20

20

மழை நாடகம் – வாழ்க்கையின் தருணங்களை நவீன உளவியல் கோட்பாடுகளின் மீதாக பொருத்திப் பார்க்கும் முயற்சி : கூத்தலிங்கம்

Mazhaiலண்டன் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தின் நாடக நிகழ்வு ஒன்று யூலை 22 2010 சென்னையில் இடம்பெற்றது. பெசன்நகர் எலியற்கடற்கரை சாலையில் உள்ள ஸ்பேஸ் அரங்கில் ‘மழை’ ‘பிரத்தியேகக் காட்சி’ ஆகிய இரு நாடகங்கள் தமிழ் அவைக்காற்றுக்கழகத்தினால் மேடையேற்றப்பட்டது. சென்னையில் லண்டன் அவைக்காற்றுக்கழகத்தின் நாடகங்கள் மேடையேறியது இந்நாடகம் தொடர்பாக கூத்தலிங்கம் அவர்கள் ‘நட்பு’ இணையத்தில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பிரசுரமாகிறது.

இந்நாடகம் பற்றிய மற்றுமொரு பார்வை Psychological drama என்ற தலைப்பில் ஹிந்து பத்திரிகையில் வெளியாகி இருந்தது. அதனைப் பார்க்க: http://www.hindu.com/fr/2010/08/20/stories/2010082051230600.htm

._._._._._.

Mazhaiமிகவும் நாகரீகமடைந்து விட்டதாகச் சொல்லப்படும் ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் அவனது உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்லவியலாத நிலையில் அவனது எண்ணங்கள் ஆழ்மனதில் வீழ்படிவாகி பிறகது அவனது சொற்கள், செயல்கள் மற்றும் வாழ்க்கை நகர்வுகள் யாவற்றிலும் வெவ்வேறு விதமாகப் பிரதிபலித்துக் கொண்டேயிருக்கின்றன. ‘மழை’ நாடகத்தில் புரபொசர் தன் மகளை திருமணம் செய்து கொள்ளாதபடி அவளை தன் கடைசி மூச்சு நின்று போகும் வரையில் தன்னருகேயே வைத்திருந்ததற்கான காரணம் மகள் மேல் கொண்ட பாசத்தினாலா? தன்னை கடைசி தருணம் வரையில் கவனித்துக் கொள்ள வேண்டியதற்கு ஆள் இல்லாமல் போய்விடுமே என்ற பயத்தினாலா? அல்லது மகள் மேல் அவர் கொண்ட நுட்பமான காதலினால், அவளை இன்னொருவர் தொடுவதை பொறுத்துக்கொள்ள இயலாத பொறாமையினாலா? – மழை நாடகத்தின் நான்கு முக்கிய கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களும், அவர்கள் சந்தித்து விவாதிக்கும் தருணங்களும் பார்வையாளர்கள், தங்களைத் தாங்களே மனவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்திக் கொள்ளும் சூழலுக்கு அதன் காட்சிகள் உதவி புரிவதாய் உள்ளன. உரையாடல்கள் அனைத்தும் உளவியல் கோட்பாடுகளுடன் ஏதோவொரு வகையில் தொடர்புகொண்டபடியே நகர்கின்றன. நிர்மலா டாக்டர் ஜேம்ஸிடம் ‘I NEED A MAN’ என்று சொல்ல, அவர் திகைத்து பதட்டமடைந்து, மறுத்து, தனக்கு சமூக சேவையில் மட்டும்தான் தீவிர ஈடுபாடு என்று சொல்ல, அவள் அவனைப் பார்த்து ‘நீ ஒரு Impotent’ என்றும் அதை மறைப்பதற்காகவே திருமண வாழ்க்கையிலிருந்து விலகி சமூக சேவகன் என்று சொல்லி மற்றவர்கள் கவனத்தை திசைதிருப்பி விடுகிறாய், இது ஒன்றிற்குப் பதிலாய் இன்னொன்றை பதிலீடு செய்து மறைத்துவிடும் உபாயம்’ என்ற வகையில் அவளது பேச்சு அமைவதோடு ‘ALL  Saints are impotent’ என்னும் இன்னொரு உளவியல் கோட்பாட்டை அவ்வப்போது சொல்கிறாள். அப்பா (புரபொசர்) இறந்த மறுநாளிலிருந்தே விடாத மழை தொணதொணத்து பேய்ந்து கொண்டிருப்பதை நிர்மலாவும் அவளது சகோதரன் ரகுவும் அவ்வப்போது சன்னலருகே போய் பார்க்கிறார்கள்.

Mazhaiநிராசையுடன் இறந்த அப்பாதான் இப்பொழுது வெளியே விடாத மழையாக நசநசத்துப் பேய்ந்து கொண்டிருக்கிறாரோ என மகள் நிர்மலா அய்யம் கொண்டு அச்சப்படுகிறாள். மகன் ரகுவை புரொபொசருக்கு கடைசிவரை பிடிக்காமல் போய் அவனை தந்தை வெறுத்ததற்கான காரணத்தை அவனே தங்கை நிர்மலாவிடம் சுருக்கமான கதை போலச் சொல்கிறான் – புத்தகங்களையே மனைவியாக்கிக் கொண்டவர் அப்பா. அம்மாவை இன்னொருவருடன் படுக்கையில் வைத்து அவர் பார்த்துவிடும் நிலையில் அவர் அம்மாவை திட்டுகிறார். அம்மாவோ அவரைப்பார்த்து கேலியாக விழுந்து விழுந்து சிரிக்கிறாள். அப்பா உடனே கையறுநிலையில் அழத்தொடங்குகிறார். அங்கே சிறுவனான மகன் ரகு வந்து அழும் அப்பாவை பார்த்துவிடுகிறான். அவருடைய அகங்காரம் (Ego) முற்றிலும் சூன்யமடைந்திருந்த நிலையில் அவரை அவன் நேருக்கு நேர் பார்த்துவிடுகிறான். அன்றிலிருந்து அவர் தன் மகன் மேல் வெறுப்பு கொள்கிறார். ‘மழை’யின் சின்னச் சின்ன தருணங்கள் கூட மனதின் நுட்பமான தளங்களை புலனாய்வு செய்பவை.

