15

15

நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் இலங்கையில்… : பி எம் புன்னியாமீன்

hambantota1.jpgஇலங்கையில், தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை “வெறும் வறுமையும் வரட்சியும் கொண்ட பிரதேசம்” என்ற கருத்தியலை மாற்றியமைக்கத்தக்க வகையில், நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் என்ற பெருமைக்குரிய இலங்கை ஹம்பாந்தோட்டை ‘மாகம்புர’ துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் முக்கிய நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று ஆகஸ்ட் 15. 2010 இல் இடம்பெற்றது. இத்துறைமுகம் ‘தெற்காசியாவின் ஆழமான துறைமுகம்’ எனவும் கருதப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை ‘கரசன்லேவாய’களப்பின் ஒரு பகுதியைச் சூழ அணைகள் அமைத்து அதனை ஆழமாக்கி 21 மீற்றர் உயரத்தினை கொண்ட இரண்டு இறங்குதுறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதன் முதலாவது கட்டத்தின் கீழ் கிழக்கிலிருந்து மேற்காக 14 கிலோ மீற்றர்களைக் கொண்ட இரு அலை தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி கப்பல்கள் மூலம் ஆழமாக்கப்பட்டு அங்கிருந்து புதிய துறைமுகத்துக்குள் தண்ணீர் நிரப்பப்பகிடுகின்றன.

h-tota01.jpgஇத்துறைமுக முதல்கட்ட நிர்மாணப்பணிகள் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி சீனக் கப்பல் பொருளியல் கூட்டுத்தாபனத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டது. 39 மாதத்தில் நிறைவு செய்யப்படவிருந்த இத்திட்டம் இலங்கை துறைமுக அதிகார சபையின் உள்ளுர் பொருளியலாளர்களின் ஒத்துழைப்புடன் 30 மாதங்களில் பூர்த்தி செய்யப்பட்டது. எதிர்வரும் நவம்பர் மாதம் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை முதல் கப்பல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நிர்மாணப்பணிகளுக்காக சீன எக்ஸிம் வங்கி 85 சதவீத நிதியை இலங்கைக்கு வழங்கியது. மிகுதி 15 சதவீத நிதியை இலங்கை துறைமுக அதிகார சபை வழங்கியிருந்தது. மொத்தம் 360 மில்லியன் அமெரிக்க டொலர் முதலாவது கட்டப் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. இரண்டாவது கட்ட நிர்மாணப்பணிகளுக்கு உதவ சீன அரசாங்கம் முன்வந்துள்ளதோடு நவம்பர் மாதம் முதல்கட்டம் நிறைவுபெறும் போது இரண்டாம்கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சர்வதேச துறைமுக கப்பல் பாதைக்கு ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. துபாய் மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களைப் போல இத்துறை முகத்தை வரிகளற்ற ஒரு தொழில் நுட்ப துறைமுகமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் அரசிடம் உள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் டென்மார்க் ரெம்போல் கம்பனியின் வளப்பங்களிப்புடன் 2005 ஆம் ஆண்டில் அடிப்படை திட்டம் தயாரிக்கப்பட்டது. திட்டத்தின் நில அளவு 2000 ஹெக்டயார்

ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணிப்பு (முதற்கட்டம்)

*  துறைமுக நிர்மாணிப்பு பணிகள் ஆரம்பம் 2008 ஜனவரி 15  முதற்கட்டவேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட தினம் : 2010  ஆகஸ்ட் 15

*.  மேற்கு நீர்தடுப்புச் சுவர் 988 மீட்டர்

*  கிழக்கு நீர்தடுப்புச் சுவர் 312 மீட்டர்

*  கப்பல் முனையம் 600 மீட்டர்

*  சேவைகள் நடைபெறும் முனையம் 105 மீட்டர்

*  எண்ணெய் முனையம் 310 மீட்டர்

*.  கப்பல் திசை திருப்பும் தடாகம் 600 மீட்டர்

*  தடாகத்தின் ஆழம் 17 மீட்டர்

*  துறைமுக உட்புகு கால்வாயின் அகலம் 210 மீட்டர்

*.  துறைமுக உட்புகு கால்வாயின் ஆழம் 17 மீட்டர்

*  முதல் கட்டத்தில் ஆழமாக்கப்பட்ட நில அளவு 43 ஹெக்டயார்

*   கொள்ளளவு 100,000 DWT அளவினையுடைய கப்பல்களுக்கு  வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

*  எண்ணெய் முனையம், ஆரம்பம் 07.10.2009, ஆகு செலவு 76  மில்லியன்,   அமெரிக்க டொலர்கள், நிர்மாணிப்புக் கம்பனி சீன ஹவான் கிவ் (HUWAN QUI)  இஞ்சினியரிங்.

*   எண்ணெய்த் தாங்கிகளைக் கொண்ட தொகுதியொன்று  நிர்மாணிக்கப்படுகிறது. அதன் மொத்தக் கொள்ளளவு 80000 m3.

*  கப்பல் எரிபொருள் தாங்கிகள் 08

*  விமான எரிபொருள் தாங்கிகள் 03

*   L. P. வாயு தாங்கிகள் 03 (திரவ பெற்றோலிய வாயு)

*  நிர்வாகக் கட்டடம், ஆரம்பம் 2009.10.07, நிர்மாணிப்பு சைனா ஹாபர் இஞ்சினியரிங் மற்றும் ஸைனோ ஹயிட்ரோ கோபரேஸன். 75000 சதுர அடியைக் கொண்ட 15 மாடிகளையுடைய 200 அடி உயரமான கட்டடமாகும்.

ஹம்பாந்தோட்டை  துறைமுகத்தால் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படும் சேவைகள்.

  *  பொதுவான கப்பல் சரக்குகள் எனும் சம்பிரதாய கப்பல்  சரக்குகள் (சிமெந்து, உரம், மா,இரும்பு, பலகை போன்றன)
 
  *  Raw  வசதிகள் – வாகன போக்குவரத்து வசதிகள், கப்பலின்   இயக்கச் செயற்பாடுகள் (இறக்குமதி / மீள்ஏற்றுமதி)
 
 *  கப்பல் நிறுத்துமிட வசதிகளை அளித்தல்.
  
 *  கப்பல்களுக்கான மரக்கறி உட்பட உணவுப் பொருட்களை (Ship Stores)  வழங்குதல்,  மருத்துவ வசதியினை வழங்குதல்.
 
 *  நீர் வழங்கல்
 
 *  கப்பல் பணியாளர்களை வழங்குதல், பணியாளர் பரிமாற்று  மத்திய நிலையமாக செயற்படல்.
 
 *  கப்பல் கட்டுதல் மற்றும் திருத்துதல்  (Dry Doc)  
 
 *  நடவடிக்கைகளுக்கு உலர் தடாக வசதிகளினை வழங்குதல்.
 
 *  துறைமுக வளாகத்தினுள் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கான வசதிகளை அளித்தல்.
  
 *  கொள்கலன் கையாளும் முனையம் உருவாக்குதல்.  நிலக்கரி, மின் உற்பத்தி பயன்பாடு தொடர்பில் வசதி அளித்தல்.

எதிர்பார்க்கப்படும் இலக்குகள்.

ஹம்பாந்தோட்டை துறைமுகமூடாக உள்நாடு, சர்வதேச ரீதியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகள் பின்வருமாறு.

சர்வதேச இலக்குகள்.

 * இலங்கையை உலகில் முன்னணி கப்பல் மத்திய  நிலையமாக மாற்றுதல்.
 * கப்பல் துறை பற்றி வலய மட்டத்தில் மேல் எழும் சவால்களுக்கு துணிச்சலுடன் முகங்கொடுத்தல்.
 * இலங்கை கடல் வலயத்திலிருந்து கிடைக்கப்பெறும் பாரிய அந்நிய நாட்டுச் செலாவணியை இலங்கை பொருளாதாரத்தின் மீது கவரவைத்தல்.
  * வெளிநாட்டு முதலீடுகளை வரவழைத்தல்.

தேசிய இலக்குகள்.

