10

10

யாழ். குடாநாட்டில் பிச்சை எடுப்பவர்களின் தொகை அதிகரிப்பு!

யாழ்.குடாநாட்டில் பிச்சை எடுப்பவர்களின் தொகை திடீரென அதிகரித்துள்ளது. தெருக்களிலும் ஆலய சுற்றாடல்களிலும், பேருந்துகளிலும் இவர்கள் பிச்சை எடுத்து வருகின்றனர். தென்பகுதிகளிலிருந்தும் பிச்சைக்காரர்கள்; தற்போது யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

பலர் வன்னி யுத்தத்தில் ஏற்பட்ட காயங்ளைக் காட்டி பொதுமக்களிடம் பிச்சை கேட்கின்றமையiயும் அவதானிக்க முடிகின்றது.  முன்னர் யாழ். குடாநாட்டில் பிச்சை எடுப்பவர்கள் குறைவாகவே காணப்பட்டனர். தற்போது யுத்தம் முடிவடைந்து பாதைகள் திறக்கப்பட்ட பின்னர் இவர்களின் தொகை அதிகரித்துள்ளது.

யாழ். பேருந்து நிலையத்தில் பிச்சை எடுப்பவர்களை பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கைகயில் ஈடுபட்டுள்ள போதும் பிச்சைக்காரர்களின் தொகை அதிகரித்துக்கொண்டே போகின்றமை குறிப்படத்தக்கது.

வடமராட்சிக் கிழக்கு மக்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவர் என யாழ். அரச அதிபர் தெரிவிப்பு!

imalda.jpgவடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த மக்கள் விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படுவர் என யாழ். அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போரின் பொது வடமாராட்சிக்கிழக்கு மக்களும் இடம்பெயர்ந்தனர். அவாகள் இன்னமும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படவில்லை. அவர்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி மக்களின் பிரச்சினைகளையும் அவர்கள் அனுபவித்து வரும் துன்பங்களையும் தான் உணர்ந்துள்ளதாகவும் அம்மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்ற அமைச்சிடம் ஏற்கனவே வடமாரட்சிக்கிழக்க மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கிலுள்ள தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கை

dm.jpgவடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.

மேற்படி மாகாணங்களிலுள்ள தொல்பொருட்கள் கொள்ளையி டப்படுவதுடன் சம்பந்தப்பட்ட விகாரைகள், மத வழிபாட்டுத் தலங்களின் தேரர்கள் அச்சுறுத்த லுக்கு உள்ளாகி வருவதாகத் தமக்கு முறைப்பாடுகள் கிடைத் துள்ளன என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்தே பிரதமர் டி.எம்.ஜயரத்ன 2600 வது “சம்புத்தத்வ” ஏற்பாட்டுக்குழுவினருக்கு இது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள விஹாரைகள் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் அபிவிருத்திக்குள்ளாக்கும் தேசிய திட்டம் நடைமுறைப்படுத்தப் படவுள்ளதுடன் அதணோடிணைந்ததாக தொல் பொருட்கள் பிரதேசங்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர், இதன் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்புப் படையினரின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 289 பெளத்த விஹாரைகள் உள்ளதுடன் இதில் தொல் பொருட்கள் உள்ள இடங்களென 88 முக்கிய இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மக்களுக்குக் காணி பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகளின் போது தொல்பொருள் பிரதேசங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை மேற்கொள்ள வேண்டுமெனவும் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பிரதமர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

அரசாங்கத்திலிருந்து பிரபா கணேசன் வெளியேற 14 நாட்கள் காலக்கெடு

அரசாங்கத்திலிருந்து வெளியேறி மீண்டும் எதிரணியில் இடம்பெறுவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி பிரபா கணேசனுக்கு 14 நாட்கள் காலக்கெடு விதித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; அரசாங்கத்திலிருந்து வெளியேறி மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்குப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனுக்கு 14 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாகக் கட்சியின் தலைவர் மனோ கணேசனின் ஒப்புதலுடன் பொதுச் செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனுக்கு அதிகாரபூர்வமாக எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பிரபா கணேசன் எம்.பி.க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த அரசாங்கம் பாராளுமன்றத்திலே மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெறும்வகையில் வாக்களிப்பு உட்பட எந்தவித நடவடிக்கையிலும் பிரபா கணேசன் கலந்துகொள்ளக்கூடாது என்றும் தற்சமயம் பிரபா கணேசனின்  கட்சி அங்கத்துவம் ஜனநாயக மக்கள் முன்னணியினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தலைவர் மனோ கணேசனினால் பொதுச் செயலாளரின் தலைமையில் பத்து அரசியல் குழு உறுப்பினர்கள் அடங்கிய ஒழுக்காற்றுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபா கணேசன் எம்.பி. தொடர்பிலான ஒழுக்காற்று குழுவில் பொதுச் செயலாளர் நல்லையா குமரகுருபரன், மாகாணசபை உறுப்பினர்கள் எஸ்.ராஜேந்திரன், முரளி ரகுநாதன், கங்கை வேணியன், ஏ.ஜெயபாலன், ஜோசப் ஜேகப், எப்.எம்.ஷியாம், வி.முரளிதரன், லே.பாரதிதாசன் மற்றும் எம்.ராஜ்குமார் ஆகியோர் மனோ கணேசனால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திரிகோண கிரிக்கெட் தொடர்; இந்தியா, நியுஸிலாந்து இன்று மோதல்

