விசுவமடுவில் கடந்த யூன் மாதம் நடைபெற்ற பாலியல் வல்லுறவு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இராணுவச் சிப்பாய்களுக்கும் எதிரான வழக்கு விசாரணை நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. மேல் விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வழக்கில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை விடுவிக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் 20ஆம் திகதி வழங்குவதாக கூறிய நீதவான் நால்வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கிளிநொச்சி விசுவமடுவில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட சில நாட்களின் பின்னர் வீட்டில் தனியாகவிருந்த இரு பெண்கள் மீது பாலியல் வல்லறவு புரிந்ததாக நான்கு சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நேற்று இடம்பெற்ற விசாரணைகளின் போது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், அவரது சகோதரன், பெண்ணின் பத்து வயது மகன் ஆகியோர் முக்கிய சாட்சிகளாக சாட்சியமளித்தனர்.