18

18

வடபகுதி தமிழ் மக்கள் மீது அரசாங்கத்திற்கு அதிக பட்ச சந்தேகம் உள்ளது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்!

go-ra.jpgவடக்கிலுள்ள மக்கள் மீது அரசாங்கத்திற்கும் தனக்கும் அதிக பட்ச சந்தேகமுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும், நல்லிணக்க ஆணைக்கழுவின் விசாரணைகளின் போது சாட்சியமளித்து உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். வடபகுதி மக்கள் இன்னமும் விடுதலைப் புலிகள் மீது அனுதாபம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். வடபகுதியைச் சேர்ந்த மக்கள் மத்தியில் சரணடையாத விடுதலைப் புலிகள் எத்தனை பேர் உள்ளனர் என எமக்குத் தெரியாது. அடையாளம் காணப்படாமல் எத்தனைபேர் உள்ளனர் என்பதும் தெரியாது. அவர்களில் பலர் விடுதலைப்புலிகளின் கொள்கைகளுக்கு ஆதரவாக முளைச்சலவை செய்யப்பட்டவர்கள். அவர்களே மிக ஆபத்தானவர்கள் எனவும் அவர் கூறினார்.

வடக்கில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பதைத் தடுக்கும் பொருட்டு கணிசமான இராணுவத்தினரை அங்கு கடமையிலீடுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற் உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.

கே.பி பற்றி அவர் குறிப்பிடுகையில், விடுதலைப் புலிகளின் மூத்த உப்பினரான கே.பியின் மனதை மாற்றுவதில் இராணுவம் வெற்றிகண்டுள்ளது எனவும்  அரசுடன் இணைந்து ஒரே நாட்டை உருவாக்க வேண்டும் என்ற உணர்வை அவருக்கு ஏற்படுத்தியதை பலரும் வரவேற்கின்றனர். இது முக்கியமானதோர் விடயம் எனவும்  குறிப்பிட்டார்.

வன்னியில் இடம்பெயர்ந்த மாணவர்களின் கற்றல் நடவடிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

Vavuniya_SriAhilandeswariArulahamவன்னியில் இடம்பெயர்ந்த மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் சில வருடங்கள் பின்தங்கியுள்ளதாக மாகாண கல்வித்திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு வருடங்களில் மட்டும் யுத்தம் காரணமாக 36 ஆயிரம் மாணவர்கள் அகதிகளாக்கப்பட்டிருப்பதாக வடமாகாண கல்வித்திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 32 ஆயிரம் மாணவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் அத்தகவலில் தெரிவிக்கபட்டுள்ளது. யுத்த காலங்களில கல்விச்செயற்பாடுகள் தடைப்பட்டிருந்ததாலும், மாணவர்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்து வந்த காரணத்தினாலும் கற்றல் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

Vavuniya_SriAhilandeswariArulahamபாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வியை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டியது அவசியமானது என வடமாகாண கல்விப்பணிப்பாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 தற்போது மீள்குடியமர்வு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்ற நிலையிலும், சுமார் நான்காயிரம் மாணவர்கள் இன்னமும் முகாம்களிலேயே வசிக்கின்றனர் என்பதும், மக்கள் மீள்குடியேற்றபட்ட வன்னிப் பகுதிகளின் பாடசாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ள போதும் அப்பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறைகள் நிலவுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்ப்பாணத்துக்கான ரயில் போக்குவரத்துப் பாதைகள் புனரமைக்கப்படுகின்றன.

jaffna_rail_stationயாழ் ரயில் போக்கவரத்தை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் தண்டவாளங்கள் அமைக்கும் வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவிற்கு அப்பால் சில மைல்கள் தூரம் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்துள்ளது. நீண்ட காலம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக இருந்த பகுதிகளிலுள்ள தண்டவாளங்கள் அகற்றப்பட்டு ரயில் பாதை அமைந்திருந்த பகுதிகள் காடாகிப் போயுள்ளதால் அவற்றைப் புனரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

jaffna_rail_stationஇந்த ரயில்பாதைகளுக்கு அருகில் வசிப்பவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ரயில் தண்டவாளப் பகுதிகளில் குடியிருப்பவர்கள் அங்கிருந்த வெளியேறி ரயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு தினம் இம்முறை யாழ்பாணத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய பாதுகாப்பு தினம் இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ். அரச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பயிற்சி மற்றும், பொதுமக்கள் விழிப்பணர்வு நிலைய பணிப்பாளர் நந்தரட்ண தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்;.

