26

26

”ஈழம்(தமிழ்) என்ற அடையாளத்தை இல்லாமல் பண்ணவே முயற்சிக்கிறார்கள். ” ஜி ரீ லிங்கநாதன் வவுனியா நகரசபை உறுப்பினர். – நேர்காணல் : ரி சோதிலிங்கம்

Linganathan_giving_speechதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே நிர்வாக அலகான வவுனியா நகரசபை தற்போது இயங்க முடியாத நிலையில் உள்ளது பற்றியும் அந்நகரசபையில் இடம்பெற்ற நிதி நிர்வாகச் சீர்கேடுகள் பற்றியும் விரிவான ஒரு அறிக்கை வவுனியா நகரசபையின் சர்வகட்சி உறுப்பினர்களாலும் கையெழுத்திடப்பட்டு வெளியாகி இருந்தது. இவ்வறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் ஒருவரான   முன்னாள் வவுனியா மேயரும் தற்போதைய வவுனியா நகரசபையின் புளொட் அமைப்பின் உறுப்பினருமான ஜி ரீ லிங்கநாதன் ஓகஸ்ட் 2ல் ‘தேசம்நெற்’க்கு வழங்கிய நேர்காணல்.

வவுனியா நகரசபை தொடர்பாக ‘தேசம்நெற்’இல் வெளியான முன்னைய பதிவுகள்:

”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” வவுனியா நகரசபைத் தலைவரின் கூற்றும் இன்னமும் வீச்சுடன் இருக்கும் சாதிய மனோநிலையும்

ரிஎன்ஏ யின் வவுனியா நகரசபையின் தலைமை மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு – எட்டு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கை

இந்நேர்காணலின் பின் ஜி ரீ லிங்கநாதன் சமாதானத்திற்கும் மீளுறவுக்குமான கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் முன் வவுனியா மாவட்ட செயலகத்தில் ஓகஸ்ட் 14ல் சாட்சியமளித்தார். அதிலிருந்து சில பகுதிகளை இங்கு பதிவு செய்து கொண்டு நேர்காணலுக்குச் செல்வோம்.

‘’நடந்தவைகளை மறந்து இனிவரும் காலங்களில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கூறியிருந்தார். உண்மையில் நாமும் அதைத்தான் விரும்புகிறோம். இருந்தாலும்கூட மறைந்த இடதுசாரித் தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர் சில்வா “இந்த நாடு இரு மொழி பேசுவதாக இருந்தால் ஒரு நாடாகவும் ஒரு மொழி பேசுவதாக இருந்தால் இரு நாடாக வரும்” எனக் கூறியிருந்தார். இதை ஏன் நான் கூறுகிறேன் எனில் நடந்தவைகளை மறப்பதென்பது இலகுவான விடயமல்ல. இருந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் 30 ஆண்டுகளாக மிக இன்னல்களுக்கு மத்தியில் நாங்கள் இன்றைக்கு நிர்க்கதி அற்ற நிலையில் இருக்கின்றோம் என்பதுதான் உண்மை.

இன்று தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒன்று கௌரவமாக எல்லா மக்களும் வாழக்கூடிய அரசியல்த் தீர்வு முன்வைக்கப்பட வேண்டியது அவசியமாக இருக்கின்றது. அடுத்ததாக இந்த யுத்தத்தின் மூலம் இடம்பெயர்ந்து தங்களுடைய அன்றாட வாழ்வைக்கூட வாழமுடியாது இருக்கின்ற மக்களை சிறந்த முறையில் வாழவைக்க வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அடுத்து பல ஆண்டுகளாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழ் இளைஞர், யுவதிகளை அவர்களது விசாரணைகளை முடித்து விடுதலை செய்ய வேண்டும்.

இறுதியாக சுதந்திரத்திற்கு பின்னிருந்தே வடக்கு – கிழக்கில் ஓர் அத்துமீறிய குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டமையும் அந்த இனப் பிரச்சினைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று. இதற்கு அரசாங்கம் பின்ணணியில் செயற்படுவதாக நாம் சந்தேகிக்கின்றோம். இவ்வாறான செயற்பாடு ஜனாதிபதியின் இன ஒற்றுமைக்கும் சுபீட்சமான எதிர்காலத்திற்குமான செயற்பாட்டிற்கான முட்டுக்கட்டையாக அமையும் என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்’’
–சமாதானத்திற்கும் மீளுறவுக்குமான கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் முன் ஜி ரீ லிங்கநாதன்– ஓகஸ்ட் 14, 2010.

ஜி ரீ லிங்கநாதனுடனான நேர்காணல்:

தேசம்: வவுனியா நகரசபை தொடர்பாக நகரசபை உறுப்பினர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இருந்து இந்த நேர்காணலை ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன். வேறுபட்ட அரசியல் அமைப்பினர் ஒன்றிணைந்து நகரசபையின் அடிப்படை ஜனநாயக நடைமுறைகளை பரீட்சிக்க முயன்றுள்ளீர்கள். இந்த மாதிரியான நடவடிக்கைகள் மிகமுக்கியமானது. ஜனநாயகத்துடன் ஜக்கியப்படல் என்பதன் மூலமே தொடரச்சியாக சமூக சீர்கேடுகளை நாம் திருத்திச் செல்லாம்.
Linganathan_with_Waterpumbலிங்கநாதன்: நாங்கள் இந்த விடயத்தில் சரியாகவே செயற்படுகிறோம். செயற்படுவோம். காரணம் பெரிய பெரிய வசனங்களை பேசி, மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இப்ப நாங்கள் இப்படியான கட்டமைப்புக்களில் மாற்றங்களை உருவாக்க முனைகிறோம். அதன் மூலம் வருங்கால எமது பிள்ளைகளுக்காக இப்படியான விடயங்களை சொல்லிக் கொடுத்துவிட்டு போகலாம்.

நாங்கள் எதிர்வரும் நிர்வாக கூட்டத்தில் எமது 19 கோரிக்கைகளுக்கும் பதில் வரும் என எதிர்பார்க்கிறோம். அவர்கள் சரியான ஒரு நிர்வாகம் என்றால் ஒரு விசேட கூட்டத்தை கூடி இது பற்றி கலந்தாலோசித்திருக்கலாம். ஏனென்றால் இந்த கையெழுத்திட்டவர்களில் தமிழ்தேசிய முன்னணி, புளொட், பொதுசன ஜக்கியமுன்னணி இந்த மூன்று அமைப்புக்களையும் சேர்ந்த 8 உறுப்பினர்கள் தானே இதை செய்திருந்தோம். இது ஒரு கட்சி ரீதியாகவோ எதிர்க்கட்சி என்றோ செய்யவில்லை. ஆகவே அவர்கள் ஒரு விசேட கூட்டத்தை கூடியிருக்கலாம். அவர்கள் அப்படி செய்யவில்லை.

