November

November

துணுக்காய், முழங்காவில் பிரதேசங்களுக்கு ஜனாதிபதி நேற்று திடீர் விஜயம். ‘நான் உங்கள் சொந்தக்காரன்’: மக்களுடன் தமிழில் உரையாடினார்

0511mainpic.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய்க்கும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முழங்காவிலுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திடீர் விஜயம் மேற்கொண்டார்.

துணுக்காய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அங்கு மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்தார். முழங்காவில் 651 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் வைத்து மனிதாபிமான நடவடிக்கைக்குப் பங்களித்த முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட படை வீரர்களை சந்தித்த ஜனாதிபதி முழங்காவில் ஆஸ்பத்திரிக்கும் விஜயம் செய்தார்.

துணுக்காய் பகுதியில் மீள்குடியேற்றப்பட்டு வரும் பெருந்திரளான மக்களை துணுக்காய் 65 ஆவது படைப் பிரிவு தலைமையத்தில் வைத்து ஜனாதிபதி சந்தித்தார். மேடைக்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், கிளிநொச்சி, முல்லைத்தீவு கட்டளையிடும் தளபதிகள், முல்லைத்தீவு அரச அதிபர் இமெல்டா சுகுமார் உட்பட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மீள்குடியேற்றப்படும் மக்கள் மத்தியில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி தனது உரை முடிவடைந்த பின்னர் அவர்களின் அருகில் சென்று மக்களுடன் சுமுகமாக உரையாடினார். மக்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்தத் தேசத்தை மீண்டும் ஒரே தேசிய கொடியின் கீழ் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார். ‘நான் உங்களின் தோழன்; சொந்தக்காரன்; நீங்கள் என்னை நம்பலாம்; உங்களுக்கு சகல வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் எனவும் ஜனாதிபதி கூறினார். மேலும் உரையாற்றிய ஜனாதிபதி :-

உங்களை மீளக் குடியமர்த்துவது போல ஏனைய மக்களையும் விரைவில் குடியமர்த்த உள்ளோம். அதற்காக முதலில் மிதிவெடிகளை அகற்ற வேண்டும். அந்தப்பணியை துரிதமாக பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீங்கள் நீண்டகாலமாக அனுபவித்த கஷ்டங்களை நான் நன்கு அறிவேன். பயங்கரவாதிகள் உங்களை தவறான பாதையில் இட்டுச் சென்றனர். அதனால் நீங்கள் அங்கும் இங்குமாக கஷ்டப்பட நேரிட்டது. எமது மக்களுக்கு சொந்த நாட்டிற்குள் அகதிகளாக இடம்பெயர நேரிட்டது.

இது எமது நாடு. இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒரே தாயின் பிள்ளைகளாக வாழ வேண்டும். இங்கு இன, மத, குல, பிரதேச வேறுபாடு இருக்க முடியாது. எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம். இந்த நாட்டின் மீது அன்பு காட்டும் அனைவரும் இலங்கை மக்களே. நீங்கள் பணயக் கைதிகளாக்கப்பட்ட அந்த கஷ்ட காலம் இனி கிடையாது. புதிய வாழ்க்கை உருவாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இந்த நாட்டில் வாழும் சகல மக்களையும் பாதுகாக்க வேண்டியது எனது பொறுப்பாகும்.

அதனை நிச்சயம் நான் நிறைவேற்றுவேன். சகல மக்களும் பயம், சந்தேகம் இன்றி வாழவேண்டும். நீங்கள் சம உரிமையுடன் வாழும் சூழல் உருவாக்கப்படும். துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் தலைதூக்க இனியும் இடமளியோம். வடக்கு வசந்தம் திட்டத்தினூடாக இதற்கு முன்பு காணாத அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இடம்பெயர்ந்த சகல மக்களுக்கும் நிச்சய மாக வீட்டு வசதி வழங்கப்படும். சகலருக்கும் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உருவாகும். ங்கள் பிள்ளைகள் தான் உங்கள் சொத்து. அவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும். அதனூடாக அவர்கள் நாட்டில் முக்கிய பதவிகளை பெற வேண்டும்.

நீங்கள் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்றார்.

அடுத்து முழங்காவில் 651 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்குச் சென்ற ஜனாதிபதி படைவீரர்களை சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்தார். சுமார் 4 ஆயிரம் படை வீரர்கள் இங்கு குழுமியிருந்தனர். அதனைத் தொடர்ந்து முழங்காவில் ஆஸ்பத்திரிக்கும் ஜனாதிபதி விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.

