கஜாவின் புதிய கண்டுபிடிப்பு: அனுரா கோட்டபாயாவைக் காட்டிலும் மோசமான இனவாதி !
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் யாழில் தங்களுடைய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்ட பாயவும் செய்யாத அளவுக்கு இனவாத அரசியலை தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ள முயல்கிறார் எனக் குறிப்பிட்டார். தமிழ் தேசிய மக்கள் சக்தி தேர்தலின் போது அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது, விடுவிப்பு போன்ற வாக்குறதிகளை வழங்கிவிட்டு தற்போது அவற்றிலிருந்து பின்வாங்கி இனவாத அரசியலை முன்னெடுப்பதாக குற்றம்சாட்டினார். தமிழ் மக்கள் ஜேவிபி இன் இனவாத முகத்தை கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஜனாதிபதி அனுர பதிவியேற்று 100 நாட்களிலும் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்டு 50 நாட்களிலும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தனது பாரிய கண்டுபிடிப்பை ஊடகங்களுக்கு வெளியிட்டார்.
ஜனவரி 25 இல் நடக்க உள்ள சந்திப்பு தமிழ் தேசிய அரசியலின் ஆரம்பப்புள்ளியாக அமையும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அழைப்பு விடுத்துள்ளார். இவரது அழைப்பை வடக்கு கிழக்கில் உள்ள எந்த அரசியல் கட்சியும் கணக்கில் எடுத்ததாக இதுவரை தகவல் இல்லை.
இவர்கள் மத்தியானச் சாப்பாட்டுக்கு பிறகு கதைக்கிறது எல்லாம் அரசியல் சந்திப்பு என்ற கணக்குக்குள் வராது என பா உ சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவருடைய தமிழரசுக் கட்சி தங்களுடைய வழி தனி வழி என்றும் தங்களுடைய பயணம் ஏலவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்றும் கூறுகின்றனர். அந்தப் பயணத்துக்கான குழுவில் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரோடு பேசிய பா உ சிறிதரனும் உள்ளார்.
இந்தியா தலையிடாட்டி சந்தோசம், 13யை தொடமாட்டோம் என்கிற கதைக்கே இடமில்லை, இந்தியா, மாகாணசபை, 13 இல்லாவிட்டால் தாங்கள் உடன்கட்டை ஏறுவோம் என்கிறார் அரசியலில் தனிக்கட்டையாக நிற்கும் பா உ செல்வம் அடைக்கலநாதன்.
தமிழ் அரசியலில் மூன்று தனிக்கட்டைகள்: பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன்.இவர்கள் தனிக்கட்டைகளாக இருப்பதால் அரசியலில் கூட்டுக்கலவியில் ஈடுபட விருப்பம் கொண்டவர்கள் தான். ஆனால் இவர்களுக்கு ஒற்றுமைப்படுவதற்கான கொள்கை எதுவும் இல்லை என்பது பெரும் பிரச்சினை. இவர்களைவிட இன்னுமொரு தனிக்கட்டை இருக்கின்றார். அவர் அரசியலிலும் தனிக்கட்டை சுயேட்சைக்குழு இராமநாதன் அர்ச்சுனா. இவர் தலைவெட்டப்பட்ட கோழி போல் எந்தப் பக்கம் பாய்வார் என்று அவருக்கே தெரியாது.
அதனால் தான் இவர்களுடைய அரசியல் என்பது பாராளுமன்றம் செல்வதும், கொழும்பில் இருக்கும் போது எங்களுக்கு நேரம் தாருங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடி வெள்ளைக்கார ராஜதந்திரிகளிடம் நேரம் எடுத்து அவர்களோடு தேநீர் குடித்தவிட்டுவருவதும் என ஈழநாடு பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மதிப்பளிக்கும் இந்த வெள்ளைக்கார தொரைகளே, இலங்கையில் இனவாதம் இல்லாத ஒரு அரசாங்கத்தை அனுரா நடத்துவதாக நற்சான்றிதழ்கள் கொடுக்கின்றனர். பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் குற்றச்சாட்டை, அதாவது ஜனாதிபதி அனுரா, முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயாவை விட மோசமான இனவாதி என்ற கருத்தை கஜேந்திரகுமாரின் நெருங்கிய நட்பான அமெரிக்க தூதுவர் யூலி சங்கே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. குண்டுச் சட்டிககுள் சைக்கிள் ஓடி இருக்கிற ஒரு ஆசனத்தையும் தொலைக்கப் போகின்றார் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் என்கிறார் பிரான்ஸில் வாழும் சமூக அரசியல் செயற்பாட்டாளர் சோலையூரான் என அறியப்பட்ட முருகவேள் யோகராஜா.