தேசம்:இந்த விடயங்களை ஒரு நகராட்சியிடமே கேட்டுள்ளீர்கள். இவ்வளவு காலப்போராட்டத்தின் பின்பும் இப்படியான நிர்வாக சீர்கேடுகளைப் பற்றி அக்கறையில்லாமல் இருப்பது வெட்கக்கேடான செயல் அல்லவா.
லிங்கநாதன்:நாங்கள் பெருமையாக சொல்லவில்லை. 1994ம் ஆண்டு அந்த சபையை பெறுப்பெடுத்து 1999 வரையில் புலிகளின் கெடுபிடிகள் ஆமியின் கெடுபிடிகள் அமைச்சர்களின் கெடுபிடிகள் இவற்றுக்குள்ளும் நாம் மிகத்தரமான நிர்வாகத்தை செய்துள்ளோம். காரணம் இது எங்களுடைய மக்களுடன் சம்பந்தப்பட்ட விடயம் உரிமைப் போராட்டத்தில் பாரிய தவறுகள் நடைபெற்றுவிட்டது. அதனால் குறைந்தது மக்களுக்கு இந்த சாதாரண வாழ்க்கையில்  நிம்மதியான வாழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்பதில் எமக்கு அக்கறை இருந்தது அதற்காக செயல்பட்டோம்.
இந்த நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே நாம் பல சிரமதான பணிகளையெல்லாம் செய்துள்ளோம்.

எமது கீழ்மட்டத்தில் நடைபெற்ற சில தவறான நடவடிக்கைகள் காரணமாகவும் அதைவிட தேசியத்தின் பெயரால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். தேசியத்தின் பெயரால் சிந்திக்க தள்ளப்பட்டுள்ளனர். அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலும் நகராட்சி தேர்தலும். மக்களுக்கு இன்றும் அந்தத் தேசிய உணர்வுள்ளது என்பதனைக் காட்டியுள்ளன. ஆனால் கவலைக்குரிய விடயம் தமிழ் தேசியத்துக்கு தலைமை தாங்கக் கூடியவர்கள் எவரும் சுதந்திரத்திற்கு பின்னர் இல்லை என்பதே உண்மை.

தேசம்:தேசியத் தலைவர்கள் இல்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். அப்படியானால் தந்தை செல்வா முதல் தம்பி பிரபா வரையான தலைவர்கள்?
லிங்கநாதன்:இவர்கள் பற்றி பல விமர்சனங்கள் உண்டு. அ அமிர்தலிங்கம் போன்றவர்களை தமிழ் மக்கள் பாவித்திருக்கலாம். அவர் உயிருடன் இருந்திருந்தால் எமது நிலைமை வேறு. ஆனால் ஒட்டு மொத்தமாக பார்த்தீர்கள் என்றால் அது தந்தை செல்வா என்றால் என்ன? இன்றுள்ள சிறீரெலோ உதயன் ஆக இருந்தால் என்ன தேசியத்தின் பெயரால் ஏதோ செய்ய வெளிக்கிட்டதே தவிர, வடிவேல் சொன்னமாதிரி உட்கார்ந்து இருந்து யோசிக்கவில்லை.

தேசம்:உங்கள் அறிக்கையில் நீங்கள் சொல்கிறீர்கள் நகரசபைக்கு கட்சி பேதமின்றி நிபந்தனையின்றி ஆதரவளித்தோம் என்று. அதை கொஞ்சம் விபரியுங்கள்?
லிங்கநாதன்:கடந்த தேர்தலில் எமக்கும் தமிழ் தேசிய முன்னணிக்கும் 3 ஆசனங்கள் தான். 143 வாக்குகள்தான் அவர்களுக்கும் எமக்கும் உள்ள வித்தியாசம். அதனால் அந்த 2 போனஸ் ஆசனங்கள் தமிழ் தேசிய முன்னணிக்கு கிடைத்தது. ஆனாலும் அவர்களின் பதவியேற்பு வைபவத்தின்போது நாங்கள் அவர்களுக்கு சொல்லியிருந்தோம், ‘தேர்தல் முடிந்து விட்டது. அது ஜனநாயகப்படி நடந்துள்ளது. நீங்கள் சரியானதை செய்யுங்கோ, நாங்கள் ஆதரவளிப்போம்’ என்று. இதை நாங்கள் மேயருக்கும், அவைக் கூட்டத்திலும் சொல்லியுள்ளோம். இன்று வரையில் இவர்களது நடவடிக்கைகளில் எமக்கு திருப்தியில்லை  இன்று தேர்தல் முடிந்து 10வது மாதம் எனக்கும் எமது தோழர்களுக்கும் பொது மக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் ஏதாவது செய்யச் சொல்லி. மக்களிடமிருந்து பல உறுத்தல்கள் வந்த வண்ணமே உள்ளன. எனக்குத்தான் விருப்பு வாக்குகளில் அதிகமான வாக்குகளை மக்கள் அளித்திருந்தனர். நான் முன்பு மேயராக இருந்தவன். ரிஎன்ஏயின் ஆட்கள் கூட என்னிடம் முறைப்படுகிறார்கள். என்ன நடககிறது என்று கேட்கிறார்கள். அவ்வளவு சீர்கேடுகள் நடக்கின்றன. பல பொது மக்களுக்கு இவை நன்றாகவே தெரியக்கூடிய மாதியாக நடக்கிறது.

சிவசக்தி ஆனந்தன் நேரடியாக தலையிட்டு ஆதரவளிக்கும்படி கேட்டார். நான் கேட்டேன் தனிப்பட நாதனுக்கு ஆதரவளிப்பதா? அல்லது ரிஎன்ஏக்கு ஆதரவளிப்பதா? என்று. அவர் சொன்னார் ரிஎன்ஏக்கு தான் ஆதரவளிக்க வேண்டும் என்று. நான் சொன்னேன் நாம் எல்லோரும் பேசுவோம் என்று. அவர்களில் மொத்தம் 5 பேர் கொண்டு வந்த இந்த தெரிவை நாங்களும் சேர்ந்து இந்த புரப்போசலுக்கு ஆதரவளித்தோம்.

