கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பெண்கள் தொழில்பயிற்சிக்கென கண்டிக்கு அழைத்துச்செல்ல மேற்கொண்ட முயற்சியொன்று தடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகளை உற்பத்தி செய்யும் தனியார் நிறவனம் ஒன்று 40 யுவதிகளை தொழில்வாய்ப்புக்கென அழைத்துச்செல்ல முயன்ற இறுதித் தருணத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இது தொடர்பாக முன்னர் வெளியான செய்தி : தென்னிலங்கை ஆடைத்தொழிற்சாலைகளில் யாழ்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!
கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் இலவச இருப்பிட வசதிகள் மற்றும் மேலதிக வசதிகள் செய்து கொடுக்கப்படும் என துண்டுப் பிரசுரங்கள் மூலம் ஏற்கனவே கிளிநொச்சி கிராமங்கள் தோறும் விளம்பர துண்டுப் பிரசரங்களை விநியோகம் செய்து இந்நிறுவனம் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டிருந்தது. இதனை நம்பிய யுவதிகளும் அவர்களது பெற்றோரும் இதற்கு சம்மதித்து யுவதிகளை கண்டியிலுள்ள குறிப்பிட்ட தொழிற்சாலைக்கு அனுப்ப முற்பட்டனர். ஆனால் பொதுமக்கள் சிலரிடம் ஏற்பட்ட சந்தேகங்கள் இறுதி நேரத்தில் நடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு தெரிவிக்கப்பட்டதால். இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, மீள்குடியமர்த்தப்பட்டுள்ள இப்பிரதேச மக்களின் நடைமுறைகள் குறித்தும் விளக்கினார்.
இங்கு மக்கள் மீள்குடியமர்த்தப்படுகின்ற போது, குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை உட்பட்ட விபரங்கள் எடுக்கப்பட்டு, குடும்பப் படங்கள் எடுக்கப்பட்டு மேலும் பல பதிவுகளின் பின்னரே சொந்தக் காணிகளில் குடியமர அனுமதிக்கப்படுகின்றனர்.
கிளிநொச்சிக்குப் பொறுப்பாகவுள்ள சிவில் படைத்தரப்பிடம் அனுமதி கேட்டு இந்நிறுவனம் கடிதம் அனுப்பியதாக தெரிவித்த போதும், படைத்தரப்பிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தையல் இயந்திர இயக்குநர்கள், உற்பத்தி மேற்பார்வையாளர்கள் என இரு வகை வேலைகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்து. பயிற்சிக்காலம் முடிவடைந்த பின்னர் அதி கூடிய சம்பளமாக 14 ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனவும், உற்பத்தி ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 2அயிரம் ரூபாவிலிருந்து ஐயாயிரம் ரூபா வரையில் வழங்கப்படும் எனவும், உற்பத்தித் தரக்கொடுப்பனவாக ஆயிரத்து ஐந்நூறு ருபா கொடுக்கப்படுமெனவும் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டிருந்தன.
இந்நிறுவனத்தின் நம்பகத்தன்மை சந்தேகத்திடமானதாக இருந்த காரணத்தினால் இறுதி நேரத்தில் குறிப்பட்ட யுவதிகள் அழைத்துச் செல்லப்படும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது. இவர்களை அழைத்துச் செல்ல கொண்டு வரப்பட்ட வாகனமும் திரும்பிச்சென்றது. குறித்த நிறுவனத்துடன் நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுமக்களும் விவாதித்துக்கொண்டிருக்கையில், அவ்விடத்திற்கு வந்த படையினர் சிலர் குறித்த நிறுவன அதிகாரிகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தாகவும் விவாதம் செய்தவர்களிடம் கடும் தொனியில் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது இவ்வாறிருக்க, வன்னிப்பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இன்னமும் நிறைவு பெறாத வேளையிலும், மீள்குடியேற்றப்பட்ட மக்கள் இன்னமும் கூடாரங்களில் தங்கி வாழும் நிலையில் இருக்கின்ற போதும், அவர்களின் வசதியின்மைகள்; வறுமை நிலைகளைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்ற பல தரப்பினர் முற்படுகின்றமை தெரியவந்துள்ளது. மீள்குடியேற்றம் உட்பட இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புகள் தொடர்பான நடவடிக்கைகளை அது அரசதுறையிலானாலும் சரி தனியார் துறையிலானாலும் சரி அதனை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் பொறுப்பும் உத்தரவாதமும் மிக அவசியமானதாக உள்ளது.
கண்டியிலும், தென்பகுதிகளிலும் தொழில் வாய்ப்பின்றி பல சிங்கள தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் இருக்கின்ற நிலையில், கண்டியைச் சேர்ந்த குறித்த தனியார் ஆடைத்தொழிற்சாலை கவர்ச்சிகரமான ஊதியத்தை விளம்பரப்படுத்தி கிளிநொச்சி பெண்களை வேலைக்கமர்த்த முயல்வதன் உள்நோக்கம் சந்தேகத்திற்கிடமானதாகவே இருக்கின்றது. தென்பகுதிகளின் கிராமங்களில் வாழும் சிங்கள யுவதிகள் கூட கொழும்பிலுள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் வேலைக்கமர்த்தப்பட்டு ஊதியம் போதாமை காரணமாக, பாலியல் தொழில்களில் ஈடுபடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. கொழும்பின் தனியார் மருத்துவமனைகளில் கருக்கலைப்பிற்காக வரும் திருமணமாகாத யுவதிகளில் பெரும்பாலானோர் ஆடைத்தொழிற்சாலைகளில் வேலை செய்வோர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
மலையத்தில் உள்ள இளம்பெண்கள் தொழில் வாய்ப்புகளுக்கென சிலரால் கொழும்பிற்கு ஏமாற்றி அழைத்து வரப்பட்டு பாலியல் தொழில்களுக்கு பழக்கப்படுத்தப்பட்டு, ஈடுபடுத்தப்பட்டு வருகின்றமையும் நடைபெற்று வருகின்றது. வாரம் அல்லது மாதம் ஒரு முறை பாலியல் தொழிலால் கிடைத்த பணத்துடன் ஊருக்கச்சென்று வரும் இப்பெண்களின் உறவினருக்குக் கூட இது தெரியாமலுள்ளமை கசப்பான உண்மையாகும்.
தென்னிலங்கையின் யுவதிகள் தொழில் வாய்ப்பின்றி அரபு நாடுகளுக்குச் சென்று சீரழிகின்ற செய்திகளும் நாளாந்தம் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், யுத்தத்தால் சகலதையும் இழந்து நிர்க்கதியாகியுள்ள வன்னி மக்களின் வறுமையையும், துன்பங்களையும் பயன்படுத்தி அவர்களை சீரழிவிற்குள் இட்டுச்செல்ல முற்படும் தரப்புகளிடமிருந்து தமிழ் இளைஞர் யுவதிகள் மட்டுமல்ல அவர்களின் பெற்றோரும், சமூகத்தினரும் விழிப்பாக இருக்கவேண்டும் என்பது அவசியமானதாகும்.
Related News:
சிங்கப்பூரில் பலவந்தமாக பாலியல் தொழில்களில் ஈடுபடுத்தப்படும் இலங்கை யுவதிகள்!
பெண்கள் மற்றும் சிறுவர்களை துன்புறுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு
இலங்கையில் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரையிலான பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.