படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் கடந்த சனிக்கிழமை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற அமர்வுகளில் சாட்சியமளிக்கச் சென்ற பலருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 1.30 மணியுடன் ஆணைக்குழுவின் அமர்வுகள் முடிவடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போனவர்களின் உறவினர்கள் உட்பட பலர் நேற்று நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் முன்னாள் பிரஜைகள் குழுத்தலைவர் கதிர் பாரதிதாசன் நல்லிணக்க ஆணைக்கழுவின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இவ்விடயம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.