india.jpgஇந்திய அணி அடுத்து 3 நாடுகள் போட்டியில் பங்கேற்கிறது. இந்தப் போட்டி இன்று 10ந் திகதி தொடங்குகிறது. 28ம் திகதி வரை போட்டி நடைபெறுகிறது. 3வது நாடாக நியூசிலாந்து கலந்துகொள்கிறது.

இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். தொடக்க ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை. என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரரான டெண்டுல்கருக்கு இந்தப் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற டிராவிட், லட்சுமண், விஜய், அமித் மிஸ்ரா, முனாப் பட்டேல் ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர். ரவிந்திர ஜடேஜா, ஆர் அஸ்வின், வீரட் கோக்லி, பிரவின் குமார், நெஹ்ரா, ரோஹித் சர்மா, திவாரி ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர். காயம் காரணமாக காம்பீர் 3 நாடுகள் போட்டியில் ஆடவில்லை.

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் வெற்றி பெற்றதால் இந்திய அணி நம்பிக்கையுடன் உள்ளது. ஷெவாக், சுரேஷ் ரெய்னா ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. நியூசிலாந்து அணிக்குரோஸ் டெய்லர் கப்டனாக பொறுப்பேற்றுள்ளார். முன்னணி துடுப்பாட்ட வீரர் ரைடர் கடைசி நேரத்தில் விலகியுள்ளார்.

பிற்பகல் 2.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகின்றது.

இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா: டோனி (கப்டன்), ஷெவாக் (துணை கப்டன்), சுரேஷ் ரெய்னா, வீரட் கோக்லி, யுவராஜ்சிங், ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், ரவீந்தர ஜடேஜா, ஆர். அஸ்வின், திவாரி, ஆசிஷ் நெஹ்ரா, ஓஜா, இஷாந்த் சர்மா, பிரவீன்குமார், அபிமன்யூ மிதுன்.

நியூசிலாந்து: ரோஸ் டெய்லர் (கப்டன்), குப்தில், ஹொப்சின்ஸ், பீட்டர் இகரம், நாதன் மேக்குல்லம், ஜேக்கப் ஓரம், டபி, வாட்லிங், ஸ்காட் ஸ்டைரிஸ், ஜித்திதன் படேல், சவுத்தி, மில்ஸ் எல்லியட், மெக்காய.

யாழ். தேவி ரயில்சேவையில் கட்டண குறைப்பும், நேர மாற்றமும்

வடக்கிற்கான யாழ். தேவி ரயில் சேவையில் நேர மாற்றமும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் கட்டணக் குறைப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிணங்க எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் புதிய நேர அட்டவணையின் பிரகாரம் காலை 5.45 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்படும் இந்த ரயில் பகல் 11.10க்கு தாண்டிக்குளத்தை வந்தடைவதுடன் வவுனியாவிலிருந்து பகல் 12.45 மணிக்கு புறப்படும் யாழ். தேவி மாலை 5.40 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தினை சென்றடையும் என வவுனியா ரயில் நிலைய அதிபர் தெரிவித்தார்.

அத்துடன் சாதாரண கட்டணமே அறவிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசு தனது விசிறிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக MIA. குற்றச்சாட்டு

mia.jpgபொப் இசை உலகில் முன்னணிப் பாடகர்களில் ஒருவர். MIA. என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் . மாயாவின் பாடல்களில் பெரும்பாலானவற்றில் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது என தெரிவித்து YouTube  இருந்து நீக்குமாறு இலங்கை அரசு தனது விசிறிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக MIA. தெரிவித்துள்ளார்.