தனது வாழ்க்கை தந்தையின் சுயநலத்தால் தடுத்து ஒரு புள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டதன் கோபம் நிர்மலாவின் எந்த ஒரு பேச்சிலும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது – புரபொசரின் இறப்புக்குப் பிறகும்.

Mazhaiபுரபொசரின் இறப்பு நடக்கும் இரவில், டாக்டர் ஜேம்ஸ் வந்து அவரை பரிசோதித்துக் கொண்டிருக்கையில், மின்சாரம் நின்றுபோய், நிர்மலா இரண்டு மெழுகுவர்த்திகளை அதன் தீபங்களோடு ஏந்தி வருகிறாள். தந்தை இறந்து போய் விட்டதை மருத்துவர் ஜேம்ஸ் சொல்ல, அவள் மெழுகுவர்த்திகளை தந்தையின் இரு பக்கங்களிலும் மெதுவாக வைக்கிறாள். அதுபற்றி பின்னர் அவள் சகோதரனுடன் விவாதித்துப் பேசிக்கொண்டிருக்கையில், அன்று அவர் இறந்துபோக வேண்டி, அதற்காகவே தந்தையை காலையிலிருந்தே தான் தயார்படுத்தி வந்ததாகச் சொல்கிறாள் நிர்மலா. சகோதரன் ரகு அவள் அருகே போய் அவள் படித்துக் கொண்டிருக்கும் உளவியல் நூலைப் பார்க்கிறான். அந்தப் புத்தகத்தின் பெயர் – Ethinic and Socio aspect of Murder.
அன்பு வெறுப்பாகவும் பொறாமையாகவும் பிறழ்வதை ரகு ஓரிடத்தில் அதை Sublimation என்கிறான் – ஒன்று வேறொன்றாதல்.

டாக்டர் ஜேம்ஸ் நிர்மலாவின் ‘I Need a man’ என்னும் வார்த்தையைக் கண்டு பயந்தவனாக, மக்கள் சேவை என்றெல்லாம் பேசியவனாக மறுத்துவிடுகிறான்.

அவள் சன்னலுக்கு வெளியே நசநசத்துப் பெய்யும் மழையைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாள். அவளது சகோதரன் ஆறதலாக அவளது முதுகில் கை வைக்கிறான். அது நாடகத்தின் கடைசித் தருணமாய் உறைந்து நிற்கிறது.

Indira_Parthasarathyவாழ்வின் சிறுசிறு அசைவுகளையும் நவீன உளவியல் கோட்பாடுகளுடன் பொருத்திப் பார்த்து, மனித மனவெளி குறித்த நுட்பமான ஆய்வு கொள்ளும் முயற்சியாக இந்திரா பார்த்தசாரதியின் எழுத்தில் உருவான ‘மழை’ நாடகம் அமைந்ததோடு அல்லாமல் பாசாங்கின் மேல்பூச்சுகளைக் கலைத்து, மனதின் நிர்வாணத்தை வெளிச்சத்தின் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.
வசனங்களால் காட்சிகளை முன்னெடுத்துச் செல்வதாய் அமைக்கப்பட்டிருக்கிறது – ‘மழை’.

இறைவனிடம் முறையீடு…

anoma.jpgபாராளு மன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா இன்று கொழும்பு முகத்துவாரப் பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து வழிபட்டார். இதன்போது ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க மற்றும் காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியும் கலந்து கொண்டனர்.

2600 மெட்ரிக் தொன் கூரைத் தகடு

2600 மெட்ரிக் தொன் கூரைத் தகடுகளை இந்தியா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது. இலங்கையிலுள்ள இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா மேற்படி கூரைத் தகடுகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் நேற்று கொழும்பில் பாராளுமன்ற வீதியில் இடம்பெற்ற ஒரு நிகழ்வின் போது கையளித்தார்.

லண்டனில் ஆர்ப்பாட்டம் : புதிய திசைகள்

Puthiya_Thisaigal_Protest_Leafletஈழப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கியிருப்பதன் மூலம் இலங்கை தீவு முழுவதும் தனது சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்தியுள்ளது ராஜபக்ச அரசு. சிங்கள பேரினவாதத்தின் வரலாற்றில் இக்காலகட்டத்தை மிக உயர்நிலை சகாப்தமாக பிரகடனப்படுத்தி தனது அடக்கு முறைகளை அனைத்துக் களங்களிலும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது பேரினவாத அரசு.
 
இன்று இலங்கையில் நடப்பது இனச்சுத்திகரிப்பின் உச்சக்கட்டம் என்பது புரிந்து கொள்ளத்தக்கது. இலங்கைத்தமிழர் என்னும் இனத்தின் ஆணிவேரையே அறுத்தெறியும் நடவடிக்கை.எமது அரசியல் உரிமையை பறித்து, எமது  பிரதேசங்களில் எம்மை சிறுபான்மையினராக்கி, ஆதிக்க மொழிமூலமே எமது வாழ்க்கையில் முன்னேற்றம் அடையமுடியும் என்ற சூழலை உருவாக்கி, எமது சமூகத்தை சீரழியவிட்டு எம்மை ஒரு அடிமை மனநிலைக்கு கொண்டு செல்வது என்பதுதான் இந்த இனவெறியின் இன்றைய இலக்கு.
 