தேசம்:நீங்கள் சொல்லுகிறீர்கள் மக்களின் பிரதிநிதிகள், சுகாதார உத்தியோகத்தர்கள் முறைப்பாடு செய்வதாக. அது என்ன?
லிங்கநாதன்:இவர்கள் ஆசனத்திற்க்கு வந்து இத்தனை நாளாக ஒன்றும் செய்யவில்லையே. எல்லாம் அரைகுறை. தனக்கும் தனது உப மேயருக்கும் ஏசி பூட்டியதும், ரோலிங் கதிரை போட்டதும், தமக்கு வாகனங்கள்(கார்) வாங்கியதும் தான்.

Linganathan_Cleaning_a_Wellநாங்கள் ஒரு புரோகிராமை போட்டு அதை மக்களிடம் கையளித்துவிட்டு அன்றே அடுத்த திட்டத்தை போடுவோம். மக்களிடம் கேட்டு அடுத்து என்ன செய்ய வேணும் என்று தானே நடந்து கொண்டுள்ளோம். மக்களிடம் கேட்டு பாருங்களேன் நாங்கள் எப்படி நடந்துள்ளோம் என்று. அதில் இருந்துதானே நாங்களும் இவர்களின் நிர்வாக சீர்கேடு என்பதை ஒத்துக்கொள்கிறோம். இவர்களிடம் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி ஒரு வருடம் முடியும் போது என்ன செய்தீர்கள் என்று கேட்டால் இவர்கள் தங்களுக்கு வாங்கிய பிக்கப் வாகனத்தை கொண்டு வந்து நிற்பாட்டிவிட வேண்டியது தான். வேறு என்ன சொல்ல இருக்கிறது.

தேசம்: கோவில்குளம் பாலர் பாடசாலையின் நிதிபிரச்சினை விடயம் பற்றி அறிகிறோம். அதன் விபரம் என்ன?
லிங்கநாதன்:முன்பு ஆரம்ப கல்விக்கு நாங்கள் எந்த பணமும் செலவு செய்ய முடியாது. இப்ப புதிய சட்டம் வந்துள்ளது. செலவு செய்யலாம். அதற்கு செலவு செய்ய திட்டம் போட்டுள்ளனர். ஆனால் அதுபற்றி எந்த விளக்கமும் தரப்படவில்லை. அவர்கள் விளக்கம் தர வேண்டும்.

தேசம்:எப்படி சபை உறுப்பினர்க்கு தெரியாமல் இவைகள் நடைபெறுகின்றது?
லிங்கநாதன்:அதிகமான விடயங்கள் சபை உறுப்பினர்க்கு தெரியாமலேதான் நடைபெறுகின்றது.

தேசம்:நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் அது ஜனநாயகமாத் தெரியவில்லையே?
லிங்கநாதன்:புலிகளும் தாங்கள் ஒரு ஜனநாயகப்படியேதான் நடந்தோம் என்கிறார்களே.

தேசம்:புலிகள் இருக்கட்டும். இப்படி பெருந்தொகைப் பணத்தை செலவு செய்வதென்றால் சபையின் அங்கீகாரம் பெற வேண்டும் இல்லையா?
லிங்கநாதன்:அதுதான் இவர்கள் மீதுள்ள பெரிய பிரச்சினையேயாகும். மேயர் சாதாரணமாக 10 ஆயிரம் தான் செலவு செய்யலாம். அதை நாங்கள் முதல் கூட்டத்தில் ஒரு லட்சத்திற்கு அங்கீகரித்திருந்தோம். பின்பு ரிஎன்ஏ உறுப்பினர்களின் உள் முரண்பாடுகள் காரணமாக இரு ரிஎன்ஏ உறுப்பினர்கள் தான் அத்தொகையை  மீளவும் ஒரு லட்சத்திலிருந்து 10 ஆயிரத்திற்கு குறைத்துக் கொண்டனர்.

Linganathan_Honering_Celebrationகூட்டம் நடக்கும்போது நான் (முன்னாள் மேயர்) இருப்பது இவர்களுக்கு ஒரு சிக்கல். சில கூட்டங்களில் நான் கலந்து கொள்ளவில்லை. அந்தக் கூட்டங்களில் இவர்கள் தாங்களே இப்படி முன்மொழிவதும், வழிமொழிவதுமாக எல்லாம் தடல்புடலாக நடந்தேறியும் உள்ளது. இதுபற்றி எல்லா அங்கத்தவர்களுக்கும் ஒரு முறை கூட்டத்தில் சொல்லியிருந்தேன். காரணம் ஒரு நாளைக்கு நாம் எல்லோரும் விசாரணைக்கு உட்படலாம் என எச்சரித்திருந்தேன். நன்றாக என்ன பேப்பரில் உள்ளது என்பதை சரியாக வாசித்துவிட்டே ஆதரியுங்கள் என்றும் பொறுப்புணர்வில்லாமல் ஆதரித்துவிட்டு அரசிடம் சிக்கலில் மாட்டவேண்டாம் எனவும் சொல்லியிருந்தேன். இவைகளும் இவர்களின் உட்பூசல்களுமேதான் இவர்களின் இந்த பிரச்சினையின் விஸ்வரூபமாகும்.

தேசம்:அது என்ன உட்பூசல் என்று சொல்ல முடியுமா?
லிங்கநாதன்:இப்போ உதவி மேயராக உள்ள ரதனே ரிஎன்ஏக்குள்ளே விருப்புவாக்குளில் அதிக வாக்குகளை எடுத்தவராவார். ரதனை மேயராக்காமல் நாதனை தமிழரசுக் கட்சியின் மூத்ததலைவர் என்ற காரணத்தால் மேயராக்கினர். மேயர் பதவியேற்பு வைபவத்தன்றே ரதன் ஒரு நோட்டீஸ் வெளியிட்டிருந்தார். தானே அதிக வாக்கு பெற்றவர் என்றும் தானே மேயராக வர வேண்டும் என்றும். ஆனால் இரண்டு வருடங்களில் தான் மேயராக்கப்படுவேன் என்றும் இந்த நோட்டீஸில் வெளியிடப்பட்டிருந்தது. அன்றிலிருந்து இந்த மேயருக்கும் உதவி மேயருக்கும் இன்று வரையில் பிரச்சினையாகவே உள்ளது. இதன் பின்னர் மற்ற உறுப்பினர்களும் இந்த விடயங்களை திரும்ப திரும்ப பேசி மேயருடன் குழப்பமடைந்துவிட்டனர்.

