25

25

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Batticalo_Clock_Towerதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான கில்லி என்றழைக்கப்படும் பிரகாசம் சகாயமணி என்பவர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இவர் காணமாமல் போயுள்ளமை குறித்து மாநகரசபை மேயரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 இது குறித்து கிழக்கு  மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை மேயர் சிவகீதா பிரபாகரனை அவரது வீட்டில் சந்தித்து விட்டுத் திரும்புகையில் இவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாநகர சபை  உறுப்பினரான இவர் காணாமல் போயுள்ள சம்பவத்தையடுத்து ஏனைய மாநகர சபை உறுப்பினர்கள் மத்தியில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் காணாமல் போயுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்நிதி திருவிழாவில் இரு நாளில் 29 தங்கச் சங்கிலிகள் திருட்டு!

Sellacannathy_Templeதொண்டை மானாறு சந்நிதி ஆலயத்தில் நேற்று (Aug 24 2010) மட்டும் 12 தங்கச் சங்கிலிகள் களவு போயுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தின் தீர்த்தத் திருவிழாவான நேற்று மிக அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இவ்வேளையிலேயே இத்தங்கச் சங்கிலிகள் திருடர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மட்டும் 17 சங்கிலிகளும், இரண்டு தாலிக்கொடிகளும் களவாடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்களவுகளிலிருந்து பொதுமக்கள் தங்கள் நகைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் முடிந்தளவு தங்கநகைள் அணிவதைத் தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்திவருகின்ற போதும், பொதுமக்கள் அதனைக் கவனத்தில் கொள்ளாமல் தங்க நகைகளை அணிந்து திருவிழாக்களுக்கு வருவதாகவும், அதனை அவர்கள் ஒரு கௌரவமாகக் கருதுவதாகவும் பொலிஸார் ஒருவர் கருத்துக்கூறுகையில் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, கடந்த சனிக்கிழமை வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தனியார் பஸ் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணொருவரின் இரண்டரை இலட்ச ரூபா பெறுமதியான தங்க நகைகள் களவு போயுள்ளன. கணவனால் கைவிடப்பட்ட இரு பிள்ளைகளின் தாயான செல்வேந்திரன் இந்திராணி என்பவரின் நகையே களவாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் வைத்திருந்த 15ஆயிரம் ருபா பணமும் சில முக்கிய ஆவணங்களும் களவாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் பெய்த கடும் மழையினால் விவசாயிகளுக்குப் பாதிப்பு.

வடக்கில் தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் விவசாயச் செய்கைகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. நேற்று (Aug 24 2010) நாள் முழுவதும் பலத்த மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வன்னியில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் இம்முறை சிறுபோக நெற்செய்கையில்  விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர் இவ்வயல்கள் அறுவடைக்குத்தயாரான நிலையில், பெய்த கடும் மழையினால் அறுவடை பாதிப்படைந்துள்ளதோடு, விளைந்த வயல்கள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த பெருமளவு நிலப்பரப்பு வெள்ளத்துள் மூழ்கி விவசாயிகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News:
மழையினால் அவதியுறும் மீள்குடியமர்த்தப்பட்ட வன்னி மக்கள்!

வடக்கு கிழக்கில் ஆழ்கடல் மீன்பிடிக்க விரைவில் அனுமதி.

Fishing_in_Jaffnaஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு வடக்கு கிழக்கு மக்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். சுமார் முப்பது வருடங்களாக வடக்கு கிழக்கு மீனவர்கள் கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கபட்டிருந்தனர். ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகள் பாதுகாப்புத் தரப்பினரால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், அயல் நாடுகளிலிருந்து வரும் படகுககள் வடக்கு கிழக்கிலுள்ள ஆழ்கடலில் மீன்களைப் பிடித்துச் சென்றன. வடக்கு கிழக்கில் விரைவில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2013ம் ஆண்டுக்குள் இலங்கையின் மீன் உற்பத்தியை 6 இலட்சத்து 86 ஆயிரம் மெற்றிக் தொன்னாக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரணித் தலைவர்களை இன்று சந்திக்கிறார் ரணில்