இலங்கைத் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரைப் புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும் தமிழ் நாட்டின் ஜனநாயக மனிதாபிமான சக்திகளிடமிருந்தும் தனிமைப்படுத்தும் இலங்கை அரச பாசிசத்தின் நிகழ்ச்சி நிரல் இங்கு முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Puthiya_Thisaigal_Protest_Leafletஐம்பதாயிரம் மக்களைக் கொன்று போட்ட அரசிற்கு எதிராகப் போராட முன்வரும் ஒவ்வொரு மனிதர்களின் மீதும் இலங்கை அரசின் உளவியல் யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. அப்பாவி மக்களை நாளாந்தம் அழிப்பவர்களை எதிர்த்துப் போராடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நிராகரிக்கக் கோருகிறார்கள்.

பலவகை ஒடுக்குமுறைகளையும் இன்று சந்தித்துவரும் முஸ்லிம் சமூகமும்  மலையக சமூகமும் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சனையும் இதுதான். ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகங்களாகிய நாம் ஓரணியில் நின்று சிங்கள பேரினவாத அரசிற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து செல்லும் அவசியத்தை இன்றைய காலம் வேண்டி நிற்கிறது.
 
தமிழீழ விடுதலை புலிகளை ஒடுக்குவது என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும் உலகின் யுத்த விதிமுறைகள் அனைத்தையும் மீறி காட்டுமிராண்டித்தனமாக அழித்ததில் இருந்து, இலங்கை அரசானது ஒடுக்குமுறையின் முன்னுதாரணமாக, உலகத்திற்கு ஆலோசனை வழங்கும் அனுபவசாலியாகத் தன்னை பிரகடனப்படுத்தி கொள்கிறது. சிறுபான்மை தேசிய இனங்களை ஒடுக்கி வாழும் பெருந்தேசிய இனம் சுதந்திரமாக வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. இருக்கப்போவதும்  இல்லை. சிங்கள மக்களின் உரிமைகள் தமிழ் மக்களின் உயிர் பறிப்புடன் எப்படிக் கரைந்து போயின என்பதை சிங்கள மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.
 
இது யுத்த வெறிபிடித்து அலையும் ஓர் சர்வாதிகார அரசிற்கெதிரான போராட்ட கால கட்டம். இலங்கைத் தீவிலும் புலம்பெயர் சூழலில் வாழும் அனைத்து மக்களும் தமது நிலை சார்ந்து போராடவேண்டிய தருணம் இது. சமூகத்தில் அடிப்படை ஜனநாயகம் இன்றி எந்தப்போராட்டமும் அடுத்த கட்டத்திற்கு நகர்வது சாத்தியமற்றது.
 
அனைத்து மக்களே, ராஜபக்ச அரசிற்கெதிரான போரில் ஒன்றிணைவோம் போராட்ட சக்திகள் அனைவரும் பொது எதிரிக்கெதிராக ஒன்றிணைவோம். எம்மைப்போல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உரிமைக்காக போராடும் சக்திகளுடன் கைகோர்ப்போம். எமது போராட்டம் உலக அரங்கில் நடைபெறும் உரிமைப்போரின் ஓர் அங்கமாக மாறட்டும்.

லண்டனில் புதிய திசைகள் அமைப்பு இலங்கை அரசிற்கு எதிரான கீழ்க்காணும் முழக்கங்களோடும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது. அதே நாளில் தமிழ் நாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகம், இதே நோக்கங்களுக்காக தமிழ் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றது.

இலங்கை இனவெறி அரசே,
இன அழிப்பை நிறுத்து!
தமிழர் பிரதேசங்கள் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து!
அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கானோரை விடுதலை செய்!
அரசியல் கைதிகளை சித்திரவதை செய்யாதே!
கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் எங்கே?

காலம்: 21/08/2010
நேரம்: 2 – 5 பி.ப.
இடம்: Richmond Terrace, Westminster
அருகாமை ரயில் நிலையம்: Westminster

உலக மனிதநேய தினம் World Humanitarian Day : புன்னியாமீன்

whd_posters.jpgஉலக மனிதநேய தினம் World Humanitarian Day (WHD). ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், நோய், போஷாக்கின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பல இலட்சம் மக்களை நினைவுகூரும் வகையிலும், துன்பத்திலிருந்து விடுவிக்கப் படுவோருக்காகப் பணியாற்றுவோர் மற்றும் இப் பணிகளின் போது கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் ஆகியோரையும் நினைகூரும் வகையிலும் இத்தினத்தைஅனுஷ்டிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

2008 டிசம்பர் 11 ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் A/RES/63/139 இலக்கத் தீர்மானப்படி இத்தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கமைய முதலாவது உலக மனித நேய தினம் World Humanitarian Day ஆகஸ்ட் 19 2009 இல் கொண்டாடப்பட்டது.
இத்தினத்தை நாடுகளின் அரசாங்கங்களும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும், அரச சார்பற்ற நிறுவனங்களும், மனித நேயம் கொண்டவர்களும் இணைந்து உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையைப் பொறுத்தவரை மோதல் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மேற்கொண்டுள்ள பணிகளில் எட்டிய வெற்றிகள் மற்றும் சவால்களை வெளிப்படுத்தும் தருணமாக இத்தினம் விளங்குவதாக ஐ.நா. தகவல் நிலையம் 2010 இல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

