யாழ் மண்ணில் தமிழுக்கு 3ம் இடம் தந்ததும் – இல. தமிழ் அமைச்சரை எழுப்பியதும் – யாழ் இந்திய தூதரகம் !
யாழ். கலாசார மத்திய நிலையத்தின் பெயர் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கலாசார மத்திய நிலையம் இந்தியாவின் 1.6 பில்லியன் ரூபா நிதிப் பங்களிப்பில் கட்டப்பட்டு 2023இல் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் திறக்கப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளுவரை கௌரவிக்கும் வகையில் பெயர் மாற்றப்பட்டுள்ளது என இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அனுரவின் சீன விஜயத்தின் போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா இலங்கை வந்து யாழில் பெயர் மாற்ற வைபவத்தில் கலந்துகொண்டுள்ளமை இந்தியாவின் ஆதிக்கத்தை வெளிக்காட்டும் செயல் என அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மத்திய நிலையத்தின் பெயர்ப்பலகையில் ஆங்கிலம் சிங்களம் தமிழ் என்று தமிழ் மொழிக்கு மூன்றாம் இடத்தை வழங்கியுள்ளமைமையும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை தேசியபொங்கல் நிகழ்வும் தெல்லிப்பளையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது மகளிர் சிறுவர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் முன் வரிசையிலிருந்து நிகழ்வை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். நிகழ்வின் இடையில் கலந்துகொண்ட இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அவருக்கு அருகில் அமர்ந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த இந்திய தூதரக அதிகாரி ஒருவர் யாழ். இந்திய துணை தூதுவர் சாய் முரளியை இந்தியத் தூதுவர் அருகில் இருந்தும் விதமாக அமைச்சர் சாவித்திரியை மறுபக்க கதிரையில் அமருமாறு கூற அவரும் ஆசனத்திலே இருந்து எழுந்துவிட்டார். இதை அவதானித்த இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா சாய் முரளியை அந்த இடத்திலிருந்து எழும்புமாறு கூறி அமைச்சர் சாவித்திரி போல்ராஜை மீண்டும் அதே இடத்தில் அமரவைத்தார். இந்த சம்பவமும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.