தேசம்: இந்த நகரசபை நடவடிக்கைகளில் நிதி நிர்வாகச் சீர்கேடுகளுடன் சாதிய வேறுபாடு பற்றிய பிரச்சினையும் எழுந்துள்ளது அல்லவா?
லிங்கநாதன்:அப்படியான சில குற்றச்சாட்டுக்கள் உண்டு. அண்மையில் நடைபெற்ற சுகாதாரப் பகுதியில் ஒரு வேலை நிறுத்தம் நடைபெற்றது அங்கே சாதி வேறுபாடு காட்டி நடந்தாலேயே இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது. (அதன் முழுவிபரம் தேசம் வெளியிட்டிருந்தது)

தேசம்:டெங்கு ஒழிப்பு திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதிக்கு இன்னமும் கணக்கு காட்டப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லிங்கநாதன்:இன்னமும் வழங்கப்பட்ட நிதிக்கு என்ன நடக்கிறது? எப்படி செலவு செய்யப்பட்டது? போன்ற விபரங்கள் யாருக்கும் தெரியாது. இன்னமும் கணக்கு காட்டப்படவில்லை.

தேசம்:மேயருக்கு வாங்கப்பட்ட வாகனம் சம்பந்தமாக கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.
Linganathan_in_a_prize_givingலிங்கநாதன்:சபை அங்கீகாரம் கொடுத்துள்ளது அதற்குபிறகு ரென்டர் கோல் பண்ணப்பட வேண்டும். வாகனம் தெரிவு செய்யப்பட்டால் ஒரு ஓட்டோ மொபைல் பொறியியலாளர் மதிப்பீடு வழங்கப்படல் வேண்டும். இப்படியான ஒழுங்கு முறைகள் அங்கு நடைபெறவில்லை. ஒழுங்கு விதிகளை மீறுவதாகத்தானே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் இவைகளை சிறிய விடயங்களாக விட்டுவிட்டுப் போகலாம். ஆனால் இவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது. இவர்கள் மக்களுக்கு செய்ய வேண்டிய விடயங்களை கவனம் எடுத்து செய்து கொண்டிருந்தால் இப்படியான விடயங்கள் வெளித்தோன்றாது. அபபடி மக்களுக்கான வேலைகளை செய்யாமல் இருந்தால் இது வெளியில் தெரியவரும். இவைகள் தான் கண்ணுக்கு பெரிதாகத் தெரியவரும். நாங்கள் நகராட்சியில் இருக்கும் போது செய்த பல விடயங்களை மக்கள் இன்னமும் நினைவில் கொண்டுள்ளார்கள். அதனால் தான் இவ்வளவு தொகைப் பணத்தை ஏசி போடவும் வாகனத்திற்கும் செலவு செய்த நீங்கள் மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை என்பதை மனவருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.

தேசம்:இந்த பிரச்சினைகளை விட வவுனியாவில் சிங்கள குடியேற்றங்கள் நடக்கிறதா? இவைபற்றி உங்களுக்கு ஏதாவது தெரியப்படுத்துவார்களா? அவற்றுடன் உங்களுக்கும் தொடர்புகள் உண்டா? அல்லது அரசு தனக்கு நினைத்தமாதிரியே சிங்கள பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றி நடத்துகிறார்களா?
லிங்கநாதன்: வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரையில் 4 பிரதேச செயலகங்கள் உள்ளது. இதில் மூன்று தமிழ்ப் பிரிவும் ஒரு சிங்களப் பிரிவுமாக உள்ளது இது நீண்டகாலமாக உள்ள விடயம். ஆனால் வன்னியில் மிகப்பெரிய பயங்கரமான விடயம் உருவாக இருப்பதாக எல்லா தரப்பிலும் சொல்லப்படுகிறது. நிரந்தர முகாம்களை அமைத்து அந்த படைவீரர்களுக்கு நிரந்தர வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் எங்களுக்கு (புளொட்) உள்ள பிரச்சினைகள் என்ன என்றால் நகரசபையிலும் அதிகாரம் இல்லை, பாராளுமன்றத்திலும் அதிகாரம் இல்லை. ஆனபடியால் எங்களால் இந்த விடயங்களில் அடி எடுத்து வைக்கமுடியாமல் உள்ளது.

Linganathan_giving_speechஆனால் இன்று எல்லாவற்றிக்கும் முழு பொறுப்பானவர்கள் ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மந்திரிசபைக்கு கட்டுப்பட்டவர். இதைவிட நாங்கள் மீண்டும் எழுவோம் என்று தேர்தல் காலத்தில் பிரசுரங்கள், பனர்கள் மட்டும் போட்டுவிட்டு இன்று ஏனோ தானோ என்று இருக்கிறவர்கள் தான் மக்களின் பிரச்சினைகளை பார்க்க வேண்டும். முன்பு புலி இருக்கும்போது சொன்னார்கள் அபிவிருத்தி வேண்டாம். உரிமை வேணும் என்றார்கள். இன்று உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லாத நிலையிலேயே தான் நாங்கள் தமிழ் மக்கள் இருக்கிறோம்.

தேசம்:இப்போதுள்ள அகதி முகாம்களின் நிலைப்பாடுகள் என்ன?
லிங்கநாதன்:அகதி முகாமில் 50லிருந்து 60ஆயிரம் மக்கள் வரையில் இருக்கிறார்கள். அதில் புதுக்குடியிருப்பு போன்ற சில இடங்கள் இன்னமும் அரசு முழுமையாக மக்களை போக விடவில்லை. காரணம் கண்ணி வெடி துப்பரவு பண்ணவில்லை என்று சொல்லுகிறார்கள். அதைவிட அங்கு உள்ள ஆயுதங்கள் வேறு என்ன நிலத்திக்கு கீழ் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து முடியவில்லை என்றும் நான் தனிப்பட நினைக்கிறேன். இந்த காரணங்களால் இந்த மக்கள் முகாமில் தடைப்பட்டு இருக்கிறார்கள்.