ranil.jpgஎதிரணி யிலுள்ள சகல கட்சிகளதும் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை விசேட சந்திப்பொன்றை நடத்தவிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவரின் கேம்பிரிட்ஜ் ரெறஸ் அலுவலகத்தில் இன்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெறவிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரம் தெரிவித்தது. எதிரணியிலுள்ள சகல கட்சிகளின் தலைவர்களுக்கும் இந்தச் சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் கட்சிகளுடன் அரசியல் அமைப்புகளையும் ஒன்றிணைத்து அரசுக்கெதிரான பொது வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது ஆராயப்படவிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்தது.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அபகீர்த்தி ஏற்படும் விதத்தில் அவரது பட்டம், பதக்கங்களை பறித்தெடுத்தமைக்கு எதிராகவும் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் விதத்தில் அரசின் செயற்பாடுகள் அமைந்திருப்பதற்கு எதிராகவும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொருட்டும் பொது எதிரணி அரசியல் இயக்கத்தை ஆரம்பிப்பதே இன்றைய சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

வன்னியில் கைவிடப்பட்ட வாகனங்கள்: ஆயிரத்துக்கும் அதிகமான உரிமையாளர்கள் அடையாளம்

cars.jpgவன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருக்கும் வாகனங்களுள் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்ற நடமாடும் சேவையில் ஆயிரம் மோட்டார் சைக்கிள்களினதும் 31 கனரக வாகனங்களினதும் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வாகனங்களின் உரிமையாளர்களை அடையாளம் காண்பதற்காக நாடமாடும் சேவை நடத்தப்பட்டபோதிலும், சுமார் நூறு பேர் அளவில் மாத்திரமே நேரடியாக வந்து ஆவணங்களைச் சமர்ப்பித்து உரிமையை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் வாகனங்களின் அடிச்சட்டக இலக்கம் மற்றும் இயந்திர இலக்கம் என்பவற்றைப் பரீட்சித்து அவற்றைக் கணினித் தரவுகளுடன் ஒப்பிட்டு உரிமையாளர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என்றும் அதன் பின்னர் அவர்கள் உரிமையை உறுதிப்படுத்தி வாகனங்களைப் பெற்றுச் செல்ல முடியுமென்றும் அரச அதிபர் தெரிவித்தார். வாகனங்களை அடையாளம் கண்டு உரியவர்களுக்கு ஒப்படைக்கும் பணியை விரைவில் நிறைவு செய்யுமுகமாக ஒவ்வொரு வார இறுதியிலும் நடமாடும் சேவைகளையும் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அரச அதிபர், இந்தப் பணிக்கு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

எனவே, எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களைத் தவிர்த்து அடுத்த வார இறுதி நாட்களில் நடமாடும் சேவை நடத்தப்படுகிறது. இதேவேளை, கொள்வனவின் பின்னர் முறையாகப் பதிவு செய்யப்படாத வாகனங்கள், உரிமை மாற்றத்தின் பின்னர் ஆவணங்களைச் சரியாக மாற்றாதிருக்கும் வாகனங்கள், புலிகளின் நிர்வாகத்தின் கீழ் மாத்திரம் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றை ‘கைவிடப்பட்ட வாகனங்கள்’ என வகைப்படுத்தி, சட்டச் சிக்கல்களைத் தீர்த்துக் கையளிப்பதுடன், உரிய ஆவண ங்களைத் தொலைத்தவர்கள் தொடர்பிலும் முறையான வழிமுறைகள் கையாளப்படும் என்றும் அரச அதிபர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட வாகனங்களைத் தவிரவும் இன்னமும் ஐயாயிரத்துக்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களும் கனரக வாகனங்களும் அடையாளம் காணப்படவுள்ளன. இந்தப் பணிகளைத் துரிதப்படுத்த பிற மாவட்டங்களிலிருந்தும் வாகனப் பரிசோதகர்களை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

மூதூரில் ஐ.நாவின் புல்டோசர் கண்ணி வெடியில் சிக்கியது!

