28

28

யாழ்ப்பாணத்திலிருந்து மலேசியா செல்லும் பெண் சாரணியர்கள்

jaffna.jpgஉலக பெண் சாரணிய அமைப்பின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் முகமாக மலேசியாவில் நடைபெற இருக்கும் கூடலில் பங்குபற்றுவதற்காக யாழ். மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் 36 பெண் சாரணியர்கள்  நேற்று யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டனர். யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி. எம்.பி. சில் வேஸ்த்திரி அலன்ரின் உதயனும் காணப்படுகிறார்.

யாழ், முல்லை, கிளிநொச்சியிலும் நல்லிணக்க குழுவின் அமர்வுகள்

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் விசாரணைகள் அடுத்த மாத நடுப்பகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறவுள்ளன. பொது மக்களிடம் சாட்சியங்களைப் பெறுவதற்காக திறந்த அமர்வாக இங்கு விசாரணைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக் குழுவின் இணைப்புச் செயலாளர் ஜீ.ஏ. குணவர்தன தெரிவித்தார்.

ஆணைக்குழு முன்னிலையில் பொதுமக்கள் சாட்சியம் அளிப்பதற்கான ஏற்பாடுகளை அந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் மேற்கொள்வார்கள். எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பொதுமக்களிடம் சாட்சியங்கள் பெறப்படும். அதேவேளை ஒக்டோபர் மாதம் ஒன்பதாந் திகதி முதல் 11 ஆந் திகதி வரை யாழ்ப்பாணத்தில் விசாரணைகள் நடைபெறும்.

ஆணைக் குழு முன் சாட்சியமளிக்க விரும்பும் பொதுமக்கள் குறித்த அரசாங்க அதிபர் அலுவலகத்துடனோ அல்லது ஆணைக்குழுவுடனோ தொடர்புகொள்ளலாமென அறிவிக்கப் பட்டுள்ளது. கொழும்பு- 7, ஹோட்டன் பிளேஸிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மூன்றாந்திகதி நடைபெறும் அமர்வில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எம். ஐ. எம். மொஹிதீன், பீ. எம்.டி. பெர்னாண்டோ ஆகியோர் சாட்சியமளிப்பர்.

செப்டெம்பர் ஆறாந்திகதி கலாநிதி அநுர ஏக்கநாயக்க, சுசந்த ரத்னாயக்க, கே.ரி. இராஜசிங்கம் (ஏஷியன் ரிபியூன்) ஆகியோர் சாட்சியமளிப்பார்கள். செப். 13ஆம் திகதி நடைபெறும் விசாரணையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், மனிக் டி சில்வா, காந்தி நிலையத்தின் ஒரு பிரதிநிதி ஆகியோர் சாட்சியம் வழங்குவார்கள். 15 ஆம் திகதிய விசாரணையில் முன்னாள் சமாதான செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஜோன் குணரத்ன, அருட் தந்தை துலிப் டி. சிக்கேரா ஆகியோரும் 24 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப், மத நிறுவனமொன்றின் பிரதிநிதி ஆகியோர் சாட்சியம் அளிப்பர். 29 ஆம் திகதி பேராசிரியர் அர்ஜுன்அலுவிகார, கலாநிதி சமன், பீ. ஹெட்டிகே ஆகியோர் சாட்சியம் வழங்குவர்.

பெற்ற குழந்தையை அநாதரவாக விட்டு விட்டு தாய் தலைமறைவு. கிளிநொச்சி மருத்துவமனையில் சம்பவம்!

கிளிநொச்சிப் பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தையொன்று அநாதரவாக கைவிடப்பட்டுள்ளது. இக்குழந்தையைப் பெற்றெடுத்த பெண் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த 10ம் திகதி மேற்படி மருத்துவமனையில் பிறந்த குந்தையை கைவிட்டு விட்டு அதன் தாய் தலைமறைவாகியுள்ள நிலையில் அக்குழந்தையை அம்மருத்துவமனையின் வைத்தியர்கள். தாதிகள் பராமறித்து வருகின்றனர். இக்குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணைத் தேடிக்கண்டு பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும், குறித்த பெண் போலியான  பெயர் விபரங்களை மருத்துவமனையில் கொடுத்துள்ளதால் அப்பெணணைத் தேடிக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 வறுமை மற்றும், தவறான உறவுகள் காரணமாக தென்னிலங்கைப் பகுதிகளில், பெற்ற குழந்தைகளை கைவிட்டு விட்டு தலைமறைவாகும் பெண்கள் தொடர்பான செய்திகளை அடிக்கடி பார்க்கக் கூடியதாக இருந்த நிலையில் தற்போது போரின் பின்னான சூழலில் வன்னியில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது

இந்தியாவினால் 50 ஆயிரம் வீடுகளைக்கட்டும் பணிகளை இந்திய நிறுவனம் ஒன்றே பொறுப்பேற்றுள்ளது.

வடக்கு மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் அமைத்துக் கொடுக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளை இந்திய நிறவனம் ஒன்றே பொறுப்பேற்று அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தியா வடக்கில் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ள 50 ஆயிரம் வீடுகளுக்கான நிதி நேரடியாக இலங்கை அரசாங்கத்திடம் கையளிப்பது தொடர்பான சாச்சைசகள் இந்திய அரசியல் வட்டாரங்களிலிருந்தும் தமிழக வட்டாரங்களிலிருந்தும் வெளியாகியிருந்த நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்வீடமைப்பு குறித்து ஆராய குறித்த நிறுவனத்தின் மூன்று பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்தனர்.   யாழ்ப்பாணத்தில் வீடுகள் அமைக்கவிருக்கும் இடங்களை அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.

முதற்கட்டமாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் ஆயிரம் வீடுகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இரண்டாம் கட்டமாக குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களிலும் மேலும் ஆயிரம் வீடுகள் கட்டுவதெனவும்,அடுத்ததாக ஏனைய வீடுகளைக் கட்டம் கட்டமாக கட்டுவதெனவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 இவ்வீடமைப்புக்காக இந்தியா வழங்கும் நிதியைக் கையாளவதற்காக இந்திய வங்கியின் கிளை ஒன்று யாழ்ப்பாணத்தில் விரைவில் திறக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளியுறவுச்செயலர் வடபகுதிக்கு விஜயம்.

Nirupama_Raoஇலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமாராவ் எதிர்வரும் 31ம் திகதி செவ்வாய் கிழமை வடபகுதிக்கு விஜயம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகப்ரர் மூலம் இப்பகுதிகளுக்கு செல்லும் இவர் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து பிற்பகல் 2மணிக்கு யாழ்பாணம் செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதோடு, பொது நுலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ்.மேயர் திருமதி யோ.பற்குணராஜா ஆகியோரும் இந்நிழ்வில் கலந்து கொள்ள வுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் மீள்குடியமர்வு, ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து இக்கலந்துரையாடலில் முக்கியமாக ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பசில் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம்.

basil.jpgகிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமை தாங்குவார் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் இக்கூட்டம் நiபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும், மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் என்பன ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரை மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கு தேவைப்படும் வசதிகள் போன்ற விடயங்களும் இதன்போது ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9000 ஓட்டங்களை கடந்த 3 வது வீரர் மகேல ஜெயவர்த்தன

mahela.jpgசர்வதேச ஒரு நாள்போட்டியில் 9000 ஓட்டங்களைக் கடந்த 3வது வீரர் என்ற பெருமையை மகேல ஜெயவர்த்தன பெற்றுக்கொண்டார்.  இன்று இடம் பெற்றுக்கொண்டிருக்கும் இந்தியாவிற்கு எதிரான போட்டியிலே மகேல ஜெயவர்த்தன இச் சாதனையை நிலை நாட்டினார். ஏற்கெனவே சனத், அரவிந்த இந்த இலக்கைத் கடந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டத்தில் வெல்ல கூடுதல் முயற்சி தேவை – சங்ககரா

பொதுவாக இறுதி ஆட்டங்களின் போது  இந்திய அணியினர் எங்களை விட சிறப்பாக செயல்பட்டு கோப்பை வென்று விடுவர். இது பலமுறை நடந்துள்ளது. இம்முறை சற்று கூடுதல் முயற்சி எடுத்து ஐந்தாவது முறையாக கோப்பை வெல்வதை தடுப்போம். சேவக் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. இவரை விரைவில் அவுட்டாக்கினால் எங்களுக்கு நல்லது என இலங்கை அணித்தலைவர் தெரிவித்தார்.

தோனி தலைமையில் இந்திய அணி, இலங்கையில் தொடர்ந்து நான்கு ஒருநாள் தொடர்களில் கோப்பை வென்றுள்ளது. கடந்த 2008 (3-2), 2009 (4-1) ல் நடந்த ஒருநாள் தொடர்கள் 2009 முத்தரப்பு தொடர், சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை என மொத்தம் நான்கு முறை சாதித்துள்ளது. இன்றும் வெல்லும் பட்சத்தில் ஐந்தாவது முறையாக கோப்பை வென்று சாதிக்லாம்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து துடுப்பெடுத்தாடி வருகிறது. இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் எதுவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

24 ஆணிகள் அறையப்பட்ட பெண்ணுக்கு சத்திரசிகிச்சை

kamburu-01.jpgசவூதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளாகி உடம்பில் 24 ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையில் நாடு திரும்பிய பெண்ணுக்கு நேற்று மாத்தறை கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் மூன்று மணித்தியாலங்கள் நீடித்த இந்த சத்திர சிகிச்சையின் மூலம் அவரது உடம்பிலிருந்து 16 ஆணிகள் அகற்றப்பட்டன. ஏனையவை உயிர் ஆபத்தை ஏற்படுத்தாதவை என வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். அவரது உடலிலிருந்து 2 அங்குல ஆணிகள் 12 மற்றும் 2 1/2 அங்குல ஆணி ஒன்றும், மூன்று குண்டூசிகளும் அகற்றப் பட்டன. உடலில் மீதமுள்ள ஆணிகளை அகற்றுவதற்காக மீண்டும் ஒரு சத்திரசிகிச்சை நடைபெறவுள்ளதாக கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரி டொக்டர் பிரபாத் கஜதீர தெரிவித்தார்.

kamburu.jpgகம்புறுபிட்டிய ஆஸ்பத்திரி டொக்டர் பிரபாத் கஜதீரவின் ஆலோசனைக்கமைய வைத்திய நிபுணர் கமல் வீரதுங்க திலங்க த சில்வா, எச்.கே.கே. சதரசிங்க, மயக்க மருந்தேற்றும் வைத்திய நிபுணர் வசந்தி குணசேக்கர உள்ளிட்ட டொக்டர்கள் குழுவினர் சுமார் 3மணிநேரம் சத்திர சிகிச்சையில் ஈடுபட்டனர்.இரண்டு குழந்தைகளின் தாயான எல்.பி. ஆரியவதி (வயது 49)யின் மன நிலை பாதிக்கப் படும் என்ற காரணத்தினாலும், சத்திரசிகிச்சையைத் தொடர்ந்தும் நடத்துவதால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாகவும் நேற்றைய சத்திரசிகிச்சை 13 ஆணிகள், 3 குண்டூசிகள் நீக்கப்படுவதுடன் நிறுத்தப்பட்டது. அவரது உடலில் துருப்பிடித்த நிலையிலேயே இந்த ஆணிகள் இருந்தன.

இன்னும் சில தினங்களின் பின்னர் சத்திரசிகிச்சையை மேற்கொள்வது என டொக்டர்கள் தீர்மானித்ததுடன், மன நல மருத்துவரின் ஆலோசனையை பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. சத்திர சிகிச்சையின் பின்னர் குறிப்பிட்ட பெண் சாதாரண வார்ட் ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் தேறி வருவதாகவும் டொக்டர்கள் தெரிவித்தனர்.

தனக்கு வேலை வழங்கிய சவுதிஅரேபிய நாட்டவர் உடலில் ஆணிகளை அடித்ததாக அப்பெண் கூறியிருந்தார். 24 ஆணிகளும் ஊசியும் உடலில் இருப்பதை எக்ஸ்ரே மூலம் தெரியவந்திருக்கிறது. நெற்றியிலும் ஆணி உள்ளது என்று மருத்துவமனைப் பணிப்பாளர் பிரபாத் கஜதீர கூறியுள்ளார்.

maid.jpgஇந்த ஆணிகள் 2 அங்குல நீளமுடையவையாகும். ஆரியவதியின் கைகள், கால்கள், அடிப்பாதங்களிலேயே அதிகளவுக்கு ஆணிகள் அறையப்பட்டுள்ளன. ஆனால் ஆரியவதியின் உட்புற உடல்உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தோன்றவில்லை என்று டாக்டர் கஜதீர கூறினார்.கடந்த மார்ச்சில் சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த இப்பெண் அதிகளவு உளப்பாதிப்புக்கு உட்பட்டவராகவே உள்ளார். தனது அவையவம் தொடர்பாக அதிகளவுக்கு விபரங்களை அவரால் கூற முடியவில்லை.

10 இலட்சத்து 80 ஆயிரம் இலங்கையர் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். இவர்களில் 70 சதவீதத்தினர் பெண்களாவர்.

வீட்டுவேலையாட்களாக பணிபுரியும் இலங்கையர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும் சிறு தொகையினர் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளிலும் தொழில் புரிகின்றனர்.

எஜமானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சவூதி அரேபியாவில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் எஜமானர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இலங்கை வெளி நாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சட்டமா அதிபரிடம் சட்ட ஆலோசனையை கோரியுள்ளது. பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க மேற்படி பெண் தொடர்பான ஆவணங்களை சட்டமா அதிபரிடம் நேற்று கையளித்தார்.

இதேவேளை சவூதியிலுள்ள எஜமானர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை இலங்கை தூதரகம் நேரடியாக மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதால் சவூதி அரசின் ஊடாக இதனை எவ்வாறு கையாளலாம் என்பது பற்றியும் பணியகம் ஆராய்ந்து வருகிறது. இலங்கைப் பெண்ணுக்கு மிக மோசமான முறையில் சித்திரவதை நடந்துள்ளமை பற்றி சவூதியிலுள்ள இலங்கை தூதுவர் தனது அதிருப்தியையும் சவூதி அரசுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை வெளிநாட்டமைச்சு கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரியில் மேற்படி பெண்ணின் மருத்துவ அறிக்கையையும் கோரியுள்ளது. சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார் என்பதற்கான மருத்துவ அறிக்கைகள், எக்ஸ்ரே மற்றும் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ஆணிகளின் விபரங்கள் போன்றவற்றை சேகரிப்பதற்கு பணியகத்தின் மாத்தறை கிளை அதிகாரிகள் நேற்று கம்புறுபிட்டிய ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தனர்.

சவூதியில் இவ்வாறு வீடுகளில் துன்புறுத்தப்படுதல், சித்திரவதைக்குள்ளாக் கப்படுதல் போன்ற சம்பவங்கள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக் குமானால் உடனடியாக இலங்கை தூத ரகத்துக்கு அறிவிக்குமாறு சவூதியிலுள்ள உள்ளூர் பத்திரிகைகள் மூலம் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. ஆணிகளால் குத்தி சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணும் பலமுறை தனது உறவினர்களோடு பேசியுள்ள போதும் பல முறை இலங்கை தூதரகத்துடன் தொடர்பு கொண்ட போதும் தனக்கு இவ்வாறான சித்திரவதை நடைபெற்றது என்பதை தெரிவிக்கவில்லை.

அச்சம் காரணமாகவே இவர் இவ்வாறு தெரிவிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் எவரும் அச்சமின்றி இலங்கை தூதரகத்துக்கு அறிவிக்க வேண்டும் என இலங்கை தூதரகம் அறிவித்தல் விடுத்துள்ளது. சவூதி எஜமானர்களிடமிருந்து நஷ்டஈட்டை பெற்றுக் கொடுக்க பணியகம் தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.