11000 பேர் சரணடைந்தவர்கள். அதைவிட இன்னும் எத்தனையோ பேர் அகதி முகாமில் இருக்கிறார்கள். இவர்களிடம் டம் பண்ணிவைத்த பொருட்கள் எங்கே என்ன என்பது தெரிந்தவர்கள் இந்த நிலையில் ஆட்களை வெளியே விட்டால் தவறுகள் நடக்க சந்தர்ப்பங்கள் வரக்கூடும் என்பதுதான் அரசின் இராணுவத்தின் நினைப்பு என்று நான் கருதுகிறேன். இதில் நியாயம் இருக்கிறது. இவைகள் துப்பரவு செய்யப்பட்ட பின்பு மக்கள் எல்லோரும் மீள குடியேற்றப்படுவார்கள். அரசாங்கம் எல்லாரையும் திரும்பக் குடியேற்றும். அதை நம்பி இருக்கலாம்.

தேசம்: வவுனியாவில் உள்ள மற்றைய இயக்கங்கள் பற்றி என்ன சொல்ல முடியும். வவுனியாவில் சில  பிரச்சினைகள் கடத்தல்கள் நடப்பதாக அறிகிறோம். சிலர் தனிப்பட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்றும் சிலர் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Linganathan_in_Uma_Memorialலிங்கநாதன்: உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும் 1977ம் ஆண்டிலிருந்து காந்தீயமாக உருவெடுத்து மக்களுக்கு உதவி செய்தும் காட்டுக்குள்ளே இருந்த இயக்கமாக, ஜனநாயக சக்தியாக இருந்தவர்கள் நாங்கள் – புளொட். எங்களுக்கு கடந்த தேர்தலில் வந்த பின்னடைவு எங்கட வேலைகளை தடைப் பண்ணியுள்ளது. ஏனைய கட்சிகளை பொறுத்த வரையில் பெரிதாக ஒண்டுமில்லை. ஆனால் இங்கே நடக்கிற கொலைகள், கொள்ளைகள் கடத்தல்களில் ஆரம்பத்தில் நடந்தவைகளுக்கு புலிகளுக்கு முக்கிய பொறுப்பு உண்டு. காட்டுக்குள் இருந்து வந்த புலிகளுக்கு ஒரு உதவியும் கிடைக்காமல் பல களவுகளில் ஈடுபட்டவர்கள் இதில் பலர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

தேசம்: இலங்கை அரசின் உளவுப் படையினராக முன்னாள் இயக்க உறுப்பினர்களில் பலர் (முன்னாள் புலிகள் , முன்னாள் ரெலோ, முன்னாள் புளொட் இப்படி எல்லா இயக்கத்தவர்களும்) இருப்பதாக ஜரோப்பாவில் பரவலாக பேசப்படுகிறதே. இது எந்தளவு உண்மை. இவர்களில் பலர் தமக்கு நினைத்த மாதிரி பல வேலைகளை செய்துவிட்டு போய்விடுகிறார்கள் என்றும் பேசப்படுகிறதே?

லிங்கநாதன்:இங்கும் நீங்கள் சொல்வது போன்ற பல கதைகளை அறிகிறோம். எப்படி உண்மையை அறிவது. நான் புளொட் பற்றி சொல்லுவது என்றால், 2009 ஆகஸ்ட் 10ம் திகதியிலிருந்து இன்று வரையில் இயக்க ரீதியாக கொலையோ, யாரிடம் காசு வாங்கியதாகவோ அல்லது மக்கள் விரோதமான எந்த நடவடிக்கைகளுமே நடக்கவில்லை, திருணாவுக்குளத்தில் ஒரு பெண்பிள்ளை சம்பந்தமான சம்பவம் நடைபெற்றது. அதில் சம்பந்தப்பட்டவர் ஒன்றரை வருடத்துக்கு முன்பாகவே இயக்கத்திலிருந்து விலத்தப்பட்டவர். இதில் தவறு என்ன என்றால் இப்படிபட்டவர்களை நாம் இயக்கத்திலிருந்து விலக்கியுள்ளோம் என்பதை மக்களுக்கு தெரிவித்திருந்தால் இப்படியாக குற்றச்சாட்டுக்கள் எம்மீது வந்திருக்காது. அதைவிட வவுனியாவில் பிரதேசங்களில் உள்ள பொது மக்களிடம் எம்மைப் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கோ. அப்படி ஏதும் தவறுகள் இருந்தால் என்னிடமும் பேசுங்கோ நாங்கள் முடிந்தளவு எமது தரப்பு விளக்கத்தை தருவோம்.

தேசம்:வவனியாவில் தனிமனிதனுக்கு உள்ள சுதந்திரம் ஜனநாயக விரோதங்களை கண்டிக்கும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் சுதந்திரம் இவை பற்றி?
லிங்கநாதன்:சுதந்திரம் இருகின்றது. லவ்பிரண்டுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம்! பகிரங்கமாக மதுபாவனை செய்ய சுதந்திரம் உள்ளது. சமூகத்தில் செய்யக்கூடிய கீழ்தரமான வேலைகள் செய்வதற்கு சுதந்திரம் உள்ளது. இவற்றை அரசும் ஆதரிக்கிறது. இது ஆயுத போராட்டத்தின் காரணங்களை மழுங்கடிக்கச் செய்யும் என்பதற்காக. மற்றப்படி ஜனநாயகம் என்பது இன்னமும் இங்கே இல்லை.

தேசம்: இன்று உள்ள நிலைமைகளில் தமிழர்களின் உரிமைப் போராட்டம் காரணமாக ஒரு கடையடைப்பு, ஒரு பகிரங்கக் கூட்டம், ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்த முடியுமா?
லிங்கநாதன்:இல்லை. அடுத்த நிமிடம் தனிப்பட அழுத்தங்கள் வரும் தடைகள் வரும்.

தேசம்:அல்லது கொல்லப்படுவீர்கள் என சொல்லுகிறீர்களா?
லிங்கநாதன்:கொலை என்பது இனிமேல் விடயங்களை மேலும் சிக்கலாக்கும். ஆகவே நடக்காது என்பதே எனது கருத்து. முன்பு புலிகளை சாட்டி எல்லோரும் கொலை செய்தார்கள். இனிமேல் அப்படி இல்லாமல் முயற்சி செய்து முடக்கவே முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

தேசம்:தற்போது நாடு கடந்த தமிழீழம் என்று புலம்பெயர் நாடுகளில் அமர்க்களமாக நடைபெறுகின்றது. அவைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?
லிங்கநாதன்: நாடுகடந்த தமிழீழத்தை பொறுத்தவரையில் ஊமை கண்ட கனவு கதை கேள்விப்பட்டுள்ளீர்களா? நாங்கள் இங்கே ஒருவேளை கஞ்சிக்கு வழியில்லாமல், நிம்மதியாக படுத்து எழும்ப முடியாமல் இருக்கிறோம். இவர்கள் இங்கே உள்ள மக்களின் கருத்துக்களோ, ஆதாரமோ இல்லாமல் அல்லது எமது மக்களின் வேதனை என்ன நிறம் என்றோ தெரியாமல் தாங்கள் தங்களுக்குள்ளே நாடகடந்த தமிழீழம் அது இது என்று என பித்தலாட்டங்கள். நாடு கடந்த தமிழீழம் நிலம் தொடாத வேர் என்று தேசம்நெற்றில் வெளிவந்த கட்டுரையையும் வாசித்துள்ளேன்

புலம்பெயர்ந்து உள்ளவர்களில் பலர் தமது சொந்த பணத்தில் ஒரு தொகையை வடக்கு கிழக்குக்கோ வவுனியாவுக்கோ என்று கொடுத்தால் எங்கட பிரதேசம் 2 வருடத்தில் மீண்டும் பழைய நிலைக்கு எங்கட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திவிடலாம். இதுதான் இப்ப தேவையே தவிர நாடகடந்த தமிழீழம் என்ற பேய்க்காட்டல் அல்ல!

தேசம்: புலிகளின் சொத்துக்கள் பணங்கள் வெளிநாடுகளில் நிறையவே உள்ளது. இதில் பெரும்பான்மையானது தனிப்பட்டவர்களின் கைகளில் முடங்கியுள்ளது. இந்த பணங்களை திரும்ப வட கிழக்கு மக்களிடம் கையளித்தாலே மக்களின் வாழ்வு உயர்ந்து விடும். இந்த பணங்களைப் பற்றி யாருமே முக்கியமாக புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இந்த பணங்கள் பற்றி பேசுகிறார்களே இல்லையே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

லிங்கநாதன்: நீங்கள் சிலர் இதை ஞாபகப்படுத்தினாலும் அவங்களுக்கு தெரியும் மற்ற மக்கள் இது பற்றி பேசாமல் இருக்க வேண்டும் என்பதற்காக்ததான் நாடு கடந்த தமிழீழம். 1983ம் ஆண்டு பிறந்தே இருக்காதவரகள், எல்லாம் யூலைக் கலவரத்திற்கு ஒரு வைபவம், வட்டுக்கோட்டை எங்க இருக்கு என்று தெரியாதவர்கள் வட்டுக்கோட்டை தீர்மானம், இப்படியாக சீசன் விழாக்கள் நடாத்துகிறார்கள். புலி இல்லாவிட்டாலும் நாங்கள் பிழைப்பு நடத்திக்கொள்ளுவோம் என்ற பிழைப்பு நடக்கிறது.

இவர்கள் மனச்சாட்சிப்படி சொல்ல முடியாதவர்கள்.  நாங்கள் எவ்வளவு துன்பப்பட்டுள்ளோம், எந்த அளவு சிக்கலில் மாட்டியுள்ளோம், எவ்வளவு ஆபத்துக்களுக்கு மத்தியில் இருக்கிறோம். இது இங்கே இருக்கிற இலங்கை அரசு எங்களை இந்த நாட்டில் மேலும் அழுத்தத்தை பிரயோகிக்கவே சந்தர்ப்பத்தை கொடுக்கிறது என்பதே உண்மை. இதை உங்கே புலம்பெயர்ந்து இருக்கின்ற மக்களுக்கு தெரியப்படுத்துங்கோ.

தேசம்: கடந்த காலங்களில் வன்னியில் இருந்த அரசு சாரா நிறுவனங்கள் பற்றி?
லிங்கநாதன்: இவர்கள் காசு இருந்தால் ஏதோ செய்வார்கள். இல்லாவிட்டால் இல்லை. இவர்களின் கடந்த 5 வருட வரவு செலவுகளைப் பார்த்தால் பல மில்லியன்கள் செலவு செய்யப்பட்டடிருக்கும். என்ன செய்யப்பட்டுள்ளது என்றால் எதுவுமே சொல்வற்கில்லை. இவர்களின் பணத்தில் பெரும்பகுதி புலிகளின் பிரதேசங்களில் புலிகளின் ஊடாகவே செலவு செய்யப்பட்டது. இதில் உதவிகள் யாருக்கு போயிருக்கும் என்பது தெரிந்தது தானே. இவைபற்றி அரசுக்கு இப்போ நன்றாக தெரியும். இதனால்தான் அரசு இப்போ பாதுகாப்பு அமைச்சின் அனுமதியில்லாமல் எந்த அரசு சாரா நிறுவனங்களையும் அனுமதிப்பதில்லை. இந்த விடயத்தில் அரசை நாம் எதிர்க்க முடியாது. காரணம் இவங்களில் பலர் எங்களை சாட்டி தாம் காசு கொள்ளையடித்து விட்டார்கள். புலி இவங்களை வைத்து தனது அலுவல்களை பாவித்து விட்டார்கள். உதாரணத்திற்கு பல பாரிய ஆயுதங்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள். நோர்வே தான் புலிகளுக்கு வாங்கிக் கொடுத்தார்கள். ஆகவே இந்த அரசு சாரா நிறுவனங்களை நம்ப முடியாத நிலையே இருந்தது. இன்றும் இருக்கிறது.

தேசம்:இன்று வவுனியாவில் உள்ள வுவனியா அடையாளங்கள் பற்றி சொல்லுங்கள்
லிங்கநாதன்: ஒருமுறை நான் வவுனியா மேயராக இருக்கும்போது தொலைக்காட்சியில் வவுனியா என்று காட்டும்போது கொப்பேக்கடுவாவின் சிலைகளையே காட்டுகிறார்கள். நாம் அடுத்த நகரசபைக் கூட்டத்தில் முடிவு எடுத்து தமிழ் தலைவர்கள் முக்கிய தமிழ் அறிஞர்களின் சிலைகளை உடனடியாக அவசர வசரமாக நிறுவினோம்.பலர் என்னிடம் தோழர் உமா மகேஸ்வரனுக்கு சிலை வைக்கும்படி கேட்டார்கள். நான் உடன்படவில்லை. நாளைக்கு புலி, ரெலோ இதை உடைத்து அவமானப்படுத்தும். வேண்டாம் என்று சொல்லியிருந்தேன். ஆனால் தமிழ் தலைவர்கள் அறிஞர்களின் சிலைகளை யாரும் உடைக்க மாட்டார்கள். உடைத்தாலும் திரும்பக் கட்டிக்கொள்ளலாம்.

