19

19

பல்கலைக்கழகங்கள் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. யாழ் பல்கலைக் கழகத்திடமும் சமூக மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது: நிஸ்தார் எஸ் ஆர் மொகமட்

University_of_Jaffna_Logoயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய விவாதம் தமிழ்சமூகத்தின் மிகமுக்கிய நிறுவனம் ஒன்றை கேள்விக்கு உட்படுத்தி இருந்தது. இதன்மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய பல்வேறு விடயங்களும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நிஸ்தார் எஸ் ஆர் மொகமட் இன் இக்கட்டுரை பிரசுரமாகிறது. பல்கலைக்கழகங்கள் கண்ணாடி போன்று சமூகத்தை உள்ளவாறே மட்டுமே பிரதிபலிக்க முடியுமா? இல்லையேல் சமூக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியனவா? என்ற அடிப்படைகளில் விவாதம் அமைகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான முன்னைய பதிவுகளைப் பார்க்க:
‘‘எல்லாம் அல்லது பூச்சியம் என்ற கொள்கை எம்மைக் கைவிட்டது! ஆராய்ச்சியாளராகிய நாம் உண்மைக்கு மட்டுமே அடிபணிய கடமைப்பட்டு உள்ளோம்.’’ பேராசிரியர் ரட்னஜீவன் ஃகூல் உடனான நேர்காணல்

சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன்
._._._._._.

பல வாரங்களுக்கு முன்  ஊடகவியலாளர் திரு. ஜெயபாலனினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சமூகமாற்றமும் யாழ் பல்கலைக்கழகமும் சம்பந்தமான விவாதஅரங்கும் அதை தொடர்ந்து வந்த பேராசிரியர் ஃகூல் அவர்களின் பேட்டியும் ஆரோக்கியமான பல கருத்துகளை தாங்கிவந்த போதிலும் அவை ஒரு அடிப்படை கேள்வியில் கவனம் செலுத்தவில்லை என்றே தெரிகிறது. அதாவது சமூக மாற்றத்திற்கு பல்கலைக்கழகம் தானா அடிப்படை என்ற கேள்வியே அதுவாகும். இருந்தும் இந்த கேள்வி கேட்கப்படாமலே ஒரு முடிவு எய்யப்பட்டுவிட்டதாக தோன்றுகிறது. சமூக மாற்றத்தை யாழ் பல்கலைக் கழகம் செய்யத்தவறி விட்டது என்பதே அந்த முடிவு.

சமூகமாற்றம் என்பது என்ன? அது ஒரே நாளையில் ஏற்படக் கூடியதா? அல்லது அது ஒரு தொடர்ச்சியான இயங்கியலை கொண்டதா? அல்லது ஒரு சமூகத்தின் குறைபாடுகளாக நாம்காணும் அம்சங்களை அச்சமூகத்தில் இருந்து நீக்கிவிட்டால் அது சமூக மற்றமாகுமா? ஏதாவது ஒரு வகையில் தனது பழைய நிலையை ஒரு சமூகம் மாற்றிக்கொண்டால் அதை ஒரு முன்னேறிய சமூகமாக கொள்ள முடியுமா? ஒரு சமூகமாற்றத்துக்கு எல்லை உண்டா? அப்படியானால் அதன் உச்சஎல்லை என்ன? ஏன் அதை பல்கலைக்கழகம் தான் ஏற்படுத்த வேண்டும்? என்ற நியாயமான  கேள்விகளுக்கெல்லாம் அந்த கட்டுரையிலோ அல்லது பேட்டியிலோ பதில்கள் இல்லை. இருந்தபோதிலும்  சமூக மாற்றத்தின் தேவை இருப்பதாக ஏதோ ஒரு வகையில் உணரும் நாம் அச்சமூகத்தில் புரையோடியிருக்கும் பல அடிப்படை விடயங்களை மூடி மறைத்துவிட்டு அல்லது அவைபற்றி அக்கறைபடாமல் சமூகமாற்றம் பற்றி கதைப்பதில் பயனில்லை என்றே தோன்றுகிறது.

சமூகத்தின் அங்கங்களான தனி மனிதர்களில் ஏற்படும் சிந்தனை மாற்றம் அதை பிரதிபலிக்கும் அவர்களின் செயல் மாற்றம் ஒட்டுமொத்த சமூகத்தின் மாற்றத்திற்கு காரணமாகின்றது என்பது எனது நிலைப்பாடு. இந்த அடிப்படை சிந்தனை மாற்றம் என்பது ஒரு பல்கலைக்கழகத்தின் பொறுப்பாக என்னால் பார்க்க முடியாதுள்ளது. ஏனெனில் இந்த உலகத்தின் முதல் பல்கலைக்கழகமான கி.பி 859ல்  மொரோக்கோ (Morroco) வில் உள்ள பெஸ்(Fes) நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்றும் கல்வி சேவை செய்து கொண்டிருக்கும் பெஸ் பல்கலைக்கழகமாகட்டும் அல்லது ஜூலை மாதம் 2010ல்  சுவீடன்(Sweedan) கல்மர்( Kalmar) நகரத்தில் அமைக்கப்பட்ட லின்னயுஸ்(Linnaues) பல்கலைக் கழகமாகட்டும் இவைக்கும் இடையில் அமைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பல்கலைக் கழகங்களாகட்டும் இதில் எதுவுமே சமூகமாற்றதிற்காக அமைக்கப்படவில்லை, சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் தெரியவில்லை. இப்படியிருக்க யாழ் பல்கலைக்கழகத்தை மாத்திரம் தனியாக பிரித்து எடுத்து அது சமூகமாற்றத்தை ஏற்படுத்தியே ஆகவேண்டும், அப்படி ஏற்படுத்தும் அளவிற்கு அதன் நிர்வாகத் திறனும், கல்விசார் மேன்நிலையும் ஏதுவாக இல்லை. எனவே அவைகளை பெற்று தமிழ், குறிப்பாக யாழ் சமூகத்தை மாற்றியாகவே வேண்டும், அதற்கு பேராசிரியர் ஃகூல் அவர்களின் யாழ் பல்கலைக்கழகத்துக்கான வருகை இன்றியமையாதது என்பது போன்றதான கருத்து பரிமாற்றம், கதையை எப்படி முடிப்பது என்று தெரியாமல் ஆரம்பிக்கப்பட்ட தென்இந்திய தமிழ் சினிமா போலவே தென்படுகின்றது. 

அதே நேரத்தில் பல பல்கலைக் கழகங்கள் தங்கள் நாடுகளில் ஏற்படுத்திய அரசியல் மாற்றங்களை, நம் காலத்து சான்றாக வேண்டுமானால் 1976 களில் ஆயத்துல்லா ரூஹ¤ல்லா கொமய்னி  பாரிஸ்(Paris) நகரத்தில் இருந்து கொண்டு ஈரானின் தெ·ரான்(Tehran) பல்கலைகழகத்தின் மாணவர்  மூலம் இஸ்லாமிய புரட்சி என்று தொடங்கி  வெறும் அரசியல் மாற்றத்தையும் அதை தொடர்ந்த பாரசீக குடாநாட்டு பிரதேசத்தில் இன்றும் நிலவிவரும் அரசியல் நிலவரத்தையும் குறிப்பிடலாம், நாம்  தவறாக சமூக மாற்றமாக பார்க்க தொடங்கிவிட்டோமோ என்றும் கேட்கத் தோன்றுகிறது.

பல்கலைக் கழகங்கள் நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை என்றால் அதை முற்றாக நிராகரிக்க முடியாதவாறு சான்றுகள் உள்ளன என்பதற்காக சமூகமாற்ற விடயத்திலும் அதுதான் உண்மை என்றால் அதை ஏற்கக் கூடியதாக நம்மிடம் சான்றுகள் இல்லை.  இந்த வகையிலேயே சமூகமாற்றதுக்கு அடிப்படையாக இருப்பவை எவை என்பதையும், அவைகளை வளர்த்தெடுப்பதில் நிறுவனங்களின் பங்கு என்ன என்பதையும், அவை என்னென்ன நிறுவங்கள் என்பதையும் பார்க்கவேண்டும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும்.

என்னை பொறுத்தவரை பாடசாலைகள், மத வழிபாட்டு தளங்கள் என்பவைகளே சமூகமாற்றத்திற்கான பொருத்தமான ஆரம்பபுள்ளிகள். அதிலிருந்தே கோடுகள் வரையப்பட்டு அவை பல்வேறு நிறுவனங்கள் ஊடாக இணைக்கப்படல் வேண்டும். எந்த பாடசாலை சமூக அநீதி பற்றி மாணவ குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது, அல்லது எத்தனை பாடசாலைகள் அவ்வாறு முயற்சித்தது?  ஆரம்ப பாடசாலையில் பயிற்றப்படாத மாணவனொருவன் பல்கலைகழகத்தில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எந்த அடிப்படையில் எதிர்பார்ப்பது? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதை நாம் எப்போதோ தெரிந்து வைத்துள்ளோமே. ஆக எமது அடிப்படை குணாம்சங்கள் பல்கலைக்கழக சமூகத்தில் எப்படி பிரதிபலிக்காமல் இருக்கும்?

மாற்றத்தை வேண்டிநிற்கும் விடயங்களில் முக்கியம் பெறுவது சாதி பிரச்சினை என்பது எனது நிலைப்பாடு. இதை தொடர்வது சீதனபிரச்சினை.  இது பாடசாலைகளில் முளைவிடாமல் தடுப்பதற்குப் பதிலாக, அது கதைப் பொருளாக்கப்படாமல், விமர்சனத்துக்கு உட்படுத்தப்படாமல், வெட்ட வெளிச்சத்தில் அங்கேயே ஆரம்பமாகி, வழிபாட்டு தளங்களால் வளர்க்கப்பட்டு, திருமண பந்தத்தில் உறுதியாக்கப்படுகிறது. அப்படியிருக்க இடையில் வரும் பல்கலைகழகத்துக்கு மட்டும் ஏன் இந்த பாரிய பொறுப்பு, ஒரு வகை தண்டனை?

சாதிப் பிரச்சினையும், சீதனப் பிரச்சினையும் காட்டமாக இல்லாவிட்டாலும் காலத்துக்கு காலம் அவை பேசு பொருளாக்கப்பட்டன என்பது உண்மையாயினும் அதை நோக்கிய செயல்பாடுகள் நத்தை வேகத்திலேயே செயல்பட்டன. ஆனால் கல்வி கற்பதில் காட்டும் ஆர்வம் மின்னஞ்சல் போல் அதிவேகமாக செல்கின்றன, அது ஆரோக்கியமான விடயமும் கூட. ஆனால் சமூகமாற்றதுக்கு அது உதவியதா என்றால், அந்த கல்வியையும் கூட ஒரு வியாபாரமாகவே பார்க்கப்பட்டதால் சமூக மாற்றத்தில் கல்வி கைகொடுக்கவில்லை என்றே தெரிகிறது.

சாதி, சீதனபிரச்சினை மாத்திரம்தான் சமூகத்தில் புரையோடியுள்ளதா? என்று கேட்டால் ஒரு நீண்ட பட்டியலுடன் அனேகர் வருவர். அதிலே நான் முக்கியமாக கருதுவது யாழ்  சமூகத்தின் மனப்போக்கு. இதுவும் வீட்டுக்கப்பால் பாடசாலையில் இருந்தே ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. மாணவரின் அறிவு நிலையும், அவர்களின் திறமையும் புத்தகத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்பட்டு மாணவர் கெட்டிக்காரராகவும், மக்குகளாகவும் முத்திரை குத்தப்பட்டுகின்றனர். இந்த முத்திரை குத்தலும் சாதி அடிப்படையில் ஒரு வகை நியாயப்படுத்தலுக்கு உள்ளாகி ஒரு குறிப்பிட்ட சாதிக்கும் கல்வியில் மேதாவிதனத்துக்கும் ஒரு உறவுமுறை கட்டப்படுகின்றது. அல்லது அறியாமைக்கும், இழிநிலைக்கும் இன்னொரு சாதி அல்லது இனம் சொந்தமாக்கப்படுகின்றது. இது மாத்திரமல்ல எப்படியாவது பல்கலைகழகத்தின் வாசல்படி மிதித்துவிட்டால் அது பிறவிப்பயனை அடைந்ததுக்கான அறிகுறியாக கொள்ளப்படுகிறது. ஆண் ஒருவர் பல்கலைக்கழகம் சென்றுவிட்டால் அது சீதனத்தை தீர்மானிக்கும் அளவுகோலாகவும், அதுவே பெண் ஒருவரின் துணையை தெரிவு செய்யும் உரிமையை பறிப்பதாகவும் சிலவேளைகளில் அதுவே அவளுக்கு நிரந்தர கன்னி பட்டத்தையும் பெற்றுத் தருவதாகவும் அமைந்து விடுகின்றது. 

தமிழ் இலக்கிய பாடமாகட்டும், ஓட்டைகளை கிண்டிகிளறும் சட்ட வியாக்கியாணமாகட்டும், சிக்கல் நிறைந்த பெளதீக தேற்றமாகட்டும், தலை சுற்றும் தத்துவமாகட்டும் எதையும் மனப்பாடம் செய்யத் தெரிந்தவன் பகுப்பாய்வுதிறன் இல்லாமலேயே பரீட்சையில் சித்தியடைந்து விடுவான். இது முடியாதவன் கூட “குதிரை” ஓடி விடயத்தை சாதிக்கின்றான். உண்மையில் கெட்டிக்காரனும், திறைமைசாலியும் எந்த சாதியில் இருந்தும் சமூகத்தில் இருந்தும் பிறக்கலாம். ஆனால் அவனை வளரவிடாமல் தடுப்பதில் இந்த பாடசாலைகளும், வழிபாட்டு தளங்களும் அவனுக்கு தடைபோடுவதே சமூக அநீதியின் ஊற்று என்பதை நாம் மறக்கமுடியாது.

இந்த குதிரை ஓட்டத்துடன், கல்விக்கடை(tutory) நடத்தல், பரீட்சை வினாத்தாள் வெளியாக்கம், வினாத்தாள் திருத்த நிலையத்தில் (paper correction centres) ஆள் வைத்து புள்ளி ஏற்றல் என்ற பல்வேறு விடயங்கள் யாழ் சமூகத்தை பொறுத்தவரை ஒரு வெளிப்படை இரகசியம். இது ஒரு சமூகத்துக்கு எதிரான குற்றச்செயல் என்பதை எந்த பாடசாலை வெறுத்து ஒதுக்கிறது? மாறக கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றன.

சரி கல்விநிலையங்கள் தான் அப்படி, சமய வழிபாட்டுத் தளங்களாவது கொஞ்சம் முன்மாதிரியாக நடக்கக் கூடாதா? சாதி குறைந்தவராக கணிக்கப்பட்ட ஒரு வழிபாட்டுகாரனை மதபோதகர் ஒருவர் தேவாலயத்துக்குள் அனுமதித்து விட்டார் என்பதற்காக  உயர்ந்தசாதியாக தன்னை தீர்மாணித்து கொண்ட இன்னுமொரு வழிபாட்டுக்காரன் அந்த ஆலயத்தை பூட்டியதும் இல்லாமல் அங்கு புத்தரின் சிலை ஒன்றை  வைத்து கோயிலை இயங்கவிடாமல் செய்த சம்பவம் போன்று எத்தனை நாடகங்கள். இதை எல்லாம் இன்றும் அனுமதித்துக் கொண்டு ஏன் நேராக யாழ் பல்கலைக்கழகத்துடன் போருக்கு செல்லவேண்டும்?

சமயமும், சாம்பாரும் நாங்கள் முன்மாதிரியானவர்கள், மாக்ஸிய கொள்கை கொண்டவர்கள் எனவே கத்தரிக்காயில் உள்ள நம்பிக்கை எமக்கு கடவுளிடமில்லை என்று யாராவது சொல்வார்களானால் அவர்கள் இந்த சமூகத்தை பிரதிபலிக்கவில்லை. ஆகவே இந்த சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவர அவர்களால் எள்ளளவும் முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிடலாம். பாடசாலையை, சமயத்தை சமூக மாற்றதுக்காக பயன்படுத்த தெரிந்தவன் தான் யாழ் சமூகத்துக்கு தேவையே தவிர பல்கலைக்கழக நிர்வாகத்தை சரியாக செய்யத்தெரிந்த பேராசிரியர் சமூக மாற்றத்துக்கு என்ன செய்யமுடியும் என்பதுதான் என் கேள்வி?

அடுத்து யாழ் சமூக மனப் போக்கில் முக்கிய இடம் பிடிப்பது “முதன்மை” சிந்தனை. இது “கல் தோன்றி மண் தோன்றா காலத்தின் முன் தோன்றிய…” என்ற அடிப்படையில் இருந்து பிறந்த அம்சமாக எனக்கு தோன்றுகிறது. இதை பின்வரும் பல சிறிய உதரணங்கள் மூலம் நிறுவலாம்.   

தமிழ் மொழிமூலம் பல்கலைகழகத்தில் கற்கும் மாணவரில் யாழ் பிரதேச மாணவர்களே எண்ணிக்கை அடிப்படையில் அதிகம். அதற்காக அவர்கள்தான் முதன்மை சித்தி பெற தகுதியுடையோர் என்று பொருள்படாது. ஆனாலும் நடப்பது என்ன?  பட்டப்படிப்பின் ஆரம்பத்திலேயே யாழ் மாணவருக்கு முதல் தர (1st Class) சித்தி தொடக்கம் இரண்டாம்தர கீழ் நிலை(2nd Class lower) சித்திவரை எல்லா சித்திகளையும் (கற்பனையில்) தங்களுக்கிடையே பிரித்து எடுத்துக் கொள்வார்கள். அங்கு யாழ் மாணவர் இல்லாவிட்டால் அல்லது அந்த யாழ் மாணவர் வெளிப்படையாகவே படிப்பில் பின்நிற்பவர் என்றால் அந்த கற்பனை சித்தி திருக்கோணமலை மாணவருக்கு, அப்படியும் முடியாது என்றால் மட்டக்களப்பு மாணவருக்கு, அதுவும் முடியாது போனால் வன்னி மாணவருக்கு, அதுவும் கூட முடியாது போனால் மலைநாட்டு மாணவருக்கு, இது எதுவுமே சாத்தியப்படாது போகும் பட்சத்தில் போனால் போகட்டும் என்று ஒரு சோனக மாணவருக்கு வழங்கப்படும். இங்கு நான் காட்ட முற்படுவது தன்னை புத்திசாலியாக, திறமைசாலியாக நினைப்போருக்கு எதிரான போக்கையல்ல, மாறாக தன்  புத்திசாலிதனத்தையும், திறமையையும் ஒத்த அல்லது அதைவிடவும் கூட மற்றவரிடமும் இருக்க வாய்ப்பிருக்கலாம் என்பதை கொஞ்சமும் யோசிக்காத  அசட்டை  தன்மையையே.

அடுத்த உதாரணமாக ஒரு சுவாரஸ்யமான விடயத்தை சொல்லலாம். கடந்த 2010 உலககிண்ண உதைபந்தாட்ட போட்டி. உதைபந்தாட்ட முதன்மை நாடுகளான ஜேர்மனியும், ஆர்ஜண்டீனாவும் காலிறுதி போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது  படித்த, நான்குவிடயங்கள் தெரிந்த ஒரு திருக்கோணமலை வாசி எம்முடன்  கூட இருந்தார். “இவங்கள் என்ன விளையாடுராங்கள், ரிங்கோ டீம்(Trincomalle team) இறங்கி இருக்கவேண்டும் இன்னேரம் கதை …” என்று அவர் முடிக்கமுன்னமே என் தலையை சுவரில் அடிக்க வேண்டும் போல் இருந்தது. இருந்தும் பொறுமையை வரவழைத்துக் கொண்டு, இந்த போட்டியின் தேர்வு முறை என்ன, இதற்கு தகுதிபெற்று வர எத்தனை நாடுகளை எந்தெந்த படிமுறையில் சந்தித்து உலக கோப்பை ஆட்டத்துக்கு வர ஒருநாடு  அனுமதிக்கப்படும், அத்துடன்  FIFA (Federation of International Football Associations)வின் உலக தர( World rank list) வரிசையில் இலங்கை எத்தனையாவது இடம் (130 வது) அப்படி இருக்க திருக்கோணமலையின் நிலை… என்று விளங்கப்படுத்த எனக்கு சுமார் 45 நிமிடங்கள் தேவைப்பட்டது. நல்ல வேளை “தமிழீழ கழகம்” (Tamil Ealam Team)என்ற ஒன்று இல்லாமல் இருந்தது இல்லையேல் இந்த உலக கோப்பையுடன் நானும் “துரோகி” பட்டம் பெற்றிருப்பேன்.(இப்போதும் என்ன “தியாகி” பட்டமா, என்ன?)

இன்னுமொரு நகைச்சுவையான விடயமும் இங்கு பொருத்தம் என எண்ணுகிறேன்.  செந்தமிழ் சிம்மக் குரலோன் திரு. அப்துல் ஹமீதின் லண்டன்  IBC (பல வருடங்களுக்கு முன் இடம் பெற்ற) வானொலி பேட்டி ஒன்று. அதில் ஒரு யாழ்(ஆதி)வாசி (கல் தோன்றி மண்…. என்ற அர்தத்தில் மட்டும்) ஒரு புத்திசாலிதனமான கேள்வியை முன்வைத்தார். அதாவது, ஹமீத் அவர்களே! உங்கள் மனைவி ஒரு தமிழ் பெண்மணி அதனால்தான் நீங்கள் செந்தமிழ் பேசுகிறீர்கள் இல்லையா? என்று கேட்டு வைத்தார். ஐயா! நீங்கள் தமிழர், உங்கள் மனைவி தமிழர், உங்கள் இருவரின் பெற்றார் தமிழர், பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, அவர்களின் 10, 20 தலைமுறையினர் எல்லாரும் சுத்த தமிழர் உங்களால் செந்தமிழ் பேச முடிகிறதா, இல்லயே ஏன்? என்று கேற்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ “என் தாய் மொழி தமிழ், அதை நான் அழகாக, சுத்தமாக பேசாவிட்டால் எப்படி?” என்றார். இங்கு நான் சொல்ல வருவது “தமிழர்” அல்லாத ஆனால் தமிழை தாய் மொழியாக கொண்ட ஒருவர் “தமிழர்” ஒருவரின் துணையின்றி தமிழை கூட சரியாக பேச முடியாது என்ற அந்த சிந்தனை போக்கையே. 

இதைபோல் இன்னுமொன்று, “உமக்கு தெரியுமா?, இங்கிலாந்து மகாராணிக்கே கணக்கு சொல்லிக் கொடுத்தவன் தமிழன்”. இப்படி ஒரு சம்பாசணையை எனக்கு ஜேர்மனியில் கேட்க நேர்ந்தபோது, இந்த விடயத்தை சொன்ன ஆள் பற்றி நான் நினைத்தது, போச்சுடா, “இவர் நினைக்கிறார் போலும் மகாராணி இந்த உலகத்தின் அதிசிறந்த அறிவாளி, அந்த அறிவாளிக்கே கணக்கு படிப்பித்தவர் அதி, அதி அறிவாளி, அந்த அறிவாளி ஒரு “தமிழர்”, நானும் “தமிழர்”, ஆகவே நானும்  அறிவாளி” என்பதாகும் (இதுவும் ஒரு வகை சமன்பாடு, திரு. தமிழ்வாதம் கோபிக்க வேண்டாம்)

இப்படி “தமிழ்”, “தமிழர்” என்ற விடயங்கள் தான் எங்கும், எதிலும், எப்போதும் முதன்மையானது அல்லது முதன்மைபெற வேண்டும் என்பது கொஞ்சம் சிக்கல் நிறைந்த விடயமே. இந்த அடிப்படையிலேயே பேராசிரியர் கைலாசபதி அவர்கள் கண்ட கனவாக சொல்லப்படும் விடயமும் அமைகின்றது. அதாவது “யாழ் பல்கலைக்கழகத்தை ஆசியாவின் மிகச் சிறந்த பல்கலைக்கழகமாக்கல்” என்பதாகும். கனவுகள் நிஜமாவது ஏதோ உண்மையாகினும் எல்லா கனவுகளும் அப்படியாகும் என்பது கோள்விக்குறியே. ஒப்பிட்டு ரீதியில் யாழ் பல்கலைக்கழகம் இளமையானது, தர வரிசையிலும் பேராதனை, கொழும்பு பல்கலைக் கழகங்களை விட பின்நிற்பது. அங்கே வெளி நாட்டு மாணவர் வந்து கற்கக் கூடிய விதத்தில் ஆங்கில மொழிமூலமான கற்கை நெறிகள் இல்லை. ரஸ்ய, ஜப்பானிய அல்லது ஜேர்மனிய பல்கலைக் கழகங்கள் போல் சுதேச மொழியில் வெளி நாட்டு மாணவருக்கு படிப்பிக்கும் அளவுக்கு தமிழில் புத்தகங்களோ, ஆய்வு நுல்களோ ஏனைய வசதிகளோ இல்லை. ஆங்கிலத்தில் அத்தகைய கற்கை நெறிகள் உருவாகப்படலாம் என்றாலும் வெளி நாட்டு மாணவர் இந்தியாவுக்கோ, சிங்கப்பூருக்கோ அல்லது மலேசியாவுக்கோ சென்று இலகுவாக காரியத்தை முடித்துவிட வசதி வாய்ப்புக்கள் இருக்கும்போது அல்லது அவ்வசதிகள் ஓரளவு பேராதனையிலும், கொழும்பிலும் இருக்கும்போது ஏன் கஸ்டப்பட்டு வெளிநாட்டு மாணவர் யாழ் வரவேண்டும். அப்படி வெளிநாட்டு மாணவர் இல்லாத பல்கலைக்கழகம் ஆசிய தர வரிசையில் எப்படி முதன்மை இடத்தை பிடிக்க முடியும்.  ஆகவே அடிப்படை விடயங்கள் பூர்த்தியாகப்படாமல் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் கனவில் நம்பிக்கை வைத்து அதே கொள்கையில் பிடிப்பாக இருக்கும் பேராசிரியர் ஃகூல் அவர்களின் யாழ் பல்கலைக் கழக வருகையை சமூக மாற்றத்தின் அத்திவாரமாக கற்பனை பண்ணுவது பிரபாகரனின் கனவை நம்பி களமிறங்கிய புலி போராளிகளின் நிலையை ஒத்ததாகும்.

பேராசிரியர் ஃகூல் அவர்களின் யாழ்ப்பாணத்துக்கான மீள்வருகை சமூகமாற்றத்தையே அடிப்படையாகக் கொண்டதென்றால் அது மிகவும் வரவேற்கவேண்டிய விடயம். ஆனால் அதற்காக அவர் யாழ் பல்கலைக் கழகத்துக்குத்தான்  வரவேண்டுமென்பது விமர்சனத்துக்கு உட்படுத்த வேண்டிய விடயம். அதாவது பேராசிரியரின் கல்விதகைமை, நிருவாக அனுபவமும், திறமையும் சமூக மாற்றத்தை கொண்டுவருமா என்பது தொடர்பான வாத பிரதிவாதங்கள். 

என்னைப் பொறுத்தவரை பேராசிரியரின் பணி ஒரு பாடசாலையில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். ஒரு பாடசாலையை சமூக மாற்றத்திற்கான ஒரு பரிசோதனை கூடமாக பாவிக்கலாம். அந்த மாதிரி பாடசாலையில் சமூக விஞ்ஞானம் ஒரு முதன்மை பாடமாகவும் சமூக மாற்றத்துக்கான மாதிரிகளை கண்டறியவும் அவைகளுக்கு செயலுருவம் கொடுக்கும் களமாகவும் அதற்கு பேராசிரியர் ஃகூல், அல்லது அவரைவிட பொருத்தமானவர் யார் இருப்பினும் அவர் பொறுப்பாக்கப்படல் வேண்டும். இந்த ஐரோப்பிய பாடசாலைகள் போல் நற்புத்துணை (twined Schools) பாடசாலைகள் நிறுவப்பட வேண்டும். இதன்மூலம் ஒரு பிரதேச மாணவர் மற்றைய பிரதேச மாணவரை அறிந்துகொள்ள அவர்களின் கலாச்சார விடயங்களை பகிர்ந்துகொள்ள ஏதுவாகும். பாடசாலைகளில் மாணவருக்கு மற்ற சமயங்களை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்.

பாடசாலை முடித்து பல்கலைக்கழகம் செல்ல முடியாதோருக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ப பயிற்சி அளிக்கும் திட்டம் வேண்டும்.  சமூகத்தின் அனைத்து தரத்தினருக்கும் ஏற்றாற்போல் கருத்தரங்குகள், பயிற்சி பட்டரைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும். நாட்டின் பொது பாடத்திட்டத்துக்கு புறம்பாக, யாழ்பகுதியின் அனைத்து பாடசாலைகளும் ஒன்றிணைக்கப்பட்ட  சமூக மாற்றத்துக்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படல் வேண்டும். இவ்வாறு பல சாத்தியமான திட்டங்களை பரீட்சார்த்த ரீதியிலேனும் செய்துபார்க்க வேண்டும்.

ஊழல், லஞ்சம் என்பன யாழ் சமூகத்தில் மாத்திரம் குடிகொண்டுள்ளதாக கொள்ளமுடியாது. இவை நாட்டின் சகல இன மக்களாலும் கைக்கொள்ளப்படும் விடயங்களாகும். பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம் என்ற நிலைபாட்டை உடைக்கும் முகமாக இதில் முக்கிய கவனம் செலுத்தப்படல் வேண்டும். இவற்றை முறியடிக்க சரியான வேலை திட்டங்கள் இல்லாததினால் தான் யாழ் பல்கலைக்கழகம் மீதும் அது வழங்கும் பட்டங்கள் மீதும் சந்தேகங்கள் கிளப்பப்பட்டன. பாடக்குறிப்பை மனனம் செய்து அச்சொட்டாக அதை மீளகொடுத்து, அதற்கு திறமைசித்தி பெற்று, அங்கேயே பதவியும் பெற்று புதிய மாணவருக்கு கற்பிக்கும்போது மீண்டும் அதே பாடக்குறிப்பு கைமாறப்படும் போது எப்படி சிறந்த கலாநிதிகளை உருவாக்கமுடியும்? வெறும் கல்லா நிதிகள் அல்லவா உற்பத்தி பண்ணப்படுவர்.  

ஆக, சமூகமாற்றம் என்பது அடி மட்டதில் இருந்து பிறக்க ஆயத்தங்கள் செய்யாமல், ஒன்றல்ல பத்து ஏன் நூறு பேராசிரியரிர் ஃகூல்கள் வந்தாலும்  யாழ் பல்கலைக்கழகம் அதன் நிலையில் இருந்து மாற்றமடையாது என்பது என் நிலைப்பாடு.

Mohamed SR. Nisthar.

பிரிட்டனிலிருந்து இலங்கை திரும்பிய இளைஞன் பொலிஸாரினால் கைது!

Stop_the_War_on_Asylumபிரிட்டனில் இருந்து இலங்கைக்கு வந்த யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரிட்டனிலிருந்து விமானத்தில் வந்திறங்கிய யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த மயில்வாகனம் சிவநேசன் (வயது 30) என்பவரே பெரிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இவர் 12 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டனுக்குச் சென்று அரசியல் தஞ்சம் கோரியிருந்தார் எனவும். இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இவரை நாடு கடத்துவதற்காக ஒரு வருடத்திற்கு முன்னர் இவர் கைது செய்யப்பட்டு  தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர் இலங்கைக்குத் திரும்பிச் செல்வதில் எதுவித பிரச்சனைகளும் இல்லை எனவும், இவரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் குடியேற்றவாசிகளுக்கான சர்வதேச ஸ்தாபனம் இவருக்கு வாக்குறுதி வழங்கியிருந்ததாம். இதனையடுத்து இவர் இலங்கைக்குத் திரும்பிச்செல்ல சம்மதித்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் சிங்கள வர்த்தகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று தமிழ் வர்த்தகர்கள் கைது!

கடந்த 16ம் திகதி கொக்குவில் பகுதியில் முன்று சிங்கள வர்த்தகர்கள் வாள்வெட்டுக்குள்ளான சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் மூவர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சிங்கள வர்த்தகர்கள் யாழப்பாணத்திற்கு வந்து இங்குள்ள வர்த்தகர் ஒருவருக்கு மொத்தாமாக தளபாடங்களை விற்பனை செய்து விட்டு அந்த வர்த்தகருக்குத் தெரியாமல் பாவனையாளர்களுக்கும் தளபாடங்களை நேரடியாக விற்பனை செய்துள்ளனர். இதன் காரணமாக இருதரப்பிற்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்தே சிங்கள வாத்தகர்கள் வாள்வெட்டிற்குள்ளாகியுள்ளனர் என சந்தேகிக்கப்படுகின்றது.

முன்னைய செய்தி:  யாழ்ப்பாணத்தில் மூன்று சிங்கள வர்த்தகர்கள் தாக்கப்பட்டனர்!

இதே வேளை, கொக்குவில், பூநாறி மரத்தடிப் பகுதிகளில் படையினர் கடும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர் நேற்று புதன்கிழமையும் காலை தொடக்கம் இரவுவரை சோதனை நடவடிக்கைகள் நடைபெற்றன. இதில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டனர். அப்பகுதியூடாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களும் சோதனைகளுக்குள்ளாகின.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் யாழ்.விஜயம்.

Asian_Development_Bankஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் சியாவோயூ சாவோ இன்று 19-08-2010 காலை யாழப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கைக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு வந்திருக்கும் இவர் இன்று யாழ். கோட்டை, பொது நூலகம் அகியவற்றைப் பார்வையிடுவதோடு, பிற்பகல் 4 மணிக்கு யாழ். செயலகத்தில் இடம்பெறும் கூட்டத்திலும் கலந்து கொள்வார்.

நாளை சாவகச்சேரியில் மின்விநியோக நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்து வைப்பதுடன். கிளிநொச்சிக்குச் சென்று அங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களையும் சந்திக்கவுள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச, நிதிதிட்டமிடல் பிரதி அமைச்சர் சரத் அமுனுகம, மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித்திட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.

வன்னியில் பெற்றோர் பராமரிப்பற்ற 1200 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு.

Vavuniya_SriAhilandeswariArulahamவன்னிப் பிரதேசத்தில் பெற்றோரின் பராமரிப்பற்ற நிலையில் உள்ள 1200 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண அளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரவித்துள்ளார். கிளிநொச்சி. முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட இச்சிறுவர்கள் வடமாகாணத்திலுள்ள அங்கீகாரம் பெற்ற நான்கு சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட 1200 சிறுவர்களும் எதிர்வரும் september மாதத்திலிருந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நான்கு சிறுவர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளனர். 12 வயதுக்கட்பட்ட இச்சிறுவர்களின் பாராமரிப்புச் செலவிற்கான நிதியை வடமாகாணசபையின் ஊடாக ஒதுக்கத் தீர்மானித்துள்ளதாக வடமகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Vavuniya_SriAhilandeswariArulaham(படத்திலுள்ள குழந்தைகள் மார்ச் 2010ல் படம் எடுக்கப்பட்ட போது 10 மாதங்களையே கடந்திருந்தன. இக்குழந்தைகள் யுத்தத்தின் காரணமாக அனாதரவானவர்கள். தற்போது வவுனியாவில் உள்ள சிறி அகிலாண்டேஸ்வரி அருளகத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான உதவிகளை லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.)

இது இவ்வாறிருக்க. வன்னியில் நடைபெற்ற போரினால் தாய் தந்தை இருவரையும் இழந்த சிறார்களின் தொகை மேலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

100% அபராதமும் 1 போட்டித் தடை

randiv.gifவீரேந்திர செவாக்கின் சதம் பெறுவதை தடுக்கும் விதமாக வீசப்பட்ட “நோபோல்” பந்து வீச்சிற்கான, சுராஜ் ரண்டீவ் குறித்து இடம்பெற்ற சர்ச்சை காரணமாக இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் அவரது கொடுப்பனவில் 100% அபராதமும் 1 போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளதோடு,  திலகரத்ன டில்ஷானிற்கு கொடுப்பனவுகளில் 50% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண அபிவிருத்தி முன்னெடுப்பு: அரச அதிபர்கள், பிரதேச செயலர்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருநாள் மாநாடு

வடக்கில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அரச நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்களுக்கு விளக்கமளிக்கும் இரு நாள் மாநாடு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 6,7ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டினை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஏற்பாடு செய்துள்ளதுடன், நாடளாவிய சகல மாவட்டச் செயலாளர்களுக்கான மாநாடாகவும் யாழ். மாவட்ட பிரதேச செயலாளர்கள் கிராம சேவை அதிகாரிகளுக்கான மாநாடாகவும் இது ஒழுங்கு செய்யப்பட்டுள் ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, பிரதியமைச்சர் டிலான் பெரேரா மற்றும் அமைச்சின் செயலாளர், உயரதிகாரிகள் பலரும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். செப்டம்பர் 6ம் திகதி நாடளாவிய மாவட்டச் செயலாளர்களுக்கான மாநாடாக வும், மறுநாள் 7ம் திகதி பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவகர்களுக்கான மாநாடாகவும் இதனை ஏற்பாடு செய்துள்ளதாக அவ்வதிகாரி தெரிவித்தார்.

இம்மாநாடு யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கட்டடத்தில் இடம்பெறுவதுடன், யாழ். மாவட்டத்தில் அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கின் அரச நிர்வாகக் குறைபாடுகள், மீள்குடியேற்றப் பிரதேசங்களின் குறைநிறைகள் தொடர்பிலும் இங்கு விரிவாக ஆராயப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.