எவ்வித விசாரணையுமின்றி ஜெனரல் பொன்சேகா நாடு திரும்பினார்

031109sarathfonseka.jpgபிரதான பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக்கா நேற்று புதன்கிழமை காலை அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியுள்ளார். இவர் நாடு திரும்புவதற்கு முன்னதாக அமெரிக்காவின் உள்துறை பாதுகாப்பு திணைக்களத்தினாலோ அல்லது அமெரிக்க அரசாங்கத்தின் ஏனைய முகவர் அமைப்புக்களினாலோ எவ்வித விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படவில்லையென வெளிவிவகார அமைச்சின் அதிகாரி நேற்றுத் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவை நேற்று 04 ஆம் திகதி ஒக்லாமா சிட்டியில் இடம்பெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அந்நாட்டின் உள்துறை பாதுகாப்பு திணைக்களத்திடமிருந்து அவருக்கு கடந்த மாத இறுதியளவில் எழுத்து மூலமான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஜெனரலை உள்துறை பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரியொருவர் தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டிருந்தார்.

இதற்கிடையில் பிரதான பாதுகாப்பதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா எவ்வித கேள்விகளுக்கும் உட்படுத்தப்படாமல் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.

இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-இலங்கை அரசாங்கமும், ஜனாதிபதியும் பிரதான பாதுகாப்பு அதிகாரியின் சார்பாகவே எப்போதும் இயங்கும் என்பதில் முப்படைகளின் தளபதி என்ற வகையில் நாட்டின் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியுமான பாதுகாப்பு செயலாளர் மற்றும் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஆகியோர் உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளனர்.

உயர் பதவியை பலவீனப்படுத்தவோ அதன் மதிப்பை குறைக்கச் செய்யவோ ஒருபோதும் இடமளிக்கமுடியாது என்று கூறப்பட்டுள்ளது. இதேவேளை இவ்விடயம் தொடர்பாக ரோஹித்த போகொல்லாகம கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

பாதுகாப்பு படையினருக்கு உடனடி சம்பள அதிகரிப்பு

சகல பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் நேற்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் உடனடியாக சம்பள உயர்வு வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தாய் நாட்டை பயங்கரவாதப் பிடியில் இருந்து மீட்டு அனைத்து மக்களும் ஐக்கிய இலங்கையினுள் ஒன்றாக வாழும் நிலையை உருவாக்கிய படை வீரர்களை கெளரவிக்கும் வகையிலே சம்பள உயர்வு வழங்க முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.

கிளிநொச்சி, முழங்காவில் பகுதிக்கு நேற்று புதன்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு படைத்தளங்களில் பணிபுரியும் சுமார் 4 ஆயிரம் படை வீரர்கள் முன்னிலையில் உரையாற்றியபோதே ஜனாதிபதி படைவீரர்களுக்கான சம்பள அதிகரிப்பு பற்றிய தகவலைத் தெரிவித்தார்.

பாடசாலை சீருடை விநியோகம் நாளை ஆரம்பம். முதல் தொகுதி யாழ்குடாவுக்கு

பாடசாலை மாணவர்களுக்கான 2010 ஆம் ஆண்டுக்கான இலவச சீருடை விநியோகம் நாளை முதல் ஆரம்பமாகின்றது. இதன் முதல் தொகுதி ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

1200 மில்லியன் ரூபா செலவில் நாற்பது லட்சம் மாணவர்களுக்கான நான்கு வகையான,  65 லட்சம் சீருடைகளை விநியோகிக்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடு முழுவதிலுள்ள 92 வலய கல்வி காரியாலயங்களுக்கு சீருடைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இரண்டு லட்சம் சீருடைகள் அடங்கிய முதல் தொகுதி நாளை ஏ-9 வீதியூடாக யாழ். வலயக் கல்வி காரியாலயத்துக்கு வைபவ ரீதியாக அனுப்பி வைக்கப்படவுள்ளன. இந்நிகழ்வு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தலைமையில் கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ளது. 7 லட்சம் ரூபா போக்குவரத்து செலவில் இவை அனுப்பி வைக்கப்படவுள்ளன.சீருடை விநியோகத்துக்காக பத்து மில்லியன் மீட்டர் துணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை அரசாங்க பாடசாலை  மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தக விநியோகத்தை உத்தியோகபூர்வமாக இம்முறை யாழ்ப்பாணம் வேம்படி மகா வித்தியாலயத்தில் டிசம்பர் 07 ஆம் திகதி ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அன்றைய தினத்திலேயே சீருடைகளையும் வழங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. 