  * வெளிநாட்டு செலாவணியை நாட்டினுள் கொண்டு வருதல்.
  * தொழிலில்லா பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்.
  * 25000 – 30000 அளவிலான சுற்றாக தொழில் வாய்ப்புகள்  உருவாதலினால் பிரதேசத்தின் நிதிப் புழக்கம் அதிகரித்தல்.
  * பயிற்சி தொழில் முயற்சியாளர்களை உருவாக்கிக்  கொள்ளல்.
  * பிரதேச அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை  மேம்படுத்துதல்.
  * பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல்.
  * அரச ஆதாயத்தினை கூட்டுதல், புது நிதி கிடைக்கும்  வழிமுறைகள்  உருவாதல்

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒன்றிணைந்த அபிவிருத்தித் திட்டம்.

ஹம்பந்தோட்டை கரகங்லேவாய சுற்றுப் புறத்தில் 450 குடும்பங்கள் வசிக்கின்றன. 2000 ஹெக்டயார் காணி துறைமுகத் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு நட்டஈட்டுக் கொடுப்பனவு மற்றும் மாற்று நிலங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. அவற்றிற்கு சகல உட்கட்டமைப்பு வசதிகளும் துறைமுக அதிகார சபையினால் செய்து கொடுக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை கரகங்லேவாய பழைய பாதைக்கு பதிலாக புதுப்பாதையொன்று நிர்மாணிக்கப்பட்டதுடன் துறைமுக அடிப்படை அமைவிடம் தொடர்பான சகல இடர்பாடுகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளன. பிரதேச மக்களுக்கு திட்டம் பற்றியும் சகல பிரிவுகள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. விசேடமாக பிரதேச பாடசாலைகள் ஊடாக நடத்தப்பட்ட துறைமுகம் பற்றிய கருத்தரங்கு அபிவிருத்தியின் நேர் சிந்தனையின் பால் ஹம்பாந்தோட்டை மக்களை கவரச் செய்துள்ளது.

உலக வரைபடத்தினை அவதானிக்கும் போது இலங்கையின் அமைவிடம் ஒரு முக்கிய கேந்திர இடத்தில் அமைந்துள்ளது. கடுகு சிறிதாயினும் காரம் பெரிது என்பது போல எமது நாடு சிறியதாயினும் சகல வளங்களும் மிக்க ஒரு நாடாக விளங்குகிறது.

உலக கடற் போக்குவரத்துத் துறையினை விரிவாக ஆராயும் போது ஏறக்குறைய 34,000 வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கை நாட்டை சுற்றிச் செல்வதை நாம் காண்கின்றோம். எமது கண்தூரத்திற்கு அருகாமையில் எமது நாட்டை தவிர்ந்து செல்லும் இக்கப்பல்களில் ஏறக்குறைய 10,000 கப்பல்கள் மட்டுமே கொழும்புத் துறைமுகத்தை வந்தடைகின்றன.

ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் திறக்கப்பட்டதும் பெரும்பாலான கப்பல்கள் இத்துறைமுகத்தை அண்மித்தே தமது பயணத்தை மேற்கொள்ளும். அப்போது இக்கப்பல்கள் இத்துறைமுகத்தை வந்து அடைவது இலகுவானதும் தவிர்க்க முடியாததுமாக இருக்கும் என்பதை நாம் கப்பல் போக்குவரத்து வரைபடத்தை அவதானித்தால் புரியும்.

தகவல்: இலங்கை துறைமுக அதிகார சபை

h-tota02.jpg

h-tota03.jpg

யுவராஜ் டெங்கு நோயினால் பாதிப்பு

yuvraj.jpgஇந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் நாளை திங்கட்கிழமை தம்ப்புள்ளையில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் சர்வதேச முக்கோண ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

மடு மாதா ஆவணி திருவிழா இன்று

madu.jpgமடு மாதாவின் ஆவணித் திருவிழாவின் இறுதிநாள் திருப்பலிப் பூஜைகள் இன்று காலை மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் நடைபெறு கிறது.