எதிர்வரும் 26ம் தகதி யாழ்.பல்கலைக்கழகத்தில் இக்கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளை நடத்துவதற்காக நேற்றைய கூட்டத்தில் 14 குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கான பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. பாதகாப்பு தொடர்பான விடயங்கள் பொலிஸ், இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் தேசிய பாதுகாப்பு தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை, ஓவியப்போட்டிகளும் நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கபட்டுள்ளது. 

இந்த நிகழ்வுக்கான பூரண ஒத்துழைப்பை அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், வங்கிகள், ஆகியவற்றிடம் எதிர்பார்ப்பதாக யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் அரச அதிபர், மேலதிக அரசஅதிபர், பிரதேசச் செயலர்கள், வலயக் கல்விப்பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சங்கக்காரவின் குரலென உறுதி

sangakkara.jpgதிங்கட் கிழமை அன்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் ஒரு ஓட்டத்தினை பெற்றால் வெற்றி அதே நேரத்தில் ஒரு ஓட்டத்தினை பெற்றால் செவாக் சதத்தினை பெறும் நிலையில், ரண்டீவின் நோபோல் ஆனது செவாக்கின் சதத்தினை பெற விடாது செய்தது, நோபோல் வீச முன் சங்கக்கார “அடித்தால் ஓட்டம் அவனைச் சாரும்” என்று கூறிய வசனத்தினை சர்வதேச ஊடகங்கள் பெறும் சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

மதவாச்சி – தலைமன்னார் ரயில் பாதை நிர்மாணம்: இலங்கை – இந்திய அரசுகள் நேற்று ஒப்பந்தம் கைச்சாத்து

medawachchiya-talai-manar.jpgஇந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 230 மில்லியன் அமெரிக்கன் டொலர் செலவில் வடக்கில் மதவாச்சிக்கும் தலைமன்னாருக்குமிடையில் அமைக்கப்படவுள்ள ரயில் பாதை நிர்மாணம் தொடர்பான ஒப்பந்தக் கைச்சாத்து நேற்று கொழும்பில் இடம்பெற்றது அமைச்சர் குமார வெல்கம, இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த் ஆகியோர் முன்னிலையில் போக்குவரத்து அமைச்சில் வைத்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்திய அரசின் சார்பில் இர்கோன் நிறுவன பொது முகாமையாளர் குப்தாவும் இலங்கை அரசின் சார்பில் ரயில்வே பொது முகாமையாளர் பி. பி. விஜேசேகரவும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

அத்துடன் காங்கேசன்துறை – தாண்டிக்குளம் வரையிலான ரயில் பாதை, மடு, தலைமன்னார், பளை ஊடான ரயில் பதைகளை விரைவில் புனரமைப்பது தொடர்பிலும் இரு அரசாங்கங்களினதும் முக்கியஸ்தர்களுக்கிடையில் நேற்று விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேற்படி சகல ரயில் பாதைகளையும் எதிர் வரும் 2 வருட காலத்திற்குள் நிறைவு செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப் பட்டன.

மதவாச்சி – தலைமன்னாருக்கிடையிலான 110 கிலோ மீற்றர் ரயில் பாதையின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கென 7350 மில்லியன் ரூபாவும் மடு – தலைமன்னாருக்கிடையிலான ரயில் பாதை நிர்மாணப் பணிகளின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளுக்கென 172.20 மில்லியன் ரூபாவும் செலவிடப்படவுள்ளன.