தேசம்:எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பற்றி உங்கள் கருத்து என்ன?
லிங்கநாதன்: நாங்கள் மாட்டுப்பட்டுப் போனோம். காரணம் எமக்கு பலம் இருக்கு என்று திரும்ப திரும்ப காட்டி எங்களை அவர்களால் பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பத்தை நாங்களே கொடுத்துவிட்டோம். இதில் புலிகளை மட்டும் சொல்ல முடியாது. இதில் புலிகள் விகிதாசாரத்தின்படி கூடவாக இருக்கலாம் அனைத்து ஜனநாயக அமைப்புக்கள், ஆயுதக் குழுக்கள் எல்லோருமே இதற்கு பொறுப்பு. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லுகின்ற அத்தனை பேருக்கும் பொறுப்புண்டு.

கடந்த காலங்களில் தமிழர்களை உடைத்துவிட பல முயற்ச்சிகளில் வெற்றி பெற்ற அரசு, பின்னர் வடக்கையும் கிழக்கையும் உடைத்தது, இப்போ வடக்கில் வன்னியை உடைக்கிறார்கள். காரணம் நாம் தொடர்ச்சியான நிலப்பரப்பை வைத்திருந்தால்தானே ஒரு கோசத்தை வைக்கலாம். ஆகவே இனப்பரம்பலை உருவாக்கி தமிழர் பரம்பலை பலவீனப்படுத்தி நான் கேள்விப்படும் விடயங்களை பார்த்தால் இனிமேல் (தமிழ்) ஈழம் என்ற அடையாளத்தை இல்லாமல் பண்ணவே முயற்சிக்கிறார்கள். இதற்கு ரிஎன்ஏ யும் தெரிந்தோ தெரியாமலோ உதவி செய்கிறது. என்ன வென்றால் இவர்களின் வீர வசனம் பத்திரகைகளில் கத்துவார்கள் இரவு போய் அரசாங்கத்திடம் தங்கட அலுவல்கள் கேட்பார்கள் என்று எல்லோருக்கும் தெரியும், ரிஎன்ஏ மக்களை பேய்க்காட்டுகின்றது என்பது, ரிஎன்ஏ தலைமை அரசுக்கு தான் நினைத்ததை செய்ய வசதியான தலைமையே.

தேசம்:இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் விடயத்தில் இலங்கை அரசு செயற்படுமா? இல்லையா?
லிங்கநாதன்:மகிந்தாவும் சிங்கள தேசியத்தின் உணர்வு பூர்வமானவர். சிங்கள தேசியவாதி. தமிழர்க்கு தமிழீழம் தேசியவாதமாக உள்ளதோ அதேபோல சிங்கள மக்களுக்கும், மகிந்தாவின் கட்சிக்கும். அன்று வட கிழக்கு இணைப்பை உடைக்க கோட்டுக்கு ஜேவிபி போனபோது பலம்பொருந்திய புலிகள் அமைப்பு, ரிஎன்ஏ எம்பிக்கள் 22 பேர், அமைச்சர் டக்ளஸ் இப்படி பலர் இருந்தும் இதை தடுக்க முடியவில்லை. குறைந்தது ஒரு இடைக்காலத் தடையை எடுத்திருக்கலாம். இது இவர்களின் பலவீனமே. அதை இப்ப இருக்கிற ஜனாதிபதி அதை நிரந்தரமாக தேர்தலை கிழக்குக்கு வைத்து கிழக்கை உடைத்து விட்டார். அரச 13வது திருத்தச்சட்டமூலம் தான் தீர்வு, அதுதான் இலங்கை-இந்திய ஒப்பந்தம், இது தான் தீர்வு வேறு இல்லை என்றே சொல்லுவார் என நான் கருதுகிறேன். இதற்க்கு மேல் மகிந்தா தரும் என்று நம்பினால் நாங்கள் தான் முட்டாள்கள்.

தேசம்: தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையேயான குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டுவதற்காக ஒரு உடன்படிக்கை ஒன்று லண்டனில் தயார் செய்யப்பட்டு உள்ளது. இது குறிப்பாக தமிழ் கட்சிகள் அமைப்புகளிடையே உடன்பாடு எட்டப்படுவது அவசியமானது என்பதனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆவணி 02 புரிந்துணர்வுக்குழு (லண்டன்) என்ற குழுவாக இம்முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறான ஒரு முயற்சி பற்றிய உங்களுடைய அபிப்பிராயம் என்ன?

லிங்கநாதன்:எனது மனப்பூர்வமான பாராட்டுக்களும் ஒத்துழைப்புக்களும் கிடைக்கும். நிச்சயமாக புளொட் உதவி செய்யும். நான் உதவி செய்வேன்.

இப்போது இங்கே தமிழ் அரங்கம் என்ற முயற்சி நடைபெறுகிறது. இது மாகாண தேர்தலை நோக்கிய நகர்வா அல்லது உண்மையான நகர்வா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எம்முடைய எல்லா ஒத்துழைப்புக்களும் உங்களுடைய புரிந்துணர்வுக் குழுவிற்குக் கிடைக்கும்.

புலிகள் இரண்டு விடயங்களில் திடமாக இருந்துள்ளனர். ஒன்று கொலைக் கலாச்சாரத்தை பரப்பியது. இரண்டாவது தான் எடுத்தது தான் முடிவு என்பது. இந்தியாவைக் கும்பம் வைத்து வரவேற்று பின்னர் அடித்தது. பிரேமதாஸாவுடன் கூடி எஸ்டிஎப் உடன் சேர்ந்து மாற்று இயக்கத்தவர்களை கொலை செய்தது. பின்னர் பிரேமதாஸாவையே கொலை செய்தது. மற்றையது எவன் தனது நட்போ அவன் தியாகி. எவன் தனக்கு எதிர்ப்போ அவன் துரோகி. இதை இந்த உலகத்தில் வேறு யாராலும் செய்ய முடியவில்லையே.

