பிரதிய மைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகளினால் ஏற்பட்ட சர்ச்சைக்கு தீர்வுகாண்பதற்காக நாளை புதன்கிழமை பேச்சுவார்த்தைக்கு வருமாறு சமுர்த்தி அதிகாரிகளுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் பலர் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆனால், பிரதியமைச்சர் மேர்வின் சில்வா சமுகமளிப்பாரா என்பது குறித்து நிச்சயப்படுத்திக்கொள்ள முடியாதெனவும் சமுர்த்தி கூட்டுத் தொழிற்சங்க ஏற்பாட்டாளர் நிசந்த உடவத்த டெய்லிமிரர் பத்திரிகையின் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்கு சமுர்த்தி அதிகாரியொருவர் சமூகமளிக்காததையடுத்தே அந்த அதிகாரியை மாமரத்தில் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா கட்டிவைத்ததையடுத்து எதிர்ப்புத் தெரிவித்து சமுர்த்தி அதிகாரிகள் டெங்குத்தடுப்பு செயற்பாடுகளில் கலந்துகொள்ளாமல் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.
நாளை புதன்கிழமை இடம்பெறும் பேச்சுவார்த்தையின்போது தமது நடவடிக்கைகளுக்காக பிரதியமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டுமென வலியுறுத்தி அரசாங்கத்திற்கு காலக்கெடு விதிக்கவுள்ளதாக நிசந்த உடவத்த கூறியுள்ளார். பிரதியமைச்சர் மன்னிப்புக் கேட்காவிடின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.