04

04

மத்திய கிழக்கு செல்லும் இலங்கையர் நலனில் கூடுதல் கவனம் – அமைச்சர் ஜீ.எல்

parliament.jpgமத்திய கிழக்கு நாடுகளுக்குத் தொழில்வாய்ப்புக்காக செல்லும் இலங்கையரின் பாதுகாப்பு, தொழில் உரிமையைப் பலப்படுத்தும் வகையில் காத்திரமான திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே. வி. பி. எம்.பி. அனுரகுமார திசாநாயக்காவின் கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர், தொழில் வாய்ப்புக்காகச் செல்வோரின் நலன் கருதி முத்தரப்பு உடன்படிக்கை யொன்றை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்றுப் பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின் ஜே. வி. பி. எம்.பி. அனுர குமார திசாநாயக்க விசேட கவனயீர்ப்புப் பிரேரணையொன்றைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

அவர் தமது பிரேரணையில், சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்களாகச் சென்ற 41 பேர் அநாதரவான நிலையில் தொழிலின்றி, சம்பளமின்றி, மருத்துவ சிகிச்சைகளின்றி விடுதியொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என வினவினார்.

இதற்குப் பதிலளித்த வெளிநாட்டமைச்சர் ஜீ. எல். பீரிஸ்; மேற்படி 41 இலங்கையரும் நிறுவனமொன்றின் விடுதியில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்துக்குப் பணிப்புரை விடுத்துள்ளது. இதற்கிணங்க அங்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவர்களுக்கு ஏப்ரல் மாதம் 680 ரியால் சம்பளப் பணமாக வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் ஆறு பேர் சுகவீனமுற்று சிகிச்சை பெற்று வருவதுடன் முதலில் ஒருவரை இலங்கைக்கு அழைத்து வரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஏனைய ஐவரையும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களுக்கு மீளதொழில்களைப் பெற்றுக் கொடுக்க சம்பந்தப்பட்ட முகவர் நிலையத்துடன் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.

இவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் பொறுப்பேற்கப்பட்டு பணியக உயரதிகாரியொருவர் முன்னிலையில் நிபந்தனைகளுடனான உடன்படிக்கையொன் றில் கைச்சாத்திட வேண்டும். இவர்களுக்கு தொழில் வாய்ப்புகளுக்கான முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பிரதேச மட்டத்தில் பயிற்சிகள் வழங்கப் படவுள்ளன. அத்துடன் அவர்களுக்குக் காப்புறுதி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது தொழிலுக்காகச் சென்றுள்ள இலங்கையர்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் கட்டார், பஹ்ரேன், லிபியா போன்ற நாடுகளுடன் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் மேற்படி 41 பேர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மாத்தளையில் டயர் உற்பத்தி தொழிற்சாலை

ctb-bus.jpgஇ.போ.ச.  பஸ் வண்டிகளுக்கு தேவையான டயர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்று விரைவில் மாத்தளை களுதாவளை யில் அமைக்கப்படும் என்று பிரதி போக்குவரத்து அமைச்சர் ரோகண திஸாநாயக்கா தெரிவித்தார்.

இத்தொழிற்சாலை மூலம் மாதத் திற்கு 700 டயர்களை உற்பத்தி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிரு ப்பதாகவும் பிரதியமைச்சர் குறிப் பிட்டார்.

3 ஆவது ரெஸ்ட் போட்டி – இலங்கை 425 ஓட்டங்கள்

samaraweera.jpgஇலங்கை இந்திய அணிகளுக்கிடையேயான 3 ஆவது ரெஸ்ட் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெறுகின்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணியினர் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 425 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் டி.எம்.டில்ஷான் 48 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ரன்னவுட் முறையில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது, சங்கக்கார 75 ஓட்டங்களையும் ஜயவர்தன 56 ஓட்டங்களையும் சமரவீர ஆட்டமிழக்காது 137 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஹட்டனில் கடத்தப்பட்ட மாணவிகள் கம்பளையில் காயங்களுடன் கண்டுபிடிப்பு கடத்தல் பின்னணியில் வயோதிபப் பெண்

ஹட்டன் ரியல்தோட்ட பஸ் தரிப்பு நிலையத்தில் நின்றிருந்த போது கடத்தப்பட்ட 16 வயது மதிக்கத்தக்க இரண்டு மாணவிகளும் கம்பளை சிங்காவத்த பகுதியில் சிறுசிறு காயங்களுடன் விடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் நடைபெற்றது. காலை 7.00 மணியளவில் ஹட்டன் ரியல் தோட்ட பஸ் தரிப்பு நிலையத்தில் மாணவிகள் இருவரும் பாடசாலை செல்வதற்காக காத்து நின்றனர்.

