வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டம் வவுனியாவில் நடைபெறவுள்ளதாகவும் அதில் ஜனாதிபதி கலந்து கொள்வார் எனவும் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். நேற்று திங்கள் கிழமை மாலை யாழ். செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரச அதிபர் இத்தகவலைத் தெரிவித்தார்
எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டம் நேற்று யாழ். செயலகத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அமைச்சர் டகளஸ் தேவானந்தா தலைமை வகித்தார். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தங்கள் மாவட்டங்களின் பிரச்சினைகளை விளக்கிக் கூறுவதற்கு ஒவ்வொரு அரச அதிபருக்கும் பத்து நிமிடங்கள் ஒதுக்கப்படும் எனவும், நாளை புதன்கிழமை வவுனியாவிற்கு ஜனாதிபதி செயலக அதிகாரிகள் வரவுள்ளதாகவும், அபிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்துரையாடவுள்ள விடயங்கள் குறித்து அவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும் எனவும் யாழ்.அரச அதிபர் தெரிவித்துள்ளார்.