மூதூரில் நேற்று (Aug 24 2010) இடம்பெற்ற கண்டிவெடிச் சம்பவத்தில் ‘புல்டோசர்’ ஒன்று சேதமடைந்துள்ளது. திருகோணமலை மாவட்டம் மூதூர் தோப்பூர் பகுதியில் ஐ.நா. அபிவிருத்திட்டத்தின் கீழ் கணிகளைத் துப்புரவாக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அப்பணியிலீடுபட்டுக் கொண்டிருந்த ‘புல்டோசர்’ கண்ணிவெடியில் சிக்கி சேதமானது.

நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றது. இதனையடுத்து ஐ.நா.வின் அப்பணி இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காணியில் அகற்றப்படாத நிலையிலிருந்த கண்ணிவெடியொன்றே வெடித்ததாக சந்தேகிக்கப்படுகின்றது. எனினும், இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் 2 இலட்சம் வீடமைப்புத் திட்டம்: – முத்துசிவலிங்கம்

sri-lanka.jpgமலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் இரண்டு இலட்சம் வீடுகளை நிர்மாணிக்க கால்நடை அபிவிருத்தி கிராமிய சமுதாய அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார். இதன் ஆரம்ப நடவடிக்கையாக 300 வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதி விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை 20,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மலையகப் பெருந் தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை காலமும் தோட்டத் தொழிலாளர் ஒருவருக்கு வீடமைப்பிற்காக இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவே வழங்கப்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில் 4 இலட்சத்து நாற்பதினாயிரம் ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கேபியின் குற்றச்சாட்டை வைகோ மறுப்பு

இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதவி ஆசைக்காக நான் போர் நிறுத்தத்தைத் தடுத்தேன் என்று குமரன் பத்மநாதன் உளறி இருக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். கே.பி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் குறித்து அதிலுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டி அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார் வை.கோ,

மாந்தை தொழிற்பயிற்சி நிலையத்தில் திங்கள் முதல் கற்கை நெறிகள் ஆரம்பம்

kilinochchi-district.jpgவன்னிப் பிரதேசத்தில் மீளக் குடியமர்ந்துள்ள இளைஞர், யுவதிகளுக்குத் தொழிற் பயிற்சி அளிக்கவென பத்து தொழில் பயிற்சி நிலையங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் மாந்தை கிழக்கு தொழிற் பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் 30ம் திகதி தொழிற் பயிற்சி கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் வன்னிப் பிரதேச பணிப்பாளர் ரீ. வினோதராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் :- பத்து தொழிற்பயிற்சி நிலையங்களினதும் நிர்மாணப் பணிகளை இம்மாதமே பூர்த்தி செய்வதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்ப ட்டிருந்தது. இருப்பினும் மாந்தை கிழக்கில் அமைக்கப்பட்டுளள் தொழிற் பயிற்சி நிலையத்தின் அமைப்புப் பணிகள் பூர்த்தி அடைந்துள்ளன. அதனால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொழிற் பயிற்சி கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

இப்பயிற்சி நிலையத்தில் அலுமினிய இணைப்பு மற்றும் இலத்திரனியல் வயரிங்க ஆகிய கற்கை நெறிகள் முதலில் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.  ஒரு கற்கை நெறிக்கு முப்பது பேர் என்ற அடிப்படையில் இளைஞர், யுவதிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்படுகின்ற மூன்று தொழிற் பயிற்சி நிலையங்களிலும் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற கற்கை நெறிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் இளைஞர், யுவதிகளுக்கு நேர்முகப் பரீட்சைகள் நிறைவுற்றுள்ளன. மன்னார் மற்றும் வவுனியாவில் அமைக்கப்படும் நிலையங்களுக்குச் சேர்த்துக் கொள்ளப்படும் இளைஞர், யுவதிகளுக்கு தற்போது நேர்முகப் பரீட்சைகள் நடைபெறுகின்றன.