எம்ஜிஆர் உம் ஈழத்தமிழர்களின் நினைவலைகளும் !

இந்தியா தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் ஜனவரி 17 ஆம் திகதி தமிழகமெங்கும் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. எம் ஜி ஆரால் உருவாக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் எம்ஜிஆரின் சிலைக்கும் உருவப்படத்திற்கும் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இலங்கையிலும் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மலையகத்திலும் எம்ஜிஆரின் நினைவு நிகழ்வுகள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியால் 108 கிலோ கேக் வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
எம் ஜி ஆர் என்றழைக்கப்படும் மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் இலங்கையில் கண்டிக்கு அருகாமையில் நாவலப்பிட்டியில் பிறந்த இந்தியவம்சாவழியைச் சேர்ந்தவர். பிறப்பால் இலங்கையோடு பூர்வீக தொடர்பை கொண்ட எம்ஜிஆர் ஈழத்தமிழர்களோடும் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் தமிழீழ போராளிக்குழுக்கள் அனைவருக்கும் ஒரேமாதிரியான உதவிகளை எம்ஜிஆர் வழங்கியிருந்தார். காலப்போக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருக்கமான உறவைப் பேணிய எம்ஜிஆர், போராட்டத்திற்காக புலிகளுக்கு பல கோடி ரூபாய்களை வழங்கியிருந்தார்.
1982 ஆம் ஆண்டு பாண்டிபஜாரில் புளெட் தலைவர் உமா மகேஸ்வரன் மற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் கைது செய்யப்பட்ட தலைவர் பிரபாகரன் உட்பட போராளிகள் எம்ஜிஆரின் தலையீட்டால் இலங்கை பொலிஸாரிடம் கையளிக்காமல் விடுதலை செய்யப்பட்டார்கள். இத்தாக்குதலில் சம்பந்தப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய அன்றைய நண்பர் ராகவன் என அறியப்பட்ட சின்னையா ராஜேஸ்குமார் தற்போது லண்டனில் உள்ளார்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தான யூலை 29 1987 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக டிசம்பர் 24 ஆம் திகதி 1987 இல் திடீர் மாரடைப்பால் அவர் காலமானார். 1977 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை மூன்று முறை தமிழக முதல்வராக இருந்தார். எம்ஜிஆரின் இறப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பேரிழப்பாக அமைந்தது. எம்ஜிஆர் அற்ற ராஜீவ் காந்தி தலைமையிலான இந்தியாவின் உறவு புலிகளுக்கும் தமிழ்மக்களுக்கும் பெரும் அழிவைக் கொண்டு வந்து சேர்த்தது.
1987 இல் அமைதிப்படையாக வடக்கு கிழக்கு வந்த இந்திய இராணுவத்தினரால் தமிழ்மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதும்இ இறுதியில் புலிகளுக்கும் இந்திய ராணுவத்துக்கும் போர் மூண்டதும் இப் போரினால் பல நூறு இளைஞர்களும் யுவதிகளும் ஆயிரக்கணக்கான மக்களும் கொல்லப்பட்டதும் வரலாறு. தோல்வியடைந்த இலங்கை – இந்திய ஒப்பந்தம் அதன் தொடர்ச்சியாக 1991 இல் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஶ்ரீ பெரும்புத்தூரில் வைத்து ராஜீவ் காந்தி தற்கொலை குண்டுத்தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இவ்வாறான பின்னணிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவிற்குமான உறவு 2009 ஆம் ஆண்டுவரை மிக மோசமாக சிதைவடைந்திருந்தது.
இலங்கையில் அனைத்துலக எம்ஜிஆர் பேரவைத் தலைவரான பொன் மதிமுகராஜா 1998 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நினைவுநாள் அனுட்டிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். பொன் மதிமுகராஜா தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளராக இருந்தவர். 1998 இல் செப்ரம்பரில் முன்னாள் யாழ் மேயர் பொன்னுத்துரை சிவபாலன் கிளைமோர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட பின்னர் பொன் மதிமுகராஜாவே யாழ் மேயராக வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன. அதேசமயம் புளொட் மாணிக்கவாசகனும் காலியாக இருந்த யாழ் மேயர் பதவியை குறி வைத்திருந்தார். புலிகளோ இலங்கை அரச கட்டமைப்பு இயங்கக்கூடாது மாநகரசபை இயங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். இத்தகைய அரசியல் பின்னணியிலேயே பொன் மதிமுகராஜா சுட்டுக் கொல்லப்பட்டார். யாழிலில் எம்ஜிஆர் என்றாலே மதிமுகராஜாவும் சேர்ந்தே ஞாபகத்திற்கு வருவார்.
எம்ஜிஆர் படம்பார்க்க இலங்கை வல்வெட்டித்துறையிலிருந்து இராமேஷ்வரத்திற்கு படகில் சென்றுவந்த காலம் ஒன்றும் இருந்தது. ஆனால் 1983 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை யுத்த பூமியாக மாறியது. வட இலங்கைக்கும் தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்கான கடல் பரப்பு ஆயுத தளபாடங்களை பெறுவதற்கும் போராளிகளை பயிற்சிக்கு அழைத்துச் செல்வதும் அவர்களை மீளக் கொண்டுவருவதற்குமான பாதையாக மாறியது. 2009ற்குப் பின் இவ் உறவு இப்போது மேலும் கசந்து இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.