உலக வரலாற்றில் மனிதகுலம் பல தடைகளைத் தாண்டி முன்னேறியுள்ளது. ஆரம்பத்தில் கடல் கொந்தளிப்பு, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கையின் சீற்றங்களிலிருந்து தம்மைக் காத்துக்கொண்டு மனிதன் வளர்ந்தான். அடுத்தபடியாக, காட்டுவாழ்க்கையில் புலி, கரடி, சிங்கம், பாம்பு போன்ற கொடிய மிருகங்களின் தாக்குதல்களைச் சமாளித்து வாழக் கற்றுக் கொண்டான். மனிதன் குடும்பமாக வாழத்தலைப்பட்டதும் சமூக வாழ்வில் புதுவித ஆபத்து மனிதனுக்கு வந்தது. மனிதர்களிலேயே பலர் மிருகங்களாக மாறி, மற்றவர்களை இனத்தின் பெயரால், நிறத்தின் தன்மையால், தேசத்தின் பெயரால், மதத்தின் பெயரால் தாக்கத் தலைப்பட்டனர். இவ்வாறு மனிதர்களால் மனிதர்களுக்குத் தரப்படும் கொடுமைதான் இன்றைய காலம் வரை நீடித்து வருகிறது.

ஆயினும் ஒவ்வொரு காலகட்டத்திலும், அன்போடு, அருளோடு, தன்னலமற்ற பொதுநலத்துடன், மனித நேயத்துடன் மற்ற உயிர்களையும் காத்து நிற்கும் உத்தமர்கள் ஒரு சிலர் இருந்த காரணத்தால்தான் மனித குலம் இன்னமும் தழைத்து நிற்கிறது.

“உண்டால் அம்ம இவ்வுலகம்” என்ற புறநானூற்றுப் பாடலில் கூறியபடி, இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும், தமக்கென வாழாப் பிறர்க்குரிய சான்றோர்களில் சிலர் மனித நேயத்துடன் உலகில் வாழ்கின்ற காரணத்தால்தான், உலகம் என்பது இருக்கிறது. இன – மத – தேச வேறுபாடுகளைக் கடந்து, மனிதனை மனிதனாக மதிக்கும் மனித நேயம் மனித குலத்துக்கு நம்பிக்கையைத் தருகிறது.

“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய், தம்நோய்போல் போற்றாக் கடை” என்பது வள்ளுவம். கல்வியறிவு, செல்வச் செழிப்பு, பட்டம், பதவி ஆகியவை பெருமளவில் ஒருவனுக்குக் கிடைத்திருந்தாலும், அவற்றுடன் மனித நேயம் என்பது அவனிடம் இல்லை என்றால், சேர்ந்துள்ள மற்ற வசதிகளால் அவனுக்கோ அவன் சார்ந்த சமுதாயத்துக்கோ எந்தப் பயனும் இல்லாமற் போய்விடும்!
மனிதரின் தன்மையின் உயர் போக்கினை அடிப்படையாகக் கொண்ட உலக நோக்கு மனிதநேயம் ஆகும். சிறப்பாக மீவியற்கை அம்சங்களில் கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்காமல் மனிதரின் பகுத்தறிவை, அறத்தை, ஆற்றலை மனிதநேயம் முன்னிறுத்துகின்றது. அனைத்து மனிதர்களையும் அது மதிப்போடு நோக்குகின்றது. தமிழில் மனிதநேயத்தை மனிதபிமானம், மனிதத்துவம் என்றும் குறிப்பிடுவர்.

மனிதநேயம் என்பது மனித வாழ்க்கையில் மிக உத்தமமான ஓர் உணர்வாகும். ஆனால் இன்று மனிதாபிமானம் மனிதனிடத்தே செத்துக் கொண்டு வருவதாக பொதுவாகக் கூறப்படுகின்றது. உலகத்தில் வாழக்கூடிய அனைவரும் ஒரே நிலையில் வாழ்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியும். வரலாற்றுக் காலம் முதல் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஒரு பொதுவான விடயமே. இன்றைய ‘உலகமயமாக்கல் யுகம்’ இந்த ஏற்றத்தாழ்வுகள் பெரிதும் விரிவடைந்துவிட்ட நிலையில் மனிதன் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் காரணத்தினால் மனிதநேயம் என்பது வெகுவாக குறைந்த வண்ணமே உள்ளது.

இன்று உலகளாவிய ரீதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் நாடுகளின் எண்ணிக்கை அதிகம். பொதுவாக இந்நாடுகளில் போசாக்கின்மை, இதன் காரணமாக ஏற்படும் பாதிப்பான விளைவுகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வண்ணமே உள்ளது. ஒரு நேர உணவுக்குக் கூட சிரமப்படும் மக்கள் வாழும் நிலையில் அபிவிருத்தியடைந்த நாடுகள் மனிதாபிமானத்தைப் பற்றியும் மனிதநேயத்தைப் பற்றியும் கதைத்துக் கொண்டு தத்தமது நாடுகளின் அபிவிருத்தியையும், பாதுகாப்பினையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கோடான கோடி டொலர்களை மூலதனமாக்குவதை நோக்குமிடத்து மனிதநேயம் என்பதற்கு புதிய வரைவிலக்கணத்தை தேடவேண்டியுள்ளது.

உலகளாவிய ரீதியில் நோக்குமிடத்து போசாக்கின்மை, இயற்கை அனர்த்தங்கள், யுத்த அனர்த்தங்கள், பயங்கர நோய்கள், வறுமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலையை ஆழமாக சிந்திக்க வேண்டியதாக உள்ளது. மனிதன் என்று வரும்போது அனைவரும் எலும்புகளாலும் தசைகளாலும் படைக்கப்பட்டவர்கள். அனைத்து மனிதர்களின் உணர்வுகளும் ஒன்றே. ஒரு மனிதன் இயற்கையாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ பாதிக்கப்படும்போது அந்த மனிதனின் உள நிலைகளை சிந்திக்க வேண்டியதும், அம்மனிதர்களுக்கு உதவ வேண்டியதும் பாதிப்புக்குட்படாத மனிதர்களின் மனிதாபிமானத்தின் உயர் பண்பாகக் காணப்பட்டாலும்கூட, இதனை எத்தனை பேர் நிறைவேற்றுகின்றார்கள் என்பது கேள்விக்குறியே!
முதலாளித்துவ சமூக அமைப்புக்கள் தலைவிரித்து தாண்டவமாடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒருவனுக்கு செய்யும் உதவிகள் கூட பேருக்காகவும், புகழுக்காகவும், விளம்பரத்துக்காகவும் அமைந்திருப்பது வேதனைக்குரிய ஒரு விடயமே. நவீன தொழில்நுட்ப விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எல்லாவற்றையும் சிந்திக்கும்போது மனிதாபிமானத்தின் அடிப்படையை உணரத் தவறுகிறோம். மனிதாபிமான சிந்தனைகள் உயரிய முறையில் முன்னெடுக்கப்படுமிடத்து இன்றைய உலகில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு எப்போதோ முடிவெடுத்திருக்கலாம்.

ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மனிதாபிமான தினத்தை பிரகடனம் செய்கையில் யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், நோய், போஷாக்கின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் எடுக்கும் தினமாகவும் இத்தகையோருக்கு உதவிகள் வழங்குவோரை கௌரவிக்கும் தினமாகவும் கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தது. இத்தகைய நிலைப்பாடுகளுக்கு ஒரு தினம் மாத்திரம் போதாது. பாதிக்கப்பட்டோரின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டியது மனிதாபிமானமிக்க ஒவ்வொருவரினதும் கடமையாகும். இத்தகைய உணர்வூட்டல்கள் சமய ரீதியாக, கல்வியியல் ரீதியாக ஊட்டப்பட வேண்டியது அத்தியாவசியமான ஒன்றே.

மனித உணர்வுகளை ஓரிரு தினங்களுக்குள் மாற்றிவிட முடியாது. ஒரு மனிதனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நிலை இயல்பாக உருவாக்கம் பெறுமிடத்து இதனால் ஏற்படக்கூடிய பலாபலன் நிலையானது. நிச்சயமாக புகழை எதிர்நோக்காமல் இலாப நோக்கங்களைக் கருத்திற் கொள்ளாமல் இவற்றையே வியாபாரமாக்காமல் உண்மையான நோக்குடன் மனிதநேயமிக்கவர்களை கௌரவிக்க வேண்டியது கடமையே. அதேநேரம், உண்மையான நோக்கமிக்கவர்கள் இத்தகைய கௌரவங்களை எதிர்பார்க்கப் போவதுமில்லை.

இலங்கையில் சர்வதேச மனிதநேய தினம்

இலங்கையில் சர்வதேச மனிதநேய தினம் நாடளாவிய ரீதியில் ஆகஸ்ட் 19ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டது. இதன் பிரதான நிகழ்வு கொழும்பிலுள்ள ஐ.நா.அலுவலகத்தில் நடைபெற்றபோது நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரைநிகழ்த்திய ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ‘நீல் பூனே’ பின்வருமாறு தெரிவித்தார்.

‘……உலக மனிதநேய தினத்தை நாம் ஏன் அனுஷ்டிக்கின்றோம் என்பதற்கு முதலாவது காரணமாக 7 வருடங்களுக்கு முன்னர் ஈராக் பாக்தாத்தில் ஐ.நா.தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 21 மனிதாபிமான பணியாளர்கள் பலியாகியிருந்த சம்பவத்தைக் கூறவேண்டும்….

….. இச்சம்பவத்தில் உலக நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஈராக்கியர்களும் பலியாகி இருந்தனர். அத்துடன் ஐ.நா.செயலாளர் நாயகத்தின் உதவிச் செயலர்களில் ஒருவரும் பலியானார். அத்துடன் பாக்தாத் சம்பவம் மட்டுமன்றி மேலும் பல காரணங்களும் உலக மனிதநேய தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கு ஏதுவாக அமைந்தது….

…. மோதல் வலயங்களிலிருந்து வெளியேறும் மக்களைப் பாதுகாப்பு வழங்கும் இலங்கை அரசின் முயற்சிக்கு நாமும் ஆதரவினை வழங்கியிருந்தோம். இம்மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் அரசுடன் எமக்குப் பரந்தளவிலான பங்கு இருந்தது. அக்காலப்பகுதியில் இலங்கையர்கள் (அரச தரப்பு, தனியார் தரப்பு), அரச சார்பற்ற நிறுவனங்கள், பாதுகாப்புப் படையினர், ஐ.நா.உதவி அமைப்புகளுடன் பணியாற்றும் உலகளாவிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், மக்களின் உயிரைப் பாதுகாக்க சிக்கலானதும் கடினமானதும் உடனடியான பணிகளை மேற்கொண்டிருந்தனர்….

….அத்துடன், மக்கள் தமது இயல்பு வாழ்வைத் தொடர்வதற்குத் தேவையான பலத்தினைப் பெற்றுக் கொள்ளவும் இவர்கள் ஆதரவாகச் செயற்பட்டுள்ளனர். இவற்றிற்கான நிதி அரசினாலும், உள்ளூர் மக்களாலும் வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு மக்களாலும் வழங்கப்பட்டுள்ளது….

….மக்கள் விரக்தி அடைந்திருந்த காலத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பல சவால்களும் பல சிக்கலான சூழ்நிலைகளும் இருந்தன. இறுதியில் கடின உழைப்பு, சிறந்த ஒத்துழைப்பு, மனிதாபிமானக் கொள்கைகளைப் பிரயோகித்தல், பாதிக்கப்பட்ட மக்களின் முயற்சி ஆகியவற்றின் ஊடாக சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப் பெற்றன. தமது வாழ்வை மீள ஆரம்பிக்கும் தகுதியை மக்கள் பெற்றுக் கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களும் நாட்டிலுள்ள ஏனையவர்களும் சமாதானத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற வாய்ப்பை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளனர்….

…..அனைத்து இலங்கையர்களுக்கும் தேவையான பாதுகாப்பான சுதந்திரமான வாழ்வுக்குரிய நிலையான அத்திவாரத்தை இடவும் மக்கள் மீட்சிபெற்று வாழ்வைக் கட்டியெழுப்ப ஐ.நா.தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்….

….இவ்வருட முதல் 6 மாதத்தில் 5 இலட்சம் மக்களுக்குத் தேவையான உணவு, வடக்கில் 130000 ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான உணவு, மீளக்குடியேறிய 40 ஆயிரம் குடும்பங்களுக்குத் தலா 25 ஆயிரம் நிதி உதவி, 92,800 குடும்பங்களுக்கு உணவற்ற பொதிகள் ஐ.நா.வால் வழங்கப்பட்டது. அத்துடன் 2009 இலும், 2010 இலும் 3 இலட்சம் இடம்பெயர்ந்த மக்களுக்கு சுத்தமான குடிநீர், சுகாதாரச் சேவை வழங்கப்பட்டு நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர்…

…இவ்வருடம் ஜனவரி முதல் மே வரை அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து 123 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது….

….மக்கள் மீளக்குடியேறிய பகுதிகளில் 2915 கிணறுகள் சுத்திகரிக்கப்பட்டதுடன், 515 கிணறுகள் தரமுயர்த்தப்பட்டன. 275 வேலை நாட்களுக்கான பணப்பெறுமதியுடைய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 19,000 குடும்பங்களுக்கு விவசாய, மீன்பிடி, பண்ணை வளர்ப்புக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது….

….75 ஆயிரம் ஏக்கர் வயலும் 17 ஆயிரம் ஏக்கர் நிலமும் மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாக சீரமைக்கப்பட்டுள்ளதுடன், மெனிக்பாம் உள்ளிட்ட முகாம்களில் தொற்றுநோய்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களில் 5 வயதுக்கு குறைவான சிறுவர்களின் போஷாக்கின்மை வீதம் 32 ஆக இருந்தது. தற்பொழுது 2 வீதமாக குறைக்கப்பட்டு சிறுவர்கள் போஷாக்குடன் உள்ளனர்…

….புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் 57,673 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அத்துடன் 3,214 வீடுகள் இடம்பெயர்ந்த மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாடுகள் ஐ.நா.உதவி அமைப்புகளினால் மேற்கொள்ளப்பட்டவை ஆகும். இருந்தாலும் இன்னும் பலதேவைகள் இடம்பெயர்ந்த மக்களுக்காக நிறைவேற்றப்படவேண்டியுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தற்பொழுதும் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். இம்மக்களுக்கு அதாவது அண்மையில் மீளக்குடியமர்ந்த மக்களுக்குரிய அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும். மெனிக்பாம் மற்றும் ஏனைய முகாம்களில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் தங்கியுள்ளனர்…

…அத்துடன் இம்மக்கள் அபிவிருத்தி என்பதையே எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அத்துடன் ஸ்திரமான சமாதானத்தையும் ஸ்திரமான அபிவிருத்தியினையும் ஏற்படுத்த வேண்டிய தருணம் இது..”வெனத் தெரிவித்தார்.

நிகழ்வின் ஓர் அங்கமாக மன்னாரிலும் இத்தினம் மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து மன்னார் சிறுவர் பூங்கா வளாகத்தினுள் மேற்படி நிகழ்வினை நடத்தின. இதன் போது சுமார் 30 ற்கும் மேற்பட்ட அரச சார்பற்ற அமைப்புகள் கலந்துகொண்டதோடு நூற்றுக்கணக்கான மனிதாபிமான பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது இயற்கை அனர்த்தம் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் இழந்தவர்களையும் நினைவு கூர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பினால் மன்னார், அடம்பன், மடு ஆகிய வைத்தியசாலைகளுக்கு பெறுமதி வாய்ந்த குடி நீரை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அதேநேரம் ஏ.சீ.எப். தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 ஊழியர் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இதுவரையில் தண்டனை விதிக்கப்படவில்லை என பிரான்ஸ் அதிருப்தியை வெளியிட்டிருந்தது. 2006ம் ஆண்டு மூதூர் பிரதேசத்தில் தன்னார்வ தொண்டர்கள் 17பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

படுகொலையாளிகள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் ‘பெர்னாட் குச்னர்’ தெரிவித்துள்ளார். இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் ஒருவரை மாறி ஒருவர் குற்றம் சுமத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

மனிதாபிமான தொண்டர்களின் பாதுகாப்பு மிகவும் முதன்மையானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான தொண்டர்களின் பாதுகாப்பு குறித்து எதிர்வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளதாகவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் மனிதநேயம் பற்றிய ஓர் தகவல்

இந்தியாவில் சிதம்பரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க வாழ் அறிவியல் மேதை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009 ஆண்டு இரசாயண வியலுக்கான நோபல் பரிசு பெறுவோரில் ஒருவராக அறிவிக்கப்பட்டவுடன் உலகச் செய்தி ஊடகங்களில் அவரைப் பற்றிய செய்திகள் உலாவரத் தொடங்கின.அவர் பற்றி ‘தி ஹிந்து’ பத்திரிகை அக்டோபர் 08.2009இல் வெளியிட்ட செய்தியொன்றை இவ்விடத்தில் குறிப்பது பயனுள்ளதாக அமையும் எனக் கருதுகின்றேன்.
ஓர் விஞ்ஞான மேதையாக அகில அறிமுகம் பெற்ற வெங்கட்ராமன் ராம கிருஷ்ணனின் மனிதநேய மனத்தை அவரது சகாவும் ஓய்வுபெற்ற அணுக்கரு இயற்பியல் துறை பேராசிரியருமான ஜே.எஸ்.பண்டுக்வாலா வெளிப்படுத்தியுள்ளார். வெங்கி என்று செல்லமாக அழைக்கப்படும் டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், சிறு வயது முதலே குஜராத் மாநிலம் வடோதராவில் வளர்ந்தவர். இவரது தந்தையார் வெங்கட்ராமன் மஹாராஜா சாயஜிரங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், தாயார் ராஜலஷ்மியும் குழந்தை உணவூட்டம் மற்றும் உயிர் வேதியல் துறையில் பேராசிரியர்.

பெற்றோர் இருவரும் பேராசிரியர்கள். எனவே இவரையும், இவரது சகோதரியையும் வளர்த்த வேலைக்கார அம்மையார் மீது இவருக்கு பாசம் அதிகம். அவருடைய குடும்பத்தை இவர் இன்றும் பரிவோடு கவனித்து வருகிறார்.

2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சங்பரிவார மதவெறியர்கள் மூட்டிய கலவர நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. வடோதராவில் இருந்த பெஸ்ட் பேக்கரியில் 12 முஸ்லிம்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். பேராசிரியர் பண்டுக்வாலாவின் வீடும் சூறையாடப்பட்டது. இதை அறிந்து மிகவும் வருந்திய டாக்டர் ராமகிருஷ்ணன், தனது நண்பர் பண்டுக்வாலா மூலம், வறுமையில் வாடும் முஸ்லிம் சிறுவர்கள் சிறுமிகளின் கல்வி தடைபடாமல் தொடர நிதியுதவி செய்து வருகிறார். பணம் கொடுத்தோம், கடமை தீர்ந்தது என்று இல்லாமல், அடிக்கடி ஏழை முஸ்லிம் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை விசாரித்து அறிவாராம். குறிப்பாக கணிதம், இயற்பியல், இரசாயணவியல் பாடங்களில் அவர்களுக்கு ஆர்வ மூட்டுமாறு பேராசிரியர் பண்டுக்வாலாவிடம் கேட்டுக் கொள்வாராம்.

சிதம்பரத்தில், பிராமண குடும்பத்தில் பிறந்து, குஜராத்திற்கு குடிபெயர்ந்து பின்னர் அமெரிக்காவில் கல்வி பயின்று, அந்நாட்டின் நிரந்தரக் குடியுரிமையையும் பெற்றுள்ள டாக்டர் ராமகிருஷ்ணன், குஜராத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அக்கறை செலுத்துவதும், முஸ்லிம் சிறார்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுவதும் பாராட்டிற்குரியது.

“மனிதன் அறிவாளியாவது எளிது, அறிவாளி மனிதநேயத்தோடு திகழ்வது தான் அரிதினும் அரிது.”

நோபல் பரிசு பெற்றுள்ள டாக்டர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அறிவாலும், மனிதநேயத்தாலும் உயர்ந்து நிற்பதுமூன்றாம் உலக நாடுகளில் வாழும் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

இலங்கை – ஈரான் ஒப்பந்தம் மேலும் ஒரு வருட காலம் நீடிப்பு

keheliya.jpgஈரானிலிருந்து தினமொன்றுக்கு 40,000 பெரல் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இலங்கை – ஈரான் ஒப்பந்தம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்கப்படவுள்ளது.

அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது என அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஈரான் தேசிய எண்ணெய்க் கம்பனி (NIOC) யுடன் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி தினமொன்றுக்கு 40,000 பெரல் மசகு எண்ணெய்யை (வருடாந்தம் 2 மில்லியன் மெற்றித் தொன்) கொள்வனவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது.

சுமார் ஒரு மாத காலம் வட்டியில்லா கடன் அடிப்படையில் வழங்கப்பட்ட சலுகை 2007 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் ஈரான் விஜயத்தின் பயனாக 4 மாத வட்டியில்லா கடன் அடிப்படையில் இலங்கைக்கு எண்ணெ ய்யை வழங்க ஈரானிய கம்பனி இணக்கம் தெரிவித்தது.

இவ்வாறு ஈரானுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதனை மேலும் ஒரு வருட காலத்துக்கு தற்போது பெற்றுக் கொள்ளும் அதே அடிப்படையில் பெற்றுக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக சவூதி அரேபியாவிலிருந்தும் 1,35,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய்யை கொள்முதல் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. 30 நாட்கள் வட்டியில்லா கடன் அடிப்படையில் சவூதி எண்ணெய்க் கம்பனியிலிருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளது.

