தென்பகுதியிலிருந்து வந்த சிங்கள வர்த்தகர்களில் மூவர் இன்று யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாதவர்களினால் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை இரவு 7மணியளவில் தலைக்கவசம் அணிந்து, முகத்தைக் கறுப்புத்தணிகளால் மறைத்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்று இத்தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். கொக்குவில் ஆடியபாதம் வீதி, அம்பட்டப்பாலம் அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வர்த்தகர்கள் வந்த லொறியொன்று எரிக்கப்பட்டதாகவும். அதனை அவ்விட்திற்கு வந்த படையினர் அணைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெட்டுக்காயங்களுக்கு உள்ளான மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வர்த்தகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வியாபார போட்டிகள் காரணமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இச்சம்பவத்தின் பின்னர் அப்பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டதோடு, அப்பகுதியால் பயணம் செய்வோர் சோதனையிடப்பட்டனர். இச்சம்பவத்தின் பின்னர் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் காணப்பட்டனர்.