இன்று காலை 5.15 க்கு தமிழ், சிங் கள மொழிகளில் முதல் திருப்பலி பூஜையும் காலை 6.30 க்கு திருவிழா திருப்பலிப் பூஜையும் ஒப்புக் கொடுக்கப் படும். மன்னார் மறை மாவட்ட ஆயரின் தலைமையில் நடைபெறும் திருப்பலி பூஜையின் போது கொழும்பு பேராயர் அதிவந்தனைக்குரிய மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையுடன் ஏனைய மறை மாவட்ட ஆயர்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். இதனைத் தொடர்ந்து மடு மாதாவின் திருச் சொரூப பவனியும் இடம்பெறும் என அருட்தந்தை அலெக்ஸாண்டர் பெனோ அடிகளார் தெரிவித்தார்.

திருமலை நகரசபை தலைவர் முகுந்தன் பதவியிலிருந்து இடைநிறுத்தம்

திருகோண மலை நகரசபைத் தலைவர் ச. கெளரிமுகுந்தன் மூன்று மாத காலத்துக்கு பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் அதற்கான கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

நகரசபைத் தலைவரின் பொறுப்புக்கள் அனைத்தும் உபதலைர் க. செல்வராசாவிடம் கையளிக்குமாறும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சன் ஸீ: இலங்கை தமிழ் அகதிகள் கனடாவில் தரையிறக்கம்; விசாரணை ஆரம்பம் தகுந்த காரணமிருந்தால் அகதி அந்தஸ்து – கனடிய அமைச்சர்

son-k.jpgசன் ஸீ கப்பல் மூலம் பிரிட்டிஷ் கொலம்பியாவை சென்றடைந்துள்ள இலங்கையர்களை விசாரணை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த தகவலை கனேடிய பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் விக்டோவிக் தெரிவித்துள்ளார்.

சன் ஸீ கப்பல் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  இந்த நிலையில், அதில் பயணித்த 490 பேரின் சுகாதார நலன் குறித்த விடயங்கள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.

விசாரணைகளின் பின்னர் உரிய காரணங்களை கொண்டிருப்பவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படும். ஏனையவர்கள் நாடு கடத்தப்படுவரென பொதுமக்கள் நலன்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  இதற்கிடையில், கப்பலில் சென்றவர்களில் சிறு தொகையினரே நோய்களுக்கு உட்பட்டுள்ளதாகவும், அவர்களும் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டு விரைவில் அங்கிருந்து முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்களென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் விக்டோரியா நகரத்தை வந்தடைந்த அகதிகள் நகரத்தின் அண்மையிலிருக்கும் கனடிய இராணுவ முகாம் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளனர்.

உடல் நலப் பரிசோதனையைத் தொடர்ந்து 9 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தவர்களில் 45 சிறுவர்களும், இரு கற்பிணிகள் உட்பட 90 பெண்களும் உள்ளனரென உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. உடனடி சோதனைகள் முடிந்தபின் இன்று ஞாயிற்றுக்கிழமை அனைவரும் வெவ்வேறு தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படுவார்களெனத் தெரிய வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்கள், ஆண்களின் தடுப்பு முகாம்களில் அல்லாது தனிப்பட்ட வேறு தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இராணுவ நீதிமன்றின் தீர்ப்பிற்கு ஐ.தே.க கண்டனம்

ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு இராணுவ நீதிமன்றம் விதித்த தீர்ப்பிற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இராணுவ நீதிமன்றின் தீர்ப்பு வராற்று ஏடுகளில் கறுப்பு களங்கமாக திகழும் என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நீர்நிரப்பு விழா இன்று

hambantota1.jpgகடலை அண்மித்த நிலப் பகுதியில் நிர்மாணிக்கப்படும் உலகின் முதலாவது துறைமுகம் என்ற பெருமையைப் பெறும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் வரலாற்று நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 இற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடை பெறுகிறது.

