்பிரிவுத் தலைவர் பேராசிரியர் என் ஞானகுமாரன், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சத்தியசீலன், தற்போதைய உபவேந்தர் என் சண்முகலிங்கம் ஆகியோர் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நியமனத்திற்கு போட்டியிடுபவர்களில் முக்கியமானவர்கள். இவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் பாலியல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் ஸ்தாபனமயப்படுத்த காரணமாக இருந்ததுடன் இவர்களே இவ்வாறான பாலியல் மற்றும் நிர்வாகத் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
சுயாதீன விசாரணைக் குழு ஒன்றின் மூலம் யாழ் பல்கலைக்கழக பாலியல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு யாழ் பல்கலைக்கழகத்தை உயர்நிலைக்கு இட்டுச்செல்வதற்கு இதுவே சிறந்த தருணமாக உள்ளது.
யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரின் குற்றச்சாட்டுகள் பற்றி தேசம்நெற்க்கு கருத்து வெளியிட்ட யாழ் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த கபொத உயர்தர மாணவிகள், ‘நாங்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கே படிக்கின்றோம். ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கதைகளை மூத்த சகோதரிகள் சொல்வதை கேட்டால் பயமாக இருந்தது. அங்கு செல்வதற்கு பயந்தே இருந்தோம். அரசாங்க அதிபரின் கவனத்திற்கு இது வந்தது ஆறுதலாக உள்ளது’ எனத் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:
முருகையன் (1935-2009) – நகலும் நாடகமும் : நட்சத்திரன் செவ்விந்தியன்
சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்
‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்
பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்
இன்று Aug 29 -வடக்கு – கிழக்கு – மலையக தமிழ் பேசும் மக்களின் கல்வியின் எதிர்காலம் – பேராசிரியர் ரட்ண ஜீவன் ஃகூல் உடன் சந்திப்பும் கலந்துரையாடலும்
மாற்றத்திற்கான நம்பிக்கையுடன் பேராசிரியர் ஹூல் யாழ் செல்கின்றார்! : த ஜெயபாலன்
‘Tamillain-Barre’ Syndrome’ மும் தமிழ் சமூகத்திற்கான புதிய அரசியல் கலாச்சாரத்தின் அவசியமும் : த ஜெயபாலன்
யாழ் பல்கலைக்கழகம் – முப்பத்தாறு வருடங்கள் – முழுமையான சீரழிவு : நட்சத்திரன் செவ்விந்தியன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் ரட்ன ஜீவன் ஃகூல் யை ஆதரிப்போம்! : ரி கொன்ஸ்ரன்ரைன்
தவித்துக் கொண்டிருக்கும் நமது சமூகத்திற்காய் உழைப்போம்: யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியம்
பேராசிரியர் கைலாசபதி: ஒரு பெரு விருட்சமும் சில சிறு செடிகளும் : கரவை ஜெயம்
‘யாழ் பல்கலைக்கழக மாணவிகள் தற்கொலை முயற்சி!’ யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் – அரச அதிபர் சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். : த ஜெயபாலன்