இதேவேளை; வடக்கின் ரயில் பாதை நிர்மாணம் இடம்பெறும் சமகாலத்தில் மாத்தறை – கதிர்காமம் ரயில் பாதை நிர்மாணப் பணிகளும் இடம்பெறுமென அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார். அத்துடன் மாத்தறை – பெலியத்தை ரயில் பாதை நிர்மாணப் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதுடன் மாத்தறை – கொழும்பு ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

பொதுமக்கள் பகுதிகளிலிருந்து இராணுவ பிரசன்னம் படிப்படியாக நீங்கும் – கோத்தாபய

g-r.jpgவடக்கில் பொது மக்கள் பகுதிகளிலிருந்து இராணுவப் பிரசன்னம் படிப்படியாக அப்புறப்படுத்தப்படுமென்றும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொறுப்பு பொலிஸாருக்கு ஒப்படைக்கப்படுமென்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தனியார் காணிகளில் இராணுவ முகாம் அமைக்கப்படவில்லையென்றும் இராணுவ நிலைகள் அரச காணிகளில் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், வடக்கில் எவ்விதமான இராணுவக் குடியேற்றமும் மேற்கொள்ளப்பட வில்லையென்றும் குறிப்பிட்டார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (17) பிற்பகல் சாட்சியமளித்த பாதுகாப்புச் செயலாளர், பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக் காதிருப்பதை உறுதி செய்வதற்காக இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவதுடன் கடல் பாதுகாப்பும் பலப்படுத்தப்படும் என்று கூறினார்.

புலிகள் இயக்கத்தினர் காடுகளில் பயிற்சிகளை மேற்கொண்டதால், வன்னியின் காட்டுப்பகுதிகளைப் பாதுகாக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார். ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் சட்ட மா அதிபர் சித்திராஞ்சன் டி சில்வா தலைமையில் கொழும்பு ஏழு, ஹோட்டன் பிளே சிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத் தில் இடம்பெற்ற விசாரணையில் சுமார் இரண்டரை மணித்தியாலமாக பாதுகாப்புச் செயலாளர் சாட்சியமளித்தார்.

பாதுகாப்பு நிலைகளைப் படிப்படியாக வேறிடங்களுக்கு மாற்றி வருகிறோம். ஆனால், தனியார் காணிகளில் எந்தவித இராணுவ முகாமும் அமைக்கப்படவில்லை. பொது மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியும். அரச காணிகளிலேயே பாதுகாப்பை ஸ்தாபித்திருக்கிறோம்.

இராணுவத்தினருக்குக் குடியிருப்புகள் அமைக்கப்படவில்லை. அங்கு கடமையாற்றும் படையினர் தங்குவதற்குப் பாசறைகளே அமைக்கப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்புக்காக அம்பாந்தோட்டை உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களிலும் இராணுவ முகாம்கள் உள்ளன. அதுபோல் வடக்கிலும் அமைத்திருக்க வேண்டிய பாதுகாப்புக் கட்டாயம் இருக்கிறது.

ஆனால், பொது மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து படைகளை அப்புறப்படுத்துவோம். ஆனால் அது இராணுவத்தை வாபஸ் பெறுவதாக கருத முடியாது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் பலாலி உள்ளிட்ட பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்கள் உள்ளன. இங்கு தனியார் கட்டடங்கள் பாதுகாப்புக்குத் தேவை எனின் அவற்றிற்கு உரிய நட்டஈட்டைக் கொடுத்து கொள்வனவு செய்வோம்.

அதேநேரம் புலிகள் இயக்கத்தின் தலைமையகங்களையும் பதுங்குக் குழிகளையும் எவரும் உரிமைகோர மாட்டார்கள் என நினைக்கிறேன், என்று தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ஷ, தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதும் விடுவிக்கப்பட்டுச் சொந்த இடங்களில் அவர்களின் பெற்றோருடன் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பதினோராயிரம் போராளிகள் சரணடைந்தார்கள். இவர்களை மூன்று நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தி ஆறு மாதம், ஒரு வருடம், இரண்டு வருடம் எனப் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. குறித்த காலம் புனர்வாழ்வு நிறைவடைந்ததும் அவர்களை விடுவித்து விடுவோம். அவர்களுக்குத் தொழிற்பயிற்சிகளையும் அளித்து வருகிறோம்.

இந்தப் பதினோராயிரம் பேரில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஆயிரம் பேர் இனங்காணப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்தில் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதும் சிறு சிறு குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த சிலர், அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் கடத்தல், கப்பம் பெறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் கூறுகிறார்களே! என்று ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கையில் “கருணா, பிள்ளையான் குழுக்கள் மற்றும் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய அமைப்புக்களின் ஆயுதங்களைக் களையுமாறு உத்தரவிட்டேன். அரசியல் தலைவர்கள் ஆதரவளிக்கவில்லை. கிரிமினல் குழுக்களே அவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுகின்றன” என்றார். தொடர்ந்து சாட்சியமளித்த பாதுகாப்புச் செயலாளர்,

“யுத்தத்தின் போது ஆறாயிரம் படையினர் கொல்லப்பட்டு முப்பதாயிரம் பேர் காயமுற்றார்கள். இதன்மூலம் புலிகள் எத்தகைய தாக்குதல் பலத்தைக் கொண்டிருந்தார்களென்று புரிந்து கொள்ள முடியும். அதேநேரம் இந்தளவு இராணுவத்துக்கு இழப்பு ஏற்பட்டதென்றால், புலிகளுக்கு ஏற்பட்ட இழப்பையும் நாம் ஊகித்துக் கொள்ள முடியும்.

ஆனால், எவரும் அதனைப் பேசுகிறார்கள் இல்லை. சிவிலியன்களைப் பற்றித்தான் பேசுகிறார்கள். சிவிலியன்களுடன் புலிகள் கலந்திருந்தார்கள். அதனால், காயமடைந்த புலி உறுப்பினர்களையும் சிவிலியன்களாகக் கணக்கிடுகிறார்கள்” என்றார்.

மேர்வின் சில்வா குறித்து விசாரிக்க குழு

mervyn.jpgமேர்வின் சில்வாவின் நன் நடத்தை குறித்து விசாரணைகளை நடத்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மூன்று பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது.

குறித்த குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஜெயந்த வீரசிங்கவும், செயலாளராக மஹிந்த சமரசிங்கவும், அங்கத்தவராக என்.எம்.மஹிந்த சமரசேகர தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஆலயச் சூழலில் தயாரிக்கப்படாத உணவுகளை விற்பதற்கு அனுமதியில்லை

யாழ். நல்லூர் ஆலயத் திருவிழாக்களையொட்டி ஆலயச் சூழலில் அமைக்கப் படும் தேநீர்க் கடைகள், மற்றும் உணவுச் சாலைகள் என்பவற்றில் வைக்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் உரிய இடத்திலேயே தயாரிக்கப்பட வேண்டுமென யாழ். மாநகர சபையின் சுகாதார குழுவின் தலைவர் மங்களேஸ்வர் தெரிவித்துள்ளார்.

வேறு இடங்களில் தயாரிக்கப்பட்டு கொண்டுவரப்படும் உணவுப் பொருட்கள் உணவகங்களில் விற்பனை செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த உத்தரவுகளை மீறி செயற்படுகின்ற உணவகங்களின் உத்தரவுப்பத்திரங்கள் யாவும் நீக்கப்படுவதுடன் உணவகங்கள் உடனடியாக பூட்டி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்ற வழக்கு அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க வேண்டும் – பாராளுமன்றத்தில் ரணில்

ranil-wickramasinghe.jpgஜெனரல் சரத் பொன்சேகா மீதான இராணுவ நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகளின் அனைத்து அறிக்கைகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இராணுவம் மீது எச்சில் துப்பும் தீர்ப்பொன்றை இராணுவ நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குடியியல் திருத்தச் சட்ட பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா தற்போது மக்கள் பிரதிநிதியாக உள்ளார். இவ்வாறான நிலையில் அரசினாலும் இராணுவ நீதிமன்றத்தினாலும் அவரது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகா இராணுவத்திலிருந்து முறையாக அறிவித்து பதவி விலகிய பின்பே அரசியலில் ஈடுபட்டார். இராணுவ சேவையிலுள்ள ஒருவர் அரசியலில் ஈடுபடவோ தேர்தலில் போட்டியிடவோ முடியாது என்றுதான் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதே தவிர இராணுவ சேவையிலிருந்து விலகிய ஒருவர் போட்டியிடக் கூடாதெனக் கூறப்படவில்லை. ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான சட்டவாக்கத்தில் நாம் கைச்சாத்திட்டுள்ளோம். ஆனால் இங்குள்ள நிலைமை என்னவென்பது கேள்விக்குறியாகவுள்ளது.

சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புகொண்டிருந்ததாக இராணு நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி அலுவிகார பொய் கூறினார். இந்தப் பொய்யை இராணுவ நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன், சரத் பொன்சேகா மீது தேசத்துரோகம், சதித்திட்டம் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஜெனரல் சரத் பொன்சேகா கூட்டுப் படைகளின் பிரதானி என்ற பதவியை 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். அதனை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியும் அறிவித்தார்.

அன்றைய காலகட்டத்தில் முதலில் ஜனாதிபதித் தேர்தலா, பொதுத்தேர்தலா என்ற எந்த அறிவிப்பையும் அரசு விடுக்காதிருந்தது. இதனால் நாமும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில் தாமதத்தை ஏற்படுத்தினோம். இது தொடர்பில் அப்போது நாம் எதனையும் கூறவில்லை.

இந்நிலையில் அதே மாதம் 26ஆம் திகதி நடந்த கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கென பொதுவேட்பாளர் ஒருவரை நியமிப்பதென எமது கட்சித் தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேராவின் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பேரிலேயே நாம் சரத் பொன்சேகாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தினோம். அச்சந்தர்ப்பத்தில் சரத் பொன்சேகா இராணுவ சேவையில் எந்தப் பதவியிலும் இருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் ஜெனரல் பொன்சேகா எமது கட்சியுடன் தொடர்புகொண்டிருந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி அலுவிகாரவினால் கூறப்பட்ட பொய்யை ஏற்றுக்கொண்ட இராணுவ நீதிமன்றம் பொன்சேகாவின் பதவிகளையும் பதக்கங்களையும் பறித்ததுடன் அவரது ஓய்வூதியத்தையும் நிறுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது. சரத் பொன்சேகாவின் விடயத்தில் உண்மையான நிலையினை கண்டறியாத இராணுவ நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினால் இந்நாட்டின் இராணுவம் மீது எச்சில் துப்பப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா சி.டி.எம்.ஏ. தொலைபேசியூடாக தொடர்புகொண்டு பேசியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சாட்சியமளித்துள்ளார். அப்படியானால் அதில் பதிவு செய்யப்பட்ட குரல் சரத் பொன்சேகாவினுடையதுதானா என இராணுவ நீதிமன்றம் ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். இவ்வாறான நிலையில் சரத் பொன்சேகா மீது எப்படி இந்தத் தீர்ப்பினை வழங்க முடியும்?

பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி எமது சக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. சரத் பொன்சேகாவின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டமையானது ஏனைய அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தையும் நிறுத்துவதற்கான ஒரு ஆரம்பமாகவேயுள்ளது.

இங்கு ஒருவர் பிரபாகரன் போல் நடக்கின்றார். பிரபாகரன் தனது தளபதி மாத்தயாவை கூண்டில் அடைத்து பின்னர் கொலை செய்தார். அதேபோன்று தற்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது சிறப்புரிமைப் பிரச்சினையாகும். இது தொடர்பிலான விசாரணைகள் போலியாக அமையாமல் அதனை இந்தச் சபையில் விவாதிப்பதற்கு சந்தர்ப்பங்கள் உருவாக்கப்படவேண்டும். அத்துடன், பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்றத்தின் அனைத்து வழக்கு விசாரணைகளின் அறிக்கைகளையும் இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.