ஈரானிய தேசிய எண்ணெய்க் கம்பனியுடனான ஒப்பந்தத்தை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் செப்டம்பர் முதலாம் திகதி செய்து கொள்ளவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி முடிவடையவுள்ளது.

பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்துக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.

சட்டத்தரணியின் வீட்டின் முன் வவுனியா பெண் தற்கொலை – மகளுக்கும் நஞ்சூட்டி கொலை செய்ய முயற்சி

வவுனியாவில் நெலும்குளம் பிரதேசத்தில் இருந்து தனது மகளுடன் கொழும்புக்கு வந்த தாய் பொல்ஹேன்கொட கிருலப்பனை பிரதேசத்தில் வசித்து வந்த பிரபல சட்டத்தரணியின் வீட்டின் முன்னால் தனது மகளுக்கு நச்சு விதையை உட்கொள்ள கொடுத்ததுடன் தானும் நச்சு விதையை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார். ஆனால் 11 வயதான அவரது மகள் கொழும்பு சிறுவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் வவுனியா நெலும்குளம்வைச் சேர்ந்த 36 வயதான புஷ்பராணி பத்ரகெளரி என்ற பெண்ணாவார். கிருளப்பனை பொல்ஹேன்கொட 162/11 என்ற இடத்தில் உள்ள வீட்டுக்கு தான் செல்வதாக வவுனியாவில் உள்ள பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவுக்கு முறைப்பாடொன்றை செய்த பின் அப்பெண் நேற்று (19) ஆம் திகதி காலை மேற்குறிப்பிட்ட சட்டத்தரணியின் வீட்டுக்கு வந்துள்ளார்.

குறிப்பிட்ட சட்டத்தரணி வவுனியாவில் இருந்த காலத்தில் உயிரிழந்த பெண்ணின் காணி வழக்கொன்றில் நீதிமன்றத்தில் தோன்றியுள்ளார்.

அப்போது சட்டத்தரணிக்கும் அப்பெண்ணுக்கும் ஏற்பட்ட உறவு காரணமாக அப்பெண் கர்ப்பம் அடைந்ததாகவும், அதற்கு நஷ்டஈடாக 5 இலட்சம் ரூபா வேண்டுமென்று அப்பெண் கேட்டுள்ளதாகவும், சட்டத்தரணி 2 இலட்சம் ரூபாவை கொடுக்க முன்வந்த போதும் அது போதாது என்று அப்பெண் கேட்டதாகவும் சட்டத்தரணி இதற்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாகவே அவரது வீட்டின் முன் நச்சு விதையை உட்கொண்டு அப்பெண் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று ஆலோசனை குழுக் கூட்டங்கள்

பாதுகாப்பு அமைச்சு மற்றும் துறைமுக அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டங்கள் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றன. குறித்த அமைச்சுகளுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த ஆலோசனை குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

முதலாவது குழு அறையில் நடைபெற்ற அமைச்சுக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ, முப்படை தளபதிகள், குறித்த அமைச்சுக்களின் அமைச்சர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எம்.பிக்களின் போசன அறையில் ஆளும், எதிர்க் கட்சி எம்.பி. களுடன் ஒன்றாக பகல் போசனத்திலும் கலந்துகொண்டார்.

நல்லூர் உற்சவம்: தென் பகுதியிலிருந்து பெருமளவு பக்தர்கள் வருகை

நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாக்களுக்கு பக்தர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டுமல்ல தென் பகுதிகளிலிருந்தும் வந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களைக் கண்காணிக்க தினமும் 400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர், தீர்த்தம், பூங்காவனம் உற்சவ காலங்களில் அடியார்களின் வருகை கூடுதலாக இருக்குமாகையால் இத்தினங்களில் 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையாற்றுவார்களென யாழ். பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

பெருந்தெருக்கள் அமைச்சின் செயலகத்திற்கு அடிக்கல்

ma.jpgஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் 1,100 மில்லியன் ரூபா செலவில் பத்தரமுல்லையில் நிர்மாணிக்க ப்படவுள்ள பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி அமைச்சின் பொதுச் செயலகத்திற்கான அடிக்கல்லை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோக பூர்வமாக நாட்டிவைத்தார்.

நேற்றுக் காலை இந்நிகழ்வு இடம்பெற் றதுடன் பத்தரமுல்லை டென்ஸில் கொப்பேகடுவ மாவத்தையில் எட்டு மாடிகளைக் கொண்டதாக இக்கட்டடம் அமையவுள்ளது. இரண்டு கட்டங்களாக நிர்மாணிக்கப்படவுள்ள இச்செயலகத்தின் முதற்கட்ட நடவடிக்கைள் 600 மில்லியன் ரூபா செலவிலும் இரண்டாம் கட்டப் பணிகள் 500 மில்லியன் ரூபா செலவிலும் இடம்பெறவுள்ளன.

நேற்றுக் காலை பத்தரமுல்லைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி செயலகத்துக்கான அடிக்கல்லை நாட்டிவைத்ததுடன் அது தொடர்பான பெயர்ப் பலகையையும் திரைநீக்கம் செய்து வைத்தார். அதன்பின்னர் அச்செயலகம் நிர்மாணிக்கப்படவுள்ள பகுதியையும் கட்டிடத்தின் மாதிரி வடிவமைப்பையும் பார்வையிட்டார்.

நேற்றைய இந்நிகழ்வில் ஜனாதிபதியுடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித் தலைவர் ஸ்யாவோ ஷாவோ, அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி, பிரதி அமைச்சர் நிர்மலகொத் தலாவல, அமைச்சின் செயலாளர் வசந்த கரன்னாகொட உட்பட முக்கியஸ் தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.