பஸ் தரிப்பு நிலையத்தில் நின்ற வயோதிப மாது ஒருவர் மயங்கி விழுவது போன்ற பாசாங்கு காட்டியுள்ளார்.இதனை உண்மையென நம்பிய இரு மாணவிகளும் அந்த பெண்ணை தாங்கிப் பிடித்தவுடன் வானில் வந்த சிலர் அந்தப் பெண்ணுடன் சேர்த்து இரண்டு மாணவிகளையும் கடத்திச் சென்றுள்ளனர்.

வானில் ஏற்றிய சில நிமிடங்களிலேயே மாணவிகள் மயக்க முற்றதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என்பது பற்றி தமக்கு தெரியாது எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். கம்பளை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் இரண்டு மாணவிகளுள் ஒருவரின் தந்தை பொலிஸ் அதிகாரி என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சுன்னாகம் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

sunnagam.jpgயாழ்.  மாவட்டத்திலுள்ள சுன்னாகம் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுன்னாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் எஸ்.கார்த்தீபனின் நேரடி மேற்பார்வையில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொலிஸார் இந்நடவடிக்கைகளுக்கு பேராதரவு வழங்கினர். பொதுமக்கள், பொலிஸார், மாணவர்கள், அரச ஊழியர்கள் என்று சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரும் இந்நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

வட அமெரிக்காவுக்கு அகதிகள் கப்பல்அகதிகள்

200 பேருடன் கனடா நோக்கி வந்து கொண்டிருக்கின்றது என்று எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த எம்.வீ.சன்.சீ என்கிற தாய்லாந்து நாட்டுச் சரக்குக் கப்பல் வட அமெரிக்காவையே சென்றடைய உள்ளது என்று அமெரிக்காவின் அரச உயரதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி ஒன்று கசிந்துள்ளது.

கடற்கரை வீதி திறந்து வைக்கப்பட்டது

beach-road.jpgஉயர் பாதுகாப்பு வலயமாக கருதப்பட்ட யாழ். குருநகர் ரெக்லமேஷன் கிழக்கு, மேற்கு பகுதிகள் பொதுமக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டதையடுத்து புதிய கடற்கரை வீதியும் திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி ஆகியோர் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைப்பதைப் படத்தில் காண்க

beach-road.jpg

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ மருத்துவக் குழுவை அனுப்புகிறது இலங்கை

பிரதமர் கிலானியுடன் ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்பு பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ இலங்கை முன்வந்துள்ளது.பாகிஸ்தான் பிரதமர் யூசுவ் ரஸா கிலானியுடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ மருத்துவக் குழுவையும் மருந்துவகைகளையும் அனுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெள்ளத்தால் உயிர், உடைமைகளை இழந்தோருக்கு தனது அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி அனுதாபமும் ஆறுதலும் தெரிவித்திருப்பதாக ஏ.பி.பி.செய்திச் சேவை தெரிவித்தது.பாகிஸ்தான் அரசுக்கும் மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்தினதும்மக்களினதும் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ள ஜனாதிபதி ராஜபக்ஷ வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் மத்தியில் தொற்று நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி முன்வந்துள்ளார்.

அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்குத் தேயிலையையும் இலங்கை அனுப்பவுள்ளது. இலங்கையின் நல்லெண்ண நடவடிக்கைகளுக்காகப் பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவித்திருக்கிறார்.

கே பி யின் வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு லண்டனில் அலுவலகமும் இணையத்தளமும் – சிறிபதி சிவனடியாரின் அறிக்கை

Kumaran_Pathmanathan_New_Photoயூன் நடுப்பகுதியில் இலங்கை சென்று குமரன் பத்மநாதனை சந்தித்துத் திரும்பியுள்ள புலம்பெயர் கே பி ஆதரவுக்குழு தங்கள் தங்கள் செயற்பாடுகளை வேகப்படுத்தி வருவதாகத் தெரியவருகின்றது. தங்கள் பயணத்திற்குப் பின் தங்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பியவர்கள் தொடர்ந்தும் தங்கள் ஆதரவுத் தளத்தை உசார்ப்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் இணையத்தளம் ஒன்றை உருவாக்கி அதனை அறிமுகம் செய்துள்ள இவர்கள் தங்கள் பயணத்தின் போது எடுக்கப்பட்ட விடியோப் பதிவுகளை அதில் பதிவிட்டுள்ளனர். இவ்விணையத்தளம் தொடர்பாக சிறிபதி சிவனடியார் வெளியிட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம்.

மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விடயங்களை கே பி கவனித்துக் கொண்டிருந்த போது அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவரும் நிதிசேகரிப்பில் முன்னின்றவருமான சிறிபதி சிவனடியார் அந்நிதியுடன் தொடர்புடையவர்களை அணுகுவதாக உறுதிப்படுத்தப்பட முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கேபி க்கு ஆதரவான புலம்பெயர் குழு லண்டனில் அவர்களுக்கான அலுவலகம் ஒன்றை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர். அல்லது ஆரம்பிக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளனர் எனத் தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை புலம்பெயர்ந்த குழுவில் பயணித்த சார்ள்ஸ் அன்ரனிதாஸ் மறுத்திருந்தார். இன்னமும் புலம்பெயர்ந்த நாடுகளில் கேபி க்கு எதிரான அணி பலமாக இருப்பதால் கேபி க்கு ஆதரவானவர்கள் அலுவலகம் ஒன்றை ஆரம்பிப்பது ஆபத்தானதாக அமையும் என அவர்களிடையே அச்சம் உள்ளது.

கேபி யைச் சந்திக்கச் சென்ற சிறிபதி சிவனடியார் தீபம் தொலைக்காட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக அங்கு தெரிவித்ததை அடுத்து உடனடியாகவே தீபம் தொலைக்காட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். தீபம் தொலைக்காட்சியின் முக்கிய பங்குதாரரான துரை பத்மநாதனே இந்த முடிவை எடுத்ததாகத் தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது. சிறிபதி சிவனடியார் தற்போது முழுமையாக கேபி இன் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

._._._._._.

Kumaran_Pathmanathan_New_Photo‘நெர்டோ’ இணையத்தளத்தை அறிமுகப்படுத்தி சிறிபதி சிவனடியார் வெளியிட்டுள்ள அறிக்கை:

அன்பான நண்பர்களே, உறவுகளே, வணக்கம், வாழ்த்துக்கள்,

புதியதொரு இணையதளம் இப்பொழுது உருவாகியிருக்கிறது. அறிவியல் கண்கொண்டு பார்த்தால் இது இணையதளம், மனித நேயத்தோடு பார்த்தால் எங்களின் இதயதளம். முகாமில் இருக்கும் எமது மக்களின் மறுவாழ்வுப் பணியை நோக்கமாகக் கொண்டு இந்த www.nerdo.lk இணையதளத்தை உங்கள் முன் அர்ப்பணிக்கின்றோம்.

இதில், நாங்கள் எடுத்து வரும் முயற்சிகள் அவ்வப்போது நடைபெறும் மக்கள் நலத்திட்டங்கள், ஆதரவுக்கரம் நீட்டுவோரின் ஆலோசனைகள் இப்படி பல்வேறு விடயங்களைத் தொடர்ந்து வெளியிடவுள்ளோம்.

இனத்தின் புனர்வாழ்வுக்கு, நிதி தேடுவது மட்டும் தான் இதன் நோக்கமல்ல, எங்களின் முயற்சிகளையும் நடைபெறவுள்ள திட்டப்பணிகளையும் அவ்வப்போது உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கும் தான். எங்களின் செயல்பாடுகள் மீது நல்லெண்ணமும் நம்பிக்கையும் ஏற்பட்டு இந்தப் புனர்வாழ்வுப் புனிதப் பயணத்தில் நீங்களும் பங்கேற்க வந்தால் மகிழ்ச்சியோடு அரவணைத்துக் கொள்வோம், அதே சமயம் யாரையும் நிர்ப்பந்தம் செய்வதோ அல்லது விளக்கம் கொடுக்காமல் வரவழைப்பதோ நமது விருப்பமல்ல.

ஒரு நல்ல அமைப்புக்கு அது வழிமுறையுமல்ல, இதயத்திலிருந்து இயல்பாக வருகிற உணர்வுகளால் மட்டுமே இது போன்ற பொதுப்பணியில் நல்ல பயனுள்ள விளைவுகளை ஸ்திரமாக ஏற்படுத்தமுடியம்.

உதவும் உள்ளங்களுக்கு உபதேசங்கள் அவசியமில்லை. எங்களின் நோக்கம் நல்லதாக இருக்கிறது. அதைச் செயல் படுத்தும் திட்டங்களும் தெளிவாகவிருக்கிறது. இதை எல்லாம் விட மனிதநேய சிந்தனை கொண்டோரின் ஆலோசனைகளும் ஆதரவுகளும் எங்களை வழி நடத்துகிறது. எனவே திறந்த மனதோடும் பரந்து கிடக்கும் தமிழ் மக்களின் ஆதரவோடும் மறுவாழ்வுப் பணிகளைத் தொடங்கிவிட்டோம்.