வடக்கில் 397 பாடசாலைகளை புனரமைக்க ரூ. 200 மில்லியன்

வட மாகாணத்திலுள்ள 397 பாடசாலைகளைப் புனரமைக்கவென 200 மில்லியன் ரூபா ஒதுக்கப் பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி.)யின் பாராளுமன்ற உறுப்பி னர் ஆர். பி. ஏ. ரணவீர பத்திரன கேட்டிருந்த வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதேநேரம் இடம்பெயர்ந்துள்ள சகல மாணவர்களுக்கும் டிசம்பர் மாதம் 7ம் திகதிக்குள் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இவர்களுக்கென 130 மில்லியன் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சரத் பொன்சேகாவிடம் அமெரி. விசாரணை நடத்தாத வகையில் இராஜதந்திர நடவடிக்கை – போகொல்லாகம

rohitha-bogollagama_s.jpgகூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் அமெரிக்க சுதேசிய பாதுகாப்புத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுக்காத வகையில் சகல ராஜதந்திர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவருடனும் அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதுவருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்; ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கக் கூடிய சகல ராஜதந்திர ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்கியுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார். இதன் பிரதிபலன்கள் ஜனாதிபதிக்கு உள்ள சர்வதேச பலத்தை வெளிப்படுத்துவதாக அமையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை இலங்கை அரசுக்குள்ள சிறப்புரிமைத் தகவல்களை மூன்றாந் தரப்புக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் அரச அதிகாரி ஒருவருக்கு கிடையாது என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டாரவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின் ஜே. வி. பி. எம்.பி. அனுர குமார திசாநாயக்க அமெரிக்கா சென்றுள்ள ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்பான கவனயீர்ப்புப் பிரேரணை ஒன்றை சபையில் முன்வைத்தார்.

இலங்கை போர்க் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா முயற்சி: பழ. நெடுமாறன்

0511nedu.jpgஇலங்கை போர்க் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா உதவி செய்வதாகக் கூறி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் போரின் போது தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் இழைத்த குற்றங்கள் குறித்தும், இதில் ராஜபக்சவின் சகோதரரும் இலங்கை பாதுகாப்புத் துறை செயலருமான கோத்தபய ராஜபக்சவின் பங்கு குறித்தும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் இலங்கை படைகளின் கூட்டுத் தளபதி சரத் பொன்சேகாவிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது. இந்த விசாரணையைத் தடுத்து நிறுத்தவும், தனது சகோதரரைக் காப்பாற்றவும் இலங்கை அதிபர் ராஜபக்ச, இந்தியாவின் உதவியை நாடியுள்ளார்.

இதற்காக அனுப்பப்பட்ட தூதர்கள் தில்லியில் பிரதமரையும், உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியதாக செய்திகள் கிடைத்துள்ளன. இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்களை கொன்று குவித்த போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற இந்திய அரசு உதவுவது தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல. மனித நேயமற்ற செயலும் ஆகும்.

ஏற்கெனவே, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசு மீது கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தைத் தோற்கடிக்க இந்தியா வரிந்துகட்டிக் கொண்டு செயல்பட்டது. இப்போதும் அதேபோல செயல்படுமானால், தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்று தெரிவித்துள்ளார் பழ. நெடுமாறன்.

பிரதி கல்வி அமைச்சர் தலைமையிலான குழு யாழ். விஜயம்

யாழ். தீவகப் பிரதேசங்களிலுள்ள பாட சாலைகள் மற்றும் அரச கல்வி நிறுவனங்களின் கல்வி மேம்பாடு, பெளதிக, ஆளணி மற்றும் இதர பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் முகமாக பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தலைமையிலான குழுவொன்று எதிர்வரும் 06, 07, 08, 09 ஆகிய திகதிகளில் யாழ். நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, புங்குடுதீவு, வேலணை, காரைநகர், எழுவைதீவு உள்ளிட்ட தீவகப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளது.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். தீவகப் பிரதேசங்களிலுள்ள மாணவர்களின் கல்வித்துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை, மேற்கொள்வதற்காக செல்லவுள்ள இக் குழுவில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர், பணிப்பாளர்கள், வடக்கின் வசந்தம் பிரிவின் அதிகாரிகள், பிரதிக் கல்வி அமைச்சர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளார்கள்.

ஜனவரி முதல் சம்பள உயர்வு – நவம்பர், டிசம்பர் நிலுவைகளுடன் வழங்கப்படுமென ஜனாதிபதி அறிவிப்பு

041109ma.jpgஜனவரி மாதத்திலிருந்து சகல ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (03) அறிவித்தார். புதியதொரு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக சம்பள உயர்வு வழங்குவதோடு நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான நிலுவையும் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரத் தொழிலாளர் சங்கத்தின் ஏழாவது தேசிய சம்மேளனத்திலேயே ஜனாதிபதி இந்த அறிவிப்பைச் செய்தார். “அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பரில் சமர்ப்பிக்கவிருந்தேன். ஆனால், புதிய பாராளுமன்றத்திற்கு முன் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து அதனைப் பாராளுமன்றத்தில் கட்டிப்போட வேண்டாமெனக் கூறினார்கள். அதனை நான் ஏற்றுக் கொண்டேன்.

ஆனால், ஊழியர்களின் நலனை கவனிப்பதற்கு ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்றவகையில் புதிய பாராளுமன்றம் வரை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஜனவரி மாதம் நிச்சயம் சம்பள உயர்வைப் பெறுவீர்கள். இரண்டு மாத நிலுவையும் கிடைக்கும்” என்று தெரிவித்தார் ஜனாதிபதி.

இதனைத் தாம் இதற்கு முன்பும் கூறியதாகவும் ஆனால், சம்பந்தப்பட்டவர்களைத் தனது அறிவிப்பு சரியாக சென்றடையவில்லையென்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இதில் என்ன பிரச்சினை இருக்கிறது? அரசியல் பிரச்சினை!

அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தி மக்களை அழுத்தத்துக்குள்ளாக்க சிலர் முயற்சிக்கின்றார்கள். எனவே சூழ்ச்சிகளுக்கு இடமளிக் காதீர்கள்” என்றார் ஜனாதிபதி. அதேநேரம் 180 நாள் வேலை செய்த அனைவரையும் நிரந்தரமாக் குவதற்கு நடவடிக்கை எடுப்பதா கவும் ஜனாதிபதி கூறினார்.

“உடன்படிக்கை செய்து, பிரித்துப் போட்ட நாடு இது! புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியெனத் தனியாகக் குறித்தொதுக்கப்பட்டது. அங்கு எமது இராணுவத்தினர் உள்ளே செல்ல முடியாது. அவர்களின் பகுதிக்குச் செல்பவர்கள் கப்பம் செலுத்த வேண்டும்.

வரி என்று நான் சொல்ல மாட்டேன்! புலிகள் நிர்வாகத்தைப் பிரித்து, பொலிஸ் படை, கடற்படை, விமானப்படை, இராணுவப் படை போன்றவற்றை உரு வாக்கும்வரை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தெற்கில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்த உத்தியோகத்தரைக் கொலை செய்த சம்பவங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

எங்கே குண்டுகள் வெடிக்கும் என்று அஞ்சிய யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான போராட்டத்தில் தொழிலாளர் மக்கள் எமக்கு ஆதரவாக இருந்தனர். நாம் யுத்தத்தின் காரணமாக அபிவிருத்தியை முடக்கவில்லை. நாட்டைப்பற்றிச் சிந்தித்துதான் முன்னேறுகின்றோம்.

எதிர்க் கட்சித் தலைவரைப் போல் அந்தப் பகுதியை நீ பார், இந்தப் பகுதியை நான் பார் என்று புலிகளுக்கு நான் சொல்லவில்லை. எனக்கு என்னைவிட என் தாய் மண் மீதே கூடுதல் அன்பு. நாம் எமது பொறுப்புகளைச் செய்யவேண்டும். நாம் பதவிக்கு வர பாடுபட்டவர்கள், தற்போது வேறு யாருடனோ போவாரெனின் அது உகந்த விடயமல்ல. எனவே சிறு குழுக்களுக்கு எமது சங்கத்தை ஆட்டுவிக்க இடமளித்துவிடாதீர்கள்.

அதுபோல் நிறுவனத் தலைவர்கள் மண்ணில் கால்பதித்துச் செயற்படவேண்டும். வானத்தில் இருந்து குதித்தவர்கள்போல் செயல்படக்கூடாது.

ஜனாதிபதி தேர்தலா, பொதுத் தேர்தலா முதலில்?

இரண்டு தேர்தல்களில் எது முதலில் வரும் எனச் சிலர் கேட்கிறார்கள். சிலர் ஒரு தேர்தலைக் கூறுகிறார்கள். என்னவானாலும் எதிர்வரும் 15ம் திகதி சுதந்திரக் கட்சியின் சம்மேளனத்தில் எந்தத் தேர்தல் என அறிவிப்பேன்!” என்று ஜனாதிபதி கூறியதும் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு ஒருமித்த குரலில் கேட்டுக் கொண்டார்கள். “சரி உங்கள் கருத்தை அறிந்துவிட்டேன்.

மாகாண சபை மற்றும் பிராந்திய தலைவர்கள் மற்றும் மக்களிடமும் கருத்தைக் கேட்பேன். ஆனால், எனக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உண்டு. மக்களுக்காக 2 வருடங்களைத் தியாகம் செய்யவும் தயார்” என்று கூறினார் ஜனாதிபதி.

சபையில் இடைக்கால கணக்கறிக்கை; ரூ.362 ஆயிரத்து 687 மில். செலவினம்

parliament.jpgஅடுத்த வருடத்தின் (2010) முதல் நான்கு மாதங்களுக்குமென 36268 மில்லியன் ரூபாவுக்கான (362,687,974,000) இடைக்கால கணக்கறிக்கைப் பிரேரணையை பிரதி நிதியமைச்சரும், பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

குறை நிரப்பு பிரேரணையில் பொது சேவைகளுக்காக 356,465,507,000 ரூபா அரச திரட்டு நிதியத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும் என இப்பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச திரட்டு நிதியத்திலிருந்து முற்கொடுப்பனவாக 6,222,467,000 ரூபாவை இக்காலப் பகுதியில் வழங்குமாறும் இடைக்கால கணக்கறிக்கைப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றம், சபாநாயகர் டப்ளியு. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் நேற்று காலை 9.30 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான தொடக்க நிகழ்வைத் தொடர்ந்து பிரதிநிதியமைச்சரும், அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம சபாநாயகரின் அனுமதியைப் பெற்று இடைக்கால கணக்கறிக்கைப் பிரேரணையை சபையில் சமர்ப்பித்து அதன் மீதான பாராளுமன்ற விவாதத்தைத் தொடக்கி வைத்தார்.

இந்த இடைக்கால கணக்கு அறிக்கையில் ஜனாதிபதிக்கு 2,300,320,000 ரூபாவும், பிரதமர் அலுவலகத்திற்கு 65,416,000 ரூபாவும், எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு 17,792,000 ரூபாவும் என்ற படி நிதி யொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அதேநேரம், பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு 2,109,179,000 ரூபாவும் நிதி திட்டமிடல் அமைச்சுக்கு 616,306,000 ரூபாவும், தேசத்தைக் கட்டியெழுப்பும் நிர்மாண மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கு 18,677,883,000 ரூபாவும், சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சுக்கு 19,666,631,000 ரூபாவும் கல்வி அமைச்சுக்கு 8,556,559,000 ரூபாவும், உயர் கல்வி அமைச்சுக்கு 1,947,168,000 ரூபாவும், மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு 1,766,700,000 ரூபாவும், வெளிவிவகார அமைச்சுக்கு 1,874,038,000 ரூபாவும் என்றபடி அமைச்சுகளுக்கு நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 இந்த இடைக்கால கணக்கறிக்கையில் இலங்கை தரைப் படைக்கு 34,545,666,000 ரூபாவும், கடற் படைக்கு 11,600,666,000 ரூபாவும், விமானப் படைக்கு 7,816,666,000 ரூபாவும் பொலிஸ் திணைக்களத்திற்கு 12,401,766,000 ரூபாவும், சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு 2,978,333,000 ரூபாவும் கடற்கரைப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு 16,600,000 ரூபாவும் என்ற படி நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

தேர்தல் திணைக்களத்திற்கு 366,296,000 ரூபாவும், சமுர்த்தி ஆணையாளர் அதிபதி திணைக்களத்திற்கு 3,894,782,000 ரூபாவும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு 34,599,000 ரூபாவும் என்றபடி நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் இந்த இடைக்கால கணக்கறிக்கையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள சகல அமைச்சுகளுக்கும், அரசாங்க திணைக்களங்களுக்கும், நிறுவனங்களுக்கும் நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.