தேசம்: புலம்பெயர் தமிழர்க்கு, இளம் சந்ததியினருக்கு, புலிகளுக்கு, புலிகளின் ஆதவாளர்க்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
Linganathan_visit_to_an_Exhibitionலிங்கநாதன்: புலிகளுக்கு கடந்த 30 வருடமாக எத்தனை விடயங்களை சொன்னாச்சு. அவர்களுக்கு சொல்லியும் பிரயோசனம் இல்லை. இனிமேலும் பிரயோசனம் வராது. அவர்கள் தங்கட பிழைப்பை பார்த்துக் கொள்கிறார்கள் அதைவிட்டுவிடுவோம்.

நான் தமிழ்பேசும் மக்களுக்கு சொல்வது எல்லாம், வன்னியில் மக்கள் இன்ரர்நெற் மொபைல் தவிர மற்ற எல்லாவற்றுடனும் வாழ்ந்தவர்கள். இன்று வீடுகட்டுவதற்க்கு அவர்களுக்கு கொடுத்த 4 தகரங்கள் 5 பலகை என்றதுடன் நிற்பவர்களுக்கு, உங்கள் உறவுகளுக்கு, சொந்தங்களுக்கு அவர்கள் அந்த வீட்டை கட்டிக்கொள்ள, இந்த வருடம் இந்த போகத்தை அவர்கள் வெற்றிகரமாக அறுவடை செய்ய உதவி செய்யுங்கோ. அந்த ஒரு உதவி அவர்களை தலை நிமிரவைக்கும். இதுதான் எங்களுடைய மக்களுக்கு இன்றுள்ள தேவை. தலைக்குமேலே கூரை இல்லை. சாப்பிட சாப்பாடு இல்லை. நிம்மதியாக படுக்க பாய் இல்லை. இப்ப அரசியல் உரிமை பற்றி பேச யார் முன்வருவார்கள். முதலில் இரத்தம் உறவு என்று சொல்லுபவர்கள் இந்த மக்கள் இந்த போகச் செய்கையை செய்ய உதவ முன்வாருங்கள். மீதி எல்லாம் அவர்கள் தாமாகவே எழுந்துவிடுவர்.

உங்கள் சகோதரங்கள் உறவினர்கள் சுற்றத்தார், தெரிந்தவர்கள் இப்படி ஒரு பட்டியலைப் போட்டு யாருக்கு உதவி தேவை என்று செய்யுங்கள் இதுவே போதும். இதைவிட உதவி செய்ய விரும்புபவர்கள் எத்தனையோ உதவி செய்யும் அமைப்புக்கள் உண்டு. அதற்கு ஊடாக உதவுங்கள்.

நன்றி ஜி ரீ லிங்கநாதன்-JP

லெபனானில் விசா இன்றி இருப்போரை விரைவில் இலங்கை அழைத்துவர ஏற்பாடு

sri-lankan-maids.jpgவிசா இன்றி தொடர்ந்து லெபனானில் நிர்க்கதி நிலையில் உள்ள இலங்கை பணிப்பெண்களை அடுத்த சில தினங்களில் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்து ள்ளது.

விசா காலம் கடந்துவிட்ட நிலையில் லெபனானில் தங்கியுள்ள இலங்கை பணிப்பெண்களுக்கு மீண்டும் இலங்கைக்கு வருவதற்காக மூன்று மாத பொதுமன்னிப்பு காலத்தை அந்த நாட்டு அரசாங்கம் வழங்கியிருந்தது.

அந்த மன்னிப்பின் கீழ் 100 பேர் அண்மையில் இலங்கையை வந்தடைந்தனர். இவர்களுக்கான விமான டிக்கட் மற்றும் இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர்களது வீடுகளுக்கு செல்ல போக்குவரத்து வசதியையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செய்து கொடுத்திருந்தது.

ஐ.நா. சபையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக சவேந்திர

savenra.jpgஐக்கிய நாடுகள் சபையின் பிரதி நிரந்தர விதிவிடப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு நேற்று கூறியது.

பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணிபுரிந்த பந்துல ஜயசேகர நாட்டுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளதையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது. இராணுவத் தலைமையக நடவடிக்கைப் பணிப்பாளர் உட்பட பல உயர் பதவிகளை இவர் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜீ.எஸ்.பி. சலுகையை நீக்கியதால் -இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

ஜீ. எஸ். பி. சலுகையை ஐரோப்பிய யூனியன் மீளப் பெற்றுக்கொண்டமை இலங்கைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஒரு தொழிற்சாலையாவது மூடப்படவில்லை என்பதுடன் ஒரு தொழிற்சாலை ஊழியராவது வேலையை இழக்கவும் இல்லை என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறுகிறார்.

தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார். ஒரு சில தொழிற்சாலைகள் அண்மைக் காலத்தில் மூடப்பட்டன. அதிக சம்பள பிரச்சினை, கடுமையான தொழில் சட்டம், முகாமைத்துவத்தின் பிணக்குகள் காரணமாகவே அவை மூடப்பட்டதேயொழிய ஜீ.எஸ்.பி. சலுகை மீளப்பெறப்பட்டதன் காரணமாக அல்ல என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

முதலீட்டு சபையின் அங்கீகாரத்தை பெற்றுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் தற்போது உள்ள 7400 வேலை வாய்ப்புகள் இதனை உறுதிப்படுத்துவதாகவும் பிரதி அமைச்சர் கூறினார். ஜீ.எஸ்.பி. சலுகை மீளப்பெறப்பட்டதன் காரணமாக ஆடைக் கைத்தொழில் துறையில் ஈடுபட்டிருந்த சில தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக கூறப்படுவதை பிரதி அமைச்சர் நிராகரித்தார்.

ஐரோப்பிய யூனியன் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் அரசாங்கம் இணங்கப்போவதில்லை என்று கூறிய பிரதி அமைச்சர், ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள நிபந்தனைகள் நாட்டின் நற்பெயருக்கு பங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் தைத்த ஆடைகளில் 70 சதவீதம் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் ஜீ. எஸ். பி. சலுகை மீளப்பெறப்பட்டதால் எமது நாடு மட்டுமே பாதிக்கப்படும் என்று கூறுவது சரியல்ல. எமது உற்பத்திகளை வாங்குவோர் அவற்றுக்கான விலைகளை கொடுக்கும்போது அவர்களும் மோசமாக பாதிக்கப்படும் நிலை இருப்பதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.