நாட்டின் அபிவிருத்தி வரலாற்றின் முதன்மையான செயற்றிட்டமாகக் கருதப்படும் இந்தத் துறைமுக அங்குரார்ப்பண நிகழ்வைக் கண்டுகளிக்க வரும் பொதுமக்கள் இன்று அதிகாலை மூன்று மணி முதல் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிகழ்வையொட்டி கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டை வரும் வாகனங்களுக் கென விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாத்தறைக்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான ஏ-2 வீதியில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. இரண்டாயிரம் ஹெக்டயர் நிலப் பரப்பில் நிர்மாணிக்கப்படும் இந் தத் துறைமுகத்தில் கப்பல்கள் வந்து நங்கூரமிடுவதற்கு வசதியாக 17 மீற்றர் ஆழப் படுத்தப்பட்டுள்ளது.

இதில் இன்று முதல் நாளாந்தம் ஒரு மீற்றர் உயரம் என்ற அடிப்படையில் நீர் நிரப்பப்படவுள்ளது. துறைமுகத்தின் முதற்கட்டப் பணிகளுக்கு ஐயாயிரம் கோடி ரூபாய் செலவிடப் பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாக ஆறாயிரம் வேலை வாய்ப்புகளும் மறை முகமாக 50 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் கிடைக்கின்றன.

முதற்கட்டப் பணியை அடுத்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி நிறைவுசெய்ய உத் தேசிக்கப்பட்டிருந்த போதிலும் ஒன்பது மாதங்களுக்கு முன்னதாகவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாவது கப்பல் வருகை தருவதுடன் உலகின் மிகப்பெரிய கப்பல் கள் கூட இங்கு வரமுடியும். நான்கு கப்பல்களுக்குத் தேவையான வசதிகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை வவுனியாவில் ஆரம்பம் – எட்டுப் பேர் நேற்று சாட்சியம்

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு நேற்று சனிக் கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் குழுவின் தலை வர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் கூடியது. அனைத்து உறுப்பினர்களும் பிரசன்னமாகி யிருந்தனர்.

வவுனியா நகர சபை எதிர்க் கட்சித் தலைவர் ஜி.ரி. லிங்கநாதன், சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம் உட்பட எட்டுப்பேர் ஆணைக்குழுவின் முன் பகிரங்கமாக சாட்சியமளித்தனர். சிலர் இரகசியமாகவும் சாட்சியமளித்தள்ளனர்.

மாவட்ட அரச அதிபரும் இங்கு பிரசன்ன மாகியிருந்தார். இனங்களுக்கிடையில் மீண்டும் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு அதி கார பகிர்வே தீர்வாகும். அதனை ஏற்படுத்து வது அவசியம் எனவும் சாட்சியமளித்தவர்கள் கூறினார்கள். அத்துடன் சந்தேகத்தின் பேரில் கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் மீதான விசாரணை துரிதப்படுத்த வேண்டுமென சாட்சியமளித்த சிலர் குறிப்பிட்டனர். இத்தகைய நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்ததிற்காக சாட்சியமளித்த சிலர் பாராட்டுத் தெரிவித்தனர்.

நோர்வேயில் சிவசுப்பிரமணியர் ஆலயத் தேர்த் திருவிழாவில் நடந்தது என்ன? : ரி சோதிலிங்கம்

Sivaganesh_Vadiveluநோர்வேயின் ஒஸ்லோவில் அமைந்திருக்கம் அம்மரூட் சிவசுப்பிரமணியர் ஆலயத்தின் தேர்த்திருவிழா பிரசித்தமானதோ இல்லையோ அங்கு நடந்த அடிபாடு வேண்டிய அளவு பிரசித்தம் பெற்றுள்ளது. இவ்வாலயத்தில் அடிக்கடி அடிபாடுகள் சகஜமாகி வருகிறது, இது ஆலயத்தின் பொதுச்சபைக் கூட்டங்களிலும் சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது என்கிறார் இவ்வாலயத்தின் அடியார் ஒருவர். 8.8.2010 ஞாயிறு தேர் வீதிவலம் வரும்போது அங்கு பலத்த சலசலப்பும் சண்டையும் நிகழ்ந்தது. அதுவே நோர்வேயையும் தாண்டி தற்போது பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

அன்பே சிவம் என்று போதிக்கும் சைவ சமயத்தவரின் திருவிழாவில் தொண்டர்கள் கையிலே ஏன் கிரிக்கட் பட், விக்கற்றுக்களும், பொல்லுக் கட்டைகளும் என்று மற்றுமொரு அடியார் தேசம்நெற் இடம் முறைப்பட்டார். ஒழுங்கு விதிகளை உறுதிப்படுத்தவும் அன்பைப் போதிக்கவும் ஆலயம் எதற்காக கராட்டி சிவா என அறியப்பட்ட சிவகணேஸ் வடிவேலுவை நியமித்தது என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
 
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது; வெள்ளை நிற கார் ஒன்றில் குடும்பமாக வந்தவர்கள் தமது காரை வீதியோரமாக கார் நிறுத்துவதற்கான இடத்தில் நிறுத்த முற்பட்டனர். ஆனால் அங்கு கடமையில் இருந்த தொண்டர்கள் காரை அவ்விடத்தில் தரித்து நிறுத்த அனுமதிக்க மறுத்தனர். இதன் விளைவாக எழுந்த தர்க்கம் கைகலப்பிலும் விக்கற், பொல்லுக் கட்டைகளுடனான மோதலிலும் முடிவடைந்தது.

தொண்டர்களாக கடமையில் அமர்த்தப்பட்டவர்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருந்தவர்கள் போல் தம்முடன் வைத்திருந்த கிரிக்கெட் பட், விக்கெட்டுகளோடு காரில் வந்தவரைத் தாக்கியுள்ளனர்.

தேர்த் திருவிழாவிற்கு மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரர் ஒருவருடனும் குடும்பமாக வந்த அசோக் என்பவரே தொண்டர்களால் தாக்கப்பட்டு உள்ளார். காரில் வந்த அசோக் மற்றும் அவருடைய சகோதரனும் பதில் தாக்குதலில் ஈடுபட்டும் உள்ளனர்.

என்ன நடந்தது என்பதை விபரிப்பதிலும் பார்க்க காட்சிகளை கீழேயுள்ள இணைப்பில் காணலாம். இது நோர்வே ஊடகங்களில் வெளிவந்த ஒளிப்பதிவு.
http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10026130
 
திருவிழாவின் போக்குவரத்து மற்றும் ஒழுங்குகளைக் கவனிக்க கோவில் நிர்வாகத்தினால் நியமிக்கப்படவர் கராட்டி சிவா என்ற சிவகணேஸ் வடிவேலு என்பவராகும். இவர் தமிழர் அவை (Norwegian Council of Eelam tamil) அங்கத்தவர். அண்மையில் தமிழர் அவைத் தேர்தலில் போட்டியிட்டவர். சிவகணேஸ் வடிவேலு கோவிலின் திருவிழா ஒழுங்குகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்கும்போதே அடிதடிக்கு தேவையான ஆயதங்களைத் தயார் நிலையில் வைத்திருந்ததாக எமக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆனால் காரில் அசோக் என்பவரும் சாதாரணமானவர் அல்ல என்றும் வாய்ச் சண்டையாக இருக்கும் போதே அவர், தான் பயன்படுத்தும் சிறுகத்தியால் காவல் பொறுப்பை ஏற்ற சிவகணேஸ் வடிவேலுவின் தலையில் கீறியதாகவும் சிவகணேஸ் வடிவேலுவின் பொறுப்பில் இருந்த தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்தே இந்த அடிபாடுகள் ஆரம்பித்தது என அவர்கள் பக்கச் செய்தி தெரிவிக்கின்றது.

இந்த அடிபாட்டில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அறியவருகிறது.
 
கோயிலில் ஒழுங்கு கடமைகளுக்கு என அமர்த்தப்பட்ட தொண்டர்கள் சமயோசித புத்தியுள்ளவர்களாக, மற்றவர்களின் மனம் நோகாது கையாளுபவர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கோவில் அதற்கு முற்றிலும் மாறாக காராட்டி பயிற்சி பெற்ற ஒருவரை அரசியல் பின்னணியுடைய ஒருவரை இப்பணிக்கு பொறுப்பாக நியமித்து, சர்வ சாதாரணமான விடயமொன்றை ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய வன்முறைக் கலகமாக மாற வழிவகுத்துள்ளது.

மேலும் இத்தேர்த் திருவிழாவிற்கு முதல்நாள் இடம்பெற்ற அன்னதான நிகழ்விலும் நோர்வே அரசின் உணவுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள், ஆலயம் உணவு சமைப்பது மற்றும் அதனை கையாளவது பரிமாறுவது தொடர்பில் சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி அங்கு உணவு சமைத்து மக்களுக்கு பரிமாற வேண்டாம் என்று அறிவுறுத்திச் சென்றனர். ஆனால் அதனையும் மீறி அன்னதானம் பரிமாறப்பட்டது.

வன்னியில் மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகுந்த கஸ்டத்தை எதிர் நோக்கியுள்ள நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒருவேளை உணவுக்கு எவ்வளவோ கஸ்டங்களை சந்திக்கும் போது நோர்வேயில் அன்னதானம் கொடுக்கும் உபயகாரர்கள் தங்கள் பெயருக்காகவே இதனைச் செய்கிறார்கள் என்றும் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.
 
சிவகணேஸ் வடிவேலு வன்முறைகளுடன் நெருக்கமானவர். இவரது கோஸ்டியைச் சேர்ந்த ஒருவர் சில வருடங்களுக்கு முன்னர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்ட அதிர்ச்சி தரும் சம்பவத்தின் ஆரம்பமே இந்தக் கோவில்தான். இன்று இவர்கள் மீண்டும் வன்முறைகளில் இறங்கியுள்ளனர்.

மக்கள் அவையின் உறுப்பனர்களாக அறியப்பட்ட சிவகணேஸ் வடிவேலு போன்றவர்கள் இன்னமும் கோவிலில் பொது இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் உள்ள மிகச்சிறிய நடைமுறைகளையே பண்பாக நடத்தத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
 
தனிநாடு பெற்ற பின்னர் பணம் தருவோம் என்று கூறிப் பணம் பெற்றவர்களும், இந்த கோவில் நிர்வாகத்தினரும் தேர்திருவிழா உபயகாரர்களும் ஊரை அடித்து உலையில் போட்டு கணக்கு விட்டு கணக்குக் காட்டிக் கொண்டு திரிகிறார்கள், என்று கடன் கொடுத்தவர்கள் கோவிலில் வந்து சாமியின் முன்னால் குமுறி அழும்குரலைக் கேட்டதாக ஒரு அடியார் என்னிடம் தெரிவித்தார்.

இந்த குறிப்பிட்ட வன்முறை எழுந்தமானமாக விபத்தாக நடந்த விடயம் அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிகிறது. இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதற்கான சூழல் இன்னமும் இந்த ஆலயத்தில் உள்ளது. சிவசுப்பிரமணியர் ஆலயம், மக்கள் அவை போன்ற அமைப்புகள் இவ்வாறான அடிபாடுகள் நிகழாமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த அடிபாடு அரசியல் சம்பந்தப்பட்டது என பிபிசி சந்தேசயா செய்தி வெளியிட்டு இருந்தது. சிவகணேஸ் வடிவேலு தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவனைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் மக்கள் அவை உறுப்பினர் என அச்செய்தி சுட்டிக்காட்டி இருந்தது. இவ்வடிபாட்டில் சம்பந்தப்பட்ட மறு தரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவன் பிரிவுக்கு எதிரானவர்கள் எனச் செய்தி தெரிவித்து இருந்தது. தமிழ்நெற் இச்செய்தியை மறுத்து அச்சம்பவம் முற்றிலும் தனிப்பட்ட ஒரு ஒழுங்குப் பிரச்சினையில் ஏற்பட்ட தகராறு எனச் சுட்டிக்காட்டி இருந்தது. நோர்வே மக்கள் அவை உறுப்பினரான சிவகணேஸ் வடிவேலு காயப்பட்டதை வைத்துக் கொண்டு சந்தேசயா செய்தியைத் திரிபுபடுத்தியதாக தமிழ்நெற் தனது செய்திக் கட்டுரையை வெளியிட்டு இருந்தது.