ஓடி ஓடி ஓய்ந்து போன உடல்கள் மீது ஏறியிருந்து காரணங்கள் தேடுவது எமது நோக்கமல்ல, அதற்கான காலமும் இதுவல்ல. புனர்வாழ்வுக் காரியங்கள் செய்ய நிறைய இருக்கிறது. ஒவ்வொரு இரவையும் ஒரு யுகமாக கடந்து கொண்டிருக்கும் எமது மக்களின் துயர் துடைக்க தூய உள்ளத்தோடு தொடர்ந்து செல்கின்றோம். உலகெங்கும் பரந்து வாழும் நமது உறவுகள், குறுகிய சிந்தனைகளுக்கும், திட்டமற்ற செயல்களுக்கும் எக்காரணம் கொண்டும் செவி கொடுக்கமாட்டார்கள் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

இதயத்தில் ஈரமுள்ளவர்களை, இயல்பான கருணை கொண்டவர்களை, எவராலும் திசை மாற்றவே இயலாது, என்பது எங்களின் திடமான நம்பிக்கை. நான், நீ என்கின்ற பாகு பாடுகள் எமக்கு இல்லை. நொந்து, இடிந்து, வீரியமற்று, முகாம்களில் வீழ்ந்து கிடக்கும் உறவுகளின் விடியலுக்காக இங்கு தவம் இருக்கிறோம்.

இனி இதயம் திறந்து இணையத்தளத்திற்கு வாருங்கள். அதோ மணி ஒலிக்கும் சத்தம், இனி மனித நேயக் காதுகளில் மட்டும் இந்த மடல் திறந்து ஒலிக்கட்டும்.

உலகம் தொடங்கிய காலம் தொட்டு நல்ல காரியங்கள் எதுவுமே தடையில்லாமல் நடந்ததாக வரலாறு இல்லை. இப்போதும் கூட அதுதான் நடக்கிறது. வாழ்வா சாவா எனத் துடித்துக் கொண்டிருக்கும் உறவுகளுக்கு கரம் கொடுக்க மனமில்லாதவர்கள் விலகி இருக்கட்டும் தவறில்லை. அவர்கள் அப்படியே சாகட்டும் என்பது அவர்கள் நல்ணெணமாக இருக்கலாம். ஆனால் நாமும் அப்படி விட்டுவிட இயலாது.

 அது நமது இனம். களத்தில் இறந்தவர்களுக்காக எப்படித் துக்கப்படுகிறோமோ,  அதே சமயம் கண் முன்னே துடிக்கின்ற உறவுகளுக்கும் கரம் கொடுக்க முனைகின்றோம். உலகமெங்கும் எத்தனையோ தமிழ்மக்கள் வசதியாக, நிம்மதியாக, ஆரோக்கியமாக, வாழ்ந்து கொண்டு, ஊரில் உறவுகள் அநாதைகளாக செத்து மடிவதை மனச்சாட்சியுள்ள எந்த மனிதராலும் ஏற்றுக்கொள்ள இயலாது.

எங்கள் மனித நேய தூய செயல்பாடுகளை, ஒருசிலர், அர்த்தமற்ற அறிக்கைகள், சொல்பிரயோகங்கள், இணையத்தளங்கள், மின்அஞ்சல்கள் மூலம் அழிக்க நினைப்பது எந்த வகையில் நியாயம்?

எல்லோருமே இவர்கள் போல் கைகட்டி வேடிக்கை பார்த்தால் நம் இனத்தின் அடையாளமே இந்தப் பூமியில் இல்லாது போகும். அறிவு பூர்வமான இந்த விடயங்களை எல்லாம் மனச்சாட்சி உள்ளவர்களும், நடுநிலமையடன் சிந்திக்கக்கூடியவர்களும், புரியாத அந்த ஒரு சில பேருக்கு புத்தியாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

விபத்தில் சிக்கியவருக்கு, மருத்தவர் சிகிச்சை செய்யப்போனால் மனிதநேயம் உள்ள எவரும் தடுக்கவே மாட்டார்கள். அந்த “ஒரு சில பேர்” இதை தயவு செய்து நினைவில் கொள்ள வேண்டும்.

என்றும் அன்புடன்,
ஸ்ரீபதி

மேலதிக வாசிப்பிற்கு:

கேபி உடன் virtual interview : ஈழமாறன்

‘கேபி பிரபாகரனுக்கோ அவரது குடும்பத்திற்கோ தீங்கு இழைத்திருக்கமாட்டார்’ சார்ள்ஸ் அந்தோனிதாஸ் உடன் நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயம் – ‘லண்டன் வந்த அருட்குமார் கருத்தை மாற்றிக் கொண்டார்’ – சார்ள்ஸ் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி : த ஜெயபாலன்

புலி ஆதரவுக்குழுவின் இலங்கை விஜயத்தை அடுத்து கே பி எதிர் அன்ரி கே பி பனிப்போர். : த ஜெயபாலன்

வெளிச்சத்திற்கு வரும் கே பி மர்மமும் – கே பி உடன் புலம்பெயர் புலிஆதரவுக் குழுவின் சந்திப்பும் : த ஜெயபாலன்

கே பி யின் சிபார்சில் சு.ப. தமிழ்ச் செல்வனின் சகோதரர் உட்பட முன்னாள் போராளிகள் 26 பேர் விடுதலை!

‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

 புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய