மன்னார் இரட்டைக் கொலை – யாழ் நகைக் கடைக் களவு – இராணுவ சிப்பாய்கள் கைது !
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் உட்பட மூவர் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் யாழில் இடம் பெற்ற நகைக்கடைக் கொள்ளையிலும் இராணுவ சிப்பாய்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்னளர்.
மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை வழக்கு கடந்த வியாழக்கிழமை 16ம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. விசாரணைகளுக்காக சென்ற சந்தேக நபர்கள் மூவர் உட்பட்ட நான்கு நபர்கள் மீது நீதிமன்றத்திற்கு முன் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து இடம்பெற்ற விசாரணையில் சந்தேக நபரான இராணுவ சிப்பாய் பேசாலை நடுக்குடா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக மன்னார் கொலைக்குப் பின்னனியிலுள்ளவர் வெளிநாட்டில் இருப்பதாக கொழும்பில் பொலிஸ் திணைக்களம் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் கடந்த வியாழக்கிழமை 16ம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பிலும் இரண்டு இராணுவச் சிப்பாய்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கஸ்தூரியர் வீதியில் உள்ள நகைக் கடைக்குள் புகுந்து தம்மை புலனாய்வுப் பிரிவினர் என அடையாளப்படுத்திய குழுவொன்று 30 லட்சம் ரூபாவை அபகரித்து சென்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளால் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் கடை உரிமையாளரிடம் இருப்பதாக கூறியே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கடை உரிமையாளர் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதில் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த இரண்டு சிப்பாய்கள் மற்றும் காப்புறுதி நிறுவனமொன்றின் மாவட்ட முகாமையாளர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று முன்தினம்(18) கைது செய்யப்பட்டுள்ளனர்.