அச்சுவேலியில் கைத்தொழில் பேட்டையில் நாற்பது பாரிய தொழிற்சாலைகள்

யாழ்ப்பாணம் அச்சவேலியில் 40 தொழிற்சாலைகளை உள்ளடக்கிய பாரிய கைத்தொழில் பேட்டையொன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இக் கைத்தொழிற் பேட்டைக்கான உட்கட்டமைப்பு வசதிகளுக் கென 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளன.

இந்நிதிக்கான அங்கீகாரத்தை தேசிய திட்டமிடல் திணைக்களம் வழங்கியுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் இக் கைத்தொழில் பேட்டைக் கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வுள்ளதுடன், இதில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான இணக்கத்தினையும் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். யாழ்.

அச்சுவேலி பகுதியில் ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென 65 ஏக்கர் காணி பெறப்பட்டுள்ளதுடன் இதில் 25 ஏக்கர் காணியில் ஆடைத் தொழிற்சாலைகளும் 40 ஏக்கர் கணியில் கைத்தொழில் பேட்டையும் அமைக்கப்படவுள்ளன.

வற்றுக்கான செயற்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வடபகுதி அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி மற்றும் தேசிய திட்டமிடல் திணைக்களத்திற்கும் கையளிக்கப்பட்டு அதன் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

கைத்தொழிற் பேட்டைகளை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக அப்பகுதியில் நீர், மின்சாரம் மற்றும் கட்டடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகளையும் ஏற்படுத்தவென 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்படவுள்ளதுடன் கைத்தொழில் பேட்டையில் அமையவுள்ள 40 தொழிற்சாலைகளை நிர்மாணித்து வழங்குவதற்கு வெளிநாடுகளின் நிதியுதவி யைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

உட்கட்டமைப்பு நடவடிக் கைகள் நிறைவடைந்ததும் உடனடியாகவே கைத்தொழில் பேட்டைக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பமாகுமென குறிப்பிட்ட அவர், இவ்வருட இறுதிக்குள் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சமுர்த்தி அதிகாரிகளுடன் நாளை அமைச்சர் பசில் பேச்சுவார்த்தை – மேர்வின் சில்வா கலந்துகொள்வாரா?

gggg.jpgபிரதிய மைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகளினால் ஏற்பட்ட சர்ச்சைக்கு தீர்வுகாண்பதற்காக நாளை புதன்கிழமை பேச்சுவார்த்தைக்கு வருமாறு சமுர்த்தி அதிகாரிகளுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆனால், பிரதியமைச்சர் மேர்வின் சில்வா சமுகமளிப்பாரா என்பது குறித்து நிச்சயப்படுத்திக்கொள்ள முடியாதெனவும் சமுர்த்தி கூட்டுத் தொழிற்சங்க ஏற்பாட்டாளர் நிசந்த உடவத்த டெய்லிமிரர் பத்திரிகையின் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கு சமுர்த்தி அதிகாரியொருவர் சமூகமளிக்காததையடுத்தே அந்த அதிகாரியை மாமரத்தில் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா கட்டிவைத்ததையடுத்து எதிர்ப்புத் தெரிவித்து சமுர்த்தி அதிகாரிகள் டெங்குத்தடுப்பு செயற்பாடுகளில் கலந்துகொள்ளாமல் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.

நாளை புதன்கிழமை இடம்பெறும் பேச்சுவார்த்தையின்போது தமது நடவடிக்கைகளுக்காக பிரதியமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டுமென வலியுறுத்தி அரசாங்கத்திற்கு காலக்கெடு விதிக்கவுள்ளதாக நிசந்த உடவத்த கூறியுள்ளார். பிரதியமைச்சர் மன்னிப்புக் கேட்காவிடின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

றுகுணு பல்கலை. மாணவன் மரணம் தொடர்பாக உண்மையைக் கண்டறிய தனிநபர் ஆணைக்குழு

றுகுணு பல்கலைக்கழக மாணவர் சுசந்த பண்டாரவின் மரணம் தொடர்பான உண்மை நிலைகளைக் கண்டறியும் பொருட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனிநபர் ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜகத் பாலபட்டபெந்தி  இதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி பதுளையில் வைத்து மரணமான இந்த மாணவனின் மரணம் தொடர்பில் முரண்பட்ட முறைப்பாடுகளும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருவதால் அவற்றை விசாரித்து சிபாரிசு அறிக்கையொன்றை தயாரிக்கும் பொறுப்பு இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பிலும் பொலிஸ் விசாரணைகள் தொடர்பிலும் முரண்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டறிந்து முழுமையான அறிக்கையை மூன்று மாத காலத்துக்குள் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி மேற்படி ஆணைக்குழுவுக்